இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்க்கும், இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷ்சித்திற்கும் பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் சார்பாக செருப்பு காட்டும் போராட்டம் வரும் 06-11-2013 அன்று நடைபெற உள்ளது.
 
இனப்படுகொலையின் போது வாய் திறக்காத இந்த சார்லஸ் இப்பொழுது வந்து இராசபக்சேக்கு மகுடம் சூட்டும் நோக்கம் என்ன? மற்றும் சென்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கு கெளரவத் தலைவராக இராசபக்சே இந்தியா வந்து இருந்த போது அப்பொழுது அவருடன் மேடையைப் பகிர்ந்ததாக இளவரசர் எட்வர்ட்டை சென்ற முறை இங்கிலாந்தில் பத்திரிக்கைகள் சாடின. இந்த எதிர்ப்பு தெரிந்தும் காமன்வெல்த்தில் கலந்துகொள்ள சார்லஸ் வருவதற்கான நோக்கம் என்ன?

பிரச்சனைகளின் ஆரம்பப் புள்ளியே இந்த ஏகாதிபத்திய பிரிட்டன் தான். காலனிய நிர்வாக நலனுக்காக இலங்கையை பிரிட்டன் உருவாக்கியது (இந்தியாவையும்). உருவாக்கப்பட்ட இலங்கை சிங்களனின் கைக்கு மாறியது. தமிழரின் எழுச்சி என்பது அவனால் உருவாக்கப்பட்ட நாட்டிற்கு எதிரானது, அதைவிட தெளிவாகக் கூறினால் பிரிட்டனால் எந்த சிங்களர்களுக்கு இலங்கை அளிக்கப்பட்டதோ அதை அந்த மக்கள் (தமிழ் மக்கள்) எதிர்க்கிறார்கள். இது பிரிட்டனின் கெளரவம் சார்ந்த பிரச்சனையும் கூட.

2009 போரில் மறைமுகமாக செயல்பட்ட பிரிட்டன் இப்பொழுது இந்த காமன்வெல்த்தின் மூலம் மீண்டும் சிங்களனுக்கு முடி சூடப் போகிறது. தன்னுடைய அடிமை தேசங்கள் இன்னும் தன் கீழ்தான் உள்ளது என்பதை உறுதி செய்கிறது. தமிழனின் அடையாளத்தை அழித்து, நம் மீது போலி தேசிய அடையாளத்தை பூசிய(பூசும்) இந்த அகம்பாவத்திற்கு எதிராக செருப்பு காட்டுகிறோம்.

பிரிட்டனின் அரச கெளரவம் என்பது உலக வரலாற்றில் ஒரு முக்கிய பங்கு வகிப்பது மற்றும் அரச பாரம்பாரியத்திற்கு கீழ் (அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட அரசாக இருப்பினும் கூட) இறையாண்மை என்பது அரசால் (ராஜ்ஜியம்) இயற்றப்படுவது. இப்படி இன்னும் நம்மை குடிமகனாகப் (citizen) பார்க்காமால் நம்மை ஒரு பொருள் (subject) போல் பார்க்கும் இந்த கண்னோட்டத்திற்க்கு எதிராகவும், மக்களாட்சியை நிலைநாட்டுவதற்கான ஒரு செயல்பாடு, மற்றும் நம் மரபையும், பண்பாட்டையும் பிற்போக்கானது என்று கூறும் போலி முற்போக்கு பிரிட்டன் மற்றும் மேற்குலத்திற்கு எச்சரிக்கையாகவும் செருப்பு காட்டுகிறோம்.

எதற்காக இந்த போராட்ட வழிமுறை?

              மிகவும் பலசாலியான ஒருவன், வலிமை குறைந்த ஒரு நபரை அடித்தால் அந்த நபர் என்ன செய்வான்? அவனால் திருப்பி அடிக்கும் அளவு வலிமை இல்லை அப்படியெனில் எதிராளியின் முகத்தில் காரித்துப்பி தன் எதிர்ப்பைக் காட்டுவான். ஆனால் அவனை அடிப்பதை விட வலிமையானது இந்த அவமானப்படுத்தும் முறை.   

இந்த உலகத்திற்க்கு காலனிய சமுதாயத்தையும், இனக்கொலைகளையும் அறிமுகப்படுத்திய பிரிட்டனும் மறுகாலனியாதிக்கதில் முனைப்புடன் செயல்படும் பிரிட்டனின் குழந்தை அமெரிக்காவும், நம் மரபுகளையும், நம் வாழ்வாதாரங்களையும் அழிக்கும் கொலைகாரர்கள். இவர்களை எதிர் கொள்ள முடியாத நிலையில் இருக்கும் நாம், நம் எதிர்ப்பை பதிவு செய்ய இந்த வழிமுறையை செயல்படுத்துவது சரியாக இருக்கும்.

தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக செயல்படும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷ்சித்திற்கு செருப்பு காட்டுவதன் மூலம் இந்தியத் திமிரை தமிழர்கள் எட்டி உதைப்போம், மற்றும் இந்தியாவின் முடிவுகள் தமிழர்களுக்கு எதிராக உள்ளது என்பதையும் வெளிப்படுத்துவோம்.
 
06-11-2013 அன்று மாலை 3 மணிக்கு பிரிட்டன் துணைத் தூதரகத்திற்கு முன்பு இப்போராட்டம் நடைபெற உள்ளது முடிந்தவர்கள் எங்களுடன் சேர்ந்து எதிர்ப்பைத் தெரிவியுங்கள். மற்றவர்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே இங்கிலாந்திற்கு எதிரான, தமிழ் ஈழத்திற்கு ஆதரவான கோசங்களை எழுப்புங்கள். உங்கள் கருத்தை குறைந்தது ஒருவருக்கு தெரிவிப்பது தான் போராட்டத்தின் முதல் நிலை.

- கு.சிபி லெட்சுமணன்- ஒருங்கிணைப்பாளர்- பாலச்சந்திரன் மாணவர் இயக்கம்- இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். -https://www.facebook.com/balachandranstudentsmovement

Pin It