1. SC/ST அரசு ஊழியர் பணிக்கான 27614 பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்ப சென்னை உயர்நீதி மன்றம் பிறப்பித்த (18. 08. 2014) உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரியும்!

2 ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) SC/ST மாணவர்களை பாதிக்கும் வெயிட்டேஜ் முறை, மதிப்பெண் தளர்வு நீக்கம், பொதுப்பிரிவில் SC/ST மாணவர் புறக்கணிப்பு போன்ற குளறுபடிகளை சரி செய்யக்கோரியும்!!

3 சென்னை பெருநகரில் தொடரும் குடிசைப்பகுதி அப்புறப்படுத்தலை கை விட்டு, செம்மஞ்சேரி, கண்ணகி நகர், கார்கில் நகர் பகுதியில் SC துணைத்திட்டத்தின் கீழ் தலித் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தியும்!!!


இடம்: கலைமாமணி உமாபதி அரங்கம்
ஆனந்த் தியேட்டர் வளாகம்
அண்ணாசாலை, சென்னை

நாள் – நேரம்: 2014 நவம்பர் 1 சனிக்கிழமை காலை 9 - 12

தலைமை
முனைவர். சி. லக்ஷ்மணன்

நோக்கவுரை
எழுத்தாளர் அன்புசெல்வம்

கருத்துரை
பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம்
அ. ஜெகநாதன் ஆய்வாளர்
பேராசிரியர் முனைவர் T. மார்க்ஸ்
திருமிகு. கருப்பையா
மாநில அமைப்பாளர், மத்திய, மாநில SC/ST அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு
தோழர். சிவா
தீண்டாமை ஒழிப்பு முன்னணி
டாக்டர். இரா. கிருத்துதாசு காந்தி இ.ஆ.ப
கூடுதல் தலைமைச் செயலர், (ஓய்வு)

தீர்மானங்கள் முன்மொழிவு
பேராசிரியர் முனைவர். ஜெ. பாலசுப்ரமணியம்

ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் பொருளாதார அரசியல் வரலாற்றில் இட ஒதுக்கீட்டுக்கும், நிதிநிலை சார்ந்த SC துணைத் திட்டங்களுக்கும், சிறப்பான முக்கியத்துவ‌ம் உண்டு. வரலாற்றில் அவர்களுக்கு மறுக்கப்பட்ட வாய்ப்பு என்ற நோக்கத்திலேயே இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இதனை முன்மொழிந்து ஒவ்வொரு ஐந்தாண்டு, பத்தாண்டு காலத்திற்கு நீட்டித்தும் வருகிறது. கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளைக் கடந்து விட்ட போதிலும் நடப்பு சமூக – அரசியல் போக்கின் திசை மாற்றங்களைக் கணக்கில் கொண்டால், தலித்துகள் உள்ளிட்ட எவருடடைய ஒதுக்கீட்டின் சாதக – பாதக அம்சங்களையும், SC துணைத் திட்டங்களையும் இது வரை மறு ஆய்வு செய்யப்படாதது ஒரு வித அச்சத்தை தலித்துகளிடம் ஏற்படுத்துகிறது. தலித் மக்களுக்கு மிகவும் பயனளிக்காத இத்தகைய திட்டங்களும், இட ஒதுக்கீடுகளும் இனியும் நீடிக்க வேண்டுமா என்கிற கேள்வியும் தலித்துகள் மத்தியில் எழுவது தவிர்க்க இயலாத ஒன்றாகி விட்டது. காரணம் SC -களுக்கான துணைத்திட்டங்களும், சமூக நீதிக்கான இட ஒதுக்கீடுகளும் உண்மையிலேயே பாதிக்கப்படுகின்ற தலித் மக்களின் தற்போதைய‌ ஒடுக்குமுறைகளை கவனத்தில் கொள்ளாமல், எண்ணிக்கைப் பெரும்பாண்மைவாதம் மற்றும் சாதிய‌ அதிகாரம் சார்ந்த அனைத்து சாதிகளுக்கும் என்கிற முறையில் தீவிரமாகி வருகிறது. இதனால் அதிகாரமற்றவர்களுக்கு அதிகாரம், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு சமூக நீதி என்று அரசியல் அமைப்புச் சட்டம் வழிகாட்டிய ஒதுக்கீட்டுத் தத்துவங்கள் கொஞ்சம் கொஞ்சமாக காலாவதியாகி வருவதை நடப்பு நிகழ்வுகளில் காண முடிகின்றது.

குறிப்பாக அரசு வகுக்கின்ற நிதிநிலையின் பொதுத்திட்டங்களில் தலித் மக்களுக்கான பயன்பாடுகள் தவிர்க்கப்பட்டு போவதால் அவர்களின் மேம்பாட்டில் கூடுதல் கவனத்தை செலுத்த மத்திய அரசு 1979 -ல் சிறப்பு உட்கூறுத் திட்டத்தை உருவாக்கியது. தற்போது SC துணைத்திட்டம் என அழைக்கப்படும் இத்திட்டம் தனது நிதிநிலையில் இந்திய அளவில் 16 % சதவிகிதமாகவும், தமிழகத்தில் 19% ஆகவும் இருக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள தலித் மக்களில் பெரும்பாலானோர் 56% மேலானோர் கிராமப்புறங்களில் வாழக்கூடியவர்கள். இதில் 62% தலித்துகள் நிலம் மற்றும் விவசாயம் சார்ந்து வாழக்கூடியவர்கள். இவர்களில் 36 % மேலானோர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கிறார்கள். இது தேசிய சராசரியான 21.12 % வறுமைக்கோட்டு மக்களைக் காட்டிலும் மிக அதிகமாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் மத்திய மாநில அரசுகளின் நிதிநிலையில் SC -களுக்கான துணைத்திட்டங்கள் விகிதாச்சாரத்துக்கு ஏற்றார்போல, அந்தந்த துறைவாரியாக அவர்களின் ஆலோசனைகளைக் கேட்டுத் திட்டமிடப்படுகிறதா என்றால் இல்லை. அப்படியே நிறைவேற்றப்படும் ஒருசில திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளும் ஊழல் இல்லாமல் அந்தந்த தலித் பயனாளிகளைச் சென்றடைகிறதா என்பதும் கேள்வியே. இது குறித்து விரிவான ஆய்வுகளோ அல்லது வெள்ளை அறிக்கையோ வெளியானதும் இல்லை. இது ஒருபக்கம் இருந்தாலும் கடன் சுமையை உருவாக்கி, பொருளாதார இழப்புகளைக் கொண்ட கல்வியைப் பெற்று அரசுப்பணிக்காகக் காத்திருக்கும் வேலை வாய்ப்புகளில் நிகழுகின்ற இருட்டடிப்புகள் வளருகின்ற இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிறது. தமிழக அரசின் தற்போதைய ஆசிரியர் தகுதித் தேர்வு முறையையும், SC/ST அரசு ஊழியர் பணிக்கான 27614 பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்ப உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் பார்த்தாலே இந்த விவகாரங்களுக்கு பின்னால் உள்ள உண்மைகள் புலப்படும்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் என சொல்லப்படும் தகுதி காண் மதிப்பெண் முறைகளை மட்டுமே முன்னிறுத்தி இன்றைய வெகுஜன அமைப்புகள் போராடின. பொதுவாக ஆசிரியர் காலிப்பணியிடங்களில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க 69 % இட ஒதுக்கீடு சாதிகளுக்கு ஏற்றார்போல நியமிக்கப்படுவதோடு ஒதுக்கீடு முடிந்து விடுவதாக அனைவராலும் நம்பப்படுகிறது. ஆனால் மீதம் உள்ள பொதுப் பிரிவில் 31% எந்த அடிப்படையில் நிரப்பப்படுகின்றன அல்லது நிரப்பப்பட வேண்டும் என்பதைக் குறித்த வெளிப்படையான‌ தெளிவு இல்லை.

பொதுப்பிரிவு என்பது இதர சாதிகளுக்கு என வரையறை செய்யப்பட்டது தான். ஆனால் ஆசிரியர் தகுதித் தேர்வின் அடிப்படையிலான வேலை வாய்ப்புப் பட்டியலில் அவர்கள் யார் என்றால் பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் மிக பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தேர்வுப்பட்டியல் கூறுகிறது. அதாவது ஆசிரியர் தகுதி தேர்வு -2 -ன் படி 10,900 மொத்த பட்டதாரி ஆசிரியர்களில் 3000 பேர் பொதுப் பிரிவில் வருகின்றனர். இதில் எஸ்.சி 254 பேர், எஸ்.சி அருந்ததியர் 21 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதே போல 830 இடைநிலை ஆசிரியர்களில் 257 பேர் பொதுப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் கூட எஸ்.சி இல்லை. இதர சாதிகளுக்கு என சொல்லப்படும் 31 % பொதுப்பிரிவில் வெறும் 3 % தான் இடஒதுக்கீட்டைச் சாராத இதர‌ சாதியினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஏனைய அனைவரும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட சாதிகளை மட்டுமே சார்ந்தவர். பொதுப்பிரிவில் 6% தலித் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டும் ஒருவர் கூட எஸ். சி / எஸ். சி அருந்ததியர் இல்லை என பட்டியல் தெரிவிக்கிறது. அப்படியானால் பொதுப்பிரிவு என்பது உண்மையிலே யாருக்கு பயனளிக்கிறது? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதற்கு சொல்லப்படும் பிரதானக் காரணம் பொதுப்பிரிவில் தேர்ந்தெடுக்கப்படும் அளவுக்கு எஸ்.சி யாரும் மெரிட்டில் வருவதில்லை என்கின்றனர். மெரிட்டில் 18 % எஸ். சி வர முடிவதில்லை என்பது கொஞ்சமும் நம்பும்படியாக இல்லை. ஏனெனில் மெரிட்டில் 6% தேர்ச்சி பெற்ற நூற்றுக்கணக்கான எஸ்.சி மாணவர்களை பின்னடைவு காலிப்பணியிடங்களில் (Backlog Vacancies) கொண்டு போய் நிரப்பி விடுகின்றனர். பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு மத்திய அரசு பின்பற்றும் சிறப்புச் சேர்க்கை (Special Drive) நடைமுறையையோ அல்லது மாநில வேலை வாய்ப்பின் பதிவு மூப்பு முறையையோ (Seniority) பின்பற்றியிருந்தால் மெரிட்டில் ஆசிரியர் தகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ். சி யை கொண்டு போய் அங்கு நிரப்ப வேண்டிய அவசியமில்லை. தனியாகவே தேர்ந்தெடுக்க வழி வகைகள் இருக்கின்றன. தேவைப்படும் மொத்த ஆசிரியர் வேலை வாய்ப்புகளோடு ஒப்பிடும்போது 23 % எஸ். சி -க்கள் பதிவு செய்து மூப்பு அடிப்படையில் வேலைக்காக காத்திருக்கின்றனர். பழங்குடியினர் அதிகம் உள்ள மலைப்பகுதிகளில் இன்னமும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. ஆசிரியர் நியமனங்களில் பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்பப் போதுமான வழிவகைகள் இருந்தும் இதனை முறையாக நடைமுறைப்படுத்தாததால் 2012 -ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் மட்டும் 47% பின்னடவு காலிப் பணியிடங்கள் SC/ST -க்கு ஏற்பட்ட‌து. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிக்கையில் பழங்குடியினருக்கான அனைத்து காலிப் பணியிடங்களும் நிரப்பப்ப‌டாமல் பின்னடைவாகியுள்ளது. ஏன் SC/ST -க்கு மட்டும் ஒவ்வொரு ஆண்டும் பின்னடைவு காலிப்பணியிட எண்ணிக்கை அதிகரிக்கின்றது என்பது இன்னமும் புரியாத புதிர் தான். இது போதாதென்று தலித் மற்றும் பழங்குடி ஆசிரிய மாணவர்களை முற்றிலும் வடிகட்ட வெயிட்டேஜ் (Weightage) என்கிற‌ தகுதிகாண் மதிப்பெண் முறைகளும், எல்லோருக்கும் சமமாக வழங்கப்படும் 5 % மதிப்பெண் தளர்வும் (relaxation) இட ஒதுக்கீட்டு தத்துவத்தின் நடைமுறைகளுக்கு முற்றிலும் எதிரானதாக இருக்கிறது. மத்திய தகுதித் தேர்வின் (CTET) அடிப்படையில் பொதுவாகக் கிடைத்த 5% மதிப்பெண் தளர்வையும் உயர்நீதி மன்ற மதுரைக் கிளை ரத்து செய்து விட்டது (26.09.2014). இத்தகைய சூட்சுமங்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர் பணிக்கென்றே படித்துக் காத்திருக்கும் ஒரு தலைமுறையையே பணிக்கு வர விடாமல் செய்து விடுகிறது.

அதே போல SC/ST - அரசு ஊழியர் பணிக்கான பின்னடைவு காலிப்பணியிட நியமனத்தில் 27614 இடங்கள் பூர்த்தி செய்யப்படாமல் கிடப்பில் கிடக்கின்றன. இது வரையிலும் நிரப்பப்படாமல் இருக்கின்ற குரூப் - 1 (387), குரூப் - 2 (4303), குரூப் - 3 (12,273), குரூப் - 4 (7624), ஆகிய மொத்த பின்னடைவு காலிப்பணியிடங்களையும் 6 மாதத்திற்குள் நிரப்ப வேண்டும் என 18. 08. 2014 அன்று சென்னை உயர்நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு இன்றுவரையிலும் நடைமுறைப்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றது. அரசு நிதிநிலையில் SC/ST -களுக்கான துணைத் திட்டங்களையும், வேலைவாய்ப்பில் சலுகைகளையும், சமூக நீதியில் இடஒதுக்கீடுகளையும், நீதிமன்ற வழிகாட்டுதலையும் பிறப்பித்துவிட்டு அவற்றை துளியும் நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போடுகின்ற, காலம் தாழ்த்துகின்ற, காலாவதியாக்குகின்ற அரசின் மெத்தனப்போக்கு கண்டிக்கத் தக்கது. இதனை முன்னிறுத்தி

Ø SC/ST அரசு ஊழியர் பணிக்கான 27614 பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்ப சென்னை உயர்நீதி மன்றம் பிறப்பித்த (18. 08. 2014) உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரியும்,
Ø ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) SC/ST மாணவர்களை பாதிக்கும் வெயிட்டேஜ் முறை, மதிப்பெண் தளர்வு நீக்கம், பொதுப்பிரிவில் SC/ST மாணவர் புறக்கணிப்பு போன்ற குளறுபடிகளை சரி செய்யக்கோரியும்,
Ø சென்னை பெருநகரத்தில் தொடரும் குடிசைப்பகுதி அப்புறப்படுத்தலை கைவிட்டு, செம்மஞ்சேரி, கண்ணகி நகர், கார்கில் நகர் பகுதியில் SC துணைத்திட்டத்தின் கீழ் தலித் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தியும்

மாநில அளவிலான கவன ஈர்ப்புக் கருத்தரங்கு ஒன்றை "தலித் செயல்பாட்டுக்கான சிந்தனையாளர் வட்டம் - ICDA" ஏற்பாடு செய்துள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் நெடுங்காலமானப் போராட்டத்தின் அடிப்படையில் இக்கருத்தரங்கின் மூன்றம்சங்களை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்கிற நோக்கில் நடைபெறும் கருத்தரங்கிற்கு திரளாக பங்கேற்றுச் சிறப்பிக்கும்படி அன்புடன் அழைக்கின்றோம்.

ஒருங்கிணைப்பு: தலித் செயல்பாட்டுக்கான சிந்தனையாளர் வட்டம் - ICDA - தமிழ்நாடு / புதுச்சேரி

தொடர்புக்கு : 9629775008 / 9994335339 / 7708518877 / 9944863612

Pin It