“நாங்கள் வன்முறை மீது காதல் கொண்டவர்களோ, அன்றி அது மாதிரியான நோய்களால் பாதிப்புற்ற மனநோயாளிகளோ அல்ல. மாறாக, விடுதலையை முன்வைத்துப் போராடும் ஒரு நிறுவனத்தில் அங்கம் வகிக்கும் நேர்மையான போராளிகளே நாங்கள்!”
– தமிழீழ போராளி தங்கதுரை, நீதிமன்றத்தில் நிகழ்த்திய உரை, 24 பிப்ரவரி 1983.
1983-ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தில் அனைவரின் மனசாட்சியையும் உலுக்கிய பெருங்கொடும் சம்பவம் கொழும்பு பகுதியிலிருந்த உச்சபட்ச பாதுகாப்பு சிறையாகிய வெலிக்கடை சிறையில் நடந்தேறியது. அந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெலோ (TELO) அமைப்பின் போராளிகளும் மற்றும் பல தமிழர்களும் சிறைக்குள்ளேயே சிங்கள இனவெறி கைதிகளாலும், சிறை நிர்வாகத்தாலும் மிருகங்கள் கூட நினைத்துப் பார்க்காத அளவிற்குக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.டெலோ என்ற ஈழப் போராட்டக் குழுவைச் சார்ந்த தமிழீழ போராளிகள் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன், தேவன், சிவபாதம் மற்றும் நடேசுதாசன் ஆகியோர் இந்த சிறையில் தான் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களோடு சேர்ந்து பல்வேறு தனித் தமிழீழ ஆதரவாளர்களும், தமிழ்க் கைதிகளும் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
பொதுவாக ஈழப் போராளிகளுக்குச் சிறையில் மற்ற கைதிக்குக் கொடுக்கப்பட வேண்டிய உரிமைகள் எதுவும் வழங்கப்படாது. பிற கைதிகளைப் போல் அல்லாமல் நாள் முழுவதும் சிறை கொட்டடிக்குள்ளேயே அவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். பத்திரிகைகள் வாசிப்பதற்கோ, வானொலியில் செய்திகள் கேட்பதற்கோ, நூல்கள் படிப்பதற்கோ, சிறை நூலகத்தைப் பயன்படுத்துவதற்கோ அனுமதிக்கப்படுவதில்லை. அது மட்டும் அல்லாமல் சிறையில் மற்ற பகுதிகளிலிருந்து பலத்த காவலுடன் தனித்துச் சிறைப்படுத்தப்பட்டிருந்தனர். இவர்கள் யாரையும் அவர்களது உறவினர்களோ, நண்பர்களோ, வழக்கறிஞர்களும் கூட சந்திக்க முடியாத அளவிற்கு அடக்குமுறைகள் ஏவப்பட்டிருந்தன. சுருக்கமாகச் சொன்னால் சிறை நிர்வாகம் நினைத்தால் மட்டுமே இவர்களைப் பூட்டி வைத்திருக்கும் கதவுகளைத் திறந்து சென்று சந்திக்க முடியும்.
ஜூலை கலவரம் இலங்கை தீவு முழுவதும் பரவத் தொடங்கிய உடனே குட்டிமணி, தங்கதுரை உள்ளிட்ட போராளிகள் சிறை வைக்கப்பட்டிருந்த வெலிக்கடை சிறைக்குள்ளும் அதன் ரத்த வெறி பரவத் தொடங்கியது. சிறை அதிகாரிகள் திட்டமிட்டு சிறைக்குள்ளேயே போராளிகளையும் அவர்கள் உடன் இருக்கும் தமிழர்களையும் கொலை செய்வது என முடிவெடுத்திருந்தனர். ஜூலை 25-ஆம் தேதி பிற்பகல் 2:30 மணிக்கு மேல் சிறையில் கையில் கிடைத்த கம்பிகள், கட்டைகள் மற்றும் கூர்மையான பொருட்களை எடுத்துக் கொண்டு போராளிகள் தங்கியிருந்த தனிச்சிறையை நோக்கி சிங்கள கைதிகள் பெரும்கூச்சலுடன் ஓடி வந்தனர். தனிமை சிறையிலிருந்த போராளிகளைச் சந்திக்க யாருக்குமே திறக்காத சிறையின் கதவுகள் சிங்கள இனவெறி கொண்ட சிறை அதிகாரிகளால் கொலைகாரர்களுக்குத் திறந்து வைக்கப்பட்டிருந்தது. இப்படி ஒரு தாக்குதல் நடக்கும் என்பதை எதிர்பார்க்காத அவர்களால் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் துளியும் முடியவில்லை. வெகு விரைவில் அனைவரும் மிக மோசமாகத் தாக்கப்பட்டு உடலெங்கும் குருதி வடிய வெளியே இழுத்து வரப்பட்டனர். இவை அனைத்தும் சிறைப் பாதுகாவலர்கள் முன்னிலையிலேயே நடைபெற்றது.
வெலிக்கடை சிறையின் வெளிப்பகுதியில் ராணுவத்தினர் நிற்பதுண்டு. ஈழப் போராளிகளை அங்கே அடைத்து வைத்திருந்தது அதற்கு ஒரு காரணமாகவும் இருந்தது. இச்சிறை வன்முறை நடக்கத் தொடங்கிய சற்று நேரத்தில் உள்ளே வந்த சிங்கள ராணுவத்தினர் கையிலிருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டு தங்கள் ஆதரவையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.ஈழப் போராளிகள் குட்டிமணி, ஜெகன் ஆகியோருக்கு சிங்கள நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட பொழுது அவர்களுடைய இறுதி ஆசையாக ‘தங்கள் கண்களைப் பார்வையற்ற ஈழத் தமிழர்களுக்குக் கொடுக்க வேண்டும். அதன் மூலம் ஒரு நாள் மலரவிருக்கும் தமிழீழத்தை எங்களால் காண முடியும்’ என்று தெரிவித்திருந்தனர். மரணத்தை அறிவித்த தருணத்தில் கூட தமிழ் ஈழ மண்ணுக்காகச் சிந்தித்த ஈழப் போராளிகளின் இன உணர்வைச் சிங்கள இனவெறி கும்பல் நினைவில் வைத்திருந்தது.
இதன் காரணமாக, தாக்குதலின் போது தோழர் குட்டிமணி, தோழர் ஜெகன் ஆகியோர் அரைகுறை உயிருடன் சிறை அறையிலிருந்து வெளியே இழுத்து வரப்பட்டனர். சிங்கள கொலைகாரர்கள் தங்கள் வெறி தீர அவர்களை அடித்து, உடலைக் கத்தியால் கிழித்து ஆரவாரம் செய்தனர். பின்னர் அவர்களது கண்கள் இரண்டும் கூறிய ஆயுதத்தால் தோண்டி எடுத்து காலில் போட்டு நசுக்கினர். தோழர் குட்டி மணியின் உடலைக் குத்தி கிழித்து வெளியே பீறிட்டு வந்த குருதியைக் குடித்து தங்களை ஒரு இனவெறி கொண்ட மிருகங்கள் என்பதை அப்பட்டமாகச் சிங்களர்கள் உலகுக்கு அறிவித்தனர்.
இந்த கொடுமைகள் அத்தனையும் சிறைக்குள் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலைக்கு முன்னரே நடைபெற்றது. இந்த படுகொலைகள் நடைபெறுவதற்கு முதல் நாள் தான் பௌத்தர்களின் ‘போயா’ என்ற புனித நாள் அனுசரிக்கப்பட்டிருந்தது. அதற்காக உண்ணா நோன்பிருந்த சிங்கள இனவெறியர்கள் தான் கொலை வெறியர்களாய் மாறி இருந்தனர். கொல்லப்பட்ட தோழர் குட்டிமணி மற்றும் தோழர் ஜெகன் ஆகியோரின் உடல்கள் புத்தர் சிலைக்கு முன்பு படையல் போல் போடப்பட்டது. ‘அன்பே அமைதியின் வழி’ என்று போதித்த புத்தரும் ஏதும் செய்ய முடியாதவராய் புன்னகைத்துக் கொண்டிருந்தார்.போராளிகள் குட்டிமணி, ஜெகன் மற்றும் தங்கத்துரை
இதே சிறையில் மயில்வாகனம் என்ற ஒரு சிறுவன் வைக்கப்பட்டிருந்தான். இக்கொடுமைகளைப் பார்த்துப் பயந்து சாதாரண கைதிகள் வைக்கப்பட்டிருந்த சிறையின் அருகே ஓரிடத்தில் மறைவாக ஒளிந்திருந்த அச்சிறுவனை சமிரத்ன என்ற சிறை அதிகாரி கண்டுபிடித்தான். வெளியே இழுத்து வந்து அச்சிறுவனின் குரல்வளையை வெட்டினான். இறுதியில் அச்சிறுவனும் புத்தருக்குப் படையலாக்கப்பட்டான்.
ஜூலை 25-ம் தேதி மட்டும் 35 தமிழ் சிறைவாசிகள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இக்கொலைகளைச் செய்த கைதிகளுக்கு அன்று இரவு மதுவும், மாமிசமும் வழங்கப்பட்டு, சிறைக்குள்ளேயே சிறை அதிகாரிகளால் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
அங்கே எஞ்சியிருந்த பிற தமிழ் கைதிகள் தங்களுக்கும் இதுபோன்று நடக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து சிறை நிர்வாகத்திடம் தங்களை வேறு இடத்துக்கு மாற்றுமாறு கேட்டனர். ஆனால், வேறு சிறைக்கோ அல்லது சிறைக்குள்ளேயே வேறு இடத்திற்கோ மாற்றாமல் தற்காலிகமாக வேறு அறைக்கு மட்டும் மாற்றி கண்துடைப்பு நடவடிக்கை எடுத்தது வெலிக்கடை சிறை நிர்வாகம்.
ஜூலை 27-ஆம் தேதி மாலை 4 மணிக்கு மேல் மீண்டும் தமிழர்களைக் கொலை செய்யச் சிங்கள இனவெறி கொலைகார கைதி கும்பல் முடிவெடுத்தது. அந்த காலகட்டத்தில் இத்தாலி விமானம் ஒன்றைக் கடத்தி சிறையிலிருந்த சேபால ஏக்க நாயக்க என்ற குற்றவாளியும் தமிழர்களைக் கொல்லும் கொலை வெறி கும்பலுடன் சேர்ந்திருந்தான். ஏற்கனவே முதல் நாள் கொலை செய்த கொலைகாரர்களும் இவர்களோடு சேர்ந்து இருந்தனர்.
வழக்கம்போல் தமிழ் கைதிகளின் சிறைக் கதவுகள் திறந்திருக்க, பூட்டியிருந்த ஒரு சில சிறைக் கதவுகளுக்குரிய சாவி கொலைகாரர்கள் கையிலேயே இருந்தது. முதல் நாளில் இக்கொடுமையை உணர்ந்திருந்த தமிழ்க் கைதிகள் சற்று எச்சரிக்கையுடனே இருந்தனர். தங்களால் முடிந்தவரைச் சிறைக் கதவுகளைக் கொலைகாரர்கள் திறக்க முடியாதபடி பாதுகாக்க முயன்றனர். ஆனால் எந்தவித ஆயுதங்களோ தடுப்பு கருவிகளோ இல்லாத காரணத்தினால் வெகு நேரம் நீடிக்கவில்லை. கதவுகளைத் திறக்க முடியாத வண்ணம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது காரமான, சூடான குழம்பை ஊற்றி கொலைகாரர்கள் திறக்க முயற்சி செய்தனர்.
அதே நேரத்தில் இரண்டு பிரிவாக பிரித்து வைக்கப்பட்டிருந்த தமிழ் சிறை கைதிகளில் மற்றொரு பிரிவினரை தாக்க வேறொரு சிங்கள இனவெறி கும்பல் சென்றிருந்தது. சிறைபட்டிருந்த தமிழர்களில் 75 வயது நிரம்பிய மருத்துவர் தர்மலிங்கம் என்பவர் கொலை செய்ய வந்தவர்களை அமைதிபடுத்த முயன்றார். “நாங்கள் உங்கள் சகோதரர்கள் போன்றவர்கள். உங்களுக்கு எங்களுக்கும் என்ன பிரச்சனை? ஏன் எங்களை கொல்ல வருகிறீர்கள்?” என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது வெளியே இழுத்து தலையில் கடுமையாக தாக்கப்பட்டார். மண்டை உடைந்து குருதி ஆறாக ஓட தொடங்கியது. இரண்டு பகுதியில் உள்ள தமிழ் இளைஞர்கள் தங்களால் முடிந்தவரை சிங்களவர்களை தடுத்து அவர்கள் கையில் இருந்த ஆயுதங்களை பிடுங்கி பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த சிங்கள கோழைகள் சற்று பின்வாங்கினர்.
இதே நேரத்தில், அச்சிறையில் இருந்த விசாரணை கைதிகள் இக்கலவரங்களை பயன்படுத்தி தப்பி ஓட முயற்சி செய்த பொழுது, வெலிக்கடை சிறை நிர்வாகம் தங்கள் வேலைக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்து கலவரத்தை நிறுத்த முயற்சி செய்தது. ஏறத்தாழ ஒரு மணி நேரம் நடந்த இந்த கொலைவெறி தாக்குதலில் 18 போராளிகள் கொல்லப்பட்டிருந்தனர். 19 தமிழர்கள் கடுமையான காயங்களுடன் உயிருக்கு போராடினர்.
காயமடைந்த யோகராசா என்ற ஈழப் போராளியை கொழும்பு பொது மருத்துவமனையில் சேர்த்த பொழுது, அங்கிருந்த சிங்கள மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்தனர். எவரும் முன்வராத கட்டத்தில் ஒரு சிங்கள பெண் மருத்துவர் மட்டுமே முன்வந்து அவருக்கு சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றினார்.
சிறையில் கொல்லப்பட்டவர்களின் உடலை அவர்கள் உறவினர்கள் பார்க்கவும், அவ்வுடலுக்கு இறுதி சடங்கு செய்யவும் அனுமதிக்கப்படவில்லை. சிங்களப் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் படி ஈழ போராளி ஒருவர் கொலை செய்யப்பட்டால் அவரது உடலை ராணுவமே நேரடியாக எரிக்கவோ புதைக்கவோ செய்யலாம் என்ற சட்டத்தின் அடிப்படையில், ‘தங்களை ஈழ மண்ணில் தான் புதைக்க வேண்டும்’ என்ற அவர்களது இறுதி கோரிக்கையையும் மீறி சிங்கள மண்ணிலேயே புதைக்கப்பட்டனர்.
இந்த கொடூரத்தில் ஈடுபட்ட எந்த ஒரு சிறை காவல் அதிகாரிக்கோ, அல்லது சிங்கள சிறை கைதிகளுக்கோ, சிங்கள ராணுவத்தினருக்கோ தண்டனை வழங்கப்படவில்லை. விசாரணை என்ற பெயரில் கண்துடைப்பு நாடகங்கள் நடத்தப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். கொலை செய்த சிங்கள கைதிகள் விடுதலை செய்யப்பட்டதற்கான காரணமாக, ‘சிறையில் அவர்களை அடைத்து வைக்க இடமில்லை’ என்று கூறப்பட்டது. இச்சம்பவம் நடந்த வெலிக்கடைச் சிறையில் ஏறத்தாழ 3 ஆயிரம் பேருக்கு மேல் கைதியாக அடைத்து வைக்கும் அளவிற்கு மிகப்பெரியது என்பதும் அந்த தருணத்தில் ஏறத்தாழ 600 பேர் மட்டுமே அங்கு சிறை கைதிகளாக இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மலையகத் தமிழர்களை சூழ்ந்த கலவரம்
ஜூலை கலவரத்தின் போது மிகவும் பாதிக்கப்பட்ட இடங்களில் மலையகத் தமிழர்கள் வாழ்ந்திருந்த இடமும் ஒன்று. ஏற்கனவே மலையகத் தமிழர்களின் குடியுரிமை இலங்கையில் கேள்விக்குறியாக வைக்கப்பட்டிருந்த தருணத்தில், இந்த சம்பவம் அவர்களை மேலும் பாதிப்புக்குள்ளாகியது. 1946-இல் 11.70% இருந்த மலையகத் தமிழர்களின் எண்ணிக்கை 1981-இல் வெறும் 5.56% குறைந்திருந்தது. அந்த நிலையில்கூட இலங்கையின் பொருளாதாரத்தில் மலையகத் தமிழர்களின் பங்களிப்பு பெருமளவிலிருந்தது. இலங்கையின் பொருளாதாரம் பெருமளவில் சுற்றுலாவையும், தேயிலை ஏற்றுமதியையும் நம்பி இருந்த காரணத்தால் மலையகத் தமிழர்களின் முக்கியத்துவம் இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு காரணியாக அமைந்திருந்தது.
அரசியல் ரீதியாகவும் மலையகத் தமிழர்கள் இலங்கையில் ஆண்ட கட்சிகளுக்கு ஆதரவளித்தே வந்துள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய ஈழத் தமிழ் நிலப் பகுதியைப் போல் இல்லாமல் அதிகாரத்திற்கு வரும் சிங்கள பெரும்பான்மை கட்சிக்கு ஓட்டு அளிக்கும் வழக்கம் மலையகத் தமிழர்களுக்கு இருந்தது. மலையகத் தமிழர்கள் வேலை பார்த்து வந்த தேயிலைத் தோட்டங்கள் இலங்கையின் தெற்கு பகுதியில் அமைந்திருந்த காரணத்தினாலும், அரசியல் ரீதியாகத் தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் தொழிற்சங்கங்களைச் சார்ந்து இருந்த காரணத்தினாலும் அவர்களது அரசியல் நிலைப்பாடுகள் ஈழத் தமிழர்கள் போல் இல்லாமல் சற்று மாறுபட்டு இருந்தது.
1992-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது நுவரெலியா, பதுளை, கண்டி போன்ற மலையகத் தமிழர்கள் அதிகம் வாழ்ந்து வந்த பகுதிகளில் ஜெயவர்த்தனேவின் ஐக்கிய தேசியக் கட்சி முறையே 63.10%, 58.61%, 59.80% வாக்கு பெற்று இருந்தது. இது ஜெயவர்த்தனே அதிபராக தேர்வடைய பெரிய காரணியாகவும் இருந்தது. மலையகத் தமிழர்களின் வாக்கு இதில் மிகக் கணிசமான வாக்கு என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் எந்த அளவிற்கு ஜெயவர்த்தனேவின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மலையகத் தமிழர்கள் ஆதரவு தந்தார்களோ அதைவிடப் பல மடங்கு கொடுமையை அதே அரசு ஆதரவாளர்கள் இடமிருந்தும், அரசு அதிகாரிகளிடமிருந்தும் ஜூலை கலவரத்தின் போது பெற்றனர்.
ஜூலை கலவரத்தின் தொடக்கத்தில் மலையகத் தமிழர்களின் பகுதிகள் எவ்வித தாக்குதல்களுக்கும் உள்ளாக்கப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 24 -ஆம் தேதி இரவு நேரத்தில் ‘பெரஹர’ என்கிற பௌத்த சமய சார்பு ஊர்வலமும், அதைத் தொடர்ந்து தமிழர்களின் வேல் ஊர்வலமும் நடைபெற்று வந்திருக்கிறது. அது ஜூலை கலவரம் நடந்த 1983-ஆம் ஆண்டும் முன்னெடுக்கப்பட்டது. ஆனால், இலங்கை முழுவதும் பதட்டத்தை ஏற்படுத்தியிருந்த இந்த கலவரம் பதுளை பகுதியிலும் வரக்கூடும் என்று கவலைப்பட்ட அப்பகுதி காவல்துறையினர் தமிழர்களின் வேல் ஊர்வலத்தை இரவு 12 மணிக்குள் முடித்த விடுமாறு உத்தரவிட்டிருந்தனர்.
25-ஆம் தேதி வரையிலும் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருந்த மலையகத் தமிழர்கள் பகுதியில் ஒரே ஒரு தமிழரின் கடை மட்டும் எரிக்கப்பட்டிருந்தது. கலவரம் எல்லா பக்கங்களிலும் பரவி வருவதைக் கண்டு 24-ஆம் தேதியே இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழர்களின் கடைகள் மற்றும் வியாபார தளங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் 27-ஆம் தேதி காலை 7 மணிக்குக் கடைகளைத் திறக்கும் படி சிங்கள காவல்துறை அதிகாரி ரத்தெனிகல என்பவர் உத்தரவிட்டார். அதாவது கடைகள் மூடி இருந்தால் கலவரம் செய்வதற்கு ஏதுவாக இருக்காது என்பதற்கு ஏற்ப தமிழர்களைக் கடைகளைத் திறக்கச் சொல்லித் திட்டமிட்டது காவல்துறை. அதைத்தொடர்ந்து சற்று நேரத்தில் 15 பேர் கொண்ட ஒரு கும்பல் ஊர் தமிழர் கடையின் மீது பெட்ரோல் குண்டு வீசி எரித்தது.
அதே நேரம் நகரத்தின் மறுபுறத்திலிருந்து “தமிழர்களைக் கொல்வோம்” என்று முழக்கமிட்டபடியே இலங்கை அரசுப் போக்குவரத்து சங்க ஊழியர்கள் பௌத்த விகார ஒன்றிலிருந்து தங்கள் பிரார்த்தனையை முடித்தபடி வெளிவந்தனர். அருகிலிருந்த காளி கோயிலுக்கு தீ வைத்து, அங்கிருந்த தமிழரின் வாகனங்களை தீ வைத்து எரித்தனர். ஆனால் அதற்கு மேல் அந்த கலவரம் பரவாத வண்ணம் காவல்துறை தடுத்து நிறுத்தியது. இதைக்கண்ட அப்பகுதியின் சிங்கள அரசியல் பின்னணியில் இயங்குபவர்கள் நேரடியாகக் கலவரத்தை நடத்துவது என்று முடிவு செய்தனர்.
அன்றைய அதிபர் ஜெயவர்த்தனேவின் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உறவினரும், பதுளை மாநகர சபை உறுப்பினருமான நியூட்டன் டயஸ் என்பவர் கலவரக்காரர்களைப் பார்த்து “போலீசை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் அச்சம் இல்லாமல் தொடருங்கள்” என்று கூறினார். அந்த புள்ளிதான் மலையகத் தமிழர்கள் மீது கட்டற்ற கலவரம் அவிழ்த்து விடப்பட்ட புள்ளியாகும்.
அரசியல்வாதிகள் முன்னிலையில் கலவரம் தொடங்கப்பட்ட காரணத்தால் காவல்துறை எதுவும் செய்ய முடியாமல் கையை கட்டி வேடிக்கை பார்க்கத் தொடங்கியது. இதைப் புரிந்து கொண்ட கலவர கும்பல் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து தங்கள் வன்முறை வெறியாட்டத்தைத் தொடங்கினர். ஒவ்வொரு குழுவிடமும் அவர்கள் செல்லும் பகுதிக்குரிய வாக்காளர் பட்டியல் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த பட்டியலின் உதவியோடு தமிழர்களின் கடை எது என்று தேடிப்பிடித்து அவற்றைத் தீக்கிரையாக்கி அழித்தனர்.
தமிழர்களின் சொந்தக் கடைகளைக் கடைகளோடு, பொருட்களையும் சேர்த்து எரித்தனர். ஒருவேளை கடைகள் சிங்களவர்களுக்குச் சொந்தமாக இருந்து தமிழர்கள் வாடகைக்குப் பயன்படுத்தி இருந்தால் கடையை விட்டுவிட்டு பொருட்களைத் தெருவில் போட்டு எரித்து அழித்தனர்.
இதில் என்ன கொடுமை என்றால், அப்பகுதியில் இயங்கி வந்த தீயணைப்புத் துறை வாகனங்களும் தமிழர் கடைகளுக்கு வைக்கப்பட்ட நெருப்பு அருகிலிருந்த சிங்களவர்கள் கடைக்குப் பரவாமல் இருக்கும் வண்ணம் தண்ணீர் அடித்துப் பாதுகாத்தனர். அந்த அளவிற்கு ஒட்டுமொத்த சிங்கள அரசு எந்திரமும் மலையகத் தமிழர்களுக்கு எதிராகச் செயல்பட்டது.
ஏறத்தாழ 3 மணி நேரத்தில் பதுளை பகுதியிலிருந்த பெரும்பாலான தமிழர்களின் கடைகள் மற்றும் வீடுகள் எரிக்கப்பட்டிருந்தன. அந்த கலவரத்தில் ஈடுபட்ட சிங்கள இன வெறியர்களுக்குத் தேவையான உணவு, ஆயுதங்கள், தீயிட்டுக் கொளுத்துவதற்கான பெட்ரோல் முதலியவை அருகிலிருந்த ‘முத்தியாங்கன பௌத்த விகாரில்’ இருந்து தலைமை பௌத்த பிக்குவாலேயே தரப்பட்டது. இத்தனைக்கும் கலவரக்காரர்களின் வயது 10 முதல் 25 வரையில் மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கும்பல் தீயிட்டுக் கொளுத்தியதற்குப் பிறகு எஞ்சியவற்றைக் கொள்ளையடிக்க பின்னாலேயே மற்றொரு கும்பல் வரத் தொடங்கியது. அவ்வாறு கொள்ளையடிக்க வந்த கும்பல்களில் காவல்துறையினர், ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் அரசு அதிகாரிகள் என நன்கு படித்த சிங்கள சமூகத்தினரே பெரும்பான்மையாக இருந்தனர்.
பதுளை பகுதியில் செல்வாக்கோடு இருந்த ராமநாதன் என்ற தமிழர் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருந்தனர். தங்கள் வீட்டைத் தாக்க வரும் சிங்கள கலவரக்காரர்களைத் தடுப்பதற்காக தன் வசம் இருந்த கைத்துப்பாக்கியோடு பாதுகாப்பாக நின்ற ராமநாதனை காவல்துறையும், ராணுவமும் சரணடையும் படி கூறியது. தன் கையில் இருக்கும் ஒற்றைத் துப்பாக்கியால் வெகு நேரம் தன் குடும்பத்தைக் காப்பாற்ற முடியாது என்று உணர்ந்து கொண்ட ராமநாதன் சரணடைவதாகச் சொல்லி மூன்று வயது பெண் குழந்தையைக் கையில் பிடித்துக் கொண்டு வெளியே வந்தார். அவர் வெளியே வந்த அடுத்த கணம் அவர் கையிலிருந்த குழந்தையைத் தூக்கி அருகிலிருந்த மரத்தில் அடித்து கொடூரமாகக் கொலை செய்தது கலவரக் கும்பல். அத்தோடு ராமநாதனையும் மிகக் கொடூரமாகக் கொலை செய்தது. அவர் குடும்பத்திலிருந்த பல உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டனர்.
இது போன்று ஏராளமான தமிழர்கள் தங்கள் உயிரையும், வாழ்வாதாரத்தையும் இழந்தனர். ஏறத்தாழ 6,900 பேர் ஏதிலிகளாக முகாம்களுக்குப் புலம்பெயர்ந்தனர். அதைவிடப் பன்மடங்கு தமிழர்கள் அருகிலிருந்த தெரிந்தவர்கள் வீட்டில் அடைக்கலம் புகுந்தனர்.
பதுளை பகுதியைப் போலவே நுவரெலியா பகுதியிலும் 29-ஆம் தேதி கலவரம் தொடங்கியது. ஜூலை கலவரத்தின் சூத்திரதாரியாக நேரடியாகக் களத்திலிருந்து வன்முறைகளை ஊக்குவித்த ஜெயவர்த்தனே அரசின் அமைச்சர் காமினி திசநாயக்க நேரடியாக அங்கு வந்தார். அதுவரை கலவரம் செய்ய முயன்றதாகக் கைது செய்யப்பட்டு இருந்த சிங்கள குண்டர் படை இவரது தலையீட்டால் விடுதலை செய்யப்பட்டது. 15 வயது நிரம்பிய சிங்கள சிறுவன் ஒருவன் முதல் பெட்ரோல் குண்டை தமிழர் கடை ஒன்றில் வீசினான். அன்று நண்பகல் முதல் கலவரம் தொடங்கியது.
பதுளை பகுதியில் எவ்வாறு ராமநாதன் என்ற தமிழர் கொல்லப்பட்டாரோ அதேபோல் இங்கும் சுப்பையா என்கிற தமிழர் மற்றும் அவரது குடும்பத்தினர் 14 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அது மட்டும் அல்லாமல் அருகிலிருந்த மருத்துவமனைக்குள் புகுந்த கலவர கும்பல் அங்கு மரணப்படுக்கையில் இருந்த தமிழர்களைக் கூட விட்டு வைக்கவில்லை. மருத்துவமனையில் கொலை வெறி தாக்குதல் நடத்திய பொழுது அங்கிருந்து மருத்துவ பணியாளர்கள் ஒரு சிலர் அதற்கு உடந்தையாக இருந்த கொடூரமும் நடைபெற்றது.
பண்டாரவளை பகுதியில் புகழ்பெற்ற மருத்துவராக விளங்கிய நந்தானியேல் என்கிற தமிழர் மற்றும் அவரது மனைவி இருவரும் பௌத்தப் பிக்கு ஒருவராலேயே குத்தி கொலை செய்யப்பட்டார்கள். இதே போல் கண்டி பகுதியும் கலவரக்காரர்களால் தீ வைக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
ஏறத்தாழ நாலாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களும், ஒரு சில இடங்களில் இஸ்லாமியத் தமிழர்களும், தாக்குதலிலிருந்து தமிழர்கள் தப்பிக்க இடம் கொடுத்திருந்த ஒரு சில மனிதாபிமானமிக்க சிங்களவர்கள் கூட இவர்களின் கொலைகளிலிருந்து தப்பவில்லை. இலங்கையின் மனித உரிமை ஆர்வலர்கள் கூறிய கணக்கின்படி 2 லட்சம் பேர் படுகாயம் அடைந்தும், ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் தற்காலிக ஏதிலிகளாகவும் துயரம் அடையக் காரணமாக ‘கருப்பு ஜூலை’ என்று அழைக்கப்படும் ஜூலை கலவரம் இருந்தது. 2500-க்கும் அதிகமான தமிழர்களின் கடைகள் தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகள் முழுமையாக எரிக்கப்பட்டுத் துடைத்தெறியப்பட்டது.
இவ்வளவு கொடூரமாகத் தமிழர்கள் இதற்கு முன்பு தாக்கப்படவே இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்குச் ஜூலை கலவரம் மாறாத வடுவாக மாறிப்போனது. அரசின் ஆதரவோடு திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த கலவரம் எதைச் சாதிக்க முன்னெடுக்கப்பட்டது? இலங்கை அரசு கூறியது போல 13 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது தான் இதற்குக் காரணமா? அல்லது ஜூலை கலவரத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் அரசியல் காரணங்கள் வேறு ஏதும் உண்டா?
- மே பதினேழு இயக்கம்