இதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
களைப்பு மிகுதியால்தான் காரோட்டிகள் ஒரு விநாடி கண் அயர்ந்துவிடுகிறார்கள். மணிக்கு நூறு கிலோமீட்டர் வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் ஒரு கார் இந்த ஒரு விநாடி நேரத்தில் 28 மீட்டர்கள் சென்றுவிடும். அதாவது டிரைவர் இல்லாமல் ஒரு கார் 28 மீட்டர்கள் ஓடினால் என்னென்ன நடக்குமோ அத்தனையும் நடந்துவிடும். டிரைவர்களை எச்சரிக்கை செய்வதற்கு புதிய கருவிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன.
மெர்ஸிடிஸ் பென்ஸ் கார் நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள் வடிவமைத்த கருவியில் ஓர் அகச்சிவப்புக்கதிர் காமிரா நிரந்தரமாக ஓட்டுனரின் தலையை நோக்கி வைக்கப்பட்டிருக்கும். ஓட்டுநரின் கண் இமைக்கும் நேர இடைவெளிகளை இந்த காமிரா பதிவு செய்து கொண்டிருக்கும். ஓட்டுநரின் கண் இமைத்தலில் மாறுபாடு இருக்கும்போது ஒலி எழுப்பி ஓட்டுநரை இந்தக்கருவி எச்சரிக்கை செய்யும்.
மற்றொரு முறையில் ஓட்டுநர் காரை இயக்கும் முறைகள் பதிவு செய்யப்படும். ஓட்டுநரின் இயக்க முறையில் ஏதேனும் மாறுபாடு தெரியும்போது ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்யப்படும். நீண்ட தூரம் காரோட்டிச் செல்லும் ஓட்டுநர்களின் சோர்வைப் போக்க தொலைக்காட்சி பெட்டிகளை வைக்கலாம் என்றுகூட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் கார் உரிமையாளர்கள் ஓட்டுநர்களுக்கு முன்பாக தொலைக்காட்சிப் பெட்டி வைப்பதற்கு உடன்படுவார்களா என்பது சந்தேகமே.
ஜப்பானிய டயோட்டா கார் உற்பத்தியாளர்கள் கண் அயர்ந்து போகும் ஓட்டுநரை எச்சரிக்கை செய்ய வேறுவிதமான கருவியை வடிவமைத்திருக்கின்றனர். விரைந்து செல்லும் காரின் முன்புறம் சாலையில் வரையப்பட்டிருக்கும் வெள்ளைக் கோடுகளை ஒரு காமிரா பதிவு செய்து காரில் உள்ள கம்ப்யூட்டருக்கு அனுப்பும். காரின் இயக்கம் தாறுமாறாக இருக்குமானால் கம்ப்யூட்டர் ஒலி எழுப்பி ஓட்டுநரை எச்சரிக்கை செய்யும்.
சோர்வு என்பது ஒரு சிக்கலான உளவியல் மற்றும் உடலியல் சார்ந்த பிரச்சினையாக இருக்கும் வரையில், பாதுகாப்பான சாலைப் பயணம் என்பதும் சிக்கலானதாகத்தான் இருக்கும்.
தகவல்: மு.குருமூர்த்தி