may18 france 600

மே 18- எம் மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட மாபெரும் இனப்படுகொலை!

புரிந்தவர்களையும், மறந்தவர்களையும் மன்னிக்கவே முடியாது!

தமிழின அழிப்பு மே 18, ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் நாள் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. உலகத் தமிழினமே நெஞ்சுருக அந்நாளில் பங்கேற்கத் தயாராகி வருகின்றது. எம்மினத்தின் மீது சிங்களம் உச்ச இனப்படு கொலை புரிந்த ஐந்து ஆண்டுகள், இன்னும் கொலைகார இனவெறி அரசு தண்டனை பெறாமல் தப்பித்துக் கொண்டிருக்ருகின்ற ஐந்து ஆண்டுகள்,      சிங்கள இனவாத அரசை சர்வதேச விசாரணைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றாமல் நாம் கொடுத்த கால அவகாசமும் ஐந்து ஆண்டுகள்.

கண்ணீரையும் செந்நீரையும் கொட்டி எண்ணிலடங்கா தியாகங்களினால் வளர்த்தெடுக்கப்பட்ட எம் தாயக விடுதலைப் போராட்டத்தின் மீது பேரிடர் விழுந்த அந்நாட்களை எப்படி நாம் மறக்க முடியும்? வாழ்வுரிமைக்காகப் போராடியதற்காக, தேச விடுதலைப் போராட்டத்தை தங்கள்     தோள்களில் சுமந்து நின்ற குற்றத்திற்காக, நாசகார ஆயுதங்களை பயன்படுத்தி,  ஈவிரக்கமற்ற முறையில் கொன்றொழித்தும், பிஞ்சுப் பாலகர்;கள் என்றுகூடப் பார்க்காமல் உயிரோடு கதறக் கதறக் புதைத்தார்களே எமதுயிர் உறவுகளை, அவர்களை நாம்எப்படி மறக்கமுடியும்? செந்நீரில் தோய்ந்து இரத்தச் சகதியானது எங்கள் தேசம்! எமது உறவுகளின் சிதறிய உடல்கள் எங்கள் விளை நிலங்களில் வீசியெறியப்பட்டன, அவர்களது உயிர் பிச்சை கேட்டு அலறிய மரண ஓலங்கள இன்னும் எங்கள் செவிகளுக்குள் இடையறாது ஒலித்துக் கொண்டேயிருக்கிறது, இவை எதனையுமே ஒற்றைத் தமிழன் உயிரோடு உள்ளவரை மறக்கவும் மாட்டான்! நீதி கிடைக்கும் வரை ஓய்ந்து கொள்ளவும் மாட்டான்.

இலட்சக்கணக்கான மக்களைக் கொன்றொழித்த பின்னரும் மிச்சமுள்ள தமிழர்களையேனும் நிம்மதியாக வாழவிட்டதா சிங்களம்? இனவழிப்பு இன்னும் தொடர் கதையாகவே உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியுமா? கைதுகளும், காணாமல் போக்கடிக்கப்படுதலும், பாலியல் வல்லுறவுகள், நிலஅபகரிப்பு, இராணுவக் கிடுக்கிப்பிடியில் மக்களை அச்சுறுத்தி அடிமைப்படுத்தி வைத்திருப்பது என்று தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது. தொலைத்த உறவுகளைத் தேடிக்குரல் எழுப்பிய குற்றத்திற்காக தாயையும் மகளையும் பிடித்து சிறையில் போடும் சிங்களத்திடம் தமிழர் நீதியைதான் எதிர்பார்க்கமுடியுமா? நீதியினையும், தீர்வினையும் தமிழன் ஒருபோதும் சிங்களத்திடம் எதிர்பார்க்கவே முடியாது. தாயகத்தில் வாழும் தமிழர்கள் மட்டுமல்ல புலம் பெயர் தமிழர்களும், ஏன் ஒட்டுமொத்த உலகத்தமிழர்களுமே சிங்களத்தின் இருப்புக்கு அச்சுறுத்தலாகவும் தனது எதிரியாகவும் கருதுகிறது சிங்களம்.   தமிழினத்தையே 'பயங்கரவாதச் சமூகம்' என முத்திரை குத்தி சர்வதேச சமூகத்திடம் இருந்து தமிழர்களை தனிமைப்படுத்திவிட அது பாடாய்ப்டுகிறது. அதன் ஒரு பகுதியே புலம் பெயர் தமிழர்கள் மீதும் தமிழ் அமைப்புகள் மீதான தடையாகும். உலகத் தமிழர்கள் ஒன்றுபட்டு நின்று போராட வேண்டிய சூழ்நிலையை எதிரியே நமக்கு உருவாக்கித் தந்துள்ளான்!

சிறிலங்காவுக்கு எதிராக சர்வதேச நிலைப்பாடுகள் இறுக்கம் அடைந்து வருவதையும், தமிழர் தரப்பு நியாயங்களை ஓரளவுக்கேனும் புரிந்துகொள்ள சர்வதேசம் தலைப்பட்டுள்ளதையும், ஐ.நா மனிதவுரிமைகள் அவையில் நிறைவேற்றப்பட்ட அண்மைய தீர்மானம் சான்று பகர்கின்றது. தமிழர்களுக்கான காலம் கனிந்து வருகின்றது. அது மட்டுமன்றி சர்வதேச புவியியல் சார் அரசியலும் எமக்குச் சாதகமாகவே உள்ளது. அதனை தவறவிடாமல் சரியாகப் பயன்படுத்திக்கொள்வது எங்கள் கைகளிலேயே உள்ளது. வலிமைமிக்க சக்தியாக, நாம் ஒன்றுபட்டு நின்று, பேரம்பேசும் வல்லமையை நாம் மீளவும் எங்கள் கைகளில் பெற்றால் மட்டுமே அது சாத்தியம் என்பதையும் நாம் அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும். தனித்தும் பிரிந்தும் நின்று நாம் அடிமைகளாக வாழ்ந்து அழியப்போகின்றோமோ? அல்லது ஒன்றுபட்டு நின்று போராடி உரிமையைகளை வென்றெடுக்கப்போகின்றோமா? என்பதை நாம் தீர்மானித்தேயாக வேண்டும்.

எனவே மே 18பேரணியில் அனைத்துத் தமிழர்களும் பங்கேற்க வேண்டும் என அன்போடும் உரிமையோடும் பிரான்சு தமிழ் மக்கள் பேரவையினராகிய நாம் அறைகூவல் விடுக்கின்றோம்.

இந்தப் பேரணியில்கலந்து கொண்டு இனவழிப்புக்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், ஐ.நா வினது மேற்பார்வையில் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடாத்தக்கோரியும் ஒன்றுபட்ட தமிழர்களாக ஒரணியில் நின்று குரல் கொடுப்போம். அநீதி இழைக்கப்பட்ட எங்கள் மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதுவும், எமது மக்களும் போராளிகளும் எதற்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்தார்களோ அந்தக் கனவுகளை நிறைவேற்றத் தொடர்ந்து போராடுவதுமே உண்மையான நினைவேந்தல் நிகழ்வாக இருக்கமுடியும்.

மே 18ம் நாள் - தமிழினப்படுகொலை நினைவு நாள் 18.05.2014 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 1.00மணிக்கு (முள்ளிவாய்க்கால் 5ம் ஆண்டு நினைவு)

இடம்: லாச்செப்பலில் (La Chapelle) இருந்து Républiqueவரை நடைபெறவுள்ளது.

சிறீலங்கா அரசின் வன்கொடுமைகளையும், தொடர்ந்து உரிய இடங்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டியது ஈழத்தமிழர்களாகிய எங்கள் ஒவ்வொருவரது தலையாய கடமையாகும்.

- பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை.

Pin It