• சில மாதங்களுக்கு முன்பு ஆண்டிப்பட்டி அருகே அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பள்ளியில் அடிப்படை வசதி கேட்டும், ஆசிரியர் பற்றாக்குறையை சரிச் செய்யச் சொல்லியும் சாலை மறியல் செய்தார்கள். எந்தவித அரசியல் கட்சிகளின் பின்னணியும் இல்லாமல் பெற்றோர்களின் உதவியுடன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு இந்த அரசாங்கம் வழங்கியத் தீர்வு, போலீஸ் வேன். 

• தஞ்சாவூர் மாவட்டம் வடசேரியில் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு எரிசாராய தொழிற்சாலை அமைத்து வருகிறார். அது முழுக்க முழுக்க விவசாய விளை நிலப் பகுதி என்பதால் ஊர் மக்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இதற்காக நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டங்களில் மக்களின் எதிர்ப்புகளை எதிர்கொள்ள இந்த அரசு அனுப்பி வைத்ததது போலீஸ் வேனை.

• ஒரு மாநிலத்தின் உளவுத்துறை ஐ.ஜி., ஒரு பத்திரிகை ஆசிரியர், ஒரு முன்னால் அரசு ஊழியரின் மகன் இவர்கள் எல்லோரும் சேர்ந்துகொண்டு மக்கள் பணத்தை கூச்சமே இல்லாமல் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளை அடிக்கின்றனர். அதிகாரத்தை நக்கிச் சுவைக்கும் இவர்களின் கேவலத்தை சவுக்கு சங்கர் என்பவர் மறுக்க இயலாத ஆதாரங்களுடன் தனது இணையதளத்தில் அம்பலப்படுத்தினார். ஒரு மக்கள் நல அரசாங்கம் செய்ய வேண்டிய இந்தப் பணியை தனி நபராக செய்த சங்கருக்கு அரசு கொடுத்த பரிசு போலீஸ் வேன். 

• இந்த நாட்டில் வேறு எந்த சாதிக்கும், இனத்துக்கும், மதத்துக்கும் இல்லாத வகையில் ராமேஸ்வரத் தமிழன் கைவிடப் பட்டவனாய் இருக்கிறான். கேட்டுக் கேள்வியில்லாமல் ராமேஸ்வரத்து மீனவர்கள் சிங்கள ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். தன் ஆளுகையின் கீழிருக்கும் குடிமக்கள் வேறொரு நாட்டின் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படும்போது இந்திய, தமிழக அரசுகள் தங்கள் மௌனத்தால் அதை உற்சாகப்படுத்துகின்றன. இந்த அநியாயத்துக்கு எதிராக நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் குரல் கொடுக்கிறார். ‘எங்கள் மீனவன் செத்தால் உங்கள் மாணவன் சாவான்’ எனப் பேசுகிறார். சீமான் பேச்சில் நமக்கு எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் அந்தக் குறிப்பிட்டப் பேச்சைப் பொருத்தவரை அதில் மேடைப் பேச்சின் எதுகை, மோனையைத் தவிர வேறொன்றும் இல்லை. இங்குள்ள சிங்களர்கள் சீமானாலோ, நாம் தமிழர் இயக்கத்தாலோ கொல்லப்படும் சாத்தியங்கள் இல்லை. இந்திய, தமிழக அரசுகளை மீறி சிங்களர்கள் மீது கை கூட வைக்க முடியாது என்பதும் யதார்த்தம். ஆனால் சீமானின் உணர்ச்சிவசப்பட்ட அந்தப் பேச்சுக்கு இந்த அரசு கொடுத்த தீர்வு, போலீஸ் வேன். 

ஆனாலும் இந்த மாநிலத்துக்கு அமைதிப் பூங்கா என்றுதான் இப்போதும் பெயர். ஒப்பீடுகளை வைத்து இந்தக் கூற்றை உண்மை என நிறுவலாம். ஆனால் இங்கு ஒரு கருத்தை சுதந்திரமாக சொல்லும் சூழல் நிலவுகிறதா? உண்மையில் தமிழ்நாட்டில் கருத்துரிமை என்பது ஒற்றை பரிணாமத்தில் நிறுவப்பட்டிருக்கிறது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ இங்கு சகலரும் கண்காணிக்கப்படுகின்றனர். வேறு வகையாக சொல்வதானால் தமக்கு இசைவான கருத்துக்கள் மட்டுமே உலவும் வெளியை இவ்வரசு தனது ஊடக செல்வாக்கால் கட்டி எழுப்பி இருக்கிறது. மாற்றுக் கருத்துக்கள் சிந்தனையின் ஊற்றுக்கண்ணிலேயே புதைக்கப்படுகின்றன. 

இந்தியாவின் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களை தமது மாபெரும் செல்வாக்கால் வசப்படுத்தி வைத்திருக்கும் கருணாநிதி குடும்பத்தினர்தான் தமிழர்களின் சிந்தனைப் போக்கையே கட்டுப்படுத்துகின்றனர். அறிவு, ரசனை, தேர்ந்தெடுப்பு, பேச்சு, சொற்கள், கலை, அறிவியல், எழுத்து என அனைத்து தமிழ் கருத்தியல் உற்பத்தியின் கட்டுப்பாட்டு அறை கருணாநிதி குடும்பத்தின் வசமே இருக்கிறது. மட்டுறுத்தப்பட்ட இந்த ஜனநாயகச் சூழலில் எதிர் கருத்தும், அதிகாரத்துக்கு எதிரான எழுத்தும் கூட தனக்கு தொந்தரவு இல்லாத வகையில் அரசாலேயே அனுமதிக்கப்படுகிறது. நமது எழுத்தாளர்களும், முன்னால் புரட்சிகர செயற்பாட்டாளர்களும் இந்த அனுமதிக்கப்பட்ட எல்லைக்குள்ளாக எதிர்ப்பிலக்கியம் எழுதி அரச சேவையின் புதிய பரிணாமத்தை கட்டி எழுப்புகின்றனர். 

தமிழகத்தில் நிலவும் இத்தகைய கருத்துரிமைக்கு எதிரான போக்கைக் கண்டித்து நாம் நமது மௌனங்களை உரத்த குரலில் களைய வேண்டியவர்களாகிறோம். அதன் ஒரு அங்கமாக ஆகஸ்ட் -7ம் தேதி மாலை 5 மணி அளவில் சென்னை பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் தாசப்பிரகாஷ் ஹோட்டல் அருகே அமைந்துள்ள ‘கேரள சமாஜத்தில்’ தமிழகத்தின் கருத்துரிமை என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெறுகிறது. வாய்ப்புள்ள அனைவரும் இதில் கலந்துகொள்ள வேண்டும். ஏனெனில் கருத்துரிமையின் அவசியம் என்பது கருத்துச் சொல்வோருக்கான உரிமை மட்டுமல்ல; அது அனைத்து தரப்பு மக்களுக்குமானது!

- அதிரூபன்

Pin It