“அவர்கள் எங்கு சென்றபோதும் கைகளில் பட்டாக்கத்தியினை ஏந்தியிருந்தனர். அவர்களின் படை ஒரு புயலைப்போல நாலா திசைகளிலும் பாய்ந்தது. அவர்களின் பாதையில் குறுக்கிட்ட எந்தவொரு நாடும் சின்னாபின்னமாக்கப்பட்டது. வழிபாட்டுத் தலங்களும், சர்வகலாச்சாலைகளும்கூட சிதைத்து அழிக்கப்பட்டன. நூலகங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. பக்தி நூல்கள் அழிக்கப்பட்டன. அன்னையரும், சகோதரிகளும் மானபங்கப்படுத்தப்பட்டனர். கருணையோ நீதியோ அவர்கள் அறியாதவைகளாய் இருந்தன.”

BJP- இந்த வரிகள் யாரால் யாரைக் குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ளன என்பதைப் புரிந்துகொள்ள இன்றைய சூழலில் நாம் அதிகம் சிரமப்படத் தேவையில்லை. ஆம், இவை ஆர்.எஸ்.எஸ். குஜராத்தில் நடத்தும் பள்ளிகளில் மாணவர்களுக்குப் போதிக்கப்படும் பாடநூலில் இஸ்லாமியர்களைப் பற்றி இடம் பெற்றுள்ள வரிகள்தாம். இந்தப் பாட வரிகள் நான்காவது வகுப்புப் பயிலும் ஒன்பது வயதை எட்டிய லட்சக்கணக்கான குழந்தைகளின் மனங்களில் நஞ்சு விதைப்பனவாக உள்ளன என்பது நமக்கெல்லாம் அதிர்ச்சிதரும் தகவல். இந்தப் பாடநூலுக்கு ‘கௌரவ் கதா’ என்பது பெயர். ஆர்.எஸ்.எஸ். பிரசுர நிறுவனமான சரஸ்வதி சிசு மந்திர் பிரகாஷன்தான் இதனை பள்ளிப்பாடநூலாக ஆக்கித் தந்திருக்கிறது.

குழந்தைகளுக்கான பாடநூல்களில் தொடங்கிவிடுகிறது மதவெறி முன் தயாரிப்புக் களன். ஆனால் இதில் வியப்பும் கொடுமையும் என்னவென்றால் இஸ்லாமியர்களைக் குறித்த அவர்களின் சித்தரிப்பு என்பது சங்பரிவாரங்களின் சொந்த அனுபவங்களிலிருந்து, அவர்களின் நடவடிக்கைகளிலிருந்து பெறப்பட்டவற்றைத் தலைகீழாக மாற்றி இஸ்லாமியர்களுக்குப் பொருத்திப் பார்ப்பதாகவே அமைந்துள்ளமை கவனிக்க வேண்டியதாகும். அதாவது, அயோத்தியில் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை இவர்கள்தான் இடித்தார்கள். குஜராத்தில் முஸ்லிம் பெண்களை மானபங்கப்படுத்தி, கொலை செய்தனர். புனேயில் பந்தர்கார் கல்வி நிறுவனத்தின் நூலகத்தைச் சூறையாடினர். இந்த இவர்களின் மதவெறி குணாதிசயங்களையெல்லாம் இஸ்லாமியர்களுடையனவாகச் சித்தரிக்கின்ற இந்தப்போக்கு எத்துணை ஆபத்தானது!

இதுமட்டுமா? இஸ்லாமியர்களைப் பற்றிய ஒரு ‘புரிதலை’ இந்துக் குழந்தைகளின் இளம் மனங்களில் ஏற்படுத்திவிட்டால் அதுபோதுமா? கிறிஸ்தவர்கள் குறித்தும் அவர்கள் அறிந்துவைத்துக் கொள்ள வேண்டாமா?

ஆர்எஸ்எஸ் நடத்தும் வித்யா பாரதி சன்ஸ்தான் அமைப்பு அதற்குப் பொறுப்பாக ஒரு ஏற்பாட்டினைச் செய்கிறது. இந்த அமைப்பு இளம் தலைமுறையினரிடையே மதக்கல்வி, கலாச்சாரம் மற்றும் தேசியவாதம் போன்றவற்றை வளர்க்கிற பணியினைச் செய்கிறதாம். இந்த அமைப்பு தொடர்ந்து வெளியிட்டுள்ள புத்தகங்களுள் 12 ஆம் தொகுப்பில் கிறிஸ்தவர்கள் பற்றி எப்படிக் குறிப்பிடுகிறது தெரியுமா? கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர்கள் தேச விரோதிகள் என்றும் இந்திய ஒருமைப்பாட்டுக்கு அவர்கள் ஒரு அச்சுறுத்தலானவர்கள் என்றும் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

அதோடு நிற்கவில்லை “இந்த மதத்தைப் பின்பற்றுபவர்களின் சதிக் கொள்கைகளால்தான் நாடு பிளவுண்டது. இன்றும் நாகாலாந்து, மேகாலயா, அருணாசல், பிகார், கேரளா மற்றும் பல பகுதிகளிலும் இந்திய தேசிய உணர்வுக்கு எதிரான மனநிலையை வளர்ப்பதில் கிறிஸ்தவ மிஷினரிகள் ஈடுபடுகின்றன. இது தற்கால இந்தியாவுக்கு மறைந்திருக்கும் அபாயமாகும்” என்று பாடம் நடத்துகிறது.

மாநில அளவிலான ஒரு அதிகாரத்தையே இத்தனை விஷமாக்கலுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள சங்பரிவாரக் கும்பலினால் இயலும் என்றால், ஒரு தேசத்தின் அதிகாரமே - மத்திய ஆட்சி அதிகாரமே இவர்கள் கையில் மீண்டும் கிடைத்தால்?

ஏற்கெனவே, ஓரிரு முறை முழுமையாகவும், அரைகுறையாகவும் இவர்களுக்கு டில்லி நாற்காலி கிடைத்தபோதும் வரலாற்றை திருத்துவது, அரசியலமைப்புச் சட்டத்தில் கை வைப்பது என்று இவர்களின் மறைத்து வைக்கப்பட்டிருந்த வேலைத் திட்டங்களை அமலாக்க முயன்றதை நாடு பார்த்தது. இப்போது மீண்டும் அந்த வாய்ப்பு வராதா என்று வாய்பிளந்து வருகிற இந்த பாஜகவை அரியணை ஏறிட அனுமதிக்கலாமா?

இன்றைக்கு நமது இந்திய மக்களின் வாழ்க்கைத் துயரங்களுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசின் அமெரிக்க சார்பு, மக்கள்விரோதக் கொள்கை. துன்ப துயரங்களைச் சுமந்து தவிக்கும் மக்கள் காங்கிரஸ் கூட்டணியை படுதோல்வியடையச் செய்யப்போவது உறுதிதான். ஆனால் அதற்கு மாற்றாக யாரைத் தேர்வு செய்வது? காங்கிரசுக்கு மாற்று பாஜகவா? எப்படி இருக்க முடியும்? குஜராத்தை அடுத்து அது ஒரிசாவில் நடத்திய காட்டுமிராண்டித்தனங்களை மறந்துவிட முடியுமா? குஜராத்தில் இஸ்லாமியருக்கு எதிராகக் கொலை வெறித் தாண்டவமாடியவர்கள் ஒரிசாவில் கிறிஸ்தவர்களை நரவேட்டையாடினார்களே! கன்னிகாஸ்திரிகளை மானபங்கப்படுத்தினார்களே! தேவாலயங்களைத் தீயிட்டுக் கொளுத்தினார்களே!

காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல், அதனை நம்பி பயணிப்பது ஒரு தற்கொலைப் பாதை என்றால் பாஜகவை ஆதரிப்பது நம் தலையில் நாமே தீமூட்டிக் கொள்வதாகாதா? ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் இந்த நாட்டில் திட்டமிட்ட ஒரு விஷ விருட்சம் போல வேர் பதிக்க முயலும் எல்லா முயற்சிகளையும் இத்தேசத்து மக்கள் விழிப்போடு நின்று எதிர்கொள்ளவும், எதிர்த்துப் போராடவும் வேண்டியது அதிமுக்கியமாகும். நாகரிக சமூகம் வெட்கித் தலைகுனியும் அளவுக்கு கல்வித்துறையில் மதவெறி நஞ்சு கலக்கும் இந்தமோசடிக் கும்பல் பண்பாட்டுத் துறையிலும் ஏற்கெனவே தம் கைவரிசையைக் காட்டியவர்கள்தானே?

‘வாட்டர்’ படப்பிடிப்பின்போதும், ‘ஃபயர்’ படவெளியீட்டின் போதும் அராஜகத் தாண்டவமாடி, பண்பாட்டின் பெயரால் ரௌடித்தனம் செய்தவர்களல்லவா இந்த சங் பரிவாரக்கூட்டம்? இவர்களைப் பொறுத்தமட்டில் இந்தியா என்பது இந்துக்கள் நாடு. ஆனால், இந்து என்பவர் யார்? இவர்களால் சாதியத்துக்குத் தீர்வுகாண முடிந்ததா? சாதி வெறிக்கும், சாதிய மேலாதிக்கத்துக்கும் சாதி மோதல்களுக்கும், சாதி ஏற்படுத்திவிட்ட இழிவுகளுக்கும் இவர்களிடம் என்ன தீர்விருக்கிறது? என்ன மருந்திருக்கிறது? என்ன நவீன, அறிவியல்பூர்வ அணுகுமுறை இருக்கிறது? இவர்களை எப்படி காங்கிரசுக்கு மாற்றாக ஏற்பது?

மதம் எதுவானாலும் வாழும் மண் பொதுவானதெனும் உணர்வும் விழிப்பும் தோன்றி, வளர்த்தெடுக்கப்படவேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம். நம்பிக்கைகள் பலவாக இருக்கலாம். பண்பாடுகள் பலவாக இருக்கலாம். மொழியும் இனமும் பற்பலவாக இருக்கலாம். இவை எல்லாம் ஒன்றையொன்று பகைத்துக் கொண்டால் - ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டால் இறுதியில் மிஞ்சப் போவது ஒன்றுமில்லை.

மாறாக, ஆயிரம் பூக்கள் மலர்ந்து சிரிக்கும் ஒரு நந்தவனமாக, அவர் நம்பிக்கையும், உங்கள் நம்பிக்கையும் என் நம்பிக்கையும் ஒன்றையொன்று புரிந்துகொண்டு, ஒன்றையொன்று மதித்து வாழும் ஒரு புதிய சமூகச் சூழலை இந்தத் தேசத்தின் புதிய தலைமுறை நுகர்ந்து பார்க்கிற ஒரு நல்லிணக்க சூழலே இன்றைய உடனடித் தேவையாகும். எல்லா மக்களின் அடிப்படைத் தேவைகளை, வாழ்வியல் தேவைகளை, கல்வி, வேலைவாய்ப்பு போன்ற சமூக நீதிக் கடமையினை உண்மையான அக்கறையோடு இங்கே அமலாக்கிட அத்தகைய தொரு சூழலே நமக்கு மிகமிகத் தேவையாகும்.

எனவேதான், மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகளின் தேசபக்த உணர்வுடன் கூடிய முன்முயற்சியினால் தேசம் முழுவதும் உருவாகியிருக்கும் மாற்று அணியினை ஆதரிப்பது ஒன்றுமட்டுமே இருண்டு கிடக்கும் இன்றைய நிலையில் நம் எல்லோர் முன்னும் இருக்கிற ஒரே நம்பிக்கை வெளிச்சக்கீற்று! 

- சோழ.நாகராஜன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It