ஏப்பிரல் பதினான்கு

எப்போதும் சிறந்தநாள்

அது, அண்ணல் அமபேத்கர்

அவர்களின் பிறந்தநாள்

சனாதனம் துப்பிய

சவலைப் பிள்ளைகட்குத்

தாய்ப்பால் ஊட்டஓர்

ஆண்மகன் வந்தநாள்

சாதிக் குட்டையில்

ஊறிய எருமைகள்

தடித்தோல் புடைப்பச்

சவுக்கடி தந்தநாள்

காலங் காலமாய்க்

கலைமகள் இங்கே

சேரிக்கு மட்டும்

திரைஒன்று போட்டாள்

சூத்திரர் நாவிலும்

ஒடுவைத்தாள்

இவர்வந்த பின்தான்

மனுவின் தலையில்

குட்டு விழுந்தது

பகவத் கீதையில் சில

பக்கங்கள் எரிந்தன

விழுந்துகிடந்த நம்மிற்கர்

வென்று கரையேறினாலும்

நன்றி மறந்த

மக்களாய்போ

பூணூல் ஒளித்துப்

புதுச்சாதி ஆனார்

இந்தியாவெங்கும்

எரிகின்ற சேரிகள்!

இனிக்கொஞ்சம்

மாற்றிக் கற்பிப்போம்!

ஒன்றுசேர்ந்து போராடி

வென்று காட்டுவோம்!

Pin It