வரலாற்றின் துவக்க காலத்தில் அந்த மலைகள் சூழ்ந்த கோவை வனப்பகுதியை கோவன் என்ற இருளன் தலைவன் ஆண்டு வந்தான் அவன் பெயரிலேயே கோவன் பதி என்று அழைக்கப்பட்டது சோழ மன்னனின் ஆட்சி விரிவாக்கத்திற்கு வேண்டியும் சேர நாட்டின் படையெடுப்புக்கு ஒரு தாங்கு தளம் வேண்டியும், அவன் யாருக்கும் கெடுதல் செய்யாத பழங்குடி அரசன் மீது போர் தொடுத்தான். சோழனின் வன்முறையில் பழங்குடி அரசு வீழ்ந்தது; கோவன் மூப்பன் அழிக்கப்பட்டான். தலைமையைப் பறிகொடுத்த அவன் குடிகள் அடர்வனங்கள் மிக்க மலைகளின் மேல் விரட்டப்பட்டனர்

odiyanஅவர்கள் இருள்சூழ்ந்த வனத்தில் பதுங்கிக்கொண்டனர். பழங்குடி தெய்வங்கள் மட்டுமே அங்கு மிஞ்சி நின்றது. இயற்கையைச் சூறையாடும் சோழனின் வன்முறையைக் கண்டு அவள் கொதிப்புற்று அவனிடம் நியாயம் கேட்டது. இராஜதந்திரங்களைக் கற்றறிந்த சோழன், தெய்வத்துக்கு பலிகொடுத்து அவளை தன்னவளாக மாற்ற நினைத்தான். ஒவ்வொரு அரசும் அவளுக்கு புதுபுதுப்பெயர்கள் சூட்டியது. காலத்தின் சக்கரங்கள் சுழன்றடித்தது அவள் குடிகளை இழந்து அனாதையாய் நிற்பதாகவே உணர்ந்ததால் தொடர்ந்து அவள் தன் பழங்குடிகளைத் தேடிக்கொண்டே இருந்தாள். மலைகளில் பதுங்கிய தோல்வியுற்றவர்கள் மீது, வெற்றி பெற்றவர்கள் தொடர் பகைமை காட்டத்தொடங்கினர். பல்வேறுபட்ட முகங்களில் பல்வேறு தளங்களிள் அந்த போரும் வன்முறையும் இன்று வரை தொடர்கிறது

கோவன் பதி என்ற கோயமுத்தூரை குறிக்கும் பல அடையாளக் குறியீடுகளை நீக்கி வாசித்தால் உலக பழங்குடி வரலாற்றின் ஒரு பிரிக்க இயலாத கண்ணிதான் இருளனின் வரலாறும். வரலாற்றில் தோல்வியுற்றவர்களின் வரலாறுகள் வெளிவருவதில்லை. வரலாறுகள் எப்போதும் வெற்றி பெற்றவனால் மட்டுமே எழுதப்படுகிறது. தோல்வியுற்ற கோவமூப்பனின் வாரிசுகளின் வரலாறுகளை, வலிகளை, வார்த்தைகளில் வெளிப்படுத்தும் ஓர் அரிய முயற்சிதான் இக்கவிதைத் தொகுப்பின் ஒரு பகுதி.

பழங்குடிகளின் தாய்மொழியில் அவன் கோபப்படவும் கொலைவெறியைக் காட்டவும் அழவும், ஆனந்தப்படவும் முடியுமென்றால் அந்த வெளிப்பாடு வீரியமிக்கது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடி மொழிகள் இன்று உயிரோடு உள்ளது. ஆனால் பல, நாள்தோறும் வெற்றிபெற்றவர்களின் மொழிவருகை வாயினுள் வீழ்ந்து செரிக்கப்படுகிறது. இருளர்களின் மொழியும் இதற்க்கு விதிவிலக்கல்ல

இப்பழங்குடிகளின் மொழிகளைப் பாதுகாக்க நம்மிடம் எந்தத் திட்டமும் இல்லை. மேலும் பாதுகாக்க வேண்டிய தேவையைப் பற்றியும் நம்மிடம் எந்த அக்கறையும் இல்லை. தோல்வியுற்றவனின் மொழிகள் மீது யாருக்குத்தான் கரிசனம் வரும்? ஆனால் கவிஞர் லட்சுமணன் அதனை தன்னால் முடிந்த அளவு பதிவு செய்துள்ளார்.

பழங்குடி வாழ்க்கையில் மொக்கே என்ற மலைகள் காணுயிர்கள், யானைகள், மனிதர்கள் எல்லாம் ஒரே நிலைதான். மனிதனுக்கு அஃறிணையும் யானைக்கு உயர்திணையும் வழங்கவேண்டிய செம்மை இலக்கணம் பழங்குடிகளுக்குத் தெரியாது. எனவே தன்னைப் போலவே காணுயிர்களைக் காண்கிறான். சாமிகூட அவனுக்கு அதுபோன்றதுதான்.

பழங்குடிகளின் வாழ்க்கையில் எங்கும் நிறைந்திருக்கும் தொன்மங்கள் அவர்களுக்கு நம்பிக்கை தருபவை. இத்தொன்மங்கள் அவர்கள் வார்த்தைகளில் பின்னிப்பிணைந்து வெளிப்படுபவை. முயல்கள் தங்கள் குடியிருப்புகளுக்கு அருகில் வந்து புல் கடிப்பதும்,சகுனா குருவி கத்துவதும் செம்போத்து குறுக்கே போவதும் பாம்புகளைக் காண்பதும் துர் சகுனகுறிகள். பெருமாட்டி குருவி கத்துவது, இருளத்தொடங்கும் நேரத்தில் வாசலில் வந்து கிளி கத்துவது நல் சகுன குறிகள் என்ற பல்வேறு தொன்மங்களின் தொடர்ச்சிகள் இக்கவிதைகளில் வெளிப்பட்டுள்ளது

ஒரு வட அமெரிக்க செவ்விந்திய பழங்குடிகதை ஒன்றில் ஒரு கிழவனும், அவன் மகளும் தனித்து பூமியில் விடப்பட்டார்கள். கிழவன் பூமிக்குக் கீழ் இருக்கும் உலகத்திலிருந்து ஆவிகள் வந்து புதைக்கப்பட்ட எலும்புகளில் இரவு புகுந்து பகலில் மறைந்து ஓடிவிடுவதைக்கண்டான். எலும்புகளைத்தோண்டி தனது மரத்தால் செய்த கூடையில் பெரும் இடருக்கு பின் எடுத்துவந்து அதை பூமியில் வீசி எறிந்தனர். புதைந்தவர்களின் ஆவிகளிலிருந்து அவர்கள் தங்கள் எலும்புகளில் புகுந்து மீண்டும் உலக்குக்கு வந்தார்கள் என்று உள்ளது. அது போன்று இருளர்களின் தலைவனான கோவ மூப்பன் எலும்புகளில் தசை வைத்து உயிர் பெற்று தன் காடுகளையும் தன் குடிகளின் வாழ்வையும் முடமாக்குபவர்களை பழிவாங்க வருகிறது என்று கவிஞர் லட்சுமணன் கூறுகிறார்

இக்கவிதை தொகுப்பில் பிற தமிழ் கவிதைகளும் முக்கியமானவை. தன்னைச் சுற்றி நிகழும் அரசியலை உள்வாங்கிக்கொள்ளும் ஒரு உயிர்ப்பு மிக்க மனநிலையுடன் இக்கவிதைகள் இயங்குகின்றன. க்யூ பிரிவு போலீஸ், என்கவுண்டர் கொடுமைகள் போன்றவை தமிழில் அதிகம் வரவேண்டியது.

கோவை நகரம் சந்தித்த கொடூரமான காயங்களில் ஒன்று இந்து மதவெறியின் அரசியலும் அதன் எதிர்வினையான குண்டுவெடிப்புகளும், பிற வன்முறைகளும். ஒடுக்கப்பட்ட தலித் மக்களையும் அவர்களைப்போன்ற முஸ்லீம்களையும் இந்த கோர மதவெறி அரசியல் எதிரிகளாக்கி குளிர்காய்ந்தது

 ‘’நேற்று வரை பிரியாணி தந்தவனின் கைகளை
வெட்டித்தின்றது கலவரம்’’

என்ற கவிஞனின் எதிர்வினையும் பிற கவிதைகளும் ஆற்றல்மிக்க சமூக அக்கறையுள்ள படைப்பு மனநிலையின் வெளிப்பாடுகள். என் இனிய நண்பரின் கவிதைகளுக்கும் வாசகர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

அன்புடன்
ச.பாலமுருகன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

ஒடியன் கவிதை தொகுதியின் அணிந்துரைக்காக

ஒடியன்
லட்சுமணன்
மணிமொழி பதிப்பகம்,
220-A, முல்லை வீதி,
தந்தை பெரியார் நகர்,
போளூர் சாலை,
திருவண்ணாமலை – 606 601
விலை ரூ.50

Pin It