ஆணின் பிறப்புறுப்பில் விதைப்பை முக்கிய பங்கு வகிக்கின்றது. விதைப்பையில், விதை இருக்கிறது. இது விந்து உயிர் அணுக்களையும் ஆண்மைக் குண இயக்குநீரையும் சுரக்கின்றது.

இந்த விந்தணுக்கள் விதை மேவிக் குழாய், விந்தணு குழாய் மூலம் விந்து நீர்ப்பையில் கொட்டப்படுகின்றது. விலை மாதர் உடல் உறவால் பால்வினை நோய்கள் பிறப்புறுபைத் தாக்கும் போது, விதை மேவிக் குழாயும் தாக்கப்படும். இதற்கு எப்பிடிடிமைட்டிஸ் என்று பெயர். இதனால் விதைப்பை, வலி கொடுக்கும். கனமாக பெரிதாக வீங்கி இருக்கும். சிறுநீர் கடுக்கும். அத்துடன் பலவித தொல்லைகளையும் கொண்டுவரும்.

உடல் உறவு மூலம் வரும் விதை மேவிக் குழாய் அழற்சி...

1. கோனோரியா என்ற வெட்டை நோய்: இந்த நோய் வெட்டைநோய் வரக்காரணம், கோனோரியே என்ற விஷக்கிருமியாகும்.

இது விலைமாதர் உடல் உறவால் சிறுநீர்த்தாரை வழியே உள்ளே புகுந்து சிறுநீர்ப்பை, விந்து குமிழ்ப் பை, புரோஸ்டேட் சுரப்பி, விதையகம் முதலியவற்றைத் தாக்கி தொல்லை கொடுக்கும்.

சிறுநீர் கழிக்கும் போது நீர்த்தாரை எரியும் கடுக்கும். சிறுநீர் ‘மோர்’ மாதிரி தயிர் மாதிரி வடியும். விரை மேவிக்குழாய்க்கு கோனோரியா கிருமிகள் பரவினால் அவையும் அழற்சியாகி, வீக்கம் கண்டு, வலி கொடுக்கும். முறையான வைத்தியம் பார்த்து குணம் ஆக்காவிட்டால் விதையகம், விதைமேவிக் குழாய் முதலியன பாதிக்கப்பட்டு, ஆண்மைக்குறைவும், மலட்டுத்தன்மையும் ஏற்படும்.

2. கிளாமீடியா என்ற “நீர்க்கடுப்பு” வியாதி: இந்த நோயைக் கொடுக்கும் கிருமிக்கு கிளாமிடியா டிராக்கோமேட்டீஸ் என்று பெயர். இதுவும் விலைமாதர் உடல் உறவாலும் வரும். விதை மேவிக் குழாயையும் தாக்கி அழற்சி ஏற்படுத்தும்.

3. டிரைக்கோமோனேசிஸ் போன்ற வெள்ளை படுதல் நோய்: இந்த நோயைக் கொடுக்கும் கிருமிக்கு பெயர் டிரைக்கோமோனாஸ் வெஜினாலிஸ் இது பெண் பிறப்பில் தொற்றி வெள்ளைத் திரவத்தை வடியவிடும். சிறுநீர்க்கடுப்பையும் கொடுக்கும். ஆண்களுக்கு இந்த நோய் உடல் உறவின் போது பரவினால் அவனுக்கும் விதையகம் விதைமேவிக் குழாய் பாதிக்கப்பட்டு வேதனை கொடுக்கும்.

4. இ.கோலை என்ற நீர்க்கடுப்புக்கிருமி மூலம் வரும் தேன் நிலவுக் காய்ச்சல்.

இந்த நோயைக் கொடுக்கும் கிருமிக்கு எஸ்செரீரியா கோலை என்று பெயர். இதுவும் அடிக்கடி உடல் உறவு கொள்வதன் மூலம் மலக்குடலில் உள்ள இக்கிருமி, பிறப்புறுப்பில் தொற்றி சிறு நீர்க்கடுப்பை உண்டாக்கும் விதைமேவிக் குழாயும் பாதிக்கப்பட்டு வலி கொடுக்கும்.

உடல் உறவு மூலம் வராத தொற்று நோய்கள் மூலம் வரும் விதைமேவி அழற்சிகள்...

உடல் உறவு மூலம் அல்லாமல் உடல் வியாதிகள் மூலமாகவும் விதைமேவிக் குழாய் அழற்சி வரலாம்.

அவைகள்: மண், தண்ணீர் மூலம் பரவும் வியாதிக் கிருமிகள்...

1. சூடோமோனாஸ் ஏருஜீனோசா கிருமி, இக்கிருமிகள் காயங்கள், தண்ணீர், மண் மூலம் உடலுக்குள் சென்று விதைப்பை, விதைமேவிக் குழாய், சிறுநீர்ப்பை போன்ற இடங்களை பாதிப்பு அடையச் செய்யும் விதைமேவிக் குழாய் அழற்சியாகி வலி கொடுக்கும்.

2. நைசீரியா மெனின் ஜைடிஸ் என்ற மூளைக் காய்ச்சலைக் கொடுக்கும் கிருமியும் சில சமயங்களில் விதையகம், சிறுநீர்ப்பை, விதைமேவிக் குழாயைத் தாக்கி தொல்லை கொடுக்கும்.

3. புருசெல்லா போலின் கிருமி: இது நுரையீரலைத் தாக்கி குளிர் காய்ச்சல், சளி போன்றவற்றை கொடுக்கும் கிருமி என்றாலும் பிறப்புறுப்புக்களையும் தாக்கி, விரைமேவிக் குழாய் விதையகம் சிறுநீர்ப்பை, போன்ற இடங்களில் அழற்சி ஏற்படுத்தும்.

4. ஹீமோ பிளஸ் இன்புளுயன்சா கிருமி: இது நுரையீரலைத் தாக்கி குளிர் காய்ச்சல், சளி போன்றவற்றை கொடுக்கும் கிருமி என்றாலும் பிறப்புறுக்களையும் தொற்றி விதைமேவிக் குழாய் அழற்சியை ஏற்படுத்தும்.

5. சிஸ்டோசோமா ஹீமடோபயம் கிருமி...

இது மலக்குடலில் தொற்றி வாழும் கிருமி, பிறப்புறுப்பையும் தாக்கி தொல்லை கொடுக்கும்.

நீண்ட நாட்களாக தொல்லை கொடுக்கும் விதைமேவிக் குழாய் அழற்சி...

எந்த வியாதியும் மூன்று மாதத்திற்கு மேல் ஒரு உடம்பில் இருந்தால் அதற்கு கிரானிக் வியாதி என்று அழைப்பர். அப்படி நீண்ட நாட்கள் விதைமேவிக் குழாயில் பரவி இருந்து தொல்லை கொடுக்கும் வியாதிகள்...

1. கிளாமிடியா நீர்க்கடுப்பு கிருமியால் வரும் வியாதி.

2. மைக்கோபாக்டீரியம் டியூபர் குலோசிஸ் என்ற காசநோய் வியாதி.

3. மருந்துகள், மாத்திரைகள் மூலம் வரும் விதைமேவி குழாய் அழற்சி நோய்.

உதாரணம்: அமியோடோரோன்

இருதய நோய்க்கு இருதய துடிப்பை சீர் செய்ய நீண்ட நாட்கள் கொடுக்கும் இந்த மருந்துகள், சிறுநீர்ப்பை, விதையகம், விதை மேவிக் குழாய் போன்ற இடங்களில் அழற்சி ஏற்படுத்தி தொல்லை கொடுக்கும். இப்படி பலவகை வியாதிகள் மூலம் விதைமேவிக் குழாய் பாதிக்கப்பட்டு அவதிப்படும் நிலை அறித்தோம். இதனால் நோயாளிகளுக்கு பலவித பாதிப்புகள் ஏற்படும்.

1. விந்தணுக்கள் விந்து நீரில் குறைவு.

2. ஆண்மை குண நீர் (ஆஸ்ட்ரோஜன்) ரத்தத்தில் குறையும் தன்மை.

3. மலட்டுத்தன்மை.

4. விரைமேவிக் குழாய், விதையகம், முதலியவற்றில் ‘சீழ்’ கட்டிகள் தோன்றுதல்.

5. இல்வாழ்க்கை (உடல் உறவு வாழ்க்கை) பாதிப்பு என பல ஏற்படும்.

சிறந்த பாலியல் வைத்தியரை உடன் நாடி தகுந்த வைத்தியம் பார்த்து குணம் பெற வேண்டும். காரணம், பிறப்புறுப்புகள் இல்லறத்துக்கு உடல் இன்பத்துக்கு மிக அவசியம் அன்றோ..!

(நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்) 

Pin It