கூடங்குளம் அணுமின் நிர்வாகம் கடந்த மூன்று நாட்களாக ஏதோ விஷப்பரீட்சை நடத்தி வருகிறது. மக்கள் மத்தியில் அச்சத்தை, பீதியைக் கிளப்பும் வகையில் கடுமையான சப்தமும், புகையும், நாற்றமும் அணுஉலையிலிருந்து வெளிப்படுகின்றன. கல் குவாரிகளில் ஏராளமான கற்களைக் கொண்டு கொட்டுவது ஒரே நேரத்தில் போன்று ஆ...ஆ...ஆவென்று ஆர்ப்பரிக்கும் சப்தம் அடிக்கடி வருகிறது. ஏராளமான விமானங்கள் ஒரே நேரத்தில் சேர்ந்து பறந்தால் வருகிற சப்தமும் அவ்வப்போது எழுகிறது. இதைப்போலவே அடர்த்தியான கரும்புகையும், வெள்ளைப் புகையும் மாறி மாறி வருகின்றன.
 
மார்ச் 30, 2013 அன்று இரவு முழுவதும் டயர் எரிக்கப்பட்டது போன்ற கடுமையான நாற்றம் அணுஉலையிலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. உலகின் எந்த அணுமின் நிலையத்திலும் இப்படிப்பட்ட சப்தங்களோ, நாற்றமோ வெளிவந்ததாக எங்களுக்குத் தெரியவில்லை. ரஷ்யாவிலிருந்து வந்த தரமற்ற உபகரணங்களையும், உதிரிப் பாகங்களையும் கொண்டு கட்டப்பட்ட கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அடிக்கடி தீ விபத்தும், மரணங்களும் சம்பவித்து வருகின்றன.
 
இந்த தாங்கமுடியாத சப்தம் மற்றும் புகையினால் எங்கள் பகுதி மக்கள் கடுமையான கண் எரிச்சலால் அவதியுறுகின்றனர். குழந்தைகளும், வயோதிகர்களும் அச்சத்தால் நடுங்கி மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். கர்ப்பிணிப் பெண்களும், அவர்கள் குடும்பத்தினரும் சிசுக்கள் பாதிக்கப்படுமோ என்ற பயத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
 
மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதியில் அணுமின் நிலையங்களைக் கட்டிவிட்டு, உலையின் அருகே வாழும் மக்களுக்கு எந்தவிதமான பேரிடர் பயிற்சியும் தராது, எந்தவிதமான அறிவிப்பும் கொடுக்காது, எங்கள் மக்களைக் கீழ்த்தரமான உயிர்களாக நடத்தி, உண்மைக்குப் புறம்பாக எதேச்சாதிகாரமாக நடக்கும் கூடங்குளம் அணுமின் நிர்வாகத்தைக் கண்டித்து, ஏப்ரல் 3, 2013, புதன் கிழமையன்று செட்டிக்குளம் அணுமின் நகரியத்தை முற்றுகையிடுவதெனத் தீர்மானித்திருக்கிறோம். அன்றைய தினம் திருநெல்வேலி மாவட்ட மீனவ மக்கள் கடலுக்குச் செல்லாது தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்வார்கள்.
 
- அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்

Pin It