என் முன்னால் நடக்காதே... நான் பின்பற்றாமலும் போகலாம். என் பின்னால் நடக்காதே... நான் வழி காட்டாமலும் போகலாம். என் அருகே என்னோடு பிணைந்து நட. என் நண்பனாக இரு.

- ஆல்பெர் காம்யு

இருத்தலியத்தின் இதயம் எப்படி இருக்கும் என்ற போது காம்யு என்றொரு அந்நியனை நாம் சந்திக்க நேர்ந்தது.

தன்னிலிருந்து தானே விலகி.. அல்லது தன்னிலிருக்கும் தன்னை அருகி என்று இரு வேறு துருவங்களின் நடுவே அர்த்தமற்ற இயங்குதலை கண்டறிய செய்யப்பட்ட ஒரு பரிசோதனை இந்த அந்நியன். ஆல்பெர் காம்யுவின் முதல் நாவல் இது. தன் தாயின் இறப்பை அறிந்து... அவள் தங்கி இருக்கும் முதியோர் இல்லத்துக்கு வருகிறான். நாவலின் முதல் வரியே இப்படி இருக்கிறது.

"இன்று அம்மா இறந்து விட்டாள். ஒருவேளை நேற்றாகவும் இருக்கலாம். எனக்கு தெரியாது..."

alber kamyuஇயல்பில் இருந்து தள்ளி இருக்கும் இவ்வரியோடு அம்மாவின் இறப்பை எதிர்கொள்ளும் "மெர்சோ" தன்னளவில் மட்டுமல்ல... சமூகத்திலும் கூட அந்நியனாகவே இருக்கிறான். அவன் அப்படி இருப்பதில் எந்த ஒரு கொள்கையும் கொண்டவனில்லை. அது அதுவாகவே இருக்கிறது. ஓர் இயல்பின் இருத்தல் அப்படி இருக்க அப்படியே விட்டு விடுதல் தானே சரி என்கிறான். பதட்டமில்லாத போக்கில்... அம்மாவின் சடலம் கிடத்தியிருக்கும் அறைக்குள் வெறுமனே அமர்ந்து கொண்டிருக்கிறான். காவலாளி முகத்தை பார்க்க வேண்டுமா என்று வழக்கம் போல் கேட்டதற்கு... வழக்கத்துக்கு மாறாக வேண்டாம் என்கிறான்.

அங்கு ஆரம்பிக்கிறது அவனுக்கும் அவனுள் இருக்கும் அந்நியனுக்குமான நிகழ்.

அவனுக்கு அப்போதைக்கு தூக்கம் தேவையாய் இருக்கிறது. இறப்பை நிறைக்கும் மனது அவனிடம் இல்லாமல் அது... வழக்கம் போல தூக்கம் சிகரெட்...அலுவலகம்... நாளை என்று சுழன்று கொண்டிருக்கிறது. தாயின் சடலத்துக்கு முன்பாகவே சிகரெட் பிடிக்கிறான். தேநீர் அருந்துகிறான். அவன் ஒரு யாரோ போல அமர்ந்திருக்கிறான்.

பிரச்சனையே குற்ற உணர்ச்சி இல்லாத அவனுடைய இயல்பான செயல்பாடுகள் தான். அதில் என்ன தவறு என்பது போல தான் இருக்கிறான். என்ன மனுஷன் இவன் என்ற எந்த சொல்லுக்கும் அவன் இரையாகிடவில்லை. மற்றபடி இறை பற்றிய தத்வயமும் அவனிடம் இல்லை.

இந்த கதையை சொல்லிக் கொண்டிருப்பது மெர்சோ என்றாலும்.. மெர்சோவுக்குள் இருக்கும் காம்யுவை நாம் அறிகிறோம்.

அவர் இந்த உலகை பார்த்த கோணத்தை நாம் புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம். அவரும் புரிய வைக்க முயற்சிக்கிறார். யதார்த்தத்தில் இருக்கும் அபத்தங்கள் குறித்து அவரின் தீர்மானங்களும் தொலை தூரங்களுக்கு நம்மை முதலில் அச்சத்தில் ஆழ்த்தினாலும்.. பிறகு மெல்ல அறிவின் கை கொடுத்து எழுப்பி விடுகிறது. ஒரு பக்கம் உலகப்போர்.... இன்னொரு புறம் காலனி ஆதிக்கம்... வறுமையும் அதிகார சுரண்டலும் எதிர் எதிரே ஒவ்வொரு பக்கமாய் நிற்க... என.... இருக்கும் உலக சூழலில் அவரால் வழக்கம் போல யோசிக்க முடியவில்லை. வழக்கத்தை தாண்டுவது வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் எவனோ ஒருவன் செய்யும் மாற்று சிந்தனை. அதை தான் காம்யு செய்தார். அவர் அர்த்தமில்லாத ஒன்றாகவே இங்கே எல்லாவற்றையும் பார்த்தார்.

இந்த வாழ்வின் பொருள் என்னவாக இருக்கும் என்பதுதான் அவரின் தேடலும்... அது குறித்தான நோக்கமுமாக இருந்தது. அது தான்... மெர்சோ எனும் பாத்திரத்தின் வழியே கேள்விகளுக்கும் பதில்களுக்கு அப்பாற்பட்டு வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த உலகம் என்பது எதேச்சையானது. அதில் பொருள் இருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு வருகிறார். அதன் வழியே கண்டடையும் எல்லாமே அந்த அளவு மட்டுமே. அதற்கு.... அதற்கு மேல் எந்த பூச்சும் இல்லை. புனிதம் புண்ணியம்.. என்று எதுவுமில்லாத போது அதற்கு அர்த்தமும் இல்லை. இருக்க வேண்டிய தேவையும் இல்லை என்று உணர்கிறார்.

இந்த வாழ்வுக்கு இருக்கும் அர்த்தம் என்பது பெயரில் தொடங்கி படிப்பதில் தொடர்ந்து சம்பாதிப்பதில் நிறைந்து குடும்பம் குட்டி பேரன் பேத்தி என்று பிற்பாடு ஒரு மரணத்தின் மூலமாக அதை நிறைவு செய்வதாக நம்புவதில் இருந்து அவர் விலகி கொள்கிறார். பிரபஞ்சத்தோடு இங்கிருக்கும் எல்லாவற்றையும் இணைத்து பேசுவது தான் தத்துவமாக இருந்து கொண்டிருக்கும் நேரத்தில் அதிலிருந்து பிரித்து பேசியது காம்யுவின் வேறொரு தீர்க்க பார்வை. அதுவும் தத்துவம் என்ற கட்டத்துக்குள் வருவது பற்றி அவருக்கு எந்தவித தொந்தரவும் இருப்பதாக தெரியவில்லை. எல்லாரும் பிணைப்பு பற்றி பேச... அவர் இணைப்பு துண்டாவதில் இருக்கும் எதார்த்தம் பற்றி பேசுகிறார். இருந்தது இருக்கட்டும்.... இல்லை.... சரி.. என்பது போல தான்...எல்லாம் என்பது அவர் நிலை.

இப்படி இருந்திருந்தால் தங்களோடு நண்பராக இருந்திருப்பேன் என்றொரு வசனம் கூட வரும். அப்படி இல்லாவிட்டாலும்.. ஒன்றுமில்லை.... என்று பதில் வரி அவருடையாதாக இருக்கும். அவரின் நிலைப்பாடு இது தான். இங்கு ஒன்றுக்கும் அர்த்தம் இல்லை. அர்த்தம் தேடிக்கொள்ளவே கடவுளும் மரணமும் இங்கே பித்து பிடித்து அலைவதாக சொல்கிறார்.

அம்மாவிடம் மிகுந்த அன்போடு தான் இருந்தேன்... என்ற வழக்கத்துக்குள் அவர் வந்தாலும் அடுத்த வரியே... ஆனால் அதற்கு ஒன்றும் அர்த்தம் இல்லை என்கிறார். எங்கள் இருவருக்குமே தனி தனி உலகம் இருந்தது. அதனால் எந்த வருத்தமும் இல்லை என்கிறார். கொஞ்ச நாளாகவே என்னை நான் கேள்வி கேட்கும் பழக்கத்தை விட்டு விட்டேன் என்கிறார். கேள்வி நமது வசதி தானே தவிர அதனால் ஒன்றும் ஆக போவதில்லை என்று புரிந்து கொண்டிருக்கிறார். எந்த பதிலும் நிரந்தரம் இல்லாத போது அதை எழுப்பும் கேள்வுக்கு மட்டும் என்ன பொருள் என்பது தான் அவர் இந்த வாழ்வை உணர்ந்த வடிவம்.

மானுட அர்த்தம் மனதிலும் இல்லை. வெளியிலும் இல்லை எனும் காம்யு... அர்த்தம் என்று ஒன்று அவசியமா எனும் பொருள்பட தான் பேசுகிறார் என்று உணர்கிறேன். இரு... இல்லாமல் போ. அவளோ தான். அதற்கு என்ன பொருள் இருக்க வேண்டும் என்பது... எதற்கு இத்தனை ஓட்டம் என்பதாகவும் தான். அபத்தத்தின் வழியே நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு பாசிங் கிளவுட்ஸ் தான் இந்த வாழ்வு. இதற்கு அர்த்தம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அர்த்தம் என்பதை அப்படி ஒன்று இருப்பதாக நாம் நம்புவது நமது அபத்தம் என்கிறார். இயற்கை ஒருபோதும் இங்கே இருக்கும் உயிர்களுக்கு எதுவும் செய்வதில்லை. அது தன்னளவில் இருக்கிறது. அதை பறித்து பறித்து அதனோடு சகவாசம் கொண்டு அது தனக்கானதாக ஒரு பந்தத்தை மனிதன் ஏற்படுத்திக் கொண்டான் என்கிறார்.

இயற்கை மனிதனுக்கு எப்போதும் மரணத்தையே வழங்குகிறது. மாறாக மனிதனுக்கும் மரணமே டெஸ்டினேஷன். அதை தாண்டி ஒன்றும் இல்லை. ஒவ்வொரு பிறப்பும் இறப்புக்கு தான் காத்திருக்கிறது எனும் போது பிறப்புக்கு என்ன அர்த்தம் இருந்து விட முடியும். ஒன்றிலிருந்து ஒன்று அந்த ஒன்றாகவே இருக்கும் பட்சத்தில் அந்த ஒன்று தான் எதற்கு. மனிதனுக்கு ஒரு நாள் கடப்பது.... அவன் இறப்பை நோக்கி ஒரு நாள் நகர்வது. முதலில் புரிந்து கொள்ள வேண்டியது மரணம். ஆனால் அந்த மரணத்தை புரிந்து கொள்ளவே முடியாது. மனிதனின் வாழ்நாள் அபத்தத்துக்கு சாட்சியே மரணம்தான் என்கிறார். இந்த பிரபஞ்சத்துக்கு எந்த நோக்கமும் இல்லை. அது இருக்கிறது. அவ்வளவு தான். இந்த வாழ்வை அர்த்தமாக்கிக் கொள்ள மனிதன் செய்த புத்திசாலித்தனம் அல்லது முட்டாள்தனம் தான் இறை நம்பிக்கை. பின் அதுவே மூடத்தின் வழியே பெரும் பாறாங்கல்லை உருட்டி தன் மீதே போட்டுக் கொள்கையில்... அதையும் பார்த்து சிரித்துக் கொண்டே அர்த்தமற்ற செயல் என்கிறார் காம்யு. ஆதலால் அவருக்கு இறை பற்றிய தேவையும் இல்லை... அதன் பொருள் தேவையே இல்லாதது என்ற முடிவும் அவருக்குண்டு.

உருவாக்குவது அனைத்தும் போலி என்பதில் அவர் நிலையாக நிற்கிறார். உருவானது பற்றிய மிகைப்படுத்தல் தேவை இல்லாதது. அது உருவாகி இருக்கிறது. அவ்வளவே. அதற்கு அர்த்தம் இருந்தே ஆக வேண்டிய எந்த நிர்பந்தமும் இல்லை என்பது தான் காம்யுவின் ஒவ்வொரு வரியும் இந்த நாவலின் வழியே நம்மை வந்தடைகிறது.

எல்லாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே தனிமனித ஈகோ தான்.

அம்மா சாவுக்கு வந்தவன் அடுத்த நாளே காதலியோடு கடற்கரையில் உல்லாசமாக இருப்பது... நமக்கு நம் வழக்கத்தை திகைக்க செய்கிறது. ஆம்.. அம்மா இறந்து போனாள். முடிந்துவிட்டது என்று அடுத்த வேலையை பார்க்க சென்று விட்டார். இரண்டே நாளில் அலுவலகம் சென்று வழக்கம் போல வேலையை பார்க்கிறார். மெர்சோ மற்றவர்களுக்கு கிறுக்கன் போல தெரிந்தாலும்... அன்பில்லாத மிருகம் போல தோன்றினாலும்...... ஓர் அந்நியனாக தான் எல்லாரும் இருக்கிறோம் என்று அவன் உறுதியாக நம்புகிறான். அர்த்தமற்றது தான் இங்கே இருக்கிறது. இருக்க முடியும். நாம் அதற்கு கம்பளி போர்த்தி அர்த்தமாக்க முயற்சித்து கொண்டிருக்கிறோம் என்று சமூகம் நோக்கி சுட்டுகிறார்.

சமூகம் சுலபத்தையே பின் பற்றும். மெர்சோ மீது குற்றம் சுமத்துகிறது.

நம்பிக்கை என்பது எப்போதும் ஏற்படுத்தும் ஒன்றாகவே இருக்கும் பட்சத்தில் அதற்கு அர்த்தம் இருக்க முடியாது. அப்படி இல்லாத ஒன்றின் மீது எதற்கு நம்பிக்கை என்பது தான் அவரின் வாதம். இந்த உலகம் நொடிக்கு நொடி மாறிக் கொண்டே இருக்கிறது. மாறிக்கொண்டே இருக்கும் நிலையின்மைக்கு அர்த்தம் தேவை இல்லை. ஆதலால் தான் இங்கு எதற்குமே அர்த்தம் இல்லை. அர்த்தமற்ற எதுவும் அபத்தமாக தான் இருக்க முடியும். அந்த அபத்தத்தின் வழியே நாம் செய்து கொண்டிருக்கும் வாழ்வு உள்ளபடியே முழுக்க முழுக்க மரணத்தை நோக்கிய ஒரு தள்ளு முல்லு. அதற்கு அத்தனை ஸீன் எல்லாம் இல்லை என்பது போல தான். இருக்கு.. ஆனா இல்லை. இல்லை சரி.. இருந்தா இருக்கட்டும்.

அந்த நொடி ஆச்சரியத்தில் அந்த நொடி இல்லாமல் போவதை கவனித்த பிறகு ஆச்சரியம் என்று ஒன்று இல்லை என்ற முடிவுக்கு வரலாம் தானே.

தனக்கு சமமான ஒன்றை செயல் படுத்தவே தொடர்ந்து எதையாவது செய்து கொண்டிருக்கும் மனிதனுக்கு அதன் அர்த்தம் மட்டும் பிடிபடவே போவதில்லை. ஆனால் அவன் பிறந்து பிறந்து இறந்து கொண்டே இருப்பது மட்டும் நிற்க போவதில்லை என்று புரிந்து கொள்ள தூண்டுகிறது காம்யுவின் ஆற அமர நின்று நிதானித்து தியானிக்கும் அர்த்தமற்ற வடிவம்.

தத்துவார்த்தமான மரணத்தை நோக்கிய பார்வையில் கட்டமைக்கப்பட்ட கோட்பாடுகளை எல்லாம் தூக்கி வீசுவது தான் அர்த்தமற்றவையில் இருந்து தப்பித்துக் கொள்ள இருக்கும் வழி. இல்லை எனில் தற்கொலை செய்து கொண்டு செத்து போ என்கிறார். அர்த்தம் கிடைக்குதோ இல்லையோ... அது பற்றிய கேள்வியிடம் இருந்து விலகி இருப்பாய் என்கிறார். லூசு மாதிரி தான் தெரியும். தலைகீழ் தத்துவங்களின் வழியே தாளமற்ற இசைக்கு தலையாட்டுவது ஒருவன் இயல்பு எனும் போது எழும் சொல் வலிமையற்ற ஒரு வழக்கமான ஒன்றாகவே இருக்கும். லூசு.

இறை நம்பிக்கை கூட ஒரு வகையில் தப்பிக்கும் தற்கொலையே. புரட்சியோ கலகமோ கூட இந்த அபத்தத்தை போக்காது. மானுட விடுதலை தனி மனிதனுக்கானது. அது சமூகத்தின் வடிவத்தில் மீண்டும் மீண்டும் அபத்தத்தின் கிளர்ச்சியை தான் கிளப்பிக் கொண்டேயிருக்கிறது.

நாவல் முழுக்க தன்னிடம் இருந்தே விலகி இருக்கும் மெர்சோ... தன் காதலியிடம் கூட காதல் இல்லை... ஆனால் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று தான் கூறுகிறான். அம்மா இப்போது செத்திருக்க வேண்டாம். ஆனால் செத்தது குறித்து ஒன்றுமில்லை எனும் பாவனையின் அடுத்த வடிவம் தான் காதலியோடு பேசுவதும். நாவலின் இறுதிக் காட்சியில்... ஒரு அரபுக்கார ரவுடிப்பயலை... கடற்கரையில் காதலியோடு இருக்கையில் சுட்டு கொண்டு விடுகிறான். வழக்கு நீதி மன்றத்துக்கு வருகிறது. ஏன் கொலை செய்தாய் என்று கேட்கிறார்கள். அவன் தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருந்தான். கடற்கரை மணலின் சூடும் தாங்கவில்லை...அது தான் சுட்டு விட்டேன் என்கிறான்.

அனைவருக்கும் அதிர்ச்சி. அவனுக்கு அதுவும் இயல்பாகவே இருக்கிறது.

அம்மா சாவுக்கு வந்தவன் முகத்தை கூட பார்க்காமல் அங்கேயே காபி குடிக்கிறான். சிகரெட் பிடிக்கிறான். அடுத்த நாளே காதலியோடு உல்லாசம். காரணமே இல்லாமல் ஒருவனை சுட்டு கொள்கிறான். ஆக இவன் ஒரு கிரிமினல் என்று மெர்சோவை சிறைக்குள் தள்ளி விடுகிறார்கள். அங்கே சாவதற்கு முன் கடவுளை அடைந்து பாவ மன்னிப்பு கேட்டுக் கொள் என்று சொல்லும் பாதிரியாரிடமும் மறுப்பே தெரிவிக்கிறான். நான் வருந்த வேண்டிய தேவை இல்லை. என் செயல்களுக்கு நான் தான் பொறுப்பு. இல்லாத கடவுளிடம் என்னால் பிராயச்சித்தம் தேட முடியாது என்று மறுக்கிறான். சிறையில் 18 மணி நேரம் தூங்குகிறான். மற்ற நேரத்தில் உணவு உண்ணுவதாக கூறுகிறான். ஒரு நாள் வெளி உலகத்தில் இருந்து விட்டால் போதும். அந்த நினைவில் எத்தனை நாட்கள் வேண்டுமானால் சிறைக்குள் இருக்கலாம் என்கிறான். நினைத்துக் கொண்டிருப்பதில் இருக்கும் சுகம் வாழ்வதில் இல்லை என்கிறான். இறுதியாக தனியாக தன்னை தூக்கிலிடக் கூடாது... பொது மக்கள் முன்னிலையில் தூக்கிலிடுங்கள் என்று ஒரே ஒரு வேண்டுகோளை மட்டும் வைக்கிறான்.

ஒன்றுமில்லாததை மறைக்க நாம் செய்யும் ஒப்பனைகள் தான் இருப்பது எல்லாம் என்கிறார் காம்யு. உலக அளவில் விவாதிக்கப்பட்டு... நிராகரிக்கப்பட்டு... விமர்சனத்துக்கு உட்பட்டு.... என இந்த நாவல் உலகத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது. இந்த நாவலின் வழியே காம்யு... தன்னை ஒரு ரிபெல் என்று பிரகடனப்படுத்துகிறார் என்று தான் நம்ப வேண்டி இருக்கிறது. இந்த நாவலை மையப்படுத்தி எழும் எல்லா கேள்விகளுக்கும் இந்த நாவல் தான் பதில். அதுவும் இல்லாமல் போகலாம்... என்பதில் இருக்கிறது அதன் அடிப்படை நியாயம். இந்த அபத்தத்தை புரிந்து கொள்ளலில் இருக்கிறது அதன் இலகு. எந்த பதட்டமும் இல்லாமல் இருக்க வேண்டுமானால்... எப்போதும் சாவதற்கு தயாராக இரு. அவ்வளவு தான் நீ. இங்கே எதுவும் உன்னிடம் இருந்து வரவில்லை. எல்லாவற்றுக்கும் அர்த்தம் தேடிக் கொண்டே இருப்பதில் தொலைந்து கொண்டிருப்பது உன் விடுதலை.

என் விடுதலை என் முன்னால் என்னை அழைத்து செல்கிறது. அது தான் என் மரணமாகவும் இருக்கிறது. அதற்கும் நீங்கள் அர்த்தம் பூசாதீர்கள். ஆகவே என் இஷ்டப்படி ஒரு அர்த்தமும் இல்லாமல் அரங்கேற வேண்டும் அது என்பதாகதான் காம்யுவை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மிக அருகில் சென்றாலும் மையத்தில் இருந்து விலகி... தூரத்தில் இருந்தாலும் புள்ளியாகி.... என்று இந்த அந்நியன் ஓர் ஆழ்நிலை அனுபவம். நம்மை நாமே மாற்று கோணத்தில் எடை போட்டு பார்க்கும் ஓர் உன்னதம். ஆதலால் தான் ஆல்பெர் காம்யுவுக்கு நோபிள் பரிசுக்கு கிடைத்தது. காம்யு ஒரு புதிர் போட்டு விட்டு சென்று விடவில்லை. புதிர் என்பதை புரிந்து கொள்ள சற்று விலகி நின்று பாருங்கள் என்கிறார்.

நான் புரிந்து கொண்டது கண்ணாடியை உள்ளே மாட்டி வையுங்கள். மற்றபடி எதிரே இருக்கும் கண்ணாடியில் தெரிவது வெறும் தோற்றம் தான் என்பது இன்னும் இன்னும் தோண்டி துருவ வேண்டிய சோதனை.

மொத்தத்தில் இங்கே அபத்தமே மிச்சம். புரிந்து கொண்டால் மரணம் என்பது துச்சம்.

- கவிஜி

Pin It