ஏனப்பா பழனிப்பா உம்பட தோட்டத்துல பண்ணக்கிருக்குர காளிவாடன் மவ டவுன்ல படிக்கப்போனடெத்துல உம்பட ஒன்னுவிட்ட பங்காளிப் பயலோட பழகி மூனு மாசமா முழுவாம இருக்காலாமில்ல நெசமா?

sexual assaultஆமாங்க ஊர்ப்பண்ணாடி. அது நெசந்தானுங்க நம்ம பயலுக காலனியூட்டுப் புள்ளங்கள ஒருவாட்டி ரெண்டுவாட்டி பொழங்கிட்டு உட்டுடவேண்டிதானே இப்பிடியா முழுவாம போரளவுக்கா நடந்துகுறது?

சரி சரி... ஒரு அஞ்சோ பத்தோ கொடுத்து கருவக் கலைக்கச் சொல்ல வேண்டிதானே ... கவர்மெண்டு ஆஸ்பத்திரிக்கி போனாதான் வில்லங்கமாகும். இப்பத்தா நம்மூட்டுப் புள்ளங்க நெறய டாக்டரா படிச்சிருக்காங்களே அதுல ஏதோ ஒரு டாக்டருகிட்ட தனியாரு ஆஸ்பத்திரியில வெச்சுக் கருவக் கலச்சுட வேண்டியதானே?

காளிவாடங்கிட்ட வேண்டியமட்டும் நா சொல்லிப்பாத்துட்டேன். இரும்ப முழுங்கிட்டு செரிமானமாகத மலப்பாம்பாட்டம் நெளியிரானேயோழிய ஒண்ணும் பேசமாங்டேங்கிறான். நீங்கதான் ஊர்ப்பண்ணாடியாச்சே... அவனக் கூட்டியாறேன். செத்த சொல்லிப்பாருங்களே... இத இப்பிடியே உட்டுட்டா டவுன்ல படிக்கிற எம்பட பேரன் நாளைக்கி ஒரு பறச்சியோடப் பழகி அவ வயித்தத் தள்ளிகிட்டு எம்பட ஊட்டு வாசல்ல வந்து நின்னா சாதிகெட்டு சாதிகலப்பாயிடுமுல்ல... அப்பறம் சக்கிலி பறயனெல்லாம் நமக்குச் சம்மந்தியாயி சரிசமமா உக்காருவானுங்க.

சரி கூட்டியா பேசிப்பாப்போம்.

வாடா காளி.... என்ன இந்தப்பக்கமே ஆளக்கானாம்... காப்பித்தண்ணி ஏதாச்சு குடிக்கிறியா அந்தப் படல்ல மாட்டியிருக்குற கெளாச எடு காப்பித்தண்ணி ஊத்தச்சொல்றேன்.

அதெல்லா ஒன்னு வேனாமுங்க சாமி இந்தக் கழுத படிக்கப்போனடெத்துல இப்பிடிப் பண்ணியிட்டு வந்து நிக்கிதுங்க சாமி. அந்தப்பய ஆரு எவுருன்னு விசாரிச்சதுல எங்க பண்ணாடியோட தூரத்து சொந்தமுங்களாம். அவுரும் டவுன்ல எம்மவ படிக்கிற அதே பள்ளிக்கோடத்துலதா படிக்கிறாராம். தோட்டத்துக்கு ஒரம்பரய வந்துபொழுதுல தோட்டத்துல எம்மவளப் பாத்துட்டாராம். அதிலிருந்து சிநேகிதமாயிடுச்சுன்னு சொல்றாங்க சாமி. எனக்கு என்னபன்ரதுன்னு ஒண்ணுமே புரியலங்க. இனி எப்பிடி எங்க பண்ணாடி மூஞ்ஜில முழிக்கிறதுன்ன தெரிலிங்க.... இந்தக் கழுத பண்ணுனதுல பண்ணாடி என்னைய பண்ணயத்துக்கு வேண்டாமுன்னு சொல்லிடுவாரோன்னு பயமாயிருக்கு.... கொஞ்ச நீங்களு எங்க பண்ணாடிகிட்டச் சொல்லுங்க சாமி... இந்த கழுத படிக்கிறதுக்குன்னு பண்ணாடிகிட்ட கடெங்கப்பு எக்கச்சக்கமா வாங்கி வைச்சிருக்கேனுங்க... கடனா வாங்குனதத் திருப்பிக் கொட்ரான்னு கேட்டாருன்னா திடுதிப்புன்னு அப்புட்டுக் காசுக்கு நானெங்க போறது சாமி... இனி அவுரோட பழகாதளவுக்கு நா அவளக் கண்டுச்சு வெச்சுக்குரேனுங்க. வயித்திலிருக்குற புள்ளயத்த என்ன பண்றதுன்னு தெரிலீங்க சாமி....

டே காளி....தோடங்காட்ல சாணி அல்லுற உங்களுக்கெல்லாம் பள்ளிக்கோடப் படிப்பெல்லா எதுக்குடா... அதுவும் பொட்டப்பள்ளயப்போயி பெரிய படிப்பெல்லா படிக்கிறளவுக்கு டவுனு பள்ளிக்கோட அனுப்பியிருக்கியே.... பொட்டப்புள்ளங்கள வயிசுக்கு வந்ததும் கட்டிகுடுத்துருந்தா, இந்த வம்பெல்லா வந்திருக்குமா? சரி உடு நடந்தது நடந்துபோச்சு... ஊருலகத்துகு தெரியரதுக்குள்ள காதுங்காது வெச்சமாதிரி சட்டுபுட்டுன்னு உம்பட சாதிசனத்துல ஒரு பயலப்பாத்து கண்ணாலத்துக்கு ஏற்பாடு செய்யி... இந்த பயலோட அப்பனாத்தாட்ட பேசி கண்ணாலச் செலவு முச்சூடும் ஏத்துக்சொல்றேன்... உம்பட பண்ணாடிகிட்ட நா பேசிக்கிறேன். பண்ணயத்துக்கு உன்ன வேண்டான்னு சொல்லாதளவுக்கு நா பாத்துகுறென். நீ போயி ஆகவேண்டியத பாரு...

ரெம்ப நல்லாரிப்பீங்க சாமி... நாம்போயி கண்ணாலத்துக்கான ஏற்பாட்டப் பண்றேனுங்க சாமி... எம்பட சாதிசனத்துல பொட்டப்புள்ளங்கள ஆரும் பள்ளிக்கோட அனுப்புனதில்லீங்க எம்மவ பள்ளிக்கோட போனது எனக்குப் பெருமயாதா இருந்துச்சுங்க... ஒரு நாலு எழுத்து கத்துக்குச்சுன்னா ஊரு ஒலகத்தத் தெரிஞ்சு அருஞ்சு பொழச்சுக்குமுன்னு ராப்பகலா எரும கண்ணு பாம்பு பள்ளின்னு பாக்காம ஒழச்சேனுங்க... அது வீணாப்போச்சுன்னு நெனச்ச வெசனமாயிருக்குங்க... ஏந்தங்கச்சி மவெ ஒருத்த ஒரு வேலவெட்டிக்கும் போகம தருதலயாச் சுத்திக்கிட்டிருக்கானுங்க... எந்தங்கச்சியு ரெண்டுமூனுதர பொண்ணு கேட்டு வந்துச்சுங்க... நாந்தா தரமாட்டேன்னு சொல்லிட்டேனுங்க அவங்கள வலியனா போயாச்சு பொண்ணு கேட்டு வரச்சொல்றேனுங்க சாமி.

அடக் காளி... ஆராரு தலயில என்னென்ன எழுதியிருக்கோ அதுபடிதாண்டா நடக்கும். இம்பிட்டு சொத்துபத்திருக்குற நானே எப்பட மவனப் பள்ளிக்கோடத்துக்கு அனுப்பல உங்களுக்கெல்லாம் எதுக்குடா படிப்பு போயி நல்ல காரியத்துக்கு நாளக்குறி.

பழனியப்பனிடம்:

பழனிப்பா.... நாம பயந்த மாதிரி ஒன்னு நடந்துடுல நீ காளிவாடன பண்ணயத்துக்கு வேண்டான்னு சொல்லிடுவேன்னு பயப்பட்றான். இவனுங்கள இப்படி பயங்காட்டியே வச்சுருக்குறவரைக்கும் நாம பண்ணாடிகளா வெள்ளயுஞ் சொல்லயுமா வெளியில சுத்திக்க முடியும். இவனுங்க புள்ளகுட்டியெல்லாம் பள்ளிக்கோடம் போயி படிச்சு வேற வேலவெட்டிக்கு போயிடுச்சுன்னா நம்ம பண்ணயத்துல ராப்பகலா நேரங்கால பாக்காம பாடுபட்றதாரு? நம்ம புள்ள குட்டிகெல்லா நம்மல மாதிரியே பண்ணாடிகளா சுத்துரதெப்பிடி?

நானும் எப்புடுத்தூரம் பேசியும் மசியாதவன எப்பிடியோ பேசி மடக்கிடீங்களே ஊர்பண்ணாடி. ஏதோ தலக்கி வந்தது தலபாகயோடபோச்சு. அந்தப் பயலோட அப்பனாத்தாட்ட பணத்தக் கொண்டாரச் சொல்றேன். அத வாங்கி சூட்டோட சூடா காளிவாடங் கைல்ல குடுத்துருங்க.

இப்பிடியெல்லாம் பாவத்த சம்பாரிக்கறதாலவோ என்னவோ எம்பட பயலுக்கொரு பொண்ணு அமய மாட்டேங்குது. நானும் பட்டிதொட்டியெல்லாம் சுத்தி அலசியிட்டே ஒண்ணுந்தோதுவாதா அமயல. நம்மாளுங்க, பொட்டப்புள்ளங்க பொறக்கறப்பவே வெதநெல்லப் போட்டி கொன்னுட்டாங்க போல... கொங்கஞ் ஜாதியில பொறந்த பசங்களுக்கு பொண்ணு கெடக்க மாடேங்குது.

நம்மூட்டு பயலுகயளயும் எட்டாங்கிளாசு பத்தாங்கெளசுளேயே நிறுத்தி கந்து கடக்கி அனுப்பியிடுறோமா... இருக்குற ஒண்ணுரெண்டு பொட்டப்புள்ளங்கள ஊட்டுல வெச்சுகமுடியாம காலேஜீ அப்பிடி இப்பிடின்னு அனுப்பி படிக்க வச்சுடுறோம். படிக்கப்போன நம்மூட்டு பொட்டப் புள்ளங்களும் ஒண்ணுரெண்டு காளிவாட மவளாட்டம் காதல் கத்திரிக்கான்னு, வேத்து ஜாதிப் பயலுகளோட ஓடிப்போயிருதுங்க. அதுபோக மீதமிருக்குற பொட்டப்புள்ளங்களுக்கு அவங்க படிப்புக்குத் தோதான மாப்பளய தேடிக் கண்ணாலங் கட்டி வக்கிறோம். கந்துக் கடக்கிப் போயி நாலு காசு சம்பாதுச்சவங்க மாமியாருக்கு நகை, மாமனாருக்கு மோட்டார் சைக்கிளுன்னு வாங்கிக் கொடுத்துக் கட்டிக்கிறாங்க. என்னயாட்ட வெவசாயமே கெதின்னு கெடக்குறவன் பொளப்புதா இப்பிடி சீப்புடுது.

        நீங்க இம்புட்டுத் தூர நீங்க சொல்றதால எம்பட காதுக்கு வந்த ஒரு சேதியச் சொல்லிப்போடுறேனுங்க. ஊர்ப்பண்ணாடி உம்பட பய ஒட்டஞ்சத்தர மார்கெட்ல ராப்பகலா ஒருமாதிரியான பொம்பளங்களோட சுத்தறதா ஊர் முச்சூடும் பேசிகிறாங்க. சட்டுபுட்டுன்னு ஒரு மொண்டி மூக்கரயப் பாத்துக் கண்ணாலங்கட்டி வச்சுருங்க. இல்லாட்டி உம்பட பேரு கெட்டுப்போயிருங்க.

பழனிப்பா... இந்த சேதி எப்பவோ எங்காதுக்கு வந்திடுச்சு. நீயாவது பட்டும்படாமச் சொல்ற. ஆனா ஊர்க்கவண்டன் மவெ ஊர்மேயறான்னு மூஞ்சிக்கி நேராவே பேசுறானுங்க. என்ன பண்றது அவனுக்கு வேற வயிசு நாப்பதத் தாண்டுதல்ல... நானு எப்பிடியாச்சு ஒரு கண்ணாலத்த மூச்சுடுலான்னுதா பாக்குறே ஒண்ணும் தோதுவாதா அமய மாட்டேங்கிது. அதததுக்கு ஒரு நேரங்கால வரவேணாமா?

இப்பிடிக் கண்ணாலமே அமயாத நம்மூட்டுப் பயலுகளுக்குக் கேரளாவுக்குச்சேவ போயி கண்ணாலங்கட்டியிட்டு வாராங்களே?... அப்பிடியாச்சு ஒண்ணப் பாக்கவேண்டியதானுங்க ஊர்பண்ணாடி?

என்ன சாதி என்ன கொலமுன்னு தெரியாமப்போயி எப்பிடி கண்ணாலங்கட்டுறது... அதில்லாம ஊர்ப்பண்ணாடின்னு பட்டிதொட்டியெல்லாம் கூப்புட்டு ஒரு கவுருதயக் கொடுத்துடாங்க... நாம்போயி எந்த ஜாதியின்னு தெரியாததக் கட்டியிட்டு வந்துட்டா, நம்ம ஜாதிக் கவுருத என்னாவுறதுன்னுதா ஒரே யோசனயாயிருக்கு...

ஏனுங்க இப்பிடி யோசிக்கிறீங்க? நம்ம தவுட்டுப்பாளயத்து ஊர்ப்பண்ணாடியும் அவுரு மவனுக்கு இப்பிடிதா கேரளாவுல போயிக்கட்டியாந்தாரு... அவுருக்கென்னா கவுருத கெட்டாப்போயிடுச்சு? நம்மூட்டுப் பசங்களுக்குத்தானே வேத்து ஜாதியில கட்டியாறோம். அது என்னாயிருந்தாலும் நம்ம சாதி வாரிசுதானே? நீங்க சரின்னு மட்டுஞ்சொல்லுங்க. நாளக்கே உம்பட ஊட்டுக்கு புரோக்கர அனுப்பி வைக்கிறேன்.

அது ஒண்ணிலீப்பா பழனிப்பா...கேரளாவுல கட்டியாறது பூரா, தாந்த சாதிப்புள்ளங்கின்னு சொல்லிக்கிறாங்கப்பா... அதா யோசனயாயிருக்கு... அது வெளியில தெரிஞ்சா வெளியில தலக்காட்ட முடியாதுப்பா...

அது ஒரு சாமாச்சரமே இல்லீங்க ஊர் பண்ணாடி... உள்ளுருல கட்டுனாதான் தாந்த சாதிப் பொண்ணு, காலனியூட்டுப் பொண்ணுன்னு தெரியும்... கேரளாவுல கட்டியாறதால தாந்த சாதியா ஒசந்த சாதியான்னு இங்கிருக்குறவங்களுக்கு எப்பிடித் தெரியப்போவுது? அதால கவலய உட்டுட்டு உம்பட பயலுக்கு ஒரு நல்ல காரியத்தப் பண்ணப்பாருங்க. நாளைக்கே நான் புரொக்கர அனுப்புறேன்.

வாங்க நம்ம பழனியப்பன் அனுப்புச்சாருங்கலா? ஒக்காருங்க காப்பித்தண்ணி வெக்கச் சொல்றேன். குடுச்சுட்டேப்பேசுவோம்.

ஆகட்டுமுங்க ஊர்பண்ணாடி

பழனிப்பன் எல்லாச் சமாச்சரமும் சொல்லிருப்பாருங்கில்ல... நமக்னு ஒரே பய மட்டுந்தானுங்க. இருவுது குழிக்கி மேல காடு தோட்டமுன்னு இருக்குதுங்க. சொத்துபத்துக்கு ஒரு கொறயுமில்லீங்க. இந்தப் பய கொஞ்ச ஒழுங்கா படிச்சிருந்தாலோ, கவுருத பாக்கம கந்துக் கடக்கிச்சேவ நா அனுப்பியிருந்தாலோ, இந்நேரம் கண்ணாலமாயிருக்குமுங்க... நாந்தா இப்புட்டுச் சொத்திருக்கே ஒத்தப்பயதானே வெசவாயத்த மட்டு பாத்தா போதுமுன்னு நெனச்சுட்டேனுங்க.

அதில்லாமக் கொஞ்சம் செல்லமாவேற வளத்துட்டேனுங்க. வயசுக்கோளாறுல தோட்டந்தோரவுல வேலக்கி வர்ற காலனியூட்டுப் பொண்ணுங்ககிட்டக் கொஞ்சம் அப்பிடி இப்பிடி நடந்தப்பவே ஒரு கண்ணாலத்த பண்ணிவைச்சிருக்கோனும். சின்னப் பயதானேன்னு நெனச்சது தப்பாபோச்சுங்க. அவனால சும்மா இருக்கமுடியாம மார்க்கெட்டுக்கு காய்கசும்புன்னு கொண்டு போரானுங்களா... அங்கேயும் கண்டபடி சுத்துறதா ஊரு பூரா ஒரே போச்சுங்க... இவன் நடடிவக்கை வெளியில தெரிஞ்சதாலே எம்பட சாதிசனத்துல ஆரு பொண்ணு குடுக்க மாட்டேங்குராங்க... நீங்கதா எப்படியாச்சு ஒரு ஏற்பாடு செஞ்சாகோனுமுங்க... இந்தாங்க பயலோட ஜாதகம். 

 ஊர் பண்ணாடி... நீங்க இம்புட்டுதூரம் வெள்ளந்தியாப் பேசறதால என்னால எவ்ளோ சீக்கிரமா பாக்குனோமோ அவ்ளோ சீக்கிரமா பாக்குறேனுங்க... ஆனா கேரளாவுல தமிழ்நாட்டுக்குப் பொண்ணத் தர்றவங்க யாரும் ஜாதகத்தக் கேக்குறதில்லீங்க... பயலுக்கு சீக்கு கீக்கு ஏதாச்ச இருக்குதான்னு, டாக்டரு சட்டிவிகேட்டுதானுங்க மொதல்ல கேட்குராங்கோ...

உங்க பயல கூட்டிப்போயி ஒரு நல்ல டாக்டருகிட்டக் காட்டி சீக்கில்லீன்னு சட்டிவிகேட்டு வாங்கியிடுங்க. அப்புறம் பொண்ணு பேருல சொத்த பாதிக்கிமேல எழுதி பத்தரம் போட்டுப் பதிவாபீசுல பாதியோனுமுங்க... அதில்லாம, பொண்ணோட அம்மாவுக்கு நகை போடோனுங்க மச்சுனே, மாமேன்னு இருந்தா மோட்டார் பைக்கு வாங்கித் தாரோனுமுங்க... இல்லாட்டி மாமனாருக்கு வாங்கித் தாதோனுமுங்க...

அதுக்கெல்லாம் ஒத்துகிட்டாதாங்க ஜாதகத்தைப் பத்தி பேசுவாங்க ஜாதகப் பொருத்த மில்லீன்னாலும் பொண்ணக் கொடுப்பாங்க. அதவிட முக்கியம், தாந்த ஜாதிப்பொண்ணாத்தான் அமயுமுங்க... நீங்க கண்ணாலத்துக்குப் பின்னாடி நம்மளக் குத்தங்கொற சொல்லக்குடாதுங்க... இதயெல்லாம் பழனிப்பக் கவுண்ருக்குத் தெரியுமுங்க...உங்ககிட்ட சொன்னாரோ என்னமோ தெரியிலீங்க... அப்புறம் நமக்குண்டான கமிசன கரக்கெட்டாக் கொடுத்துடோனுமுங்க... பயலோட நடத்தவேற சரில்லீன்னு சொல்றீங்க... அதுக்குத்தோதா நான் பேசோனுமுங்க... கொஞ்சம் கமிசன சேத்திக்கொடுக்கோனுமுங்க.

சரி...சரி... வேற என்ன பண்றது? எப்படியோ எம்பட சொத்துக்கொரு வாரிசு வேணும். என்ன ஒரே வருத்தம் பரம்பர பரம்பரயா பாட்டெம் பூட்டெங் காலத்திலிருந்து கட்டிக்காப்பாத்ததுன ஜாதிக் கவுருததா போயிடும் போலிருக்குது... இதெல்ல என்னிக்கொரு நாளக்கி வெளியில தெரிஞ்சா காலனிக்காரங்கள சக்கிலி, பறயேன்னு மெரட்ட முடியாது... ஒரு பயலும் நம்ம ஊருப்பண்ணாடியின்னு மதிக்க மாட்டான்...எம்பட கவுருதய நெனச்சாதான் வெசனமாயிருக்கு.

Pin It