மாதவிடாய் குறித்துச் சமீபகாலங்களில் நிறைய கட்டுரைகள் வருகின்றன. இது ஆரோக்கியமான செய்தி, ஆனால் இந்து சனாதனிகளுக்கு இவை யெல்லாம் அவமானமான கரமானவை.

மாதவிடாய் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட வயதில் வருவதும் குறிப்பிட்ட வயதில் நின்றுவிடுவதும் இயற்கை. பெண்ணாகப்பிறந்தவள் தனது உடலில் ஏற்படும் இந்த மாற்றங்களைக் கடந்தாக வேண்டும்.

sabarimala agitation 214ஒரு பெண் உடலுறவுக்கும் அதன் வழியாகக் கர்ப்பம் தரிப்பதற்கும் இனவிருத்திக்கும் தயாராகின்ற காலக்குறியீடுதான் பூப்படைதல். இதைப் பல்வேறு வார்த்தைகளில் (ஊருக்கு ஒரு சொல்லாக) குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.

பூப்படைதல் என்ற உடல் இயங்கியல் மாற்றத்தில் கர்ப்பப்பையில் பெண் கர்ப்பமாவதற்குத் தேவையான சினை முட்டைகள் (Ovum) உற்பத்தி யாகும். கருக்கூடாத வேளைகளில் கர்ப்பப்பையை வந்தடையும் இந்த சினை முட்டைகள் மாதந்தோறும் தானாகவே பிறப்பு உறுப்பின் வழியாக வெளியேறும், வெளியேறும் போது கர்ப்பப்பையின் உள்தசையைச் சுற்றியுள்ள ஜவ்வு போன்ற உள் அடுக்கும் சேர்ந்து இரத்த திரவமாக வெளியேறும். (Menses is nothing but unfertilized ovum with ruptured endometrium) உடலுறவும், கருக்கூடுதலும் நடந்து விட்டால் சினை முட்டைகள் வெளியேறாது. பிரசவம் வரை மாதவிடாய் நடக்காது. கர்ப்பக்காலங்கள் தவிர மற்றபடி 45 வயது வரை (தோராயமாக) மாதவிடாய் இருந்து கொண்டேயிருக்கும். இந்த மாதவிடாய் உதிரப்போக்கில் எந்தவிதமான நச்சுத்தன்மையோ, நீரின் மூலமோ, காற்றின் மூலமோ பரவக்கூடிய நோய்த்தொற்றுக்கிருமிகளோ கிடையாது.

உடலில் உற்பத்தியாகின்ற ஹார்மோன்களால் சிலருக்கு மாதாமாதம் குறிப்பிட்ட காலங்களில் மாதவிடாய் வருவதில்லை. மருத்துவரின் ஆலோசனை பெற்று இதைச் சரிசெய்து கொள்ளமுடியும். இந்தப் புரிதலோடு நாம் நம் தலைப்பிற்குள் செல்லலாம்.

மாதவிடாய் மதத்தின் ஆதிக்கத்திற்குள் ஏன் சென்றது? மாதவிடாய் உதிரப்போக்கினை வைத்து இந்தியாவில் உள்ள மற்ற இரண்டு பெரிய மதங்களும் எந்தவிதமான ஆதிக்கமும் செலுத்தாதபோது, இந்துமதம் மட்டும் எப்படி, ஏன் தனி ஆதிக்கம் செலுத்துகிறது.

இந்துமதத்தில் உதிரப்போக்கு தீட்டு, இறப்பு வீடு தீட்டு, குழந்தை பிறந்த வீடு தீட்டு, குறிப்பிட்ட காலம் வரை சமூக விலக்கு, தீட்டுக்கழிக்கப்படாவிட்டால் தீட்டு ஆகும் தீட்டு எப்படி நீக்கப்படுகின்றது?, அந்தத்தீட்டைக் கழிக்கும் ஆற்றலும், அதிகாரமும் பெற்றது யார்?.

கிருத்துவமதத்திற்குள், இஸ்லாத்துக்குள் தீட்டும் கிடையாது. அதைக்கழிக்கும் அதிகார பீடமும் கிடையாது. இந்துமதத்திற்குள் தீட்டுக் கழிக்கும் அதிகாரம் கொண்ட கூட்டம் ஒன்று இருப்பது போல் மற்ற மதங்களில் இல்லாததால் அங்கே யெல்லாம் அது தீட்டாக்கப்படவில்லை. தீட்டுகளை மதத்தோடும், மதத்தின் மூலமான கடவுளோடும் பிணைத்தது யார்? ஏன், எப்போது என்பது இப்போது வாசகர்களுக்குப் புரியும்.

மாதவிடாய்க் காலம் இன்றும் “வீட்டுக்குத்தூரம்” என்ற வழக்குச்சொல்லால் அழைக்கப்படுகிறது. அது என்ன வீட்டுக்குத்தூரம்? முன்பெல்லாம் எல்லாக் கிராமங்களிலும், சாதி வாரியாக வீடுகள் இருக்கும். அவரவர் பகுதிக்கு கோயில், கோயில் வீடு இருக்கும். அதேப்போல பஸ் ரூட் போல சாமி ரூட்டும் உண்டு. (ஒரு குறிப்பிட்ட வழியில்தான் செல்லும். மாறிப்போய் விட்டால் திரும்பிவர சாமிக்கும் பாதை தெரியாது) அதேபோல் ஒவ்வொரு பகுதியிலும்(பள்ளர் தெரு, பறையர் தெரு, கள்ளர் தெரு.... இப்படியாக) தனித்தனியே காளிக்கு, முனிக்கு என்று தனித்தனிப் பாதைகள் உண்டு.

இந்தப்பாதைகளை மாதவிடாய் காலத்துப் பெண்கள், கர்ப்பஸ்திரிகள், பயன்படுத்தக் கூடாது. பாத்திரம் கழுவிய எச்சில் தண்ணீர் கூட ஊற்ற மாட்டார்கள். உச்சிபகல், நடுநிசிகளில் யாரும் நடக்க மாட்டார்கள். இதேபோல மாத விடாய் காலத்துப் பெண்களுக் கெனக் குடியிருப்புப் பகுதிகளில், கோயில் வீடு, மற்றும் காளி முனி ஓட்டங்கள் இல்லாத ஒதுக்குப் புறமான இடத்தில் குடிசை வீடு ஒன்றிருக்கும்.

அந்தப்பகுதியில் உள்ள மாத விடாய்ப் பெண்கள் அந்தக் குடிசைக்குள் அந்தக் குறிப்பிட்ட காலத்திற்கு தங்கியிருப்பார்கள். இரவுக்காவலுக்கு வீட்டிலுள்ள பெரியவர்கள் துணைக்குப்போய்ப் படுத்திருப்பார்கள். இப்படி வீட்டை விட்டு தூரத்தில் போய் இருந்ததனால்தான் இது “வீட்டுக்குத்தூரம்” என்று பெயர்பெற்றது.

எனக்கு 5 சகோதரிகள் அம்மாவைச் சேர்த்துப்பெண்கள் 6 பேர்கள். வீட்டின் ஒரு பகுதியில் உலக்கை ஒன்று நிரந்தரமாகவே கிடக்கும். எங்கம்மா சற்று கூடுதல் ஆச்சாரம். வீட்டிற்குள்ளேயே தனிப்பாதை. தனி தட்டு, டம்ளர், பாய் உண்டு. தலையணை கிடையாது. ஏனென்றால் அதை அலசிப்போட முடியாது. கிணற்றில் குளித்துப்போகிற தண்ணீர் தென்னை மற்றும் செடிகொடிகளுக்குப் போய்விடக்கூடாது. 6 பேர் ஓ 5 நாள் மாதத்தில் 30 நாள் செடிக்குத் தண்ணீர் போகாவிட்டால் செடி எப்படி வளரும்? தப்பித் தவறித் தண்ணீரைச் சாக்கடைப்பக்கம் திருப்பாமல் செடிக்கு விட்டுவிட்டால் அம்மா போடுகிற சத்தத்திற்கு அளவே இருக்காது.

வீட்டில் செலவுக்கு பணம் இல்லாமல் தட்டுப்பாடு நேரும்போதெல்லாம் வீடு சுத்தமா இல்லை அப்புறம் லெஷ்மி எப்படித் தங்கும் என அம்மா புலம்புவது வாடிக்கை. இன்றுபோல் அன்று நாப்கின் என்று தனியாக ஏதும் இல்லாத காலம். துணியைத்தான் உபயோகப்படுத்த வேண்டும். அதை வீட்டில் உள்ள அப்பா, அண்ணன், தம்பிகளின் பார்வையில் படாதவாறு உலர்த்த வேண்டும், பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். அன்று அது பற்றி ஏதும் தெரியாது.

இன்று எண்ணிப்பார்க்கின்றேன். இவை யெல்லாம் ஒரு பெண்ணுக்கு உளவியல் ரீதியாக எவ்வளவு மன உளைச்சலைக் கொடுத்திருக்கும்? வீட்டிற்கு விருந்தாளிகள் வரும்போது, உறவினர்கள் நண்பர்கள் வரும்போது உலக்கைக்கு அந்தப்பக்கம் உட்கார்ந்திருந்த என் சகோதரிகளின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? இந்தக்காயங்களுக்கு என்ன மருந்து? ஏன் இவர்களுக்கு இந்தத் தண்டனை? இவையனைத்தும் மதத்தின் வழியே நியாயப்படுத்தப் பட்டது. அவமான உணர்வுகள் எல்லாம் அர்த்தம் கற்பிக்கப்பட்டது. தூய்மை என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டது.

மாதவிடாய் நாட்களில் கோவிலுக்குச் சம்பந்தப்பட்ட வர்கள் மட்டுமல்ல, வீட்டில் இருப்பவர்கள் யாருமே போகக் கூடாது. போனால் கடவுள் தீட்டாகிவிடும். கன்னிகளாக இருக்கின்றவர்கள் கன்னியாஸ்திரி களாக ஜீசஸ் முன் மண்டியிடு கிறார்கள். ஏற்றுக் கொள்கின்றார். அது ஒரு பிரச்சினையே அல்ல. ஆனால் இந்துக் கடவுள்களுக்கு மட்டும் தீட்டு. இந்துக் கடவுள்களிலேயே பிரத்தியேகத்தீட்டு ஐயப்பனுக்கு மட்டும்தான். மாதவிடாய் ஆரம்பித்து அது நிறைவு பெரும் காலம் வரை உள்ள பெண்கள் யாரும் அவரிடம் போகக்கூடாது.

ஆனால், இதர சிவன், விஷ்ணு, பிரம்மா, காளி, துர்கா கோவில்களுக்கு அந்த வயதுடைய பெண்கள் போகலாம், தீட்டுக் காலங்களில் போகக்கூடாது. இதுகூட மனச்சாட்சிப் படிதான். மாதவிடாய் வழக்கமாக ஒரு குறிப்பிட்ட தேதியில் வரும் என்பது ஒரு கணக்குத்தான். வழக்கமாக நாளைக்குதான் வரும், இன்று சாமிக்கு விஷேசமான நாள், இன்று போய் வரம் கேட்டு வரலாம் என்று சாமியை தரிசித்துக்கொண்டிருக்கும்போது சில மணி நேரங்கள் முன்னதாக வந்துவிட்டால் அப்போது என்ன செய்வது? சாமிதான் என்ன செய்ய முடியும்? இல்லை பக்தைதான் பாவம், என்ன செய்வாள்?

பூப்படையாத பெண் குழந்தை கோயிலுக்குச் சென்று சக குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது முதல் தடவையாக மாதவிடாய் ஏற்பட்டு, துணைக்குக் கோயிலுக்கு வந்திருந்த அக்கம் பக்கத்தாருக்குத் தெரியாமல் மறைத்து, விரைவாக வீட்டிற்குக் கூட்டிப்போன தாய்மார்கள் எவ்வளவு பேர்? இதைக்கன்னித்தீட்டு என்பார்கள். இப்படிக் கன்னித்தீட்டுக்கு ஆளாகாத கடவுள்களைக் காண்பிக்க முடியுமா? இது இயற்கை. இதற்கு காலமும் நேரமும் யாரும் கணிக்க முடியாது.

இப்படித் தீட்டுப்பட்டிருக்காத கோயில் ஒன்று அடையாளம் காட்டமுடியுமா? நான் ஆரம்பத்திலேயே சொன்னேன்! மாதவிடாய் உதிரம் எந்தச் சுற்றுச் சூழலையும் மாசுபடுத்தாது என்று. மாதவிடாய்ப் பெண்களை வீடுகளில் உள்ள ஐயப்பன் (படங்களாக உள்ள) பார்க்கலாமா? தூணிலும், துரும்பிலும், மாதவிடாய் இரத்தத்திலும் இருக்கும் ஐயப்பன் வீட்டில் இருக்கும் படத்திலும் இருந்து பார்த்துக் கொண்டுதானே இருக்கின்றார்? பிறகு ஏன் அச்சப்பட வேண்டும்?

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மட்டும்தான் மாதவிடாய் வயதுப் பெண்கள் போகக்கூடாது. திருச்சியில் உள்ள ஐயப்பன், சென்னை இராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலுக்குள் மாத விடாய் வயதுப் பெண்கள் போகலாம் அதற்கு ஆகமக் கட்டுப்பாடு கிடையாது. இதில் என்ன தூய்மை கடைப்பிடிக்கப் படுகிறது? எல்லா ஐயப்பன்களும் சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் (தன்பாலினச்சட்டப்பிரிவு 377க்கு எதிராக) பிறந்தவர்தானே? (IPC-Indian Penal Code) கேரளாவிற்கும் தமிழ் நாட்டிற்கும் ஒன்றுதானே! சட்டம் இப்படியிருக்க, இங்கு ஆகமம் என்ற பெயரில் தவிர்ப்பது ஐயப்பனா? இல்லை இடைத்தரகர்களா?

மாதவிடாய் வரும் வயதுடைய பெண் கோயிலுக்குள் போகக் கூடாது என்றால் அந்த வயதுடைய பெண்கள் இருக்கின்ற வீடுகளில் ஐயப்பன் இருக்கக்கூடாது. இதற்கு ஐயப்பன் என்ன சொல்வார்? கேரளாவை மட்டும்தான் மழையாகப் பெய்து அழித்து விடுவார் என்றால் இந்தத் தீர்ப்பைச் சொல்லும் உச்சநீதிமன்றம் உள்ள டெல்லியை வெள்ளத்தால் எப்போது அழிப்பார்?

மாதவிடாய் இரகசியமாகப் பாதுகாத்து வந்ததை, ‘நாப்கின்’ விளம்பரத்தில் படம் போட்டு, அது எப்படி உதிரத்தை உறிஞ்சுகிறது என்பது வரை பட்டிதொட்டியெல்லாம் விளம்பரம் செய்த ஊடக விளம்பரதாரர்களுக்கு உண்மையிலேயே நன்றி சொல்ல வேண்டும். மாதவிடாய் தொடர்பான அறைகுறையாகத் தெரிந்த விஷயங்களை எளிமையாக்கியவர்கள் அவர்கள்தான்.

80 களிலும் கூட ஒரு பெண் மருந்துக்கடையில் ஒரு ஓரமாக நீண்டநேரம் நின்று கொண்டிருக்கிறாள் என்றால், கடையில் மருந்து வாங்கிக் கொண்டிருக்கும் ஆண்கள் எல்லாம் போனபிறகு, கடையில் நிற்கும் பையனிடம் நாப்கின் வேண்டும் என்று சொல்லுவதற்கு அவ்வளவு தயக்கம் காட்டுவார். ஆனால் இப்போது என் மகள் அலைபேசியில் எனக்கு விஸ்பர் அல்ட்ரா கிரீன்-னு சொல்லிக்கேட்டு வாங்கிவாங்க என்று சொல்கிறாள்.       

என் சகோதரிகளுக்கு நான் தம்பியாக, அண்ணனாக இருந்த காலங்கள் மாறியிருக்கின்றது. உண்மைதான்! ஆனால் தங்கள் கம்பெனி நாப்கினைப்போட்டுக் கொண்டு ஒரு வகுப்பறையில் உள்ள அத்தனை குழந்தைகளும் பின்பக்கம் திருப்பிக் காண்பிக்கின்றனர். கரை இல்லை என்று உறுதி செய்ய. அதைப்போட்டுக்கொண்டு உயரம் தாண்டலாம். கம்பு வைத்து உயரம் (ஞடிடந றயடவ) தாண்டலாம். குதிரைச் சவாரி செய்யலாம். எல்லாம் ஓகேதான். நாப்கின் கம்பெனிக்காரர்களே!

காலை முதல் மறு நாள் காலை வரை அவர்கள் கம்பெனியின் ஒரு நாப்கின் போதும் என்றெல்லாம் கூட விளம்பரம் செய்கின்றார்கள். நல்ல விளம்பரம்தான். இவ்வளவு வலிமை வாய்ந்த எங்கள் கம்பெனி நாப்கினை அணிந்து கொண்டு, “எந்தக் கோயிலுக் குள்ளும் போகலாம்”; என்று ஏன் ஒரு கம்பெனி கூட விளம்பரம் செய்வதில்லை? அதுதான் கசிவதில்லை. ஈரமாவதில்லை. ஆடைகளில் கரை உண்டாவதில்லையே!

மாதவிடாய் வயதுப் பெண்கள் வணங்கப்பட வேண்டிய வர்கள்! ஆண்டவன் ஏற்பானா? ஆகமம் அனுமதிக்குமா? அவசியமில்லை. என் தாய், என் சகோதரி, என் மனைவி, என் மகள் அனைவரது மாதவிடாய் உதிரமும் போற்றப்பட வேண்டும். மனிதகுல நகர்வே அதற்குள்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

- மருத்துவர் நா.ஜெயராமன், அபெகா பண்பாட்டு இயக்கம்

Pin It