கல்வியை கற்பிப்பவன் தெய்வம் அன்று
கல்வி லாபம் தரும் வியாபாரம் இன்று

Class roomகல்வி ஒரு பணப்பயிர்; விலை அதிகம்
கரும்பையும், கஞ்சாவையும் விட

கல்வியின் கதவுகள் திறக்கும் உன்
கரங்களில் பணமிருந்தால்

கற்றையாய் காசு கொடுத்தால்
கதவுகள் மூடிய கல்லூரிக்குள் கூட
ஒற்றை சாளரம் வழியே
ஓசைபடாமல் நுழையலாம்

பள்ளிக்கு பெயர் மட்டும் நீ வை
துள்ளி வந்து தருவார் பொற்குவை
வெள்ளிப்பணம் வந்து வந்து குவியும்
கிள்ளி எடுத்தாலும் கோடி தேறும்

கற்பித்துக்கொண்டே கற்கலாம்
கற்பிப்பதும், கறப்பதும் எப்படி என

படித்தவன் ஒரு வேளை தேறாவிடினும்,
முடித்தபின் வேலை(யும்) கிட்டாவிடினும்
கற்பித்தவன் நான் இங்கு வீணாய்
கவலை ஏன் கொள்ள வேண்டும்?

நுகர்வோர் நீதிமன்றம் கூட..
நுழைய முடியாது என் வகுப்புக்குள்..

திருவள்ளுவர் இன்று இருந்தால்
திருக்குறளையும் பதமாக வறுத்து..
சிறிது உப்பும் மிளகும் சேர்த்து.
விருவிரு என்று விற்று காசாக்க
உரிமையை (அவரிடம்) வாங்கி
குறளையும் கொஞ்சம் மாற்றுவேன்

“கற்க கசடற கற்பவை கற்ற பின்
விற்க அதற்குத் தக” என!

பாலசுப்ரமணியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It