13 ஜூலை | ஞாயிறு மாலை 6 மணி | செ.தெய்வநாயகம் பள்ளி, வெங்கட்நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை.

தோழர்.செய்யது அவர்கள் சேவ் தமிழ்சு இயக்கத்தின் கடந்த ஐந்தாண்டுச் செயல்பாடுகளைத் தொகுத்து வழங்கினார். தோழர். சமந்தா அவர்களின் தலைமையில் நடந்த முதலாம் அமர்வில் தோழர்.இன்குலாப், பேரா.மணிவண்ணன், தோழர்.சுந்தரி சேவ் தமிழ்சு இயக்கத்துடனான தங்களது செயல்பாடுகளை நினைவு கூறி, அடுத்த கட்ட பயணத்திற்கு தங்களது கருத்துகளை வழங்கினர்.

பெயர் மாற்றம்:

2008-2009 ஆண்டுகளில் ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இன அழிப்புப் போரை நிறுத்தக் கோரி போராட்டக் களத்திற்கு வந்த தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்கள் சிலரால் தொடங்கப்பட்டது "சேவ் தமிழ்ஸ் இயக்கம்". அன்றைய நிலையில், " போரை நிறுத்துங்கள்; தமிழர்களை காப்பாற்றுங்கள்" (STOP WAR; SAVE TAMILS) என்கிற முழக்கத்தோடு செயல்படத் தொடங்கியதால் எங்கள் இயக்கத்தின் பெயரே ' சேவ் தமிழ்ஸ்' என்றாகிப் போனது. ஐந்து ஆண்டுகள் கடந்து, ஆறாம் ஆண்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எங்கள் இயக்கத்தின் பெயர் தமிழில் இல்லாததாலும், பாதிக்கப்பட்ட கையறு நிலையினராகத் தமிழர்களைக் காட்டுவதாலும் எமது இயக்கத்தின் பெயரை " இளந்தமிழகம் " என்று மாற்றி அறிவிக்கின்றோம்..

கொள்கை அறிக்கை வெளியீடு:

“ 21ஆம் நூற்றாண்டில் தமிழகம் ” என்ற தலைப்பிட்ட இந்நிகழ்வினூடாக "இளந்தமிழகம்" என்ற புதிய பெயரை அறிவித்து எமது கொள்கை அறிக்கையை வெளியிட்ட பின் ஒருங்கிணைப்பாளர்.செந்தில் பின்வருமாறு பேசினார்.

தமிழகத்தின் அரசியல் வரலாறு பற்றியும், இன்றைய நிலையைப் பற்றியும், எதிர்காலத்தேவை பற்றியும் பேசிய செந்தில், இறுதியாக "இன்று இருப்பது போல் அனைத்து அதிகாரங்களும் இந்திய ஒன்றிய அரசிடம் குவிக்கப்பட்டுள்ளதற்கு மாறாக, தமிழக அரசு என்பது தன்னுடைய அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கொள்கைகளைத் தானே தீர்மானிக்கும் முழு அதிகாரம் பெற்ற அரசாக இருக்க வேண்டும். அக்கொள்கைகள் சாதி ஒழிப்பையும், மதச்சார்பின்மையையும் சமூக சனநாயகத்தையும் சமத்துவத்தையும் உள்ளிடக்கியதாக இருக்க வேண்டும்" என்பதே எமதியக்கத்தின் கொள்கை என்று விளக்கினார்.

சாதியத்தைப் பற்றி பேசும் பொழுது தமிழ்ச்சமூகத்தில் உள்ள சாதிய ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, சாதிய கட்டமைப்பை வீழ்த்தப் போராடுவதில் தான் தமிழ்த்தேசியத்தின் உயிரே இருக்கின்றது என்றும், மதவாதத்தைப் பற்றி பேசும் பொழுது மதப் பெரும்பான்மைவாதம், சிறுபான்மையினரின் உரிமைகளை மறுப்பதில் தொடங்கி இறுதியில் சனநாயகத்தை கொலை செய்வதில் போய் முடிகின்றது, உண்மையான‌ பொருளில் மதச்சார்பற்ற அரசை நோக்கிய பயணமென்பது, சிறுபான்மையினரின் நலன்களை பாதுகாப்பதிலிருந்து தொடங்க வேண்டும் என்றும், சமூகத்தில் நிலவும் ஆணாதிக்கத்தைப் பற்றி பேசும் பொழுது, பெண்களை அணி திரட்டி அமைப்பாக்கும் பணியில் நாம் ஈடுபடாவிட்டால் சனநாயகம் பற்றியோ, தேசியம் பற்றியோ பேசுவதில் பொருளில்லை என்றும் இவற்றை நோக்கிய செயல்பாட்டையே எமதியக்கம் மேற்கொள்ளும் என்று தோழர்.பரிமளா பேசினார்.

ஈழ விடுதலைக்கு துணை நிற்பது தமிழகத்தின் கடமையும், சனநாயக உரிமையும் ஆகும். இந்திய - இலங்கை இன அழிப்புக் கூட்டை உடைக்கும் பொறுப்பு தமிழக மக்களாகிய நம்மிடமே தங்கியுள்ளது என்று தோழர். இளங்கோ பேசினார், அவர் மேலும் பேசும் பொழுது "ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன் தீர்வுரிமை உண்டு, அது அந்த தேசத்தின் அடிப்படை சனநாயக உரிமை", இதனடிப்படையில் எமதியக்கம் என்றுமே ஒடுக்கப்படும் தேசங்களின் பக்கம் நின்று அவர்களது விடுதலைப் போராட்டங்களுக்கு துணை நிற்கும் என்று பேசினார்.

வரலாறு எங்களிடமிருந்து தொடங்கவுமில்லை, எங்களோடு முடியப்போவதில்லை என்ற பகத் சிங்கின் கூற்றுக்கேற்ப, இச்சமூக அரசியல் பொருளாதார சூழ்நிலைகளின் வெளிப்பாடாகவே எமதியக்கம் தோன்றியுள்ளது, நடுத்தர வர்க்கத்தினரை பெரும்பான்மையினராக கொண்டுள்ள எமதியக்கம், இந்நடுத்தர வர்க்கத்தை தமிழ்நாட்டில் நீண்ட காலமாக நடைபெற்று வரும் சமூக நீதி, சனநாயகம், சமத்துவத்திற்கான போராட்டத்தில் இணைக்கும் வரலாற்றுத்தேவையை நிறைவு செய்யும் நோக்கத்தோடு செயல்படும் என்று தோழ‌ர்.கதிரவன் கூறினார்.

தோழர். ஜார்ஜ் அவர்களின் தலைமையில் நடந்த இரண்டாம் அமர்வில் தோழர். ஹாஜாகனி, தோழர். தியாகு, தோழர்.கொளத்தூர் மணி, தோழர்.வ.கீதா, தோழர்.மீ.த.பாண்டியன் "இளந்தமிழகம்" இயக்கத்துடனான தங்களது கடந்த கால செயல்பாடுகளை நினைவு கூறி, அடுத்த கட்ட பயணத்திற்கானத் தங்களது கருத்துகளை வழங்கினர்.

மேடை நாடகம் , பறை இசை , நடனம் , பாடல் ஆகியனவற்றை இளந்தமிழகம் இயக்கத்தின் கலைக்குழு அரங்கேற்றியது.

- ச.இளங்கோவன், செய்தித் தொடர்பாளர், இளந்தமிழகம்.

Pin It