கீற்றில் தேட...

50 ஆண்டுகளுக்கு முன் சிறுவர்கள் கடைகளில் வாங்கிச் சாப்பிடும் முதன்மையான தின்பண்டம் கடலை மிட்டாய். வேர்க்கடலையை வறுத்து, அதை வெல்லப்பாகில் கலந்து, உருண்டை பிடித்து விற்கப்படுவதே கடலை மிட்டாய். இன்றைக்கு உலகில் விற்கப்படும் அத்தனை நவீனத் தின்பண்டங்களையும் ஒரு பக்கம் வைத்து, கடலை உருண்டையை மறுபக்கம் வைத்து சத்துக்களைப் பட்டியல் இட்டாலும், உடலுக்குக் கேடில்லா நன்மையைப் பட்டியலிட்டாலும் முதலிடம் கடலை மிட்டாய்க்குத்தான்! யாராவது மறுக்க முடியுமா?

kadalai mittaiவேர்க்கடலை உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பை உள்ளடக்கியது. வெல்லம் இரும்புச் சத்து நிறைந்தது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டால் இரத்தச்சோகை வராது. உடல் வளமாக நலமாக இருக்கும்.

கொழுக்கட்டை: அரிசிமாவை அரைத்துப் பிசைந்து, அதை பூவரசு இலையிலே மெல்லியதாய்ப் பரப்பி, அதிலே வேகவைத்த பருப்பில் வெல்லம் சேர்த்துப் பிசைந்த பூர்ணத்தை உருட்டி வைத்து இலையை மூடி அதை இட்டலி குண்டானில் வைத்து வேகவைத்து எடுத்தால் அதற்குப் பெயர் கொழுக்கட்டை. பூவரசு இலையை நீக்கிவிட்டுச் சாப்பிட்டால் சுவையோ சுவை. இதற்கு இணையான ஒரு நவீன தின்பண்டத்தைக் காட்ட முடியுமா?

பூவரசு இலையுடன் வேகவைக்கப் படுவதால் இலையின் மருத்துவப் பயனும் அந்த உணவுடன் சேர்கிறது. அதிலுள்ள மாவு நீராவியில் வேகுவதால் அதிக ஊட்டம் பெறுகிறது. பருப்பு, வெல்லம் சேர்ந்த பூர்ணம் உடலுக்குச் சத்துத் தரக்கூடியது. சுவையும் அதிகம். இப்படிப்பட்ட ஒரு உணவுப்பொருளை உலகில் எங்கும் காட்ட முடியாது!

பொரிவிளங்காய் உருண்டை: பொரித்த அரிசிமாவுடன் சிறுசிறு துண்டாக்கி வறுத்தத் தேங்காய், பொட்டுக்கடலை, ஏலக்காய் என்று பலவற்றைச் சேர்த்து, வெல்லப் பாகில் அவற்றைக் கொட்டிக் கிளறி உருண்டைப் பிடித்தால் அது பொரிவிளங்காய் உருண்டை. அதன் சுவையும், சத்தும் அது தரும் உடல் நலமும் அவ்வளவு சிறப்புக்குரியது.

அதிரசம்: வெல்லப் பாகில் அரிசி மாவைக் கலந்து மூன்று நாள் புளிக்கவைத்து, அதை வடைபோல் தட்டி கொதிக்கும் எண்ணெயில் போட்டு வெந்தபின் எடுத்து, கிண்ணத்தால் அமுக்கித் (எண்ணெய்யை வெளியேற்றி) தட்டையாக்கினால் அதுதான் அதிரசம்.

எண்ணெய்ப் பண்டங்களில் கேடு பயக்காத தின்பண்டம். மென்மையும், இனிமையும், சிறப்பான சுவையும் உடைய இப்பண்டத்தைப் போன்று உலகில் எவரும் செய்ததில்லை.

இட்டலி: அரிசி மாவும், உளுந்து மாவும் அரைத்துக் கலந்து புளிக்கவைத்து, இட்டலிப் பானையில் வேகவைத்து எடுத்தால் அதுதான் இட்டலி. உலக உணவு ஆய்வுகளே, இதற்கு இணையான சத்தான நல்லுணவு உலகில் வேறு எதுவும் இல்லை என்று கண்டறிந்துள்ளன.

முடக்கற்றான் தோசை: இட்டலி மாவுடன் முடக்கற்றான் கீரையை அரைத்துக் கலந்து புளிக்க வைத்து, மறுநாள் காலை தோசையாக வார்த்துச் சாப்பிட்டால் உடலில் வாத நோய்கள் வராது. தின்னத் தின்ன சுவையாக இருக்கும்.

சுண்டைக்காய் சாம்பார்: காய்தான் சிறியது. ஆனால், அதன் மருத்துவக் குணமோ மிகப் பெரியது. சுண்டைக்காய்ச் சாம்பார் சாப்பிடவும் மிகவும் சுவையாக இருக்கும். வயிற்றுப் பூச்சி அகற்றும், உடல் வலிவு பெறும், நோய்கள் அணுகாது. நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும்.

முருங்கை: முருங்கையினுடைய கீரை, காய், பிசின், பூ அனைத்தும் உயர்வான மருத்துவக் குணம் உடையவை.

முருங்கைக் கீரையில் எல்லாச் சத்துக்களும் அதிகம் உள்ளன. கீரையைப் பருப்பிட்டு வேகவைத்துச் சாப்பிடலாம், வெங்காயம் தேங்காய்த் துருவல் போட்டு, வதக்கிச் சாப்பிடச் சுவையாய் இருக்கும். இதை மட்டுமே தனியே சாப்பிடலாம், கண்ணுக்கு நலம் தரும் கரோட்டினாய்டுகளை அதிகம் கொண்டுள்ளது. இரத்தக் கொதிப்பைக் குறைக்கும்.

முருங்கைக் காய் நரம்பைப் பலப்படுத்தும். இதில் உடலுக்குத் தேவையான முக்கிய சத்துக்கள் உள்ளன. ஆண்களுக்குப் பாலுறவு ஆற்றலை அளிக்கும். பெண்களுக்கும் வலிமை தரும். இதைச் சாம்பார், புளிக்குழம்பில் போட்டு சாப்பிடுவதோடு, பொரியல் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இதைத் தினம் உணவில் சேர்த்தால் உடல் பலப்படும்; நலம் பெறும்.

பொன்னாங்கண்ணி: கண்ணிற்கு மிகவும் குளிர்ச்சியூட்டி, பார்வையைக் கூர்மையாக்கும். சத்துக்கள் நிறைய உள்ள உயர்தரக் கீரை இது. இதை வாரம் மூன்று நாள்கள் உணவில் சேர்த்தால் உடலில் நோய் அண்டாது. பருப்பிட்டுக் கடைந்துச் சாப்பிடச் சுவையாய் இருக்கும்.

எல்லாக் கீரைகளும் உடலுக்கு நலம் தரக்கூடியவை. மலிவானவை, கேரட்டில் உள்ளதைவிடக் கீரையில் சத்து அதிகம். கீரையில் நார்ச்சத்தும் அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் வராது.

தூதுவளை: வேலியில் படரும் முள் நிறைந்த செடி. இதன் கீரை, பூ, பழம் எல்லாம் பயனுள்ளவை. மார்பில் உள்ளச் சளியை முற்றாக நீக்கும் ஆற்றல் தூதுவளைக் கீரைக்கு உண்டு. ஆண்களுக்குப் பாலுறவு ஆற்றல் அளிக்கும். வாரம் இருமுறை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மணத்தக்காளி: உடல் சூட்டைத் தணித்து வேக்காடு வராமல் காக்கும். வாய்ப்புண், வயிற்றுப் புண் நீக்கும்.

மாதுளை: பழங்களில் முதன்மையானது. இதை நாள்தோறும் சாப்பிட்டால் நலவாழ்வு நிச்சயம். வயிற்றுப் பிரச்சினை எதுவும் வராமல் இது பார்த்துக்கொள்ளும். வெள்ளை முத்துக்களை உடைய மாதுளை மிகவும் சிறந்தது.

பப்பாளி: இது கண்ணுக்கு முதன்மையான பொருள். மலச்சிக்கல் அறவே வராது. ஆண்களுக்குப் பாலுறவு ஆற்றல் அளிக்கும்.

மாதுளையும் பப்பாளியும் நாள்தோறும் சாப்பிட வேண்டும். இந்த இரண்டையும் சாப்பிடுகின்றவர்களின் உடல் நலத்திற்கு உத்திரவாதம் உண்டு.

கேழ்வரகு: கேழ்வரகு மாவு + முருங்கைக் கீரை கலந்து அடைசெய்து சாப்பிட்டால் உடலுக்கு வலு உண்டாகும்.

கீழாநெல்லிக்கீரை: வாரம் ஒருமுறை கீழாநெல்லிக்கீரையைக் கூட்டு செய்து இரண்டு உருண்டைச் சோற்றில் அதைப் பிசைந்து சாப்பிட்டால் கல்லீரல் கோளாறு வராது.

வெள்ளரிப்பிஞ்சு: வெள்ளரிப்பிஞ்சை நறுக்கி மோரில் போட்டுக் கலந்து சாப்பிட்டால் சிறுநீரகக் கோளாறு வரவே வராது. சிறுநீரகப் பிரச்சினை இருந்தால் நீங்கும். அறுவை சிகிச்சை செய்யும் நிலைகூட தவிர்க்கப்படும்.

முள்ளங்கி: வெள்ளை முள்ளங்கியுடன் வெல்லம் சேர்த்துப் பச்சையாகச் சாப்பிட்டால் சிறுநீர்க் கழிக்கும்போது ஏற்படும் கடுப்பு நீங்கும்.

வாழைப்பூ: வாழைப்பூவை பொரியல் செய்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் நீங்கும். வாழைப்பூ வடை சாப்பிடச் சுவையாய் இருக்கும். உடலுக்கு நல்லது.

வாழைத்தண்டு: பொரியல் செய்து சாப்பிட்டால் சிறுநீரகப் பாதைச் சீர்படும். கொழுப்பு அடைப்பு நீங்கும்.

வாழைப்பழம்: தினம் இரு பழம். (பூவம்பழம் சிறந்தது) சாப்பிட்டால் மலச்சிக்கல் அகலும். இரத்த அழுத்தம் குறையும்.

வெந்தயம்: இரவு ஒரு தேக்கரண்டி நீரில் ஊறவைத்து காலையில் அதை அப்படியே மென்றுச் சாப்பிட்டு, அந்நீரையும் பருகினால் உடல் குளிர்ச்சியடையும், சர்க்கரை நோய் வராது.

மஞ்சள்தூள்: காலை மாலை ஒரு டம்ளர் பாலில் மஞ்சள் தூள் கலந்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும். புற்றுநோய் வராது.

மிளகு நீர்: மிளகு + பனைவெல்லம் + தண்ணீர் கலந்து காய்ச்சி அரை டம்ளர் வாரம் இருமுறைப் பருகினால் உடல் நஞ்சு நீங்கும். நோய்கள் எளிதில் தாக்காது. பூச்சிக்கடி பாதிப்புகள் நீங்கும்.

மருதம்பட்டைப் பொடி: இரத்த நாளங்களில் அடைப்பு இருக்கும்போது, காலை மாலை இருவேளை ஒரு டம்ளர் பாலில் இரு கிராம் மருதம் பட்டைப் பொடியைக் கலந்து சாப்பிட்டால், இரத்தக் குழாய் அடைப்பு நீங்க, மாரடைப்பு தடுக்கப்படும்.

வேம்பு மஞ்சள் நீர்: வேப்பிலை + மஞ்சள் தூள் + நீர் கலந்து அரை பங்காகக் சுண்டக் காய்ச்சி அந்த நீரை வடிகட்டி கால் டம்ளர் வாரம் இருமுறை பருகினால், அம்மை நோய் வராது, சர்க்கரை நோய் வராது, சுரம் வராது; உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும்.

அத்திப்பழம்: தினம் அய்ந்து அத்திப்பழம் குறிப்பாக பெண்கள் சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது.

சோற்றுக்கற்றாழை: இதன் சோற்றை எடுத்து ஏழுமுறை அலசி அதனுடன் தேன் கலந்துச் சாப்பிட்டால் உடல்நலம் பெறும், குளிர்ச்சி பெறும், மூலநோய் வராது. வீட்டில் தொட்டிகளில் வளர்த்து தினம் பயன்படுத்தலாம். அச்சோற்றை முகம் மற்றும் உடல் முழுக்கப் பூசி ஒரு மணி நேரம் கழித்துக் குளித்தால் முகம் பளிச்சென்று இருக்கும்.

எதையெதைச் சாப்பிட வேண்டும் என்று அறிந்துகொள்வது போலவே எவற்றைச் சாப்பிடக் கூடாது என்பதிலும் நாம் விழிப்போடு இருக்க வேண்டும்.

பாக்கட் உணவுகள்: இவை அனைத்துமே இரசாயனம் கலந்தவை. உடலுக்குத் தீங்கு செய்யக் கூடியவை. எனவே, கடையில் விற்கும் பாக்கட் உணவுகளை முற்றாக ஒதுக்க வேண்டும்.

குளிர்பானங்கள்: பாட்டிலில், டப்பாக்களில் அடைக்கப்பட்ட அனைத்துக் குளிர்பானங்களும் உடலுக்குக் கேடு செய்யக் கூடியவை. எலும்புச் சிதைவை உருவாக்கக் கூடியவை.

பிராய்லர் கோழி: ஸ்டிராய்டு ஊசிபோட்டு வளர்க்கப்படும் இக்கோழிக்கறி உடலுக்கு, உடல் நலத்திற்கு எதிரானது, கேடானது. எனவே இதைத் தவிர்க்க வேண்டும். நாட்டுக் கோழி சாப்பிடலாம்.

துரித உணவுகள்: உணவு விடுதிகளில் செய்துத் தரப்படும் துரித உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.

உணவே மருந்து என்று வாழ்ந்த நம் மக்கள் மத்தியில், நஞ்சே உணவு, உணவே நஞ்சு என்ற நிலை வந்துவிட்டது.

இவற்றை நாகரிகமாகக் கருதிப் பிள்ளைகள் சாப்பிடுவதால் உடலில் பல்வேறு நோய்கள் வருகின்றன. பெண் பிள்ளைகள் 8 வயதிலே பருவமடைந்து விடுகிறார்கள். எனவே, இவற்றை அறவே ஒதுக்க வேண்டும்.

- மஞ்சை வசந்தன்