ஒரு புத்தகத்தைப் படிக்கத் தூண்டும் ஆர்வமானது அந்தப் புத்தகத்தின் தலைப்பில் இருந்து துவங்கலாம்; அல்லது புத்தகத்தின் குறிப்புச் சட்டத்திலிருந்து அல்லது ஏதேனும் ஒரு வரியில் இருந்து துவங்கலாம். அப்படியாக, அண்ணன் எழுத்தாளர் கு. ஜெயபிரகாஷ் அவர்கள் இப்புத்தகத்தைத் தந்தபோது, எதேர்ச்சியாக ஒரு பக்கத்தைத் திறந்தபொழுது இப்புத்தகத்தைப் படித்தே ஆக வேண்டும் என்று என்னை ஈர்த்த வரிகள்:

frankilin book“மனிதன் வாழ
வேறென்ன தேவை
இருந்துவிடப்போகிறது?

இரண்டு வேளை
உணவும்,
சிலர் நம்பும்படியான
பொய்களையும்
தவிர…”

என்கின்ற இந்தக் கவிதைதான் “சுயநலவாதியின் டைரியிலிருந்து” என்ற கவிதைத் தொகுப்பைத் தொடர்ந்து படிக்க வைத்தது. இதில் நான்கு பகுதிகளாக ஆசிரியர் கவிதைகளைப் பிரித்து எழுதியிருக்கிறார்: “இன்வேலிட் யூசர்”, “சுயநலவாதியின் டைரியிலிருந்து”, “கடவுளுக்கு நேரம் இருக்கிறதா?”, “மகிழ்ச்சியான பிரிவு”. இப்படியாக ஒவ்வொரு பகுதியிலும் வாழ்வின் எதார்த்தங்களையும், அனுபவங்களையும், தன் அன்றாட வாழ்வில் கடந்து வந்த மனிதர்களையும், சம்பவங்களையும் வைத்துப் பல கவிதைகளை எழுதியுள்ளார்.

‘இன்வேலிட் யூசர்’ என்னும் பகுதியில் ஆசிரியர் இப்படியாக எழுதியிருக்கிறார்:

“மிகச் சிறிய
வாழ்க்கை
ஆம் மிகச் சிறியதுதான்.
“வா ழ் க் கை”
நான்கு எழுத்துக்களே”

நம் அன்றாட வாழ்வைப் பெரிதும் இன்னல்பட்டும், சிந்தித்தே நகர்த்த வேண்டிய சூழலிலும் தற்போதைய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால், நாம் வாழ்க்கையின் மீது வைக்கும் பார்வை எவ்வளவு எளிதாக இருக்க வேண்டும் என்பதை இக்கவிதை உணர்த்துகிறது. இப்படியாக அவர் பல கவிதைகளைச் சொல்லிக்கொண்டே வருகிறார்.

இரண்டாம் பகுதியான ‘சுயநலவாதியின் டைரியிலிருந்து’ என்பதைப் பார்த்தபோது, அவர் ஏன் இந்தத் தொகுப்பிற்கு இப்பெயர் வைத்தார் என்பது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. ஒருவேளை அவருடைய வாழ்வியலையும், அவர் சந்தித்த இன்னல்களையும் எழுதியிருப்பார் என்ற கண்ணோட்டத்தில்தான் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தேன். ஆனால், அதையும் தாண்டிப் பல விஷயங்களை அவர் சொல்லியிருக்கிறார். அப்படியாக ஒரு சுயநலவாதி இப்படியாகப் புலம்புகிறான்:

“வயதாக ஆக
முடிகளோடு சேர்ந்து
சில கனவுகளும்
உதிர்ந்துகொள்கின்றன”

மனிதனுடைய கனவு என்பது மிகப்பெரியது, எல்லையற்றது. அப்துல் கலாம் சொல்வதைப் போல, நீ எதுவாக ஆக விரும்புகிறாயோ அதற்காகவே கனவு காண். அப்படியாக நம்முடைய வாழ்வின் பருவநிலைக்கு ஏற்ப ஒரு மனிதனுடைய கனவுகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. அவை நிறைவேறுகின்றனவா இல்லையா என்பது, அந்தந்த வயதுகள் உதிர்ந்த பின்பு முளைக்கும் அடுத்த வயதில் தெரிகிறது. மனிதன் கனவுகளையும் ஆசைகளையும் சுமந்து கொண்டே இயங்கிக் கொண்டிருக்கிறான். அவனுடைய நிறைவேறாத ஆசைகளுக்காகவும் கனவுகளுக்காகவும் இந்தச் சுயநலவாதி பெரும் ஏக்கத்துடன் சொல்கிறான்:

"இப்போதுதான்
பொய்யாகச்
சிரிக்கவே
கற்றுக் கொண்டிருக்கிறேன்
அதற்குள் எப்படி
பொய்யாக அழ
கற்றுக் கொள்வது."

இப்படியாக இந்தத் தொகுப்பு முழுவதும் எழுத்தாளர் ஏ. ஜே. பிராங்க்ளின், நம் வாழ்வோடு நாமாக மாறிக்கொள்ளும் வகையில் பல கவிதை வரிகளை அழகாகத் தொகுத்து நூலாக வெளியிட்டிருக்கிறார்.

எழுத்தாளருக்கு அன்பும் வாழ்த்துகளும்!

நூல்: சுயநலவாதியின் டைரியிலிருந்து

நூல் ஆசிரியர்: பிராங்க்ளின் A.J

பதிப்பகம் : இறைவி வெளியீடு

பக்கங்கள் : 120

- தளபதி சல்மான்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.