இடிந்தகரை, செப்டம்பர் 10, 2013

[1] ரஷ்யாவிலிருந்துப் பெறப்பட்ட தரமற்ற உபகரணங்களையும், உதிரிப் பாகங்களையும் பயன்படுத்திக் கட்டப்பட்டுள்ள, ஊழலும், முறைகேடுகளும் மலிந்துகிடக்கும் கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு எதிராக இரண்டாண்டு காலமாக போராடிவரும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மீனவ மக்களையும், உட்பகுதி மக்களையும் தமிழக மக்கள் சார்பில் மனமுவந்துப் பாராட்டுகிறோம்.

[2] இந்த தீரமிக்கப் போராட்டத்தில் 2012-ஆம் வருடம் செப்டம்பர் மாதம் தங்கள் இன்னுயிரை ஈந்த ஈகியர் மணப்பாடு அந்தோணி ஜான், இடிந்தகரை பிரான்சிஸ் சகாயம், இடிந்தகரை ரோசலின், கூடங்குளம் இராஜசேகரன் ஆகியோருக்கு நமது வீர வணக்கத்தை தெரிவிக்கிறோம்.

[3] இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, ஒரு சில அணுசக்தித் துறை அதிகாரிகள் அடங்கிய ஒரு சிறிய மக்கள் விரோதக் குழு 120 கோடி இந்திய மக்களை, 8 கோடி தமிழ் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. உலகத்தரம் வாய்ந்த கூடங்குளம் அணுஉலை இன்னும் 15 நாளில் இயங்கும் என்று திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டிருக்கும் திட்டமிட்ட மோசடியை, ஏமாற்று வேலையை, இந்தியாவிலுள்ள பெரிய அரசியல் கட்சிகளோ, அவற்றின் தலைவர்களோ, ஊடகங்களோ கேள்விக்குள்ளாக்காது, அவர்களின் பொய்யான, ஏமாற்றுச் சொற்களை அப்படியே ஏற்றுக்கொள்வது மிகவும் ஆபத்தானது. இது இந்தியாவின் சனநாயகத்துக்கும், பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும், எதிர்காலத்துக்கும் நல்லதல்ல. தரமற்றப் பொருட்களை அதிக விலை கொடுத்து ரஷ்யாவிடமிருந்து வாங்கி, அவர்களுக்கு லாபமும், தங்களுக்கு கமிஷனும் கிடைக்க வழிவகை செய்துவிட்டு, தமிழக, இந்திய மக்களை இப்படித் தொடர்ந்து ஏமாற்றுவது, திசைதிருப்புவது, தவறான வழியில் நடத்துவது உண்மையில் ஒரு மிகப் பெரிய கிரிமினல் குற்றம். இந்தக் குற்றத்தை தொடர்ந்து செய்துவரும் குற்றவாளிகள் மீது கிரிமினல் வழக்குத் தொடர வேண்டுகிறோம்.

[4] தமிழக மக்களை ஏதுமறியாதவர்கள் எனக் கொண்டு, அவர்கள் உயிருக்கு எந்த விலையும் இல்லை, நாம் என்ன பொய், புரட்டு வேண்டுமானாலும் சொல்லி சமாளிக்கலாம் எனக் கருதும், செயல்படும் சமூக விரோதிகளை வன்மையாக கண்டித்து, அவர்களைத் தட்டிக்கேட்க வேண்டியது காலத்தின் கட்டாயம். கூடங்குளம் அணுஉலைக் கழிவுகளை தங்கள் மாநிலத்தில் புதைக்கவிட மாட்டோம் என்று கர்நாடக மக்கள் போராடத் தொடங்கியதும், அதை உடனே ஏற்றுக்கொண்ட காங்கிரசு அரசும், அணுசக்தித் துறையும் தமிழக மக்களை இப்படி கேவலமாக நடத்துவது ஏன்? இந்தத் தமிழின விரோதப் போக்கை, குற்றத்தை தமிழகத்தின் பெரியக் கட்சிகள் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? இந்திய மக்களிடம் தொடர்ந்து பொய் சொல்லி, அணுக்கழிவை என்ன செய்யப் போகிறோம் என்று திட்டமிடாமல், பேரிடர் பயிற்சி தராமல், எட்டுக் கோடி தமிழ் மக்களின் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கும் இந்த ஆபத்தான கோயபெல்ஸ்களை கேள்வி கேட்காதது ஏன்?

[5] கடந்த யூலை மாதம் 11-ஆம் நாள் அணுசக்தி ஒழுக்காற்று வாரியம் கூடங்குளம் அணுஉலையை இயக்க அனுமதி அளித்துவிட்டது என்று அறிவித்து, யூலை 13-ஆம் நாள் நள்ளிரவு அணுப்பிளவு நடந்து விட்டது, 30 முதல் 45 நாட்களில் 400 மெகாவாட் மின்சாரம் பீறிட்டுப் பாயப் போகிறது என்று பொய் சொன்னார்கள். இப்போது மீண்டும் வால்வு தகராறு இருக்கிறது, அடுத்த 15 நாட்களில் கூடங்குளம் அணுமின் நிலையம் ஓடத் தொடங்கும் என்று அறிவிக்கிறார்கள். அப்படியானால் அணுமின் நிலையம் மின் தயாரிப்புக்கு முற்றிலும் தயாராகிவிட்டது என்று யூலை மாதம் அணுசக்தி ஒழுக்காற்று வாரியம் கொடுத்த அனுமதி தவறானாதா, அல்லது திட்டமிட்டேப் பொய் சொன்னார்களா?

[6] கூடங்குளம் ஊழல்களை, முறைகேடுகளை மறைப்பதற்காக, தரமற்ற அணுஉலைப் பிரச்சினையை திசை திருப்புவதற்காக, மீண்டும் “வெளிநாட்டுப் பணம்” வருகிறது என்று பொய் சொல்ல ஆரம்பித்திருக்கிறார் மத்திய அமைச்சர் நாராயணசாமி. எந்தவிதமான ஆதாரத்தையும் காட்டாமல், போராடும் மக்களை தொடர்ந்து கொச்சைப் படுத்திக் கொண்டிருக்கும் ஊழல் அரசின் கோயபல்ஸ் அமைச்சரை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

[7] போராடும் மக்கள் கேட்கும் கூடங்குளம் அணுமின் திட்டத்தின் தல ஆய்வறிக்கை, பாதுகாப்பு ஆய்வறிக்கை, இழப்பீடு ஒப்பந்தம் போன்றவற்றை மத்திய தகவல் ஆணையம் கொடுக்குமாறு உத்தரவிட்டப் பிறகும், அந்த அறிக்கைகளைத் தராமல், இந்தியா அணுமின் கழகம் தில்லி உயர்நீதி மன்றம் சென்று தடை உத்தரவு வாங்கியது ஏன்? முக்கியமான எதையோ இவர்கள் திட்டமிட்டு மறைக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆபத்தான, தரமற்ற கூடங்குளம் அணுமின் நிலையம் சிந்துரக்ஷக் கப்பல் போல வெடிக்குமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஆழமாக பரவலாகக் காணப்படுகிறது. சிந்துரக்ஷக் நீர்மூழ்கிக் கப்பல் போலவே கூடங்குளம் திட்டத்திலும், தயாரிப்புக் குறைபாடுகளும், கவனமின்றி செயல்படும் போக்கும் காணப்படுகின்றன. மீண்டும், மீண்டும் தள்ளிப் போடப்படும் கூடங்குளம் திட்டத்தை செயல்படுத்தினால், விபத்து நிகழலாம். அதனால் எழும் மனித இழப்பு சிந்துரக்ஷக் விபத்தைவிட பல லட்சம் மடங்கு அதிகமாயிருக்கும், அதன் தாக்கங்கள் பல நூற்றாண்டுகள் நீடித்து நிற்கும். எனவே தமிழ் நாட்டை, தமிழ் மக்களை ஒரு பேராபத்துக்குள் தள்ளிவிடாதீர்கள் என்று ஒருமித்த குரலில் கோரிக்கை வைக்கிறோம்.

[8] போராடும் மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப் பெறுங்கள் என்று உச்சநீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்ட பிறகும், தமிழக அரசு பாராமுகமாக இருப்பதைக் கைவிட்டு உடனடியாக அந்த வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

[9] அணுஉலை எதிர்ப்புப் போராட்ட ஆதரவு கட்சிகளின், இயக்கங்களின் தலைவர்கள் ஒன்றாக தமிழக தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல்துறை இயக்குனர் ஆகியோரை செப்டம்பர் 17, 2013 அன்று சந்தித்து போராடும் மக்கள்மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெறுமாறு விண்ணப்பம் கொடுக்கவிருக்கிறோம். இதனை சட்டமன்ற உறுப்பினர் திரு. M.H. ஜவாஹிருல்லா அவர்கள் ஒருங்கிணைப்பார்.

[10] எதிர்வரும் அக்டோபர் மாதம் 2-நாள், மகாத்மா காந்தி பிறந்த நாளன்று, தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகர்களிலும் காலை 10 மணிக்கு “கூடங்குளம் அணுஉலையை உடனே மூடு", "மக்கள்மீதுப் போடப்பட்டிருக்கும் வழக்குகளைத் திரும்பப் பெறு” என்ற கோரிக்கைகளோடு தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும். இதனை அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழு ஒருங்கிணைக்கும்.

Pin It