மங்கிய வெளிச்சம் கவிழ்க்கும்
தெருவிளக்கினடியில்
இரவுகளைக் களித்திருப்போம்.

கிச்சா கினியா...,
கிச்சுகிச்சு தாம்பாளம்...,
ஒருகுடம் தண்ணி ஊத்தி
ஒரு பூ பூத்தது...,
நீண்டு கொண்டேயிருக்கும்
விளையாட்டுக்களின் இடையில்
ஒவ்வொரு அம்மாவும் வந்து
அழைத்துச் சென்றுவிடுவார்கள்
தத்தமது பிள்ளைகளை.

கிளை தழைகளற்ற ஒற்றை மரமென
தனிமைப்பட்டிருக்கும்
தெருவிளக்கு.
நிசப்தத்தைப் போர்த்தியபடி
சுருண்டு தூங்கி விட்டிருப்பேன் நான்.

எவ்வளவு எரிச்சாலும்
கூப்பன் அரிசி  வேவுறதுக்கு
நேரமாகுதென 
அடுப்படியிலிருப்பாள் அம்மா.

Pin It