பாரடா உனது மானிடப் பரப்பை!
பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்!
"என்குலம்" என்றுனைத் தன்னிடம் ஒட்டிய
மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்!
அறிவை விரிவுசெய்! அகண்ட மாக்கு!

என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அமெரிக்காவுக்கு இப்போதுதான் வந்து இறங்கியிருந்தாலும், அல்லது பல பத்தாண்டுகளாக இங்கேயே இருந்தவராக இருந்தாலும் வெளியில் எங்காவது தமிழைக் கேட்டால், தமிழ் முகத்தைப் பார்த்தால் நமக்கு இனந்தெரியாத ஒரு நேசம் பிறக்கிறது. சிறிய ஊராக இருந்தால் பேசுகிறோம்; கொஞ்சம் பெரிய நகரமாக இருந்துவிட்டால் ஒரு புன்சிரிப்பையேனும் உதிர்த்துவிட்டுச் செல்கிறோம். இங்கு மொழியே நம்மை இணைக்கும் பாலமாக இருக்கிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம் மூதாதையர்கள் தேனீக்கள் தேனைச் சேர்ப்பதுபோல அயராது உழைத்துத் திரட்டி வைத்திருக்கும் அறிவே நம் மொழி. மொழி நமது இனிய செல்வம். அதை மக்கள் தொடர்புக்கான ஒரு கருவி என்பது பிழை.

மொழி என்பது ஒரு சமூகத்தின் வழிவழியான அறிவைச் சேர்த்து வைத்திருக்கும் களஞ்சியம். பண்பாட்டை உணரவும், பேணிக் காக்கவும் அமைந்திருக்கும் ஒரு சமூக ஏற்பாட்டின் உயிர்நாடி. அறிவியலும், அறமும், பண்பும், மாண்பும், மனித நேயமும், ஆன்மத் தேடலும் என வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களுக்குமான அனுபவப் பதிவுகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது தமிழ் எனும் செம்மொழி. புலம் பெயர்ந்து வாழும் நமக்குத் தமிழ் என்பது ஒரு பொழுதுபோக்கு மொழியாக ஆகிவிடக் கூடாது என்ற உயரிய நோக்கில், சென்ற தலைமுறையில் அமெரிக்காவுக்கு வந்திறங்கிய தமிழர்கள், தமிழின் வளங்களையும், வளர்ச்சியையும் இங்கிருக்கும் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டதே வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் அதன் ஆண்டு விழாக்களும். இவ்வாறு கடந்த 21 ஆண்டுகளாக வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, அமெரிக்க சுதந்திர தின விடுமுறையில் (ஜூலை 4 - 6) தேனினும் இனிய தமிழுக்கு விழா எடுத்து வருகிறது. இவ்வாண்டின் விழாவை, புளோரிடா மாநிலத்தின் ஒர்லாண்டோ நகரிலுள்ள பாப் கார் அரங்கத்தில், தமிழிசைக்கு மேன்மை தந்த பெரியவர் “இசைப் பேரறிஞர்” பெரியசாமி தூரன் அவர்களின் நூற்றாண்டாகக் கோலாகலமாகக் கொண்டாடவுள்ளது.

தமிழ்நாட்டிலிருந்தும், பிற நாடுகளிலிருந்தும் புலம் பெயர்ந்த தமிழர்கள் வட அமெரிக்க மண்ணில் ஏராளமாய் உள்ளார்கள். அவர்கள் எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கி, தமிழ் மண்ணிற்கும் இனத்திற்கும் பெருமை சேர்க்கிறார்கள். படிப்பு, பணி, குடும்பம் இதற்கு அப்பாற்பட்டு இந்த அமெரிக்க மண்ணில் தமிழர்கள் பலர் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட ஓரு முக்கியமான அம்சம், "தமிழ்ச் சங்கம்". அமெரிக்காவில் கிட்டதட்ட 35 தமிழ்ச் சங்கங்கள் அந்தந்த மாநிலங்களில் உள்ளன. இத் தமிழ்ச் சங்கங்கள் அனைத்தும் வெறும் பொழுதுபோக்கு மன்றங்கள் அல்ல. நம் உயிரினும் மேலான தமிழ் மொழியை, அதன் வேர்களை, அதன் பெருமைகளை, அதன் சிறப்புகளைப் போற்றிப் பாதுகாக்கும் கோவில்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. அமெரிக்காவாழ் தமிழர்கள் பலர் தம் குழந்தைகளை தமிழ்ச் சங்கத்திற்கு அழைத்து வந்து அங்கே இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழையும் ஒன்றாகக் கற்கிறார்கள். தமிழ்நாட்டின் கலை மற்றும் பண்பாடு மறவாமல் பொங்கல்/தமிழ்ப் புத்தாண்டுத் திருவிழா, சித்திரை திருவிழா, முத்தமிழ் விழா, குழந்தைகள் விழா என்று பல விழாக்களைக் கொண்டாடுகிறார்கள்.

கடந்த 21 ஆண்டுகளாக, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவை, அனைத்து அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் ஒத்துழைப்புடன் ஜூலை ஆண்டு விழாவின் மூலம் தமிழ் மொழி, மற்றும் தமிழ் இனத்தின் பெருமையைப் பாரெங்கும் பறைசாற்றி வருவதுடன் உரிமைக்கும் குரல் கொடுத்து வருகிறது. இவ்விழா உலகத்தமிழர் உரிமை மாநாடு என்றால் அது மிகையாகாது. உலகெங்கும் வாழும் தமிழர்களின் ஒற்றுமையையும், தமிழ்மொழியின் சிறப்பையும் கொண்டாட இந்தப் பேரவை ஓவ்வோரு ஆண்டும் வெவ்வேறு நகரங்களில் இம்மாபெரும் தமிழ் விழாவை நடத்தி வருகிறது. இவ்விழா தமிழர்களின் விழா, தமிழ் மொழிக்கு எடுக்கும் விழா, தமிழ் மொழிக்கு தன்னலம் பாராமல் உழைத்த தமிழ் ஆர்வலர்களை ஊக்கப்படுத்தி, நன்றி தெரிவிக்கும் விழா!

இத் தமிழ் விழாவிற்கு நம் தாய்த் தமிழ்நாட்டில் இருந்து, கவிஞர்கள், தமிழறிஞர்கள், தமிழ்த் திரைக் கலைஞர்கள், அரசியல் வாதிகள், சமூகச் சேவை பிரமுகர்கள், மற்றும் பல பிரபலங்கள் வரவழைக்கப் படுவார்கள். இந்த தமிழ் விழா குறைந்தது இரண்டு தினங்கள் நடக்கும். தமிழ்த்தாய் வாழ்த்தில் ஆரம்பித்து, கவிஅரங்கம், பட்டிமன்றம், இயல், இசை, நாடகம் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாகக் கண்களுக்கும், காதுகளுக்கும் விருந்தாக அமையும். தமிழ்ச் சங்கப் பேரவையின் மற்றோரு சிறப்பு என்னவென்றால், விளிம்பு நிலை மனிதர்கள், நலிவுற்றக் கலைஞர்கள், அவர்களை ஊக்குவிக்கும் அரசியல்வாதிகள், சமூக சேவகர்கள் இப்படி பலரை இங்கு வரவழைத்து கெளரவிப்பது. இது அந்த கலைஞர்களுக்கு மட்டும் அல்ல, இந்த தமிழ்ச் சங்கப் பேரவைக்கும் பெருமை!

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற வள்ளுவன் வாக்கிற்கு ஏற்ப மூன்று ஆண்டுகள் முன்பு திருநங்கை நர்த்திகி நடராஜை ஆடவைத்த பெருமை இந்த பேரவைக்கு உண்டு! தாழ்த்தப் பட்ட மக்களின் பாரம்பரிய கலையை உலகுகிற்கு சொல்லும் விதமாக "நந்தன் கதை" யை மேடை ஏற்றிய பெருமை இப் பேரவைக்கு உண்டு! நம் தமிழ்நாட்டில் ஆங்கில மோகம் அதிகரித்துக் கொண்டு இருக்கும் வேலையில், நம் தாய் மொழி தமிழை வளர்க்கும் நம்பிக்கை நட்சத்திரங்களான "தாய்த் தமிழ்ப் பள்ளிகளை" வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த பெருமை இந்தப் பேரவைக்கு உண்டு! தமிழின உறவுகளான தமிழீழ மக்களின் உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும் குரல் கொடுத்து, பெரும் ஆதரவாக இருக்கும் மேன்மை இந்தப் பேரவைக்கு உண்டு. இத்தனைச் சிறப்புக்களும் தமிழர்களாகிய உங்களின் பங்களிப்பில்லாமல் சாத்தியமாகியிருக்காது. எனவே நீங்கள் தொடர்ந்து தமிழ் விழாவில் கலந்துகொண்டு மேலும் பேரவையை சிறப்பிக்க வேண்டும் என்று அன்புடனும், உரிமையுடனும் கேட்டுக் கொள்கிறோம்.

வழக்கம் போல் தமிழ்நாட்டு பிரபலங்கள் பலர் இந்த வருடத் தமிழ் விழாவை அலங்கரிக்க வருகிறார்கள். அரசுப் பதவியின் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வையும், சமுதாய மாற்றத்தையும் ஏற்படுத்திய முன்னாள் மாவட்ட ஆட்சியர், தற்பொழுது சுற்றலாத்துறைச் செயலர் முனைவர் இறையன்பு, ஈழ மக்களுக்கும் தமிழர்களுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து, தன்னலம் பாராமல் சிறையில் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கழித்த பேராசிரியர் சுப.வீரபாண்டியன், யதார்த்த உண்மைகளை படம் பிடித்துக் காட்டும் ஒளிஓவியர், நெறியாள்கையாளர் (இயக்குனர்) தங்கர்பச்சான், ஆங்கிலம் கலவமால் தமிழ் மொழியைக் காக்கும் முனைப்பு கொண்ட நெறியாள்கையாளர் சீமான், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் இருந்து முனைவர் சி. சுப்ரமணியன், தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் இயக்குனர் முனைவர் நக்கீரன், வேலூர் பல்கலைகழகத் துணை வேந்தர் திரு ஜி. விஸ்வநாதன், சன் தொலைகாட்சி புகழ் ஈரோடு மகேஷ், ஈழ மக்களின் துயரங்களை மிக அழகாக பிரதிபலித்த படம் “ஆணிவேர்” மற்றும் “மௌனம் பேசியதே” புகழ் நடிகர் நந்தா, கலைமாமணி சுதா ரகுநாதனின் தமிழிசை இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

மேலும் ஆழியாறு சித்தர் யோகா மையத்தின் யோகா பயிற்சிப் பட்டறை, www.infitt.org & www.tamilmanam.net இணைந்து வழங்கும் தமிழ் இணையம் / வலைப்பதிவாளர் பயிற்சிப் பட்டறை, www.tamilmatrimony.com வழங்கும் matrimonial forum, NTYO, TYO வழங்கும் Youth Meet, Alumni meet, Entrepreneur Forum மற்றும் உங்கள் உள்ளம் கவரும் அனைத்து தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகள் நடை பெறெவுள்ளன.

திரு கோ. வேள்நம்பியின் தலைமையில் “தாயே, தமிழே! வருங்காலம் நின் காலம்” - கவியரங்கம், ஈரோடு மகேஷ் தலைமையில் “இனி, தமிழ் வளர்வது, தாய்த் தமிழ் மண்ணிலா? வேற்று மண்ணிலா?” - பட்டிமன்றம் நடை பெறவுள்ளன. இன்று கருநாடக இசை என்று கூறப்படும் இசை பழந்தமிழ் இசையிலிருந்துதான் பிறந்தது என்று பல அறிஞர்கள் கூறக்கேட்டிருக்கிறோம். திருவையாற்றிலே இசை ஒலிக்கத் துவங்கியதற்கு முன்பே தமிழிசை தமிழகத்திலே வேறூன்றி இருந்தது என்பது தொல்காப்பியம், சிலப்பதிகாரம் படித்தவர்களுக்குத் நன்கு தெரியும். இசை அறியாத நம் போலோரும் அதை அறிந்து கொள்ளும்படி ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த இசை அறிஞர் நாகூர்மைதீன் மம்மது அவர்களின் தலைமையில் “பழந்தமிழர் இசை” விளக்க நிகழ்ச்சி முதல் முறையாக அமெரிக்க மண்ணில் அரங்கேறவுள்ளது. திரு மம்மது (www.tamilinnisai.org) அவர்கள் தமிழிசைப் பேரறிஞர் வி. ப. க. சுந்தரம் அவர்களின் மாணவர். இவர் தமிழிசைப் பேரகராதி எனும் இசை அகராதியைப் பல தமிழறிஞர்களுடன் இணைந்து உருவாக்கி வருகிறார்.

கடந்த ஆண்டினைப் போலவே இவ்வாண்டும், விழாவின் மூன்றாவது நாளான ஞாயிறு காலை 9 முதல் மதியம் 1 மணிவரை இலக்கியக் கருத்தரங்கம் நடை பெறவுள்ளது. “20ஆம் நூற்றாண்டில் தமிழ் இயல், இசை மற்றும் நாடக (கூத்து) மறுமலர்ச்சி” என்கிற தலைப்பில் முனைவர் வே. இறையன்பு, பேராசிரியர் சுப. வீரபாண்டியன், திரு தங்கர் பச்சான், ஈரோடு மகேஷ், முனைவர் சுப்பிரமணியம், முனைவர் நக்கீரன், திரு மம்மது ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

கடந்த 6 மாதகாலமாக விழாக் குழுவினருடன் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் பலர் கடுமையாக உழைத்து வருகின்றனர். 2000 தமிழர்கள் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தங்குவதற்கு Hilton நடந்து செல்லும் தூரத்தில்தான். புகழ்பெற்ற புளோரிடா உணவகங்களிலிருந்து அறுசுவை உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது.

இந்தப் பேரவையின் தொலை நோக்குத் திட்டம்: தமிழ் விழாவிற்குக் குறைந்தது 5000 தமிழர்களை ஆண்டுதோறும் வரவழைப்பது, வட அமெரிக்காவின் அனைத்துத் தமிழ்ச் சங்கங்களையும் ஒன்றுதிரட்டிப் பேரவையின் குடைக்குள் வருவது, பேரவையின் நிதி நிலையை மேம்படுத்தி நிரந்தர மையம் அமைத்து தமிழ், தமிழர் வளர்ச்சிக்கு உதவும் தொண்டு அமைப்புகளுக்கு உதவுவது போன்றவைகள் ஆகும். உங்களின் ஒத்துழைப்போடு இக் கனவுகள் நனவாகும் என்ற நம்பிக்கை எமக்குள் மிளிர்கிறது. மீண்டும் ஒர்லாண்டாவில் சந்திக்க ஆவலுடன் உள்ளோம்.

மேலும் விவரங்களுக்கு www.fetna.org என்ற இணையத் தளத்தைக் காணுங்கள் அல்லது கீழ்க்கண்ட விழா ஏற்பாட்டாளர்களை அணுகுங்கள். தங்கள் வரவு நல்வரவாகுக!

சி. சுப்பிரமணியம் (coordinator) - (954) 675-6883 - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். / இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
தில்லை க. குமரன் - (408) 857-0181 - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். / இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

வாழ்க தமிழ்! வெல்க தமிழர்!!

அன்புடன்,

மயிலாடுதுறை சிவா, வாசிங்டன்
தில்லை க. குமரன், சான் ஓசே

Pin It