விளம்பரம்......சுய தம்பட்டம் அல்லது எனது இலக்கியத்தை முதுகு பையில் நிரப்பிக் கொண்டு ஊர் ஊராய் சென்று கூவிக் கூவி விற்கிறேன்...பகிர்கிறேன்.. அல்லது எனது பிதற்றல் மொழியின் ஊடாக யாதுமற்று நானுமற்று பறக்கிறேன் என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் எழுதுவது என் பொழுது போக்கு அல்ல. அது என் வேலை. அது இந்த காலம் எனக்கு கொடுத்த பொறுப்பு. அப்படித்தான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். தனி மனிதனின் நினைப்பில் இருந்து தானே எல்லாமே உருவாகிறது. இதுவும் உருவாக்கி விட்டு போகட்டுமே.  
 
kavji short storiesசரி, எழுத்துக்கள் யாருக்கானவை....என்ற கேள்வி வரும் போது கண்டிப்பாக அது மக்களுக்கானவை...என்பதுதான் சிறந்த பதிலாக இருக்கும். இருக்க முடியும். என் தமிழுக்கு எனக்கு தெரிந்த தமிழில் ஏதோ செய்து கொண்டிருக்கிறேன் என்ற மன நிறைவு தோற்றாலும் ஜெயித்தலும் எனக்குள் இருப்பதை பகிரங்கமாக இங்கே பதிவு செய்கிறேன். பொதுவாக இருக்கும் குற்ற சாட்டு, புரியாத மாதிரி எழுதுகிறேன் என்று. இல்லை. இல்லவே இல்லை. கண்டிப்பாக  இல்லை. புரிய முற்படுவோர்க்கு கண்டிப்பாக புரியும். நுனிப் புல் மேய்பவருக்கு கண்டிப்பாக புரிய ஒன்றுமில்லை. அவ்வளவு தான். 

எனது "ஊதா நிறக் கொண்டை ஊசி கதைகள்" சிறுகதை தொகுப்பு அறிமுகம் நிகழ்வு 28.04.2018 ல் "தஞ்சை எழுத்தாளி" இலக்கிய வட்டம் சார்பாக தஞ்சையில்  நடந்தது. நெகிழ்வான தருணம் எனக்கு. நெக்குருகிய வர்ணனையை நானே வைத்துக் கொள்கிறேன்.  

சுய மதிப்பீடு செய்யும் களமாக "எழுத்தாளி" இருந்ததை மன நிறைவோடு நன்றிகள் சூழ காண்கிறேன். எத்தனை பேர் கூட்டத்துக்கு வருகிறார்கள் என்பது முக்கியமே இல்லை. வந்தவர்களில் எத்தனை பேர் முக்கியமானவர்கள் என்பது தான் முக்கியமாக இருந்தது. ஏதோ தொடர்ந்து அழைத்துக்காக வந்தோம். தேநீர் குடித்தோம். பிஸ்கட் தின்றோம். கொட்டாவி விட்டோம். என்ன பேசினார்கள்.....எது பற்றி பேசினார்கள்... ஏன் பேசினார்கள்.. எது பற்றியும் கவலை இல்லாமல், எப்படா 2 மணி நேரம் ஓடும் என்று அலைபேசியில் சொக்கி அமர்ந்து திடும்மென கவுண்டமணி பாணியில் கை தட்டி......"சூப்.....பரு" என்றெல்லாம் ஏதும் சொல்லாமல் ஆகச் சிறந்த நேர்த்தியான ஒரு கூட்டமாக இருந்தது. வாழ்த்துக்களும் வணக்கங்களும் எழுத்தாளிக்கு. அக்கா கிருஷ்ணாப்ரியா அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளை.....அன்புகளை இங்கே சமர்ப்பிக்கிறேன்.
 
ஊதா நிறக் கொண்டை ஊசிக் கதைகள். 15 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. ஒவ்வொரு கதையையும் ஒரு நாவலாக மாற்ற முடியும். ஏனென்றால் கதைக்களம் அத்தனை அடர்த்தியாக இருக்கும். என் கதைகள் எல்லாமே சீரியஸான கதைகள் தான். ஏனோ அப்படி அமைந்து விட்டது எனது எழுத்தோட்டம். பாதி நிஜம் பாதி புனைவு பாதி மேஜிக்... இது தான் ஊதா நிறக் கொண்டை ஊசிக் கதைகள்.  
 
ஒவ்வொரு கதையும் இந்த உலகத்தில் எங்கோ நடந்து கொண்டிருக்கிற நிஜம். நடந்திடுமோ என மனதுக்குள் வந்து போகிற நிழல். நடக்க வாய்ப்பிருக்கிற நிஜமும் நிழலும். மனம் சார்ந்த வெளிப்பாட்டை ஒவ்வொரு பக்கத்திலும் நீங்கள் உணர முடியும் என்றே நம்புகிறேன்.உணர்ந்தவர்கள் கூறி இருக்கிறார்கள். இருள் சார்ந்த ஒரு பக்கத்திலிருந்து வெளிச்சம் தேடுகின்ற முயற்சி இது. என் கதை மாந்தர்கள் தங்களை தாங்களே உற்று நோக்குபவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் தேடல் அலாதியானது.... கூடவே அதிருப்தியானது. அவர்கள் திரும்ப திரும்ப எல்லா மனிதர்களிடமும் தங்களையே தேடுகிறார்கள். வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையே சலிப்பு தட்டும் இந்த வாழ்க்கை முறையை ஆராய்கிறார்கள். மனதை பேசவிட்டு கேட்கிறார்கள். என் கதைகளில் இருளே அதிகம் இருக்கிறது. ஏனென்றால் இருட்டில் இருந்தே வெளிச்சம் பிறக்கிறது என்பது எனது நம்பிக்கையும். ஒரு நல்ல சிறுகதை முடியும் இடத்தில் தொடங்கும் என்று சொல்வார்கள். என் கதைகள் கண்டிப்பாக தொடங்கும்.
 
இப்புத்தகத்தை பற்றி தோழர் "புலியூர் முருகேசன்" அவர்கள் பேசினார்கள். அவரை முன்பே தெரியும் என்றாலும் இப்போது தான் முதன் முதலாக நேரில் பார்க்கிறேன். கம்பீரமான தோற்றம். ஆனால் எளிமையான மனது. நகைச்சுவை உணர்வு நிரம்ப கொண்ட மனிதர் என்பது எனது புரிதல். ஆனால் அதே சமயம் நேர்மையான கூர் நோக்கு கொண்ட அறிவு கொண்டவர். சரி என்றால் தலைக்கு மேல் வைத்து கொண்டாடி விடுகிறார். தவறென்றால் தலையே போனாலும் எட்டி உதைத்து விடுகிறார். ஒரு படைப்பாளிக்கு வேண்டிய உயர்ந்த நோக்கம் இது. 
 
தோழர் புலியூர் முருகேசன் அவர்கள் எனது "ஊதா நிறக் கொண்டை ஊசிக் கதைகள்" சிறுகதை தொகுப்புக்கு சிறப்புரை செய்தது நானே மீண்டும் ஒருமுறை எனது கதைகளை எழுதியது போல இருந்தது. அத்தனை துல்லியம். அத்தனை புள்ளியியல். ஒவ்வொரு கதையையும் ஆழ அலசி புரிந்து உணர்ந்து உள் வாங்கி இருக்கிறார். பேசும் போது ஒரு முறை கூட சுய தம்பட்டம் அவர் அடிக்கவே இல்லை. அவர் எத்தனை உயரம் என்று எனக்கு தெரியும். ஆனால் வந்த நோக்கம் முழுக்க முழுக்க எனது சிறுகதை தொகுப்பை சுற்றியே இருந்தது தவிர........"நான் சின்ன வயசுல நொங்கு வண்டி ஓட்டினேன்... நான் சின்ன வயசுல கிணத்துல தாவி குதிச்சேன்... நான் சின்ன வயசுல மரம் கூட பேசினேன்" என்ற பிதற்றல் ஒரு துளி கூட இல்லை. எதை எதையோ  தன்னை பற்றியே பேசி விட்டு கடைசியில் இப்படிப் பட்ட நான் கவிஜியின் சிறுகதை தொகுப்பை படித்து விட்டேன்.....நீங்களும் படியுங்கள்" என்று சொல்லி போனவர்களை நான் அறிவேன். ஆனால் தோழர்  புலியூர் முருகேசன் அவர்கள் ஆக்க பூர்வமாக பேசினார். அறிவு பூர்வமாக பேசினார். ஆகச் சிறந்த கதை என்று " மந்திரப்புன்னகை"யை அவர் சொன்ன போது சிலிர்த்து போனது. என்னையும் அறியாமல் ஆம் என்று கையை தூக்கினேன். ஆம் அதுவே இத்தொகுப்பின் ஆகச் சிறந்த கதை. அதை ஆகச் சிறந்த கதை என்று சொல்ல கண்டிப்பாக நுனிப்புல் மேய்ந்திருந்தால் முடியாது. உள்ளார்ந்த தெளிவின் மூலம்... உண்மையின் பக்கம் நின்று உணர்வு பூர்வமாய் புத்தகத்தை மிக நுட்பமாக வாசித்து உள் வாங்கினால் மட்டுமே அப்படி ஒரு சரியான முடிவுக்கு வர முடியும். அந்த வகையில் தோழர்.... மிக சரியான பணியை செவ்வனே செய்திருக்கிறார் என்பதை உணர முடிகிறது. அதன் மூலம் இந்த சிறுகதை தொகுப்புக்கு நியாயம் சேர்த்திருக்கிறார் என்பதை மகிழ்வோடு இங்கே பகிர்ந்து கொள்கிறேன். 
 
ஆழமாக படித்தால் மட்டுமே இப் புத்தகத்தை பற்றி பேசி முடியும் என்பது என் தாழ்மையான கருத்து. எந்த புத்தகத்தையும் ஆழமாகத்தானே படிக்க வேண்டும். கவிஞர் பூபாலன் மற்றும் சிலரைத் தவிர்த்து போன முறை நுனிப்புல் மேய்ந்தவர்களின் மத்தியில் நுட்பமாய் பேசிய "எழுத்தாளி" கிருஷ்ணபிரியா அக்காவுக்கு அது தெரியும்.... அதே போல தோழர் அவர்களும் அறிமுக எழுத்தாளன் என்றெல்லாம் பார்க்காமல் இருப்பதை அழகாய் தெளிவாய் நுட்பமாய் எடுத்து முன் வைத்தது....மனதுக்கு நெகிழ்வாக இருந்தது. நம்பிக்கையை ஊட்டியது. மிக மிக நேர்மையான விமர்சனத்தை எடுத்து வைத்த தோழரின் சொற்கள்......என்னை இன்னும் இன்னும் செதுக்கிக் கொள்ள "என் கடன் பணி செய்து கிடப்பதே" என தமிழின்பால் நான் இன்னும் இன்னும் உள்ளே செல்ல ஏதுவாய் அமைந்தது.
 
அவர் பாராட்டுக்கள் பொக்கிஷங்கள் என்றால் அவர் கூறிய ஏழெட்டு தவறுகள் நான் கவனிக்கப்பட வேண்டியவைகள். சில தவறுகள் எனக்கே தெரியாமல் நிகழ்ந்தவை. சிலது எனது அறிவுக்கு எட்டாமல் நிகழ்ந்தவை. சிலது கவனக்குறைவால் நிகழ்ந்தவை. இனி இன்னும் பொறுப்பாக கவனமாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை மணியை எனக்குள் பொருத்தி விட்ட தோழற்கு நன்றிகளால் நன்றி சொல்ல இயலாது. அது இனி இது போன்ற தவறுகளை தவிர்ப்பதால் தான் இயலும். 
 
இந்த மானுட மனம் சிக்கல்கள் நிறைந்தவை. அதனூடாகவே இவ்வாழ்வு துளிர்த்திருக்கிறது.சிக்கலும் அதன் அவிழ்ப்புகளுமே என் கதைகளின் அவதானிப்பாக இருக்கிறது. புரியாத வகையில் எழுதுகிறேன் என்ற குற்றச்சாற்று என் மீது எப்போதுமே உண்டு. நான் சொல்லிக்கொள்வதெல்லாம் ஒன்று தான்.... வாழ்வின் மறுபக்கங்கள் புரியாத தோரணையில் தான் இருக்கும். உற்று நோக்கும் விழிகளுக்கு அவை தன் சாளரத்தை கண்டிப்பாக திறக்கும் என்பதே.... 
 
"ஊதா நிறக் கொண்டை ஊசி கதைகள்"  வளைவுகள் நிறைந்தவை. வாழ்க்கையும் நிறைந்தவை.
 
இருளும் பிறழ்வும் சரி நிகர் என்று தோள் தொட்டு நிஜம் புடைக்கும் மையில் நானே பொருள்... நானே காட்சி. 
 
இமைக்கும் நொடியெல்லாம் கதையென விரியும் எனது தேகத்தின் திறவுகளை யார் மூடினும் அதன் வாய் பேசிடும்.
 
புத்தகம் வெளி வரக் காரணமாக இருந்த பூவரசி வெளியீடுக்கும் மற்றும் நிகழ்வுக்கு வந்திருந்து சிறப்பித்த அய்யா தேவரசிகன், தோழர் துவாரகா சாமிநாதன், தோழர் ஸ்டாலின் சரவணன், கவிஞர் இளங்கவி அருள், தோழர் இல்லொடு சிவா, கவிஞர் முத்துவேல், தம்பி பாரதி நீரு, நண்பர் கமலக்கண்ணன், மது, பரத் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும், அக்காவின் இல்லாருக்கும்,  எழுத்தாளி இலக்கிய வட்டத்துக்கும் மனம் நிறைந்த நன்றிகள். 
 
இதோ இந்த வேளை மதி மயங்கி கொம்பு முளைக்கும் எனக்குள் நானொரு பறவையாகி விட்டேன் வழக்கம் போல. 
 
காட்டுக்குள் நத்தை மனது. ஓடைக்குள் காட்டின் வளைவு. யானை ஆகிடத்தான் இந்தக் கனவு.  
 
- கவிஜி 
Pin It