இனவெறி இலங்கை திட்டமிட்டு நடத்திய  கொடூரமான இனப்படுகொலைக்கு நியாயம் கேட்கும் போர்க்களத்தில் முன்னணியில் நிற்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் எங்கள் பணிவான வணக்கம்.

 2008 - 2009ல் தமிழ் ஈழ மண்ணில் நடந்தது போர் அல்ல, இனப்படுகொலை என்கிற உண்மை, உள்ளத்தை உருக்கும் ஆதாரங்களுடன் தொடர்ந்து அம்பலமாகி வருகிறது. 12 வயது இளம்பிள்ளையைக் கூட சிங்கள இனவெறியர்கள் ஈவிரக்கமில்லாமல் படுகொலை செய்திருப்பதைப் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறது உலகு.

மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் உலகின் எதிர்ப்பைச் சந்திக்க இருக்கும் இலங்கை, சர்வதேச  விசாரணையிலிருந்து தப்பிக்க இந்தியா உதவும் என்று நம்புகிறது.  அத்தகைய துரோகத்தை இந்தியா மீண்டும் செய்துவிடாதபடி  தடுக்கும் பொறுப்பு, 7 கோடி தமிழர்களான நமக்கு இருக்கிறது. நாம் விழிப்புணர்ச்சியுடன் செயல்பட்டால், துரோக இந்தியாவை மிரட்டிப் பணியவைத்து, இனவெறி இலங்கையைக் கூண்டில் நிறுத்தமுடியும்.

நமது தொப்புள்கொடி உறவுகளுக்கு ஆதரவான அனைத்து சக்திகளையும் ஒருங்கிணைத்து, 2013  மார்ச் 4 -  திங்கள்கிழமை, காலை 10 மணிக்கு  தமிழகமெங்கும் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதென்றும், சென்னையில் அந்த ஆர்ப்பாட்டத்தை லயோலா கல்லூரி அருகிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம் முன் நடத்துவது என்றும், பிப்ரவரி முதல்வாரம் சென்னையில் அனைத்து அமைப்புகளும் கலந்துகொண்ட தமிழீழ ஆதரவுக் கருத்தரங்கின்போது அறிவித்திருந்தோம். அந்த நாளை ஈழத் தோழமை நாளாகக் கடைப்பிடிப்பதென்றும் தெரிவித்திருந்தோம்.  அனைத்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் தங்களது கட்சிக் கொடிகளைத் தவிர்த்து கறுப்புக் கொடிகளை உயர்த்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவேண்டும் என்றும் கோரியிருந்தோம். தமிழகமெங்கும் நடைபெறும் இந்த மார்ச் 4 ஆர்ப்பாட்டத்தில் நீங்கள் ஒவ்வொருவரும் பங்கேற்கவேண்டும் என்று மீண்டும் உரிமையுடன் அழைக்கிறோம்.

ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்துக்கு  முன் தமிழகத்தின்  ஒருமித்த குரலையும், தமிழர்களின் ஒன்றுபட்ட சக்தியின் வலுவையும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் சர்வதேசத்துக்கும்  உணர்த்துவதே   நமது  நோக்கம்,

அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் பொதுமேடையாகத் திகழும் மக்கள் நல்வாழ்வு இயக்கம் - இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் உங்களை ஒருங்கிணைக்கிற ஓர் இணைப்புப் பாலமேயன்றி வேறல்ல!

*ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தை முழுமையாக ஆதரிக்கவேண்டும்.

*நடந்த இனப்படுகொலையை மூடிமறைக்கும் முயற்சிகளைக் கைவிடவேண்டும்.

*சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு வழிவிடவேண்டும்.

*இனப்படுகொலை செய்த இலங்கைமீது பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும்.

*தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடக்க  வழிவகுக்கவேண்டும்..........

என்று இந்தியாவை நாம் வலியுறுத்தி வருகிறோம். மார்ச் 4 ஆர்ப்பாட்டம் நமது கோரிக்கைகளை வலுப்படுத்தும் விதத்தில் அமையவேண்டும்.

ஜெனிவாவிலும், மார்ச் 4 - ம் தேதி, மாபெரும் பேரணி ஒன்றுக்கு புலம்பெயர் தமிழ் உறவுகள்  ஏற்பாடு செய்துள்ளனர். அன்றைய தினம் ஐ.நா. வளாகம் முன் பல்லாயிரக் கணக்கில் திரள இருக்கும் உலகத் தமிழரின் குரலோடு, தாய்த் தமிழ்நாட்டின் குரலும் இணைந்து ஒலிக்கவேண்டும். நம்முடைய இந்தக் கடமையை உணர்ந்து, தமிழகமெங்கும் மார்ச்-4ம்நாள் ஈழத் தோழமை நாளில் ஓரணியில் நாம் திரளவேண்டும்.

2013 மார்ச் 4

ஈழத் தோழமை நாள் .....

தமிழகம் முழுவதும்  திரள்வோம்!

கறுப்புக் கொடிகளுடன் அணிவகுப்போம்!

தமிழீழ விடியலுக்கு வழி அமைப்போம்!

நன்றி!

ஒருங்கிணைப்புக் குழுவுக்காக..

கண. குறிஞ்சி

பொன்.சந்திரன்

மக்கள் நல்வாழ்வு இயக்கம், தமிழ்நாடு

புலவர்  புலமைப்பித்தன்

கவிஞர் இன்குலாப்

ஓவியர் வீர சந்தானம்

கவிஞர் தாமரை

ஓவியர் டிராட்ஸ்கி மருது

இயக்குநர் புகழேந்தி தங்கராஜ்

23.02.2013.

Pin It