திடீர்திருப்ப அசைவுகள் அல்லது சமதளமற்ற அசைவுகள் அல்லது செங்குத்தாகவோ, படுக்கையாகவோ அமைந்துள்ள நேர்கோட்டு வழிகளில் செல்லும்போது ஏற்படும் திடீர் அசைவுகள் நம்முடைய சமநிலைச் சீர்ப்படுத்தும் உறுப்புகளைக் குறிப்பாக உட்காதிலுள்ள திறுக்கு மறுக்கான துளைகளைக் கலக்கிக் கிளர்ச்சி செய்வதால் நாம் கடல்நோய் உடையவராகின்றோம்.
மூன்று அரைவட்ட வடிவங்கொண்ட நெய்த்தன்மை கொண்ட நெகிழ்ச்சிப் பொருளுடைய பாய்குழாய்களைக் (Canals) காது மூன்று வேறுபட்ட சமதளங்ளில் கொண்டுள்ளது. திடீர் அசைவுகள் தோன்றும்போது ஒவ்வொரு பாய்குழாயும் வெவ்வேறு வகையில் பாதிக்கப்படுகிறது. அதன் விளைவாகப் பாய் குழாய்களிலுள்ள நரம்புகள் ஒன்றுக்கொன்று ஒவ்வாத முரண்பாடான செய்திகளை மூளைக்கு அனுப்புகின்றன. ஆகையால் தலைசுற்றும் மயக்குநிலை ஏற்பட ஏதுவாகிறது.
இக்கால நிலையில் கடல்நோய் என்பது இயங்குநோய் (motion sickness) என்ற பொதுத்தலைப்பின் கீழ் கொண்டு வரப்படுகிறது. இப்பெயர் – இயங்குநோய் – 1939 ஆம் ஆண்டு சர் பிரெடரிக் பெண்டிங் (Sir Frederick Banting) என்பவரால் புதிதாக உருவாக்கப்பட்டது. பல வகையான வாகனங்களிலும் பயணம் செய்யும்போது மக்களுக்கு உண்டாகும் வாழ்க்கை நலக்குறைவையும் இவ்வுறுவாக்கப்பட்ட பெயர் உட்படுத்துகிறது.
எளிய நலக்குறைவிலிருந்து குப்புறப்படுக்க வேண்டிய நிலைவரை ஆளுக்காள் வேறுபட்ட நிலையில் கடல்நோய் ஏற்படும். வெளிறிய தோற்றம் (Pallor), குளிர்வியர்த்தல் (Cold Sweating), குமட்டல் (nausea), வாந்தி (vomiting) ஆகியவை அந்நோய்க் குறிகளாம். உட்காதின் திறுக்குமறுக்கான துளைப்பகுதிகளை நோயால் இழந்த மக்கள் இந்நோயைப் பெறுவதில்லை. பிறர் அதைத் தாங்க வல்லவராய் விடுகின்றனர். கடல் கால்கள் (sea legs) வளர்ந்துவிட்டன என நாம் கூறுகிறோம். ஆனால் இந்நோய்க்குரிய காரணம் உறுப்புகளின் சமச்சீரின்மை என்பதைவிட நடுவண் நரம்பு மண்டலத்தின் சமச்சீரமைவே எனத் தோன்றுவதாக அறிவியலார் கருதுகின்றனர். சில மக்கள் தம் கருத்துப் பார்வையை நிலைத்த ஒரு பொருளின்மீது செலுத்தினால் அல்லது பதித்துக் கொண்டால் மிக உதவியாக இருப்பதாகக் கண்டுள்ளனர்.