உலக நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் சிந்துச்சமவெளி நாகரிகத்தின் பிறப்பிடமாக அறியப்படும் இடம் பாகிஸ்தான் தேசமும், இந்தியாவின் இராஜஸ்தான், குஜராத் பகுதிகளும் ஆகும். இப்படி உலக நாகரிகத்தின் பிறப்பிடமாகக் கருதப்படக்கூடிய இராஜஸ்தான் மாநிலம் இன்னும் சராசரி மனித நாகரீகத்துக்கே வரவில்லை என்பதுதான் அதிர்ச்சி கரமான உண்மையாக உள்ளது. நாம் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருவதால்தான் இந்த அதிர்ச்சி உருவாகிறது. வடமாநிலங்களில் வாழ்ந்திருந்தால் நமக்கு அந்நிலை பழக்கமானவைகளாக இருந்திருக்கும். தமிழ்நாட்டுச் சராசரி மக்களின் வாழ்க்கை நிலையை மனதில் எண்ணிக்கொண்டு, இராஜஸ்தானுக்குச் சென்று பார்ப்போம். அப்போது தான் தமிழ்நாட்டில் இயங்கும் திராவிடர் இயக்கங்களையும், திராவிட அரசியல் கட்சி களையும் புரிந்துகொள்ள முடியும்.

எப்படி மழை வரும்போது மண்வாசனையும் சேர்ந்து வருமோ - அதேபோல இராஜஸ்தானுக்குள் நுழையும்போதே சாதியின் அடக்குமுறையும், பார்ப்பனியப் பழக்கவழக்கங்களையும் உணர முடியும். இராஜஸ்தானில் சாதியப்பாகுபாடுகளை உணர, சாதாரணக் கண்களால் பார்ப்பதைவிட ஒரு ஆய்வாளராகப் பார்க்கும்போது பலதகவல்கள் கிடைக்கும். எனவே ஆய்வு மனப்பான்மையுடன் இராஜஸ்தான் மாநிலத்துக்குள் நுழைவோம்.

இராஜஸ்தான் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவுக்கு ஜாதிய அடக்குமுறைகளும், பாகுபாடு களும் அதிகம். ஒட்டுமொத்த இந்தியப் பகுதிகளில் இருப்பதைப் போன்று இராஜஸ்தானிலும் ஜாதி 4 வர்ணங்களாகவும், ஆயிரக்கணக்கான ஜாதி களாகவும் உள்ளன. ஆனால், தமிழ்நாட்டைத் தவிர வட மாநிலங்களுக்குச் செல்லாதவர்களுக்கு 4 வர்ணங்களாக நாம் பிரிக்கப் பட்டிருப்பது புரியாது.

அங்கு, சமுதாயத்தின் முதல் அடுக்கில் முதலாவதாக, பார்ப்பனர்கள், அவர்களை அடுத்து, இராஜ்புத், பனியாக்கள் இருக்கிறார்கள். இந்த இரு பிரிவும் பொதுப்பிரிவாக இணைந்துள்ளனர். இவர்களை அடுத்து ஜாட், யாதவ் போன்றவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் கடைசியாக, மீனா, மேகவால் போன்ற தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடிவகுப்பினர் அடக்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற ஜாதி அமைப்பு உடைய ஜாதிப்பாகுபாடு என்ன நிலையில் உள்ளது என்று அறிய இராஜஸ்தானின் பள்ளிவகுப்பறைகளை நோக்கிச்செல்வோம். பொதுவாக, இராஜஸ்தானின் பள்ளிகள், கல்வி அமைப்புகள் பெரும்பாலும் ஜாதி அமைப்புகளுடன் பின்னிப்பிணைந்துதான் உள்ளன. இந்தக் கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக, நான் நேரடியாகப் பார்த்த செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

நான் முதல்முதலாகப் பள்ளிக்குச் செல்லும் போது அங்கு உள்ள மாணவர்களும் ஆசிரியர்களும் என்னிடம் இரண்டு கேள்விகளைக் கேட்டனர். முதல் கேள்வி. என்னோட பெயர் என்ன? உடனடியாக அடுத்த இரண்டாவது கேள்வி எனது சாதி என்ன? என்பது தான். இதில் வேடிக்கை என்ன என்றால் சில மாணவர்கள் அவர்களின் ஆசிரியர் களை உடன் வைத்துக்கொண்டே எனது ஜாதியைக் கேட்டனர். தமிழ்நாட்டில் இப்படி ஒரு நிலை நம் யாருக்கும் ஏற்பட்டிருக்காது.

இதைத் தவிர்த்து ஜாதிய வேறுபாடுகள் என்ற கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாகச் சில நிகழ்வு களை உங்களுடன் பகிர்கிறேன். இராஜஸ்தான் பள்ளிகளில் சாதி முறைகள் பல படிநிலைகளில் பின்பற்றப்படுகின்றன. வகுப்பறைகளில் உயர்சாதி வகுப்பினர் முன்வரிசையிலும், பிற்படுத்தப்பட்ட வர்கள் அடுத்ததாகவும், தாழ்த்தப்பட்டவர்கள் பின்வரிசையிலும் அமர வைக்கப்படுகின்றனர். முக்கியமாக, ஆசிரியர்கள் தாழ்த்தப்பட்ட மாணவர் களைத் தொடுவதும் இல்லை. பேசுவதும் இல்லை. குறிப்பாகத் தாராநகர் பகுதியில் நானே நேரில் கண்டேன். இதுபோன்ற நிலையையும் நாம் தமிழ் நாட்டில் பார்த்திருக்க மாட்டோம்.

பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட சாதிவகுப்பைச் சார்ந்த சமையல் பணியாளர் சமைத்தால் உயர்சாதி வகுப்பு மாணவர்கள் அங்கு உணவு உண்பது இல்லை. இந்தத் தகவல்களைச் சிலஆசிரியர்களும் மற்றும் சில கல்விஅதிகாரிகளும் எனக்குத் தந்தனர்.

அண்மையில், திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகில் உள்ள தி.க.பாளையத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயப் பெண் சமைப்பதால், கவுண்டர்கள் உணவு உண்பதில்லை என்ற வன்கொடுமை வெளி வந்த போது, உடனடியாக, திராவிடர் இயக்கங் களும், முற்போக்கு அமைப்புகளும் களமிறங்கி, அந்நிலையை மாற்றினர்.

கடலூர் மாவட்டத்தில் ஒரு ஆசிரியர், ஒரு பள்ளியில் மாணவர்களைச் சாதி ரீதியாகப் பிரித்து வைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. உடனடியாக அனைத்து அமைப்புகளும் களமிறங்கின. அந்த நிலை மாற்றப்பட்டது. இப்படிப்பட்ட எதிர்ப்போ, மாற்றமோ இராஜஸ்தானில் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாததாகும்.

அப்படியே பள்ளிகளை விட்டு கிராமப்புறப் பகுதிகளுக்குச் செல்வோம். கிராமத்தைப் பற்றிச் சொல்லவேண்டும் என்றால் ஒருவரியில் சொல்ல லாம். பள்ளிகளில் சாதி விளையாடுகிறது என்றால் கிராமத்தைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? பரவாயில்லை. இருந்தாலும் சொல்கிறேன்.

ஆம். கிராமத்தில் சாதியப் பழக்க வழக்கங்களும், நடைமுறைகளும் மிக அதிகம். குறிப்பாக உதய்பூர், சூரு, பிரதாப்கர், பரத்பூர் போன்ற மாவட்டங்களில் சாதியக் கட்டமைப்புகள் அதிகம் காணப்படுகிறது. இந்த மாவட்டங்களின் ஜாதிய நிகழ்வுகளைப் பற்றிச் சொல்லவேண்டும் என்றால் இரட்டைக் குவளைமுறை பின்பற்றப் படுகிறது. தாழ்த்தப்பட்டவர்களை உயர்சாதியினர் தொடக்கூட மாட்டார்கள். இங்கு ஏதெனும் ஒரு கலப்பு அல்லது காதல் திருமணம் நடந்துவிட்டால், அது நிச்சயமாகக் கொலையில்தான் முடியும். அதேபோல இந்த மாவட்டங்களில் சில இடங்களில் ‘காப்’ பஞ்சாயத்து எனும் கட்டப்பஞ்சாயத்துமுறை இருப்பதாகத் தகவல் கிடைத்தது.

தமிழ்நாட்டில், நடக்கும் ஆணவக் கொலைகள் செய்திகளாகின்றன. அதற்கு எதிர் வினைகள் நடக்கின்றன. ஆணவக்கொலை செய் பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இராஜஸ் தானில் இவற்றைக் கனவு காணக்கூட முடியாது. பெரு நகரங்களில் சில எதிர்வினைகள் நடக்கலாம். பெரும்பாலான கிராமங்களில் எதிர் வினைகளை நினைத்துப்பார்க்க முடியாது.

பெண்களை அடிமைப்படுத்தும் செயல்களும் இராஜஸ்தானில் அதிகம் காணப்படுகிறது. இந்த நிகழ்வை எனது கண்ணால் பார்த்தேன். பெண் அடிமையாக உள்ளதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

உணவுமுறையில் கூட பெண் - ஆண் பாகுபாடு உள்ளது. அதாவது, ஆரோக்கியமான, சத்தான உணவு ஆணுக்கும் - அதில் குறைந்த மீதம் உள்ள உணவுதான் பெண்ணுக்கும் கொடுக்கப்படுகிறது. அதேபோல, குழந்தைத்திருமணம் அதிகமாக உள்ளது. மேலும் வீட்டில் உள்ள அனைத்து வேலை களையும் பெண்கள்தான் செய்யவேண்டும். ஆண்களை எதிர்த்துப் பேசக்கூடாது. அடுத்தவீட்டு ஆணைப் பார்க்கக்கூடாது. தெருவில் நடக்கும் போது சேலையால் முகத்தை மூடவேண்டும்.

குறிப்பாக, திருமணத்தில் பெண்கள் அவர் களின் உரிமையைச் சொல்ல உரிமை இல்லை. பெண்கள் அதிகம் பள்ளி - கல்லூரிப் படிப்புக்குச் செல்வது இல்லை. இதுபோன்ற பெண் பாகுபாடும் அதிக அளவில் இங்கு உள்ளது. இதெல்லாம் தமிழ் நாட்டிலும் உள்ளதாக நினைக்கலாம். தமிழ்நாட்டு ஆணாதிக்கத்தைவிட, இராஜஸ்தானின் ஆணாதிக்கம் மிக மிகக் கொடுமையானது.

இந்து மத ஜாதிக்கட்டமைப்பு, மாறாமல் அப்படியே நடைமுறையில் உள்ளது என்பதற்கு மேலும் ஒரு உதாரணம். இராஜஸ்தானில் ஒரு சில மாவட்டங்களில் உயர்சாதியினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக்கூட மதிப்பதில்லை. இதை நான் பள்ளியில்கூடப் பார்த்தேன்.

உயர்வகுப்பு மாணவன் ‘ஜாட்’ வகுப்பைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவனை ஏளனமாக “இவன் ஜாட்” எனக் கூறினான். அதேசமயம் ஜாட் மக்கள் அதிகம் உள்ள இடங்களில் அவர்கள் மற்ற வகுப்பினரை அடக்கி ஆள்வது போன்ற ஆணவத்திலும் வாழ்கின்றனர். இதுபோன்ற கொடுமைகளை ஒழிக்க உதவ வேண்டிய கல்வி நிறுவனங்களும், அரசியல்வாதிகளும் அதை ஆதரிப்பதுதான் வருத்தமான விஷயம். சமுதாயத்தின் நிலையைத்தான் கல்வி நிறுவனங் களும், அரசியல்வாதிகளும் பிரதிபலிக்கின்றனர். சமுதாய மாற்றத்தைத் தொடங்க வேண்டிய இடங்களிலேயே அதற்கான தடைகள் கடுமையாக இருப்பதை நேரில் பார்க்கும் போது, எதிர் காலத்தைப் பற்றிய அச்சம் கூடுகிறது.