தைப்பொங்கல்: தமிழர்க்கு ஒரு நாள் - தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவ நாள்- என்ற விருதுவாக்கியத்துடன் பிரான்சில் சென்ற ஆண்டு முதல் பெரு அரங்க நிகழ்வாகியது. இந்த ஆண்டு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், பிரான்சு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு, நல்லூர்ஸ்தான் பண்பாட்டும் விளையாட்டும், கராப்ஸ் இந்தியா, பிரான்சு சுயமரியாதை இயக்கம் மற்றும் சிலம்பு அமைப்பு இணைந்து தமிழர் திருநாள் 2008 நிகழ்வை 20. 01. 2008 அன்று L’Espace Champ de Foire, Route des Refuzniks, 95200 SARCELLES எனுமிடத்தில் அமைந்த வெளியுடன் கூடிய உள்ளரங்கில் நடத்தின.

தமிழர்களின் பன்முக ஒன்றுகூடலாக அமைந்தது இந்நிகழ்வு. வெளிவாசலில் விரிக்கப்பட்டிருந்த கம்பளத்தில் சிறப்பு அதிதிகள் மதிப்பாடை போர்த்தப்பட்டுத் தொடர தமிழர்களின் தொன்மையான பாரம்பரியக் கலை அசைவுகளுடனான இன்னிய அணி அழைத்தவாறு செல்ல ஆரம்பித்தது கண்கொள்ளாக் காட்சியாகி புளங்காகிதமடையச் செய்தது.

புலம்பெயர் நாடொன்றில் இத்தகைய வரவேற்புடன் தமிழர்களின் நிகழ்வொன்று தொடங்கப்பட்டது இதுவே முதற்தடவையாகும். இதனை இன்னிய அணியின் உருவாக்குநர் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதி மதிப்பிற்குரிய பாலசுகுமார் நேரடியாக பங்கேற்று நெறிப்படுத்தியது முத்தாய்ப்பாக இருந்தது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகம் தயாரிப்பில் ஆசிரியர்கள் திருமதி அனுஷா மணிவண்ணன், செல்வி வினோதா சந்திரகுமார் வழிநடாத்தலில் நிகழ்த்தப்பட்டது.

தமிழர்களின் தனிச்சிறப்பான நாளான தமிழர் திருநாளில் முதல் அரங்கம்கண்ட இந்நிகழ்வில் பங்கேற்ற மாணவிகள் சந்தியா சரசகோபாலன், சாருகா சரசகோபாலன், சங்கீதா குணசேகரலிங்கம், பிரதீபா வரதராஜா, தனுஜா சந்திரகுமார், அனித்த கமலநாத சத்தியேஸ்வரன், சுஜிந்தா முத்துசிவராசா, சுஜிதரா யோகேஸ்வரன், சோபி சிறீஸ்கந்தராஜா, சாமினி சிவராஜா.

அரங்க நுழைவாசலை நாடாவெட்டி ஆரம்பித்தார் பாராளுமன்ற உறுப்பினர் பிரான்சுவா பொப்பினி அவர்கள். மேடையில் இன்னிய அணி ஆடி சிறப்பு அதிதிகளைக் கௌரவித்து வரவேற்றதும் மங்கள விஙக்கேற்றினர்.

அமைதி வணக்கம் செலுத்தி நிகழ்வை சம்பிரதாயபூர்வமாக தொடக்கினார் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான திரு அலன் ஆனந்தன்.

நிகழ்வின் வரவேற்பினை இருமொழிகளில் வழங்கிளார் இந்நிகழ்வை ஒருங்கிணைத்துக் பணியாற்றியர்களில் ஒருவரான பேராசிரியர் அ.முருகையன் அவர்கள்.

இதன் பின் அரங்கங்களை முறைப்படி திறந்துவைக்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. யுனெஸ்கோ இயக்குநர்களில் ஒருவரும், முன்னைநாள் மொறீசியஸ் கல்வி அமைச்சருமான ஆறுமுகம் பரசுராம் பொங்கல் அரங்கைத் நாடா வெட்டித் திறந்து பொங்கலடுப்பிற்குத் தீ மூட்டி ஆரம்பித்துவைக்க பிரான்சு சுயமரியாதை இயக்கத் தலைவர் திரு கோபதி தலைமையில் பொங்கலிடல் நடைபெற்றது.

மொரீசியஸ் உதவிப் பிரதமரின் பிரதான செயலாளரான திரு கிறிஸ் பொன்னுச்சாமி அவர்கள் கோலமிடல் அரங்கைத் திறந்து வைத்தார்.

இதில் திருமதி சாந்தால் யுமல் அவர்களுடன் திருமதி ரவி ராஜேஸ்வரி அவர்களும் கலந்து கோலமிடல் அரங்கைச் சிறப்பித்தனர். இவர்களுடன் செல்வி சோபிதா வீரசிங்கம் தனது கோலம் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தால் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டார்.

கண்காட்சி அரங்கை மக்கள் நிர்வாகியும் பனியோ நகர அரசியல் பிரமுகருமான திருமதி மேரி வீரபத்திரன் அவர்கள் திறந்து வைத்தார். பிரஞ்சுக்கும் தமிழுக்குமிடையிலான தொடர்பினைச் சுட்டும் தொகுப்பாக நூல்களும், தமிழர்களின் பரம்பல் தொடர்பான விபரணங்களும், அரிய பண்டையத் தமிழர் தொடர்பான ஆவணங்களுமாக காட்சியப்படுத்தப்பட்டிருந்ததை பலரும் விரும்பிப் பார்த்தனர். இதில் வைக்கப்பட்டிருந்த ஏடும் மிதிவடிக் கட்டையும் சிறார்களைக் கவர்ந்தது.

மேடையில் வள்ளுவர் முன்னிலையில் தமிழார்வலர்களான பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகப் பேராசிரியர் பன்னீர்ச்செல்வம் அவர்களும் மலேசியக் கல்வி ஆசிரியரும் எழுத்தாளருமாகிய இரா திருமாவளவன் அவர்களும் அகரம் எழுதும் நிகழ்வை நடாத்தினர். இதனை ஆசிரியர் அருளம்பலம் அவர்கள் நெறிப்படுத்தினார். இரண்டாவது தடவையாகத் தொடரப்படும் இந்நிகழ்வில் 27 சிறார்கள் பேருவகையுடன் பங்கேற்றனர். அகரம் எழுதலில் இம்முறை மதம் கடந்து தேச எல்லைகள் கடந்து பாண்டிச்சேரித் தமிழர்களும் குவாதுலூப் தமிழர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றது குறிப்பிடத்தகுந்தது. இதனால் உலகத் தமிழர்களின் ஒருங்கிணையும் நிகழ்வாகிப் புதிய பரிமாணத்தைப் பெற்றது.

அகரம் எழுதிய சிறார்களுக்கு பேராசிரியர்கள் முருகையன் அவர்களும் பாலசுகுமார் அவர்களும் குழந்தைகள் எழுதிய அகரத்தை சட்டகமிடப்பட்ட படமாக வழங்கி மதிப்பளித்தனர்.

வருகை தந்திருந்த அனைவருக்கும் மணக்கும் பொங்கல் வழங்கப்பட்டதுடன் முதல் அரங்கு நிறைவுற்றது.

முழுமையான மேடை அரங்காகிய இரண்டாம் அரங்கு தமிழர்களின் தொன்மை மீட்சியான படிமத்தை புலப்படுத்திய தொகுசொற்கோடியன் வருகையுடன் தொடங்கியது.

அரங்காளுகையில் தனக்கென்ற தனி முத்திரையைப் பதித்தவராக பாலசுகுமார் அவையைக் கட்டிப்போட்டார். இதனைத் தொடர்ந்து சிற்றுரைகளாக வாழ்த்துரைகள் இடம் பெற்றன.

கராப் இந்தியா அமைப்பினர் வழங்கிய "கரீபியன் தீவில் தமிழ்" என்ற பாடலரங்கு வித்தியாசமானதாக இருந்தது. உச்சரிப்பினால் சிதிலமடைந்திருந்த தமிழ் புலப் பெயர்வின் மூன்றாம் நான்காம் தலைமுறைத் தமிழர்களிடம் எப்படியாக இருக்கிறதென்பதை பறைசாற்றியது இந்நிகழ்வு.

பாரதியின் 'வாழ்க நிரந்தரம்...." பாடல் இலங்கைத் தமிழ் இசை வடிவில் பூர்வீக வாத்திய முழக்கத்துடன் கூத்து ஆடல் முறைமையில் திருமதி தனுஷா மதி அவர்களின் நெறியாளுகையில் அவர்களின் மாணவர்களினால் மேடையேறியது. இப்பாடலை பாலசுகுமார் பாட யூட் இசையமைத்திருந்தார். வித்தியாசமான உடை, இசை மற்றும் கூத்து அசைவுடன் மாணவிகளின் வெளிப்பாடு அவையை ஈர்த்தது.

தமிழர்களின் தொன்மையான ஆடல் வடிவங்களில் ஒன்றான பொய்க்கால் குதிரை ஆட்டத்தை யேர்மனி கெற்றிங்கன் நகரில் இருந்து வருகை தந்திருந்த இரு மாணவிகள் -செல்வி பிரவீணா பகீரதன், செல்வி தாரணியா சண்முகநாதன் - நாடாத்தியது சிறப்பாக இருந்தது. இவர்களின் மகிழ்வான முகபாவங்களும் ஆடல் அசைவுகளும் சபையின் கரவொலியைப் பரிசாக்கியது. இதனை சிவகுமாரன் நெறிப்படுத்தினார்.

பொங்கலை வித்தியாசமாகச் சிறப்பித்திருந்த பிரான்சு சுயமரியாதை இயக்கம் திருக்குறள் கூறலை அரங்க நிகழ்வாக்கியது. சிறார்கள் குறள் பாட அதன் பொருளை தமிழிலும் பிரெஞ்சிலும் வெளிப்படுத்தினர்.

திருமறைக் கலாமன்றத்தை சேர்ந்தவரும், இலண்டன் தீபம் தொலைக்காட்சியின் நிகழ்வுத் தயாரிப்பாளர்களில் ஒருவருமான சாம் பிரதீபன் தனது ஓரங்க நிகழ்வாக 'கூத்து விபரணத்தை’ நிகழ்தினார். சுமார் அரை மணி நேர் போனதை அவை மறந்தது. உடுப்புத்தாங்கியல் மாட்டப்பட்டிருந்த அங்கிகளை அவ்வப்போது மாற்றியவாறு தெரிவு செய்யப்பட்ட இசைப் பாடலுக்கான கூத்தசைவால் சபையை தன்வசமாக்கிய சாம் பிரதீபன். கட்டியக்காரனில் தொடங்கி கடைசியில் தற்கால இலங்கைத்தமிழரின் அவலத்தைக் காட்டும் அசைவுடன் முடித்த இந்நிகழ்வு மொழி புரியாதவர்களையும் தாண்டி கலங்க வைத்தது.

திராவிடப் பாரம்பரியக் கலையான களரி ஆட்டத்தை அரங்க நிகழ்வாக்கிணர் திரு ரவீந்திரனும், சிறினிவாசனும். புலம்பெயர் ஈழத்தமிழ் மேடை நிகழ்வொன்றில் இவ்வரங்க நிகழ்வு முதற்தடவையாக இடம்பெற்றதென்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது உடலைப் பிசைந்தெழும்பும் அசைவுகளும் பாய்ந்து நடந்த வாழ்ச் சண்டையும் வயதெல்லை தாண்டி ஈர்த்தது. தனது ஐம்பது வருட வாழ்வில் முதற்தடவையாக வாள்ச் சண்டையை நேரில் பார்த்ததாக எனது நண்பர் குறிப்பிட்டபோது நானும் யோசித்துப் பார்க்கிறேன். ஆம் நம் மூதாதை வழிப் பொக்கிசமான கலையை வழங்கியவர்களையும் இதனை இடம்பெறச் செய்த ஏற்பாட்டாளர்களையும் மானசீகமாகக் கைகுலுக்கிப் பாராட்டினேன்.

'தமிழ்த்தாயின் விழாவாகிய தமிழர் திருநாளை அடுத்த தலைமுறையினர் தம் கண்முன்னாலேயே நிகழ்த்தவேண்டுமமென்ற அவாவை மொழிந்து தமிழ்த் தாயை வாழ்த்தும் நாமெல்லோரும் நன்றி பாராட்டுதலுக்கு அப்பாலான வரலாற்றுக் கடமையையே செய்கிறோம்...." எனச் சுருக்கமான தனது நன்றியுரையில் குறிப்பிட்டார் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான முகுந்தன்.

இம்முறை இசையரங்கம் மென்னரங்காக நடைபெற நிகழ்வு நிறைவுற்றது.

இன்றைய நிகழ்வின் ஒலியமைப்பு எவ்வகையிலும் பிசிறடையாமல் சீராக இருந்ததை அனைவரும் பாராட்டினர். சிரித்த அமைதியான மென்மையான சுபாவத்துடன் ஒலியமைப்பை வழங்கிய சிவா அவர்களை மகிழ்வடன் பாராட்டினர். தவிர கம்பீரமான வள்ளுவர் திரைச் சீலையுடன் அரங்கம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. விழா மண்டபத்தினுள் இரு தட்டைத்தொலைக் காட்சிப் பெட்டி வைக்கப்பட்டு அனுசரணையாளர்களது விளம்பரங்களையும் நிகழ்வின் காட்சிகளையும் வெளிப்படுத்தியது வித்தியாசமாக இருந்தது.

பல்வேறு தேச எல்லைகள் கடந்த தமிழர்களை ஒன்றுகூட்டிய பிரான்சு தமிழர் திருநாள் 2008 நிகழ்வரங்கு ஈழத் தமிழர்களின் தனித்துவமான இசை ஆடல் கலை முத்திரைப் பொறிக்கப்பட்ட நிகழ்த்துகலையின் நீங்கா நினைவுகளுடன் வழியனுப்பிவைத்தது.

வீடு திரும்பிய பின்பும் தக தக தக தக.. திகு திகு திகு திகு... என பாலசுகுமார் ஒலித்த தாளக்கட்டும் நடன ஆசிரியை அனுசியா மணிவண்ணன் தட்டிய ஒலியும் மாணவிகளின் வித்தியாசமான அசைவுகளும் மனத்திரையில் ஓடிக் கொண்டிருந்தது.

02.

இம்முறை முதல் நாளன்று ஆய்வரங்கொன்றையும் நடாத்தியது ஏற்பாட்டாளர் குழு. புலம்பெயர் தமிழர்களும் அடையாளமும் என்ற தலைப்பிலான ஆய்வரங்கை பேராசிரியர் முருகையன் நடாத்தினார். இதில்

1. கிபி அரவிந்தன் பிரான்சில் புலப்பெயர்வு தமிழ் இலக்கியம்
2. பாலசுகுமார் (இங்கிலாந்து) ஈழத் தமிழர் அடையாளக் காரணிகள்: இசையும் நடனமும்
3. பன்னீர் செல்வம் (இந்தியா) புலம்பெயர்வு அடையாளம் காணலில் மொழிபெயர்ப்பின் பங்கு
4. முருகையன் (பிரான்சு)புலம் பெயர் சமூகங்களின் தனித்துவமும் அடையாள நிர்ணயமும்
5. திருமாவளவன் (மலேசியா) புலம்பெயர் தமிழ் அடையாளம் காணலில் மலேசியாவின் முன்னோடித்துவம்
6. பொன்னுசாமி (மொரீசியஸ்) புலம்பெயர் தமிழர்களும் பொருளாதார வளர்ச்சியும்
ஆகியோர் பங்கேற்றிருந்தனர். தமிழர் திருநாளை ஒட்டியதாக இப்படியானதொரு கருத்தரங்கை நடாத்தியது வரலாற்றுச் சிறப்புமிக்கதாகவே இருந்தது. 

- மகேந்திரா

Pin It