நூலின் மதிப்புரையிலிருந்து…

திரு. தமிழ்மாறன் இந்நூலுக்குத்தான் எழுதியுள்ள முற்குறிப்பான “என்னுரை” யிலே சொல்லும் ஒரு விடயம் எனது கருத்தை மிகவும் கவர்ந்தது.

“வெறுமனே வரலாறாக அன்றி எமது வாழ்கால நிகழ்வுகளின் மீது சவாலாகப் படியக் கூடியவற்றை மட்டுமே விதைத்திருக்கிறேன் என்ற நம்பிக்கை ...........”

prabaharan_400இந்த நூலின் வருகை நல்லது, வேண்டியது. இனப்பிரச்சினையின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையில் நாம் நிற்கும் இன்றைய வேளையில் (1995 இன் பிற்பகுதி - ‘96 இன் முற்பகுதி) உலக அரங்கில் அண்மைக் காலத்தில் நடந்தேறிய அல்லது இப்போதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களுள் பத்தின் வரலாற்றைச் சட்டவியலாய்வாளர் திரு.வி.ரி. தமிழ்மாறன் நமக்கு நூல் வடிவில் தொகுத்துத் தருகின்றார். “சரிநிகர்” என்ற அரசியல் ஏட்டில் 1994 - 1995 காலப்பகுதியில் எழுதிய பன்னிரண்டு கட்டுரைகள் இந்நூலில் இடம்பெறுகின்றன.

காஷ்மீர், வடஅயர்லாந்து, தென் ஆபிரிக்கா, பயாவ்ரா, பாஸ்க், எரித்திரேயோ, சூடான், கிழக்குரிமோர், மேற்கு இரியான், திபெத்து ஆகிய நாடுகளின் விடுதலைப் போராட்டங்கள் பற்றிய உண்மைகளை எடுத்துக் கூறும் இம்முயற்சி நம்மிடையே விடுதலைப் போராட்டம் பற்றிய அரசியற் கல்வியின் ஊட்டத்துக்குப் பெரிதும் உதவுகின்றது. இந்நூலின் மிக முக்கியமான அம்சம் அது இலங்கைத் தமிழ் வாசர்களை நோக்கி எழுதப்பட்டுள்ளமையேயாகும். ஒவ்வொரு போராட்டம் பற்றியும் பேசும்பெழுது, ஈழத் தமிழ்ப் போராட்டத்தினை நினைவூட்டுவது மாத்திரமல்லாமல் நமது போராட்ட வரலாற்றில் நடந்தேறிய நிகழ்ச்சிகளையும் நிகழ்ச்சிக் கட்டங்களையும் நினைவுபடுத்திக் கொண்டே செல்கிறார் நூலாசிரியர். இது இலங்கைத் தமிழ்ப் பேராட்டத்தின் செல்நெறிகளை விளக்கிக்கொள்ள நன்கு உதவுகின்றது.

மேற்குறிப்பிட்ட பத்து உதாரணங்களையும் அலசி ஆராய்ந்த பின்னர், ஆசிரியர் அந்த உதாரணங்கள் வழங்கும் பாடங்களின் அடிப்படையில், கோட்பாட்டு நிலைப்பட்ட விடயங்கள் இரண்டினை ஆராய்கிறார். ஒன்று சனநாயகம் பற்றியது. மற்றது இன உணர்வு வழியாக வரும் தேசியம் பற்றியது. சனநாயகம் என்பது “பெரும்பான்மை” என்ற ஒரு கணித மேலாண்மையை நிலைநிறுத்த முனையும் பொழுது அதனால் ஏற்படும் விபரீதங்கள் பற்றிக் குறிப்பிட்டு சனநாயக அமைப்பில் அது எவ்வாறு தவிர்க்க முடியாத ஒரு தொந்தரவு என்பதை விளக்குகின்றார். இன உணர்வின் அடியாக மேற்கிளம்பும் “தேசியம்” பற்றிப் பேசும் பொழுது தற்காப்புத் தேசியம், எதிர்த்தாக்குத் தேசியம் என இரண்டு நிலைப்பாடுகளை நுண்ணிதாக வேறுபடுத்துகின்றார்.

கட்டுரைகளைச் சமூக அரசியல் ஏடு ஒன்றில் எழுதியதன் காரணமாக அவரால், ஆய்வுக் கட்டுரைகளில் மேற்கொள்ளப்படுவது போன்று தரவு, கோட்பாடு, வியாக்கியானம் என்னும் மூன்றையும் சமநிலைப்படத் தர முடியவில்லையெனினும் “தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள்” பற்றிய அடியுண்மைகளை நன்கு அறிந்தும் உணர்ந்தும் எழுதியுள்ளார்.

“தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள்” என்பன உலக அரங்கில் முனைப்புப் பெற்றுள்ள முறைமையை உற்று நோக்கும் பொழுது, இரண்டு விடயங்கள் மிகத் துல்லியமாகின்றன.

“இனக்குழும” அல்லது “இனத்துவ” உணர்வென்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறும் ஒரு காரணியாக மேற்கிளம்பியுள்ளதை நாம் அவதானிக்கும் அதே வேளையில் இது பெரும்பாலும் ஏகாதிபத்திய, முதலாளித்துவச் சுரண்டலுக்குட்பட்ட நாடுகள் அரசியல் ரீதியாக கொலோனியலிசததிலிருந்து விடுபட்ட பின்னரே அவ்வந்நாடுகளில் தோன்றியுள்ளமை தெரிகின்றது. அரசியற் சுதந்திரம் பெற்ற நாடுகளின் அகநிலைப் போராட்டங்களை “இனக்குழும” பிரச்சினையாகப் பார்க்கும் உலகநோக்கு ஏறத்தாழ 1960களிலேயே ஏற்படுகின்றது.

இந்த நோக்குப் பிரதானப்பட்டதுடன் இந்தப் போராட்டச் சூழலுக்குப் பின்புலமாகவும் ஊற்றுக்காலாகவுமிருந்த பொருளாதார சமவீனம் என்ற உண்மை அதிக அழுத்தம் பெறாது போயிற்று.

கொலோனியலிச ஆட்சி விட்டுச் சென்ற “பாராளுமன்ற சனநாயகம்” (அதாவது சனநாயகம் பற்றிய எண்ணிக்கை அடிப்படையிலான நோக்கு) இந்த நோக்கைத் தவிர்க்க முடியாததாக்கிற்று. வரலாற்று, பண்பாட்டுப் பின்புலமும் வளமுமுள்ள சமூகங்களைக் கொண்ட நாடுகளில் இது தொழிற்படத் தொடங்கியதும், எண்ணிக்கைச் சனநாயகம் இனவாதத்துக்கு இடங்கொடுத்தது. கொலோனியலிச ஆட்சிக்கு முன்னர் நிலவிய இனங்காண் குறியீடுகளுக்கு செல்லவேண்டிய தேவை ஏற்பட்டது. குழுமரபின் முக்கிய சின்னமான மொழி பிரதானப்பட்டது. சில இடங்களில் மொழிக்குப் பதிலாக மதம் பிரதானப்பட்டது. இவை காரணமாகப் “பெரும்பான்மைப் பேரினவாதம்” மேற்கிளம்பத் தொடங்கிற்று.

இந்த நிலமை பொருளாதார வளர்ச்சி முற்றிலும் மரபுநிலையிலிருந்து மாறாத சமூகங்களில் ஏற்பட்டபொழுது, பண்பாட்டுப் பேரினவாதம் சுலபமாகத் தலைதூக்கியது.

அரசியற் சுதந்திரமும் அதன் வழிவரும் சமூக சனநாயகமும் சமனாகப் பகிரப்படாத, பகிரமுடியாத நிலை ஏற்பட்ட பொழுது அரசியல் ரீதியில் தேசிய இனங்களின் “விடுதலைப் போராட்டங்கள்” ஏற்பட்டன. இந்த விடுதலைப் போராட்டங்களின் ஆதார சுருதியாக “இனத்துவ, இனக்குழுமத் தேசியவாதம்” அமைந்தது. இந்த இனக்குழுமத் தேசியத்தின் செல்நெறிகள் பலத்த விவாதத்துக்கு உள்ளாகின.

இந்தத் தேசியத்தின் வளர்ச்சியில் திரு.தமிழ்மாறன் இரு கட்டங்களை அவதானிக்கிறார். ஒன்று “தற்காப்பு இனத்துவத் தேசியவாதம்”. மற்றது “எதிர்த்தாக்கு இனத்துவத் தேசியவாதம்”. இந்த இரண்டாவது தான் பேரினவாதத்துக்கும் இனவாதத்துக்கும் இடமளிக்கின்றதென்பது திரு. தமிழ்மாறனின் வாதம்.

தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களினூடே இழையோடும் “தேசிய” த்தைப்பற்றிய நுண்ணிய குறிப்பு இது. “சரிநிகரில்” நடைபெற்ற தேசியம் பற்றிய விவாதத்தில் இந்த விடயம் முக்கியத்துவம் பெற்றது.

இனத்துவ தேசியம் பற்றிய இந்த விவாதத்திலே பேசாப்பொருளாக உள்ளது “தேசியம்” என்ற தொடர். இது பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திய காலம் முதல் இருபதாம் நூற்றாண்டின் முதல மூன்று தசாப்தங்கள் வரை ஐரோப்பாவிலே காணப்பட்ட செருமனிய, இத்தாலிய “தேசிய” உணர்வுகளுடன், பின்-கொலோனியலிச இனத்துவத் தேசியத்தை “இணைத்துப்” பார்ப்பதாகும். பின்-கொலோனியலிச இனத்துவத் தேசியம் என்பது சில இனங்கள் மீது திணக்கப்பட்ட ஓர் உணர்வாகும். சனநாயக மயப்பாட்டில் ஊறுகள் காணப்பட்டதனால் இந்தப் பிரக்ஞை ஏற்படுகிறது. உண்மையில் இந்த இனத்துவப் பிரக்ஞையின் உண்மைநிலையை அது வற்புறுத்தும் அரசியல் எல்லை கொண்டே தீர்மானிக்கவேண்டும். இதன் எல்லை அரசியற் சுயநிர்ணய உரிமைபற்றிய கோரிக்கையும் செயற்பாடுமே எனில் இது ஒதுக்கப்பட வேண்டியதுமல்ல. ஆனால் அதற்கு மேலே போய், இனவாதத்தை அது முன்வைக்கும்மேல் அது விரும்பத் தகாததாகிவிடும்.

உண்மையில் இத்தகைய வேளைகளில் ஆங்கிலத்தில் Liberation Struggles எனக் குறிப்பிடப்படுவனவற்றை விடுதலைப் போராட்டங்கள் என்பதிலும் பார்க்க “தளை நீக்கற் போராட்டங்கள்” எனக் குறிப்பிடுவது பொருத்தமாகும். “தளைநீக்கம்” என்பது இறுகப் பிணித்து நிற்கும் ஒரு கட்டிலிருந்து விடுபடுவதாகும்.

திரு. தமிழ்மாறனின் இந்தக் கட்டுரைத் தொகுப்பு நம்மிடையே பல முக்கிய அரசியற் சிந்தனைகளைத் தூண்டிவருகின்றது. எழுத்தறிவுச் சனநாயகம் நிலவுகின்ற ஒரு சூழலில் இத்தகைய ஆக்கங்கள், வாசகர்களின் அரசியற் கல்வியறிவுக்குப் பெரிதும் உதவுகின்றன.

அந்தப் பணியினை நன்கு நிறைவேற்றியுள்ளமைக்காக, திரு. தமிழ்மாறன் எமது வாழ்த்துக்குரியவராகின்றார்.

இந்நூலினை வாசிக்கும் பொழுது தமிழ்மொழி, இலக்கிய ஆய்வாளன் என்கின்ற வகையில் நான் ஒரு முக்கியமான செல்நெறியின் உறுதிப்பாட்டை அவதானிக்கிறேன். அது தமிழ் எந்த அளவுக்கு சமூகம், அரசியல், பொருளாதாரம் சம்பந்தமாக ஒரு வன்மையான தொடர்பாடற் சாதனமாகியுள்ளது என்பதாகும். திரு.தமிழ்மாறனின் “நடை” வாசிப்புச் சுலபத்தையும் விடயக் கனதியையும் இணைத்துச் செல்கின்றது. இப்படியான ஒரு போக்கு இப்பொழுது ஆழமாகவும் அகலமாகவும் வளர்கிறது.

தமிழ் இருபத்தோராம் நூற்றாண்டுக்குள் தன்னம்பிக்கையுடன் பிரவேசிக்கின்றது என்பதற்கு இத்தகைய நூல்கள் நல்ல எடுத்துக்காட்டு.

திரு.தமிழ்மாறனிடமிருந்து தமிழ் கூறும் நல்லுலகு நிறையவே எதிர்பார்க்கின்றது.

திரு.தமிழ்மாறனும் இந்நூலின் பிரசுரகர்த்தரும் பாராட்டுக்குரியவர்கள்.

- கார்த்திகேசு சிவத்தம்பி, கொழும்பு

 

உலக தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள்

வி.ரி.தமிழ்மாறன், வி.தமிழ்க்குமரன்

வெளியீடு:

பாரதிதாசன் பதிப்பகம்

தமிழ்க் குடில்,

6/28, புதுத் தெரு,

கண்ணம்மாபேட்டை,

தியாகராய நகர்

சென்னை,

விலை: ரூ.90

பக்கம்: 136

Pin It