அன்பிற்குரிய தமிழர்களே,
 
               வணக்கம். தமிழீழ மக்கள் இனப் படுகொலைக்கு நீதி கோருவதற்கான போராட்டம் ஒரு திருப்புமுனைக் கட்டத்தை எட்டியுள்ளது. கொழும்பில் காமன்வெல்த் மாநாட்டை நடத்துவதன் மூலம் கொலைகாரன் ராஜபக்சேயை குற்ற நீக்கம் செய்து புனிதனாகக் காட்டும் முயற்சியில் இந்திய அரசும் வேறு சில உலக அரசுகளும் ஈடுபட்டுள்ளன. இதையே நாம் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி சிங்கள அரசையும் அதன் கொலைக் கூட்டாளிகளையும் தனிமைப்படுத்த இயலும். அதற்கான அற வலிமை தமிழர்களாகிய நமக்குண்டு என நான் உறுதியாக நம்புகிறேன்.
 
      தமிழ்நாட்டில் போராடும் இயக்கங்கள் பலவும் சேர்ந்து, இலங்கையில் காமன்வெல்த்- எதிர்ப்பியக்கம் என்ற அமைப்பைத் தோற்றுவித்துள்ளோம். அதன் சார்பில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஆகிய நான் வருகிற 2013 அக்டோபர் 1ஆம் நாள் முதல் இறுதி வரை உணவு மறுப்புப் போராட்டம் தொடங்குகிறேன். காமன்வெல்த்திலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்பது நம் முதல் கோரிக்கை. எப்படியும் கொழும்பில் காமன்வெல்த் மாநாடு நடைபெறக் கூடாது, நடந்தால் இந்தியா உள்ளிட்ட காமன்வெல்த் அரசுகள் அதில் பங்கேற்கக் கூடாது என வலியுறுத்துகிறோம். இந்தக் கோரிக்கை உட்பட ஒன்பது முதன்மையான கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் நடைபெறுகிறது. இது குறித்து உரிய நேரத்தில் இந்தியத் தலைமை அமைச்சருக்கு நான் எழுதிய கடிதத்தை இத்துடன் இணைத்துள்ளேன்.
 
      வெற்றி அல்லது வீரச் சாவு! இது இப்போராட்டத்தின் உறுதியான முழக்கம். இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும் என்ற தமிழினத்தின் உறுதியை உள்வாங்கி இம்முழக்கத்தின் வாயிலாக வெளிப்படுத்துகிறோம்.
 
      தமிழகத்தில் இப்போராட்டத்தை மையமாகக்கொண்டு மாணவர்கள் மற்றும் பொது மக்களின் எழுச்சியை தோற்றுவிக்க முடியுமென நம்புகிறோம். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக இயன்றதனைத்தும் செய்யுமாறு உலகத் தமிழ் உறவுகளை உரிமையோடு வேண்டுகிறேன்.
 
தோழமையுடன்,
தோழர் தியாகு

நிதியுதவி செய்ய:
Sudha gandhi
HDFC Thiruvanmiyur Branch
Account Number, 08471140018590

தொடர்புக்கு, 9600039031, 9865107107

போராட்டங்களை முன்னெடுக்க;
மதியவன்
அமைப்பாளர்,
இலங்கையில் காமன்வெல்த் -எதிர்ப்பியக்கம்.
9600039031, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It