அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் நூற்றாண்டு இது. அவமானம் - அவமதிப்புகளைச் சுமந்து கொண்டு - பெரியாரின் ஆயுள் நீட்டிப்புக்கு தன்னையே ஒப்படைத்துக் கொண்டவர். ‘உங்கள் உடலைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று எனக்கு பலரும் யோசனை கூறுகிறார்கள். ஆனால் எனக்கு உதவிட நம்பிக்கையாக செயல்பட ஒருவர்கூட வரவில்லையே’ என்று பெரியார் கேட்டபோது, ‘இதோ நான் வருகிறேன்’ என்று ஓடோடி வந்தவர்.
தமிழகத்தின் பொது வாழ்க்கையிலேயே மணியம்மையார்-பெரியார் திருமண ஏற்பாடுபோல் கடும் புயலை உருவாக்கிய வேறு ஒரு நிகழ்வு இருந்திருக்க முடியாது. திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சி உருவாவதற்கே இத்திருமணமே காரணமாக முன் வைக்கப்பட்டது. அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த பெரியாரின் நெருக்க நண்பரான இராஜகோபாலாச்சாரி என்ற பார்ப்பனர் அறிவுரைப்படியே பெரியார் இந்த ஏற்பாட்டைச் செய்தார் என்றும் குற்றம்சாட்டப்பட்டது. வழக்கம்போல் பெரியார் இந்த அவதூறுகளை புறந்தள்ளினார். குற்றச்சாட்டுகள் வரும்போதெல்லாம் அதை உடைத்து, தனது நெஞ்சைத் திறந்துக் காட்டி தன்னை நேர்மையாளராக நிரூபித்துக் கொள்ளும் முயற்சிகளில் என்றைக்குமே ஈடுபட்டவரல்ல பெரியார்.
காரணம், இந்த சமூகம் எத்தகைய பண்புகளை சுமந்து நிற்கிறது என்பதில் பெரியாருக்குத் தெளிவான பார்வை இருந்தது. அதனால்தான் இத்திருமணம் வேண்டாம் என்று இராஜகோபாhச்சாரியார் தனக்கு தனிப்பட்ட முறையில் ‘இரகசியம்’ என்ற குறிப்போடு எழுதிய கடிதத்தை பெரியார் தனது மரணம் வரை வெளிப்படுத்தாமலே இருந்தார். அன்னை மணியம்மையாரும் தன் மீதான அவதூறுகளுக்கு பதிலடி தர, இந்தக் கடிதத்தை அவரும் வெளிப்படுத்தவில்லை. எழுத்துகளுக்கும் வார்த்தைகளுக்கும் அப்பாற்பட்ட ‘புரிதலின் ஆழம்’ அவர்கள் இருவருக்கிடையே இருந்தது.
உடலில் ஒரு ‘குண்டுமணி’ நகையும் இல்லாமல் அலங்காரப் பூச்சு இல்லாமல் வெறும் கைத்தறி சேலையுடன் எளிமையின் எல்லைக்கே சென்று வாழ்ந்துக் காட்டிய புரட்சிப் பெண். பெரியார் வாழ்ந்த காலத்தில் மணியம்மையார் தன்னை முன்னிலைப்படுத்தியதே இல்லை. பெரியார் நலன் பேணும் இலட்சியம் ஒன்றே அவரது வாழ்க்கை. ஆனால் பெரியார் முடிவுக்குப் பிறகு பெரியார் தன்மீது வைத்திருந்த நம்பிக்கையின் வெளிப்பாடாய் சிங்கமென சிலிர்த்து களத்துக்கு வந்தார். இயல்பாகவே தனது தோளின் மீது விழுந்த தலைமைப் பொறுப்பைச் சுமந்தார். ஒரு தலைமைக்குத் தேவையான துணிவு - முடிவெடுக்கும் திறன்கள் அவரிடம் பொதிந்து கிடந்ததை அப்போதுதான் சமூகம் பார்த்தது.
வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பெரியாருக்கு இரங்கல் கூட்டம் நடத்தாமல் அவரது இலட்சியத்தை முன்னெடுக்கும் கொள்கை உறுதிப் பயணங்களாக மாற்றியமைத்தார். பெரியார் விட்டுச் சென்ற அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற சூத்திர இழிவு ஒழிப்புப் போராட்டங்களுக்கு இயக்கத்தை தயார் செய்தார். அஞ்சலகங்கள் முன் ஆர்ப்பாட்டங்கள்; தமிழகம் வரும் மத்திய அமைச்சர்களுக்கு கருப்புக் கொடி என்று ‘சூத்திர இழிவு’ ஒழிப்புப் போராட்டக் களங்களை வழி நடத்தினார். 1975ஆம் ஆண்டு ஜூன் மாதம் ‘அவசர நிலை’ என்ற அடக்குமுறை காலத்தில் கழகத்தின் முன்னோடிகள் மிசாவில் சிறைபிடிக்கப்பட்ட போதும் சரி; இயக்கச் செயல்பாடுகள் முடக்கப்பட்டு, ‘விடுதலை’ ஏடு பார்ப்பன அதிகாரிகளின் முன் தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்ட போதும் சரி; வருமான வரித் துறை பெரியார் அறக்கட்டளையின் உடைமைகளைக் கைப்பற்ற முயன்றபோதும் சரி; அனைத்தையும் உறுதியுடன் எதிர் கொண்டார்.
‘இராம லீலா’ நடத்தி திராவிட மக்களை இழிவுபடுத்தி மகிழ்ந்த வடநாட்டு பார்ப்பனர்களுக்கும் அதில் பங்கேற்று ஆதரவு காட்டி வந்த பிரதமர், குடியரசுத் தலைவருக்கும் பதிலடி தரும் வகையில் ‘இராவண லீலா’வை அறிவித்தார்; பெரியாரின் முதலாம் நினைவு நாளில் நடத்தினார். இந்தியாவின் பார்வையை இயக்கத்தின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார். சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் விவாதப் பொருளாக ‘இராவவண லீலா’ மாறியது.
பெரியார் இயக்கத்துக்கு வந்த சுயமரியாதைப் பெண்கள் - பெண்ணுரிமைக்காக மட்டும் குரல் கொடுத்தவர்கள் அல்ல. இந்தித் திணிப்பு, சமூக நீதி, பகுத்தறிவு, பார்ப்பன எதிர்ப்பு, நாட்டு விடுதலை என்ற இலட்சியப் போராளிகளாகவும் செயல்பட்டிருக்கிறார்கள்.
ஆனாலும் அன்னை மணியம்மையார், “அவமானம் - ஏளனம் - அவமதிப்புகளைப்” புறந்தள்ளி தொண்டறம் ஏற்றவர் என்பதில்தான் தனித்துவம் பெறுகிறார்.