lady in exercise"மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் ஆக்கப்பூர்வமான எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது”

“எக்காலத்திலும் தெளிவான சிந்தனையும் தீர்க்கமான செயல்பாடுகளும் இருந்தால் நாம் சாதிப்போம்!”

விளையாட்டு வீராங்கனைகளான சாக்ஷி, சானியா மிர்சா, சிந்து, பி.டி.உஷா போன்றவர்களின் சாதனை, வளர்ச்சி, அவர்கள் சந்தித்த சோதனைகள் இவற்றைப்பற்றி நான் இப்போது பேசவரவில்லை. ஒரு சராசரிப் பெண் தன் உடல் நலத்தைக் காக்க விரும்பினால் அதுவும் உடற்பயிற்சி செய்து தன் நலனைப் பேண நினைத்தால், முயற்சித்தால், சந்திக்க வேண்டிய விசயங்களைப் பற்றித்தான் பேசப் போகிறேன். ஒரு முக்கியமான விசயம் என்ன வென் றால் திருமணத்திற்குப் பின் மிகப் பெரும் பாலான பெண்கள் நிறைய உடல் பிரச்சனைகளோடு உள்ளனர் என்பது உண்மை. அதற்கு எளிமையான தீர்வுகளில் முதன்மை யானது உடற்பயிற்சியாகும்.

பெண்ணாய் இருந்தால் அடக்கமாய் இரு, வளையல் போடு, பூ வை, சிரிப்பதில் கூட மகிழ்ச்சியாய் வாய்விட்டுச் சிரிக்கக் கூடாது என்று சொல்லிச் சொல்லியே பெண்ணை எந்த உடற்பயிற்சியும், மனத்துணிவும் இல்லாமல் அடக்கியே வைத்திருக்கிறது இச்சமூகம்.

அதுவும் திருமணத்திற்குப் பின் பெண்ணா னவள் உடற்பயிற்சி என்பதைக் கனவில் தான் காண முடியும். இரு சக்கர வாகனத்தில் கணவரோடு சென்றால் கூட சேலை கட்டி ஒரு பக்கமாகக் காலைத் தொங்க விட்டுதான் உட்கார வேண்டும். விழுந்து காயம் ஏற்பட்டாலும் கவலை இல்லை! சுடிதார் போட்டுக்கொண்டு இருபக்கமும் காலை வைத்து ஓட்டும் முறைதான் பாதுகாப்பானது, வசதியானது, முதுகு வலியும் வராது. கணவரோடு செல்லும்போது இரு புறமும் காலைப் போட்டு உட்கார்ந்து ( கணவர் பகுத்தறிவுவாதியாக இருந்து அவரது வற்புறுத்தலால்) செல்லும் பெண்கள் கொச்சைபடுத்தப் படுகிறார்கள். அதுவும் பணியில் இருக்கும் சக பெண் ஊழியர்களாலேயே என்பது தான் மன வேதனை. இதில் கொடுமை என்ன வென்றால் அதுவே அவருக்குப் பட்ட பெயராகி விடுவதுதான்.

மிதி வண்டி ஓட்டிச் சென்று கீழே விழுந்தால் கூட காயம் பட்டதா என்று பார்க்காமல் கல்யாண மான பொட்டச்சி தெருவுல அசிங்கமா விழுந் துட்டா என்றுதான் சொல்லிக் காட்டுவர். இந்தச் சமூகம் பண்பாடு எனும் பேரில் இதைப்பேசும் போது உடலெல்லாம் கூசி நிற்க வேண்டிய தாய் ஆகிறது.

இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் இப்படிப்பட்ட சமூகத்தில் இந்தப் பார்வையுள்ள சமூகத்தில் ஒரு பெண் அதுவும் திருமணம் ஆன பெண் தன் உடல் நலத்தைப் பேண உடற்பயிற்சி பொது வெளியில் செய்ய வேண்டும் என்றால் அது அதிக பட்சம் நடைப் பயிற்சி மட்டுமே. ஆனால் எந்த வயது ஆணாக இருந்தாலும் ஓடலாம், கால்களை ஆட்டி பயிற்சி செய்யலாம். பெண் இது போன்ற பயிற்சி செய்ய வேண்டும் என்றால் வீட்டில் அதற்கான கருவியில் வேண்டுமானால் செய்து கொள்ளலாம். அதுவும் கருவி வாங்கக் காசு உள்ளவர்களால் மட்டும். சாதாரண, நடுத்தரக் குடும்பப் பெண்களுக்கு இது வாய்ப்பே இல்லை.

இதற்குத்தான் கயமைத்தனமாக வீட்டைக் கூட்டுவது ஒரு exercise, வாசலைக் கூட்டி தண்ணீர் தெளிப்பது ஒரு exercise, கோலம் போடுவது ஒரு exercise. இதெல்லாம் ஒருவகை யோகாசணம் என்று விளக்கம் வேறு. (படையப்பா படத்தில் ரஜனி) ஏன் யோகாவே எந்தப் பெண்ணும் பொது வெளியில் exercise பண்ணக்கூடாது என்பதற்காகவே நிறைய ஆண்கள் தங்களது மனைவிகளை யோகா வகுப்புகளுக்கு அனுப்புவது கண்கூடு. உண்மையில் அப்படிச் செல்லும் பெண்களுக்கு எந்தச் சிக்கலும் தீர்ந்த பாடில்லை என்பதே என் அனுபவ அறிவு.

நடைப்பயிற்சிதான் பிடிக்கும் என்றால் பிரச்சனையில்லை. ஆனால் மெதுவாக ஓடுதல், கை கால் நீட்சி செய்தல் போன்ற பயிற்சிகள் செய்ய விரும்பும் பெண்களின் நிலைதான் சிரமம். இப்பயிற்சிகள் செய்யும் திருமணமான பெண்ணைப் பார்க்கும் ஆண்களின் அயோக்கியப் பார்வைகளைப் பொருட்படுத்தாமல் செய்வது என்பது மிகப் பெரிய மனப் போராட்டம்தான். இதில் உள்ள முக்கியமான விசயம் ஓடுதல், நீட்சி செய்தல் போன்ற பயிற்சிகள் நடைப்பயிற்சியை விட உடலை உறுதியாக்குகிறது. மனத் துணிவுக்கு உடற் துணிவு மிக அவசியம். இவற்றை உடைக்க திருமணமான பெண்கள் பொது வெளியில் இது போன்ற பயிற்சிகளைக் கட்டாயமாகச் செய்ய வேண்டும். இப்படி நாம் செய்யச் செய்யத்தான் வெற்றி பெறுவோம்!!

"கண்ணுக்குத் தெரியாத அடிமைத்தனங்களால் பெண்கள் கட்டுண்டு இருக்கிறார்கள். அதைத் தகர்த் தெறிந்தாலே ஆணுக்குச் சரிநிகராவாள் பெண். உடற்பயிற்சி என்றாலே அது ‘ஆண்மை’ சம்பந்தப்பட்டது என்கிற எண்ணம் நம் சமூகத்தில் பெரும் பாலானவர்களிடையே உள்ளது.

அந்த ‘ஆண்மை’ உலகிலுள்ள வரையிலும் பெண்மைக்கு மதிப்பில்லை என்பதை பெண்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். “உலகத்தில் ‘ஆண்மை’என்ற தத்துவம் அழிக்கப் பட்டாலல்லாது பெண்களுக்கு விடுதலை இல்லை என்பது உறுதி. ‘ஆண்மை’யால்தான் பெண்கள் அடிமையாக்கப் பட்டிருக்கிறார்கள். சுதந்திரம், வீரம் முதலிய குணங்கள் உலகத்தில் “ஆண்மை”க்குத் தான் அவைகள் உண்டென்று, ஆண் மக்கள் முடிவுகட்டிக் கொண்டிருக்கிறார்கள்.”

- தோழர் பெரியார், பெண் ஏன்      அடிமையானாள்? பக் 75, 76

(குறிப்பு: இது முழுக்க என் சொந்த அனுபவமே!! உடற்பயிற்சியிலும் “ஆண்மை” இருந்ததை உணர்ந்தேன். பெரியாரியலால் தகர்த்தேன்!!

Pin It