என்னடா இது இப்படி ஒரு தலைப்பான்னு யோசிக்கிறீங்களா? ஆமாம் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் எழுதணும் என்று நினைத்து ஆரம்பித்துள்ளேன். பெரியாரிசத்தை கடைப்பிடிக்கும் ஒவ்வொருவரும் பெரியாரின் தத்துவத்தின்படிதான் எழுதவும், படிக்கவும், வாழ வும் செய்கிறோம். அதனை இந்தச் சமுதாயத்தில் நடைமுறைப் படுத்தியும் வருகிறோம்.
பெரியாரியலை முழுவதும் தெரிந்து கொள்ளாமல் ஒரு சிலர் பின் தொடர்கிறார்கள். ஒரு சிலருக்கு கடவுள் மறுப்பு பிடிக்காது, ஆனால் சாதி என்று வரும்போது, இப்பெல்லாம் எவன்யா சாதி பார்க்கிறாங்க என்று பெருந்தன்மையா பேசவாவது செய்வார்கள். ஒரு சிலர் சாமி கும்பிடுவாங்க, ஆனால் மூட நம்பிக்கை இல்லைன்னு சொல்வாங்க, (உதாரணத்திற்கு சபரிமலைக்கு நடந்து போறது, முருகனுக்கு மாலை போடுறது). சாமி கும்பிடுவதே ஒரு மூட நம்பிக்கைதான் என்று சொல்லி அவர்களுக்கு நாம விளக்க வேண்டி வரும். ஒரு சிலர் ஜாதகம் ஜோசியத்தை நம்ப மாட்டார்கள் எல்லாம் விதிப்படிதான் என்று சொல்வார்கள். ஒருத்தன் கடவுளக் கும்பிடுவான், ஆனால் பெண்ணுரிமையை மதிக்கத் தெரிந்தவனாக இருப்பான். ஆனால் அவனுக்கு சாதி பிடிக்கும். சாதி வேணாம் என்கிற ஒரு சிலர் ‘பெண் சமத்துவத்தை’ ஏற்க முடியாதவர் களாக இருப்பார்கள்.
இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு புள்ளியில் பெரியாரிசத்தில் கனெக்ட் ஆகி விடுவார் கள். என்னடா இவன் எல்லோரையும் பெரியார் வாதிகள் என்று சொல்றான்னு நினைக்கிறீங்க தானே. அப்படி எல்லாம் இல்லை. பெரியார் ஒரு பல் பொருள் அங்காடி. அவரவருக்குத் தேவையானதை எடுத்துக்கொள்கிறார்கள். பெரியார்வாதிகளாகிய நாம்தான், அவர்கள் எடுத்த பொருள் பெரியாருக்குச் சொந்தமானதென்று சொல்லித்தரவேண்டும். அங்கிருக்கும் பொருள் அனைத்தும் அவர்களுக்கு தேவை என்பதை உணர்த்த வேண்டும்.
சரி விசயத்துக்கு வருவோம். இப்படி நமக்கு மிகவும் பிடித்த, மிகவும் தேவையான பெரியாரி சத்தை, இந்த மக்க எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை ஒரு சாமானியானாக இருந்து, நான் பார்த்ததையும், கேட்டதையும் தான் உங்களுக்கு இந்தக் கட்டுரையில் சொல்லப்போகிறேன். நல்லா இருந்தா என்கிட்ட சொல்லுங்க, மொக்கையா(இந்த மொக்கை என்கிற வார்த்தையைச் சொன்னவன கண்டுபிடிச்சாலும் என்கிட்ட சொல்லுங்க) இருந்தா பொறுப்பாசிரியரிடம் சொல்லுங்க (சும்மா தான்).
ஒரு முறை விஜய் டிவியில் ( வியாபாரமே பிரதான நோக்கம் என்கிற எண்ணம் கொண்டவர் களால் நடத்தப்படும் ஒரு கார்பரேட் ஊடகம்) கடவுள் நம்பிக்கை இல்லாத மருத்துவர்களுக்கும் இருக்கின்ற மருத்துவர்களுக்கும் இடையே ஒரு விவாதம் நடைபெற்றது. காரசாரமாக நடைபெற்ற விவாதத்தில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஒரு கேள்வியைக் கேட்கிறார். அதாவது ஒரு முக்கியமான அறுவைச் சிகிச்சை நடக்கும் போது உங்களின் மன நிலை எப்படி இருக்கும் என்று கேட்கிறார்கள். அதற்கு கடவுளை நம்பும் மருத்துவர்கள் சொல்லியது தான் வெட்கக்கேடானது.
“நாங்கள் அறுவைச் சிகிச்சை நடைபெறும் முன்னர் என்னுடைய சாமியை வணங்கிவிட்டுத் தான் அறுவை அரங்குக்குச் செல்வோம். மேலும் நோயாளியின் உறவினர்களையும் சாமியிடம் வேண்டிக்கச் சொல்வோம். (பணத்தை மட்டும் மறக்காமல் கவுண்டரில் கட்டுங்க, கோயில் உண்டி யலில் போட்டுவிடாதீர்கள் என்று மனதுக்குள் நினைத்துக் கொள்வார்கள்). இறப்பு ஏதாவது ஏற்பட்டால் விதி அவ்வளவு தான் என்று சொல்லிவிடுவோம்.
ஆனால் நம்ம மருத்துவ அரக்கர்கள் (அறிவியல் தான் எல்லாம் என்று இருப்பவர்கள்), அதே கேள்விக்கு நோயாளியின் நோயைப் பற்றி தெரிந்து கொண்டு அதைப்போக்குவதற்கான மருந்துகளைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருப்போம். நோயாளி பிழைத்துவிட்டால் அறிவியல் ஜெயித்து விட்டதாக எடுத்துக்கொள்வோம், ஒரு வேளை நோயாளி இறந்துவிட்டால் அறிவியலும், ஆராய்ச்சியும் பெருகவேண்டும் என்று தான் நினைப்போமே தவிர, இல்லாத விதி, கடவுளின் பெயரைச் சொல்லி தப்பித்துக் கொள்ளமாட்டோம் என்று சொன்னார்கள். நோயாளியின் குடும்பத்துக்கு “கடவுள் ஆத்தாததை காலம் ஆத்தும், என்று யதார்த்த மொழியில் சொல்லி ஆறுதல் படுத்து வோம்.
நிகழ்ச்சியின் இறுதியில் ஒரு கேள்வி கேட்பார், “பேயை நம்புகிறீர்களா” என்று, அதற்கு நம் மருத்துவ அரக்கர்கள் எங்களுக்கு கடவுள் எப்படி ஒரு பொய் நம்பிக்கையோ, அதே போல் தான் பேயும் என்று முடிப்பார்கள். ஆனால் எதிர்த்தரப்போ பேய் என்பதே இல்லவே இல்லை என்று சொல்வார்கள், தொகுப்பாளர் விடாமல் அதெப்படிங்க நல்ல துன்னு ஒண்ணு இருந்தால் கெட்டது ஒன்ணு இருக்கத்தானே செய்யும் என்று மடக்குவார்.
அதற்கு அவர்கள் இல்லை கடவுள் தான் இருக்கார், பேய்கள் இல்லை என்று மழுப்புவார்கள். நிகழ்ச்சியாளர் கேட்க மறந்தது “உங்கள் அப்பனும் ஆத்தாளும் செத்தபிறகு பேயா? கடவுளா? என்று. இதைப் பார்க்கும்போது தான் நம்ம அசுரகுல சிங்கம் நடிகவேள் எம்.ஆர்.ராதா சொன்னது ஞாபகத்துக்கு வருது, கரகரத்த குரலில் “டேய் நீ பேயப் பார்த்தேன்னு கூட சொல்லு நாலு பேரு நம்புவான், ஆனா கடவுளப் பார்த்தேன்னு சொன்னா ஒரு பய உன்ன நம்பமாட்டான்” என்று சொல்வார்.
“கடவுள் சகலத்தையுமுணர்ந்து அதற்கு தகுந்தபடி பலன் கொடுக்கக் கூடிய சர்வஞ்த்துவம் உள்ளவர் என்று ஒருவன் கருதி இருப்பானேயானால் அவன் கடவுளைப் பிரார்த்தனை செய்யும் வேலையில் ஈடுபடவோ அதற்காக நேரத்தை செலவு செய்யவோ ஒரு பொழுதும் துணியமாட்டான்.
ஏனென்றால் சகல காரியமும் கடவுளால் தான் ஆகும் என்று நினைத்துக்கொண்டு கடவுள் யாருடைய முயற்சியும் கோரிக்கையும் இல்லாமல் அவனவன் செய்கைக்கும் எண்ணத்துக்கும் தகுதிக்கும் தகுந்தபடி பலன் கொடுப்பதற்குத் தகுந்த ஏற்பாடும் செய்து விட்டார் என்றும் (அதாவது விதியின்படி தான் முடியும் என்றும்) தெரிந்து இருந்த ஒருவன் அந்த தெளிவில் நம்பிக்கை இருந்தால் பிரார்த்தனை செய்வானா என்று யோசித்துப்பார்க்க வேண்டுகிறோம்.
சாதாரணமாக மக்களில் 100க்கு 90 பேர்களிடம் பிரார்த்தனை வெகு கேவலமான அறிவற்ற வியாபாரத் தனமான முறையில் இருந்து வருகிறது.
அதாவது எனக்கு இன்ன பலன் ஏற்பட்டால் உனக்கு இன்ன காரியம் செய்கிறேன். அல்லது உனக்கு நான் இன்ன காரியம் செய்கிறேன். அதற்கு பதிலாக நீ இன்ன காரியம் எனக்குச் செய் என்கின்ற முறையிலேயே பிரார்த்தனை இருந்து வருகின்றது.
இவர்கள் எல்லோரும் அதாவது இந்தப் பிரார்த்தனைக்காரர்கள் எல்லோரும் கடவுளை புத்திசாலி என்றோ சர்வ சக்தி உள்ளவன் என்றோ பெரிய மனிதத்தன்மை உடையவன் என்றோ கருதவில்லை என்றுதான் சொல்லி ஆகவேண்டும்.” - பெரியார்
என் நண்பரின் மூலம் என்னுடைய போன் நம்பரை வாங்கி ஒரு வாடிக்கையாளர் தன்னிடம் உள்ள பிரிண்டர் பிரச்சனையாக இருப்பதால் அதைச் சரி செய்ய வரவேண்டும் என்றார். அடுத்த நாள் நான் அவருடைய கடைக்கு வருவதாகச் சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டு அடுத்த நாள் அவருடைய கடைக்குச் சென்றேன். நான் போகும் போது கையில் ஒரு பெரிய புத்தகத்தை வைத்து படித்துக் கொண்டிருந்தார். அவரிடம் அறிமுகமாகி விட்டு என்ன பிரச்சனை என்று பார்த்தேன்.
அது புது பிரிண்டர் என்பதால் வாரண்டிக் காகக் கம்பெனியை அணுகச்சொன்னேன். ஆன்லைன் மூலம் வாங்கிய பொருள் என்பதால் யாரைத் தொடர்பு கொள்வது என்பது தெரியாது என்றார். இத்தனைக்கும் அவர் ஒரளவு படித்தவர். பின்னர் நான் கம்பெனி டோல் பிரீ எண்ணில் தொடர்பு கொண்டு ஒரு அரைமணி நேரம் போராடி அவர்களுக்கு ஆங்கிலத்தில் விளக்கி (இந்த டோல் பிரி எண்ணில் நடக்கும் அரசியலை பின்னாடி ஒரு கட்டுரையில் பார்ப்போம்) ஒரு வழியாக அவர்கள் பிரிண்டரைச் சரி செய்ய ஆள் அனுப்புவதாக ஒத்துக்கொண்டார்கள். எனது வாடிக்கையாளரிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.
அப்போது அவர் நீங்கள் வந்தது நல்லதாய் போச்சு, இல்லைன்னா என்னால் அவர்களிடம் பேசியிருக்க முடியாது மொழிப்பிரச்சனை என்றார், நீங்கள் என்ன ஆங்கில வழிக்கல்வியா என்று கேட்டார். நான் இல்லை தமிழ்வழிக்கல்வி தான் (தற்பெருமையல்ல) என்றேன். அவரிடம் விடை பெற்று கிளம்புபோது தான் அவர் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தைப் பார்த்தேன். புத்தகத்தின் பெயர் “திராவிடத்தால் வீழ்ந்தோம்”. அப்பொழுது தான் நான் கர்வப்பட்டு என் காலரை உயர்த்தினேன் “திராவிடத்தால் வாழ்ந்தோம்” என்று, இந்த நபருக்கு பெரியாரின் எழுத்துகளைப் படிக்கச்சொல்லி ஒரு புத்தகத்தைப் பரிசாக அளிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டே வெளியேறினேன்.
“பிராமணர்கள், பிராமண மகாசபை வைத்துக் கொள்ளுகிறார்கள்; அதனால் அவர்களுக்குப் பெருமையும் உரிமையும் கிடைக்கின்றன. நாம் நம்மைச் சூத்திரன் என்று கூறிக்கொண்டால் உயர் சாதியானுக்கு அடிமையாயிருக்கும் உரிமைதான் கிடைக்கும்; பார்ப்பானின் தாசிமக்கள் என்ற பட்டம்தான் கிடைக்கும். அந்தச் சூத்திரத் தன்மையை ஒழிப்பதையே நமது முக்கிய வேலையாகக் கொண்டிருப்பதால்தான், அப்பெயரால் எவ்விதச் சலுகையோ, உரிமையோ கிடைக்காததால்தான், அப்பெயரிலுள்ள இழிவு காரணமாகத்தான், அத்தலைப்பில் அதே இழிதன்மையுள்ள திராவிடராகிய முசுலிம்கள், கிறித்தவர்கள், வைசியர்கள், சத்திரியர்கள், வேளாளர்கள், நாயுடு, கம்மவார், ஆந்திரர், கன்னடியர், மலையாளிகள் ஆகியவர்களெல்லாம் ஒன்றுசேர மறுத்துவிடுவார்கள்.
ஆதலால்தான், நம்மைச் சூத்திரர் என்று கூறிக்கொள்ளாமல் திராவிடர் என்று கூறிக் கொள்ளுகிறோம். சூத்திரர் என்பவர்களுக்குத் ‘திராவிடர்' என்பது தவிர்த்து வேறு பொருத்தமான பெயர் யாராவது கூறுவார்களானால், அதை நன்றியறிதலுடன் ஏற்றுக்கொண்டு, எனது அறியாமைக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவும் தயாராயிருக்கிறேன். நீங்கள் கொடுக்கும் பெயரில் நான் மேலே கூறிய அத்தனைப் பேரும் ஒன்றுசேர வசதியிருக்கவேண்டும். அதில் சூத்திரனல்லாத ஒரு தூசிக்கூடப் புகுந்துக்கொள்ள வசதியிருக்கக் கூடாது. அயலார் புகுந்துக் கொள்ளாமல் தடுக்க ஏதாவது தடையிருக்க வேண்டும். திராவிடர் என்று கூறினால் திராவிடர் அல்லாத பார்ப்பான் அதில் வந்து புகுந்து கொள்ள முடியாது. நாம் ஒழிக்கப் பாடுபடும், "பிறவி காரணமான இழிதன்மை'யும் அவர்களுக்கு இல்லை. ஆகவே, அவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கும் காரணமில்லை.
“ஆரியராவது, திராவிடராவது? அதெல்லாம் இன்றில்லை' என்பீர்கள், இங்கே வாருங்கள்; பேசாமல் மேல்துண்டு போட்டுக் கொண்டு நாலு வர்ணத்தாரும் கோயிலுக்குப் போங்களேன்! பார்ப்பான் உங்களை யெல்லாம் ஒரே இடத்தில் விட்டு விட்டு உள்ளே நுழைகிறானா இல்லையா பாருங்களேன்!”
மேற்கண்ட செய்தி உள்ள கட்டுரையையும், யார் ஆரியர்? யார் திராவிடர்? (28.08.1953 - இல் தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் தோழர் பெரியார் சொற்பொழிவு- விடுதலை 07.09.1953 ) என்ற கட்டுரையையும் பிரிண்ட் எடுத்துக்கொண்டு என்னுடைய வாடிக்கையாளரை சந்திக்கச் சென்றேன்.
அவர் உள்ளூர்க்காரர் என்பதால் போனில் அழைக்காமலேயே அவர் கடைக்குச் சென்று விட்டேன். எதிர்பாராதவிதமாக அவர் கடை பூட்டி யிருந்தது. சரி அவர் எப்ப வருவார் என்று அருகில் உள்ளவர்களிடம் விசார்த்தேன். அந்தக் கடைக்காரர் அங்கே தான் கெடக்குறார் என்று கொஞ்சம் தள்ளி கை காண்பித்தார்கள். அருகில் போய் பார்த்தால், மனுசன் நல்லா சரக்கடிச்சுட்டு படுத்துக்கிடந்தார். இந்த ஆள் எப்பவும் இப்படிதாங்கன்னு அருகி லிருந்து ரன்னிங் கமெண்ட் வேற...
அட என்னடா இது நம்ம இயக்க வேலை பார்க்கிறதே எப்பாவவது ஒரு முறை தான் அதுவும் இப்படியாகிருச்சேன்னு வருத்தப்பட்டேன். சென்ற முறை இவரைப் பார்த்தப்ப “திராவிடத்தால் வீழ்ந்தோம்”முன்னு புத்தகமெல்லாம் படிச்சிக் கிட்டிருந்தது ஞாபகம் வந்தது.
அட குடிகாரப் பயல்களா, நல்லா குடிச்சுட்டு “திராவகத்தால் வீழ்ந்தோம்”முன்னு சொல்லாமா (சாராயம் ஒரு திராவகம் தானே) எப்பப் பார்த்தாலும் திராவிடத்தால் வீழ்ந்தோம்னு சொல்லிக்கிட்டுத் திரியிற காரணம் இதுதானா? இத ஒரு ஆள் கட்சி ஆரம்பிச்சு காக்கா மாதிரி ஊர் பூராம் சொல்லிக்கிட்டு திரியுறாரேன்னு நினைக்கும் போது தான் ஒரு உண்மை உச்சந்தலையில சுள்ளுன்னு உதிச்சது. அட இந்த திராவிடத்தின் பெயரால் ஆட்சி செய்யும் அரசியல் கட்சிகள் அங்கங்க மதுபானக் கடைகள் திறந்து வைத்து சாராயம் விற்பதால், அதை வாங்கி இவனுக குடிச்சுபுட்டு ஊருக்குள்ள திராவகத்தால் வீழ்ந்தோமுன்னு சொல்லுறதுக்கு பதிலா திராவிடத்தால் வீழ்ந்தோமுன்னு உளறிட்டிருக்கானுக போல.
அய்யா மகா ஜனங்களே இனிமேல் எவனாவது திராவிடத்தால் வீழ்ந்தோமுன்னு சொன்னா கோபப்படாமல் பக்கத்தில் வரச்சொல்லி வாயை ஊதச்சொல்லுங்க, அடிக்காதீங்க, திட்டாதீங்க, ஏன்னா நமக்கும் குடிகாரனெல்லாம் குழந்தை மாதிரி.
ம்ம்ம் இது தெரியாம இவனுக பெரிய தத்துவவாதின்னு நினைச்சுட்டு அய்யா எழுதினதை எல்லாம் எடுத்துட்டு போயிட்டேன்.
”ஒரு வடை போச்சே”
- இன்னும் பார்ப்போம்.