கீற்றில் தேட...

திராவிடர் இனத்தின் மாபெரும் தலைவர் கலகக்காரர் தோழர் பெரியாரை தோழர் அண்ணா அவர்கள் 1935 இல் திருப்பூரில் சந்தித்து அவருடன் இணைந்து தன் பொது வாழ்க்கையைத் தொடங்குகிறார்.

anna bookஅதன்பின் தோழர் அண்ணா அவர்களின் கல்வி, பேச்சாற்றல், எழுத்தாற்றல் முழுமையாக கலகக்காரர் தோழர் பெரியாரின் கருத்துக்கள் திராவிடர் நாட்டின் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்து, சுயமரியாதை இயக்கத்தின் பக்கம் பெரும் திரளாக திரளச் செய்தது. அவர் எழுதிய நூல்கள் மற்றும் பேச்சுக்களின் நூல் வடிவாக எண்ணற்ற வைகள் வெளிவந்து இருந்தாலும் அவற்றில் மகுடமாய் அமைந்தது, ‘தீ பரவட்டும்’ என்ற தொகுப்பு நூலே ஆகும்.

இந்நூல் 09.02.1943 இல் சென்னை சட்டக் கல்லூரி மண்டபத்தில், பார்ப்பன வேதமதமான இந்து மதத்திற்கு வலுசேர்க்கும் இராமாயணம், மகாபாரதம் ஆகிய நூல்களை ஏன் தீயிட்டு கொளுத்த வேண்டும்? என்ற பொருளில் ‘தீ பரவட்டும்’ நடந்த சொற்போரின் தொகுப்பே இந்நூல். கூட்டத்திற்கு இந்துமத பரிபாலன நிலையத் தலைவர் தோழர் சி.என்.இராமசந்திரன் செட்டியார், பி.ஏ.பி.எல். அவர்கள் தலைமை வகித்தார். தோழர் அண்ணா அவர்கள் தலைமையில், தோழர் ஈழத் தடிகளும் எதிர்த்தரப்பில் தோழர்கள் ஆர்.பி.சேதுப் பிள்ளை பி.ஏ.பி.எல்., அவர்களும் சீனிவாசன் அவர்களும் கலந்துகொண்டு சொற்பொழிவு ஆற்றினார்கள்.

இதன் இரண்டாம் கட்டச் சொற்போர் 14.03.48 மாலை 6 மணிக்கு சேலம் செவ்வாய்ப்பேட்டை தேவாங்கப் பாடசாலை மண்டபத்தில், பெரும் திரளான பொதுமக்கள் முன்னிலையில் நடை பெற்றது. கம்பராமாயணமும், பெரியபுராணமும் ஒழிக்கப்படவேண்டும் என்று திராவிடநாடு ஆசிரியர் தோழர் சி.என்.அண்ணாதுரை பேசினார். ஒழிக்கவேண்டாம் என்பது பற்றிப் பேராசிரியர் தோழர் எஸ்.சோமசுந்தர பாரதியார் சொற்பொழி வாற்றினார். சேலம் கல்லூரித் தலைமைப் பேராசிரியர் தோழர் ஏ.இராமசாமி அவர்கள் தலைமை வகித்தார்.

இவ்விரண்டு சொற்பொழிவுகளும் ஒன்றாக ‘தீ பரவட்டும்’ என்ற தலைப்பில் 1996 நவம்பர் மாதம் (முதற்பதிப்பு) திராவிடர் கழக வெளியீடாக வெளியானது. ‘இவர்தான் அண்ணா...!’ என்ற தலைப்பில் தோழர் டாக்டர் மு.வரதராசனார் அவர்கள் எழுதிய முன்னுரையோடு வெளி வந்துள்ளது.

இந்நூல் திராவிடர், ஆரியர் இனப் பண்பாட்டுத் தளத்தில் மிகப்பெரிய ஆய்வாக வந்த, இந்நூலின் முன்னுரையில்,

“தோழர் அண்ணாவின் சொற்பொழிவு கற்றோருக்கு அறிவு விருந்து ஆகின்றது. கல்லாத வருக்கும் பகுத்தறிவுத் தூண்டுகோல் ஆகின்றது. கருத்து வேறுபாடு உடையவர்களுக்கும் ஆராய்ச்சிச் சுடர் விளக்கு ஆகின்றது”

என்ற தோழர் அண்ணாவைக் குறித்த அவரின் மதிப்பீடு எவ்வளவு கருத்தாழம் மிக்கது என்பதை தோழர் அண்ணாவின், ‘தீ பரவட்டும்’ விளக்கும். 09.02.1943 சென்னை உரையில், தோழர் அண்ணா அவர்கள்,

“கலையை அழிக்கின்றனர், கம்பன் புகழை மறைக்கின்றனர் என்று கூறப்படும் பழிச்சொல்லை நாங்க ளறிவோம். கலையிலே தேர்ந்து, அதிலே ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு, கம்பனின் இராமாயணமும், சேக் கிழாரின் பெரியபுராணமும், கலை என்று கருதும் அன்பர்கள், ஒரு பெரியாரின் பேரால், ஓர் அண்ணா துரையின் அனலால் அக்கலை அழிந்துவிடும் என்று கருதுவரேல் அவ்வளவு சாமான்யமானது கலை யாகாது; அத்தகைய கலை இருத்தலு மாகாது என்றுரைக்க ஆசைப் படுகின்றேன். கலையைக் குலைக்கும் செயலல்ல எமது செயல். கலையிலே புரட்சி உண்டாக்க விழைகின்றோம். .தக்க காரணங்களோடு......!

மக்களிடம் இத்தகைய புராணங்கள் கற்பனை என்பது எடுத்துரைக்காது, அவர்கள் மனப்பாங்கைக் கெடுப்பதன் பலனாக, மக்களின் நிலை கெட்டுவிட்டது. திருமூலர் வேறோர் விஷயத்துக்காகக் கூறினார், “குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளாது; குருட்டுக் குருவைக் கொண்டு, குருடுங் குருடுங் குருட்டாட்டமாடிக் குருட்டில் வீழ்ந்தனர்”

என்றுரைத்தார். நமது மக்களின் நிலைமை அதுவாக இருப்பதை உணருங்கள் என்று அசைக்க முடியாத ஆதாரங்கள் மற்றும் தரவுகளுடன் தனது முதற்கட்ட உரையை நிறைவு செய்து இருப்பார்.

தோழர் சேதுப்பிள்ளை அவர்கள் தனது மறுப்புரையில்,

“கம்பனின் காலம், தமிழ்நாடு சீர்குலைந்திருந்த காலம். எனவே, அவர் மக்களுக்குப் பெருமையை உணர்த்த ஓர் நூல் இயற்றக் கருதினார். எல்லா மக்கட்கும் தெரிந்த ஓர் கதையை எடுத்து, அதிலே தமிழ்நாட்டுக் கலைச் செல்வத்தை அமைத்தார்.

கம்பரின் கவியால், சீதை நமக்கு ஓர் தமிழ் மங்கையாகவே தென்படுவது காண்போம். இராமன் வில் முறித்துச் சீதையை மணந்தான் என்கிறார் வால்மீகி. கம்பனோ தமிழருக்கு காதல் மணத்தைக் கூறலே சிறப்புடைத்து என்று எண்ணினார். அவர்கள் கூறியது போல, அகப்பொருள் தோன்றிய நாடு தமிழ்நாடு. காதல் இன்றேல் சாதல் என்பதை நாட்டியநாடு இது. எனவே இராமனும் சீதையும் ஒருவரை கண்டு காதலித்தனர் என்று கூறுகிறார். “அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்” என்றார் கம்பர். கண்ணைக் கண் கெளவிற்று என்று கூறுகிறார். இங்கு நாம், தமிழ்நாட்டு மாண்பு காண்கிறோம்.”

தோழர் அண்ணாவின் கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் தோழர் ஈழத்தடிகள் தனது உரையில்,

“சேதுப்பிள்ளை அவர்கள் இப்பொழுது திராவிட மன்னனான இராவணனை ஓர் ஆரிய னாகக் கூறுவது, ஆராய்ச்சிக்கும் அறிவுக்கும் பொருந்தாக் கூற்றே என்பது எனது கருத்தாகும். என்றாலும் இராவணனுக்கும் ஓர் ஆரியன்தான் என்று சொல்லப் படும் இப்போதைய கூற்றுக்கும், தோழர் சேதுப்பிள்ளை அவர்களோ, இன்னும் மற்றுமுள்ள புலவர் குழாங்களோ தக்க ஆதாரம் காட்டுவார்களானால், ஒரு தமிழ்ப்புலவனாகிய கம்பன் இரண்டு ஆரிய மன்னர் களின் கதையைப் பாடியது திராவிட மக்களை இன்னும் அதிகமாக இழிவுபடுத்தியதாகும் என்று மேலும் கம்பனைக் காய்ந்து, அத்தகைய கலப்பற்ற ஆரியக் கதையாகிய இராமாயணத்தை இவ்வளவு காலமும் கொளுத்தாமல் இருந்தது எங்களுடைய பெருந் தவறென்று கருதி, அதனை உடனே தீயிடும் வேலையைத் துரிதமாகச் செய்வோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், நெறிமுறைக்கு மாறுபடாத முறையில் நின்று அரசோச்சிய இராவணனுடைய நற்பண்புகளை அறிவுடைய உலகம் ஒருபோதும் மறுக்காது, மறக்கவும் மாட்டாது என்பதையும் ஈண்டு நினைவூட்டுகிறேன்.”

தோழர் அண்ணா மற்றும் தோழர் ஈழத் தடிகள் ஆகியோரின் கருத்துக்களை மறுத்து சட்டக் கல்லூரி மாணவர்களில் ஒருவராகிய தோழர் சீனிவாசன் என்பவர் “ஆரியர்களுக்கும், திராவிட -ருக்கும் முற்பட்ட காலத்திலிருந்தே இரத்தக் கலப்பு ஏற்பட்டு விட்டதாகையால், இப்போது ஆரியர் திராவிடர் என்று பேசுவது முறையாகாதென்று பேசவே” கூட்டத்தில் இருந்தவர்கள், அவர் பேசுவது ஆதாரமற்ற கூற்றென்று கூறச் சிறிது கலவர முண்டாயிற்று. உடனே தோழர் சீனிவாசன் அவர்கள் தம்முடைய பேச்சை நிறுத்திக்கொண்டு விட்டார்.

இந்தச் சொற்போரின் முடிவுரையாகத் தோழர் அண்ணா அவர்கள், “ஆரியக் கற்பனைகளைத் தமிழ்க்கலை எனும் நகாசு வேலை செய்தது, தமிழருக்குக் கம்பன் செய்த கேடு என்பேன். கண்ணகியின் மாண்பைக் கம்பன் சீதையைத் தீட்டுவதிலே காண்கிறோம் என்கிறார். கண்ணகி குறித்த ஏடு இருக்க இது ஏன்? என்று கேட்கிறேன். அவர் என் உரையிலே குறித்த பல விஷயங்களை மறுத்துரைக்காது இராவணன் ஆரியன் என்று ஆதாரமற்ற சொல் கூறி வாதத்திலிருந்து தப்ப முயன்றது காண வருந்துகிறேன். மன்றத்தினர் இதனை உணர வேண்டுகிறேன்” என்று பேசினார்.

இந்நிகழ்விற்குத் தலைமை வகித்த தோழர் சி.எம்.இராமசந்திரன் செட்டியாரவர்கள் “விவாதத் திலே இருவரும் அழகுறப் பேசினர். இனியும் பேசுவர் என்று நம்புகிறேன். எனவே, பிறகே என் கருத்தைக்கூற விரும்புகிறேன். இப்போது இது குறித்து ஒன்றும் கூறவில்லை. விவாதம் மிக மேலான முறையில் இருந்தது கண்டு மகிழ்ந்தேன்” என்று பேசினார்.

14.03.1948 இல் சேலம் செவ்வாய்ப்பேட்டை தேவாங்க பாடசாலை மண்டபத்தில் நடந்த இரண்டாம் கட்ட விவாதத்தில், தோழர் அண்ணா அவர்களின், முத்தாய்ப்பான “ஏன் கொளுத்த வேண்டும்?” என்ற பத்தியில் உள்ள வரிகளை ஊன்றிப் படியுங்கள்.

“தமிழருக்குத் தமிழ்நெறி தமிழ்முறை. ஒழுக்கம், வீரம், கற்பு, காதல் எனும் பண்புகளைத் தரக்கூடிய கலையாக இருத்தல் வேண்டுமேயொழிய, வேறோர் இனத்தைப் புகழ்வதும், அதற்கு ஆதிக்கமளித்த தமிழ்மக்கள் மனத்திலே தன்னம்பிக்கையற்றுப் போகும்படியும் தமது இனத்தைப் பற்றியே தாழ்வாகக் கருதிக்கொள்ளும் படியான நிலைமை உண்டாக்குவதுமான கதை, காவியம், இலக்கியமென்பவை களைக் கொளுத்த வேண்டுமென்று நாங்கள் கூறுகிறோம். தமிழர் என்று நான் கூறும்போது தமிழ்மொழி பேசுவோர் என்பவரை மட்டுமல்ல நான் குறிப்பது, தமிழ் இனத்தை என்பதை நினைவூட்டுகிறேன்.”

திராவிடர் நாடாம் தமிழ்நாட்டில் சூழ்ந்து உள்ள பார்ப்பன வேத சனாதன மதமான இந்துமதப் பண்பாட்டு கூறுகளை திணிக்க முற்படும் இந்துத்துவா சக்திகளுக்கு எதிராக தோழர் அண்ணா அவர்களின் அறிவாயுதமான இந்தத் ‘தீ பரவட்டும்’ என்ற நூலைத் திராவிடர் இயக்கம், திராவிடர் அரசியல் கட்சிகள், பொதுவுடைமைக் கட்சிகள், முற்போக்கு இயக்கங்கள் ஆகியவற்றில் பணி யாற்றும் இளைய தோழர்கள், கற்று உணர்ந்து பரப்பிட முன்வரவேண்டும் என்பதே. “காட்டாறு” தொகுப்புக் குழுவின் எதிர்பார்ப்பு ஆகும்.

புத்தகத்தின் விலை ரூ: 30 - கிடைக்கும் இடம்: திராவிடர் கழக வெளியீடு, பெரியார் திடல், 50 ஈ.வெ.கி. சம்பத் சாலை,சென்னை - 600017