மீறல்கள் என்ற கவிதை தொகுப்பு கவிஞர் இதயராசனால் ஆக்கப்பட்டு தேசிய கலை இலக்கிய பேரவையின் 108வது வெளியீடாக வந்துள்ளது. இந்நூல் குறித்து சில கருத்துக்களைக் கூற வேண்டியது சமகால தேவையாகும். சமகால மக்களின் வாழ்வின் பின்புலத்தில் போர்க்கால அவலம் என்பது மக்கள் வாழ்க்கையின் சகல அம்சங்களையும் பாதித்து வருகின்ற சூழல் இலங்கைக்கு மட்டும் உரியதொன்றல்ல. யுத்தங்கள் பொதுவாக தேசம், இனம், மதம், மொழி, சாதி என்ற பெயரில் தத்தமது வர்க்க நலன்களை நிலைநிறுத்தும் அடிப்படையில் எழுகின்றது. தலைமை தாங்கும் வர்க்க நலன்களின் அடிப்படையில் அவ் யுத்தங்கள் தமது வர்க்க நலனை வெளிப்படுத்தி நிற்கும் என்பது வரலாற்று நியதியாகும்.

ஈழத்தில் அறுபதுகளில் சாதிய எதிர்ப்புப் போராட்டம் தேசியத்தின் வடிவமாக இருந்தது போன்று எழுபதுகளில் தழிழ்த் தேசிய இனவிடுதலைப் போராட்டமும் முனைப்புப் பெற்றுக் காணப்பட்டது. இதனை தமிழ் முதலாளித்துவ சக்திகள் இனவாதத்தினுள் அழுத்திச் சென்றனர். இதன்காரணமாக தமிழ் ஜனநாயக சக்திகள் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக இந்த அணியினை நாடவேண்டி இருந்தனர். இடதுசாரிகள் இந்த ஜனநாயக சக்திகளை வென்றெடுக்கக் கூடியவாறு சிங்கள மக்களுடன் ஐக்கியப்படுதல் என்ற கோசத்தின் அடுத்தபக்கமாய் பேரினவாதத்திற்கு எதிராகப் போராடுதல் என்ற அம்சத்தையும் இணைத்திருப்பார்களாயின் இந்த ஜனநாயக சத்திகளின் ஒரு பகுதியினரை வென்றெடுத்திருக்க முடியும்.

பிரதான முரண்பாடு என்பது பிரதானமற்றதாகச் செல்வதும் பிரதானமற்றது பிரதானமாக மாறுவதும் வரலாற்று நியதி. இந்த முரண்பாடுகளின் தாற்பரியத்தை உணராதவர்களின் கையிலிருந்து வரலாறு நழுவிடும் என்பது யதார்த்த நியதி. இந்த வகையில் இன்று நேர்மையுடன் மக்களுடன் செயற்பட்டு வருகின்ற முற்போக்கு மாக்ஸியர்கள் தமது கடந்தகாலம் குறித்து ஆரோக்கியமான சுய விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர் என்பது கவனத்திற் கொள்ளத்தக்கது. இந்தப்போக்கின் தாற்பரியத்தினை நாம் இக்கவிஞரிடம் காணக் கூடியதாக உள்ளது. சமூகத்தின் எண்ணற்ற முரண்களை நியாயப்படுத்தவோ சமரசப்படுத்தவோ முனையாத கவிஞர் முரண்களின் தாற்பரியத்தை இவ்வாறு கவிவரிகள் கொண்டு தீட்டுகின்றார்.

ஏழ்மையின் கொடூரத்தினை
ஏமாற்றத்தின் உச்சத்தினை - இந்தப்
பூமிப்பந்தின் சூட்சுமத்தினை
சூசகமாய் உணர்த்தி - என்
தேடலின் தேறலுமாய் நின்று
வாசிப்பின் ஆழத்தினையும்
செவிமடுத்தலின் செம்மையினையும்
வெம்பலும் வெதும்பலுமின்றி
வாழ்தலில் உணர்த்தி - என்
ஆத்மாவின் ஆத்மாவாய்
உழைத்து உழைத்தே உருக்குலைந்த
உத்தம ஜீவன்கள் சரிதம்

நாகரிகத்தின் இரு முரண்பட்ட அர்த்தங்களை பரிமாணங்களை இங்கே சந்திக்கின்றோம். ஓர் காலகட்ட ஆர்ப்பரிப்பில் வர்க்க விடுதலையை தீவிரமாகப் பாடிய இக்கவிஞன் இலங்கையில் இனவாதம் இனவெறி என்பன கேவலமானதோர் பின்னணியில் மோசமானதோர் நிலையை எட்டியபோது இன அடக்குமுறைக்கு எதிராகக் கவிஞராகப் பரிணமிக்கின்றார்.

இரத்த வெள்ளம் வீதியெல்லாம்
சதைச்சேறுகள் நடையிற் சிதற
நவீன ஆயுதங்கள் பிணக்கோலமிட
ஈழப்பொங்கல்.

கண்ணி வெடிகள்
தேடியது போதும்
மண்ணின் விதைகளைத் தேடுவோம்.

உழைக்கும் மக்களின் நலனிலிருந்து அந்நியமுறாமல் பேரினவாதத்தை பெரிதும் சாடுகின்ற பண்பு கவிஞன் ஒருவனுக்கு இருக்கக் கூடிய ஆன்ம பலத்தையே எமக்குக் உணர்த்துவதாய் அமைகின்றது. தேடல், காலத்தின் புலம்பல், யுத்த பூமியின் அன்றாட ஜீவனம், கறுப்பு யூலை, ஈழப்பொங்கல் ஆகிய கவிதைகள் இன்றைய போர்க்கால அவலங்களையும் நெருக்கடிகளையும் அதனடியாக எழும் உணர்வுகளையும் வெளிப்படுத்தி நிற்கின்றன.

“சிவனொளிபாதம் நகரும்”, “மலைத்தாய் விழிப்பாள்” ஆகிய கவிதைகள் மலையக சமூகம் குறித்தவையாகும். மலையகத்தின் வாழ்வியல் குறித்து, அதன் அசைவியக்கம் குறித்து தன் சரித்திரத் தூரிகை கொண்டு புதியதோர் நாகரிகத்தை இவ்வாறு தீட்டித்தர முனைகின்றார்.

“தேசத்தின் கல்வி தேசிய உடைமையாயின
தோட்டப்பாடசாலைகள் தேடுவாரற்று - பின்னர்
தோட்டக்கம்பனிகள் தேசிய உடைமையாயின
தோட்டப் பாடசாலைகளும்
தேசியத்தின் அங்கமாயின
தேசிய இடமாற்றக் கொள்கையினால்
அணி அணியாய் ஆசிரியர் வந்தனர்
மலைப்பிள்ளைகள் மகிழ்வுறக் கற்றனர்
இலவசக் கல்வியின் தந்தையும்
உண்மையாய் உறங்கினார் - நம்மவர்
விண்ணர்கள் என்பேன்
கண்ணினில் மண்ணைத் தூவி
கல்விக்கும் களங்கம் செய்தனர்
தப்பிப் பிழைத்தவர் தலையெடுத்தனர் - அவர்
வித்தகர் என்பேன் விவேகிகள் என்பேன்
மலையினில் விழைந்த முத்துக்களென்பேன் - அதில்
சொத்துக்காய்ச் சோரம் போனவரைச்
சோகத்திற் சேர்ப்போம் -மீதி
‘மாணிக்க வாசகர்களை’ மனதார மெச்சுவோம்”

உண்மைதான்! ஆயிரக் கணக்கான தொழிலாளர்களைப்; பெரும்பான்மையாகக் கொண்டதோர் சமூகமாக விளங்குகின்ற சமூகவமைப்பானது எண்பதுகளின் பின்னர் ஏற்பட்ட அரசியல் சமூக பொருளாதார மாற்றம் காரணமாக வர்க்க நிலையிலும் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. அதன் வெளிப்பாடாகவே இன்று மலையகத்தில் பலம் பொருந்திய மத்தியதர வர்க்கம் ஒன்று உருவானது. அவ்வர்க்க மாற்றமானது ஆசிரியர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், பொறியியலாளர்கள், வர்த்தகர்கள், பதவி நிலை உத்தியோகத்தரர்கள், அரசியல்வாதிகள், தொழிற்சங்கவாதிகள் எனப் பல்துறைகளில் அதன் வளர்ச்சி பரவல் அடைந்து வருவதனைக் காணலாம்.

இச்சூழலானது இரு நிலைப்பட்ட பண்புகளைக் குணாதிசயங்களைக் கொண்ட வர்க்கங்களை உருவாக்கியது. ஒன்று சமூகம் குறித்த எவ்வித சிந்தனையோ கரிசனையோ அற்று செக்குமாடுகளாய் வளர்ந்துவிட்ட இக்கூட்டம் தமக்குத் தேவையேற்படுகின்றபோது பாட்டாளிவர்க்க நலன்களையும் பாடுவதற்குத் தவறுவதில்லை. “உழைக்கும் வர்க்கம்”, “அபிவிருத்தி” என இவர்கள் கூப்பாடு எழுப்பி குதியாட்டம் போடுகையில் இவர்களின் வரவு நல்வரவாகவும் அர்த்தமுள்ளதாகவும் தோன்றும். சற்று ஆழமாக நோக்கினால்தான் அதன் வர்க்க நலன்களுக்கு பின்னணியில் அரசியல் பிற்போக்குத்தனம் மறைந்திருப்பதனைக் காணலாம். இதற்கு மாறாக சமூக நலனை ஆதாரமாகக் கொண்டு அம்மக்களின் விடுதலையே தமது உயிர் மூச்சாகாக் கொண்டு உழைத்து வருகின்ற வர்க்கம். இவர்களைத் தொழிலாளர் வர்க்கம் சார்ந்தவர்கள் எனக் குறிப்பிடலாம். இவர்கள் உழைக்கும் மக்களின் நலன் சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் புரட்சிகர அணியினராக விளங்குகின்றனர். கவிஞரின் மேற்குறித்த வரிகள் இந்தத் தாற்பரியத்தின் பின்னணியியை அழகுறக் காட்டுகின்றது. அழகியல் உணர்வின் ஊடாக தரமுற்படுவது சிறப்பானதாக அமைந்துள்ளது.

“விபச்சார வைபவங்கள்” என்னும் கவிதை பெண்களின் மீதான ஆண்களின் ரோமம் அடர்ந்த கரங்களின் ஆதிக்கத்தை வெளிப்படுத்துகின்றது. பிரமச்சாரியத்தைக் கடைப்பிடித்த காந்தி தமது அந்திம காலத்தில் தமது பிரமச்சரியத்தின் புனிதத் தன்மையைப் பரிசோதிப்பதற்காக ஓர் அம்மையாருடன் ஆடை களைந்து படுத்து, அந்நிலையிலும் தனது உணர்ச்சி தூய்மை கெடுகின்றதா எனப் பரீட்சித்துக் கொண்டாராம். காந்தியின் பரிசோதனை அவரளவில் நியாயமானதாகத் தோன்றியாலும் அந்தப் பெண்ணின் உணர்ச்சி குறித்து காந்தி சிந்தித்தாரா? இது இவ்வாறு நிற்க கண்ணதாசன் போன்ற வகையறாக்களைக் கூற வேண்டிய அவசியமே இல்லை. இவர்களின் பார்வையில் பெண் பாலியல் உறுப்பாகவே கிடந்தாள். பெண்களை மனித ஜீவனாக ஆன்மாவாகக் காணும் சிந்தனை பாரதிக்குப் பின்னர் மிக வலிமையாகவே இலக்கியங்களில் இடம்பெற்று வந்துள்ளன. அந்த வகையில் ஓராயிரம் ஆண்டுகளாகப் பழமைவாய்ந்த கலாசாரத்தின் மீது ஆத்திரம் கொண்ட இக்கவிஞன் செல்லரித்துப் போன அசிங்கங்களைத் தாண்டி தன்னப்பிக்கையுடன் மாத்திரமல்ல கூடவே கர்வத்துடன் பெண்மையின் மகத்துவம் குறித்துப் பாடுகின்றார்.

இவ்வாறு தேசவிடுதலை, பெண் விடுதலை, சாதி விடுதலை எனப் பல விடயங்கள் குறித்துச் சிந்திக்கின்ற கவிஞரின் எண்ணம் காலத்தோடு ஒட்டியதாகக் கிளைபரப்புகின்றது. ஆந்தைக் கூட்டங்களுக்கு எதிராக இருளின் ஆத்மாவுக்கு எதிராகவும் கவித்தீ உமிழ்கின்ற இவரது கவிவரிகள் உழைக்கும் மக்களின் விடுதலைக்காய் மக்களின் பிரதிநிதிகளாய் இருந்த மனிதர்கள் குறித்தும் இவர் கவிதை தீட்டத் தவறவில்லை. இவ்வகையில் “மாசேதுங் என்னும் மாமனிதன்”, “யுகக்கவிஞன் யுக்தியைக் கையிலெடுப்போம்”, “கைலாச பதியென்று கைகோர்த்து நிற்போம”, “வானிடை ஒளிரும் செஞ்சுடர்” எனும் கவிதைகளில் மாசேதுங், ஸ்டாலின், பாரதியார், கைலாசபதி குறித்த இவரது கவிதைகள் முக்கியமானவையாகும்.

காலமாற்றத்திற்கேற்பவும் தம் நாட்டுச் சூழ்நிலைக்கு ஏற்பவும் உழைக்கும் மக்கள் நலன் சார்ந்த நாகரிகங்கள் எத்தகைய தளத்தில் நின்று முன்னெடுக்கப்பட்டன என்ற நிதர்சனங்கள் இங்கு பதிவாக்கப்பட்டுள்ளன. இவ்விடத்தில் பிறிதொரு விடயம் குறித்தும் நோக்குதல் காலத்தின் தேவையாக உள்ளது. மதம் குறித்த பார்வையை முன்வைக்கும் வறட்டு மாக்ஸியவாதிகட்கும் மாக்ஸியவாதிகளுக்கும் இடையிலான வேறுபாடு உண்டு. மதத்தை அதன் சமுதாய சூழலில் வைத்து நோக்குவதன் மூலம் ஒடுக்கு முறைக்கு ஏதுவாக உள்ள காரணிகளை எதிர்க்கப்பட வேண்டும் என்ற உண்மையும், ஒடுக்கு முறைக்கு
எதிராக வெளிப்பட்டுள்ள போர்க்குணத்தை சமுதாயமாற்றச் செயற்பாடுகளுக்கு ஏற்ப ஒழுங்கமைத்து கொள்ள வேண்டும் என்ற பார்வையினையும் உணரமுடியும். மதம் குறித்த தேடல், அதன் மீதான விமர்சனப் பார்வை குறித்து அண்மைக் காலங்களில் எழுதியும் விமர்சித்தும் வருகின்ற கலாநிதி ந. இரவீந்திரனின் ஆய்வுகள் தமிழ் இலக்கிய ஆய்வுகளில் புதிய சிந்தனையைத் தருகின்றது.

சமூகமாற்ற போராட்டங்களில் மதங்கள் எத்தகைய தாக்கத்தை செலுத்துகின்றன, நேர்மையோடு சமுதாய மாற்றம் குறித்து சிந்திக்கின்ற மாக்ஸியவாதி அதனை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் என்பது குறித்து அவரது பின்வரும் கூற்று முக்கியமானதொன்றாகும். மக்கள் நாம் விரும்பும் புரட்சிகரக் கட்டத்தில் இல்லை. பழமையில் தோய்ந்திருக்கும் அவர்களிடம் போய் நாம் சேறு பூசமுடியாது என்றெல்லாம் ஒரு புரட்சியாளன் சொல்ல முடியாது. மக்களை அவர்களது வயற்காட்டின், தொழிற்கூடங்களின் புழுதியிலும் சேறிலும் உள்ளபோது தான் அணுகி, புரட்சிகர உணர்வின்பால் ஈர்க்கவேண்டும். புழுதியும் சேறும் எம்மில் படிந்து விடுமென்றால் அவர்களுக்கு எங்களையே வேண்டாமல் இருக்கும். அவர்கள் எங்களிடம் வரவேண்டுமென்றால் நாம் யார் அவர்களுக்கு? தூர ஒதுக்கிவிட்டு அவர்கள் பாட்டுக்குப் போவார்கள். பலதரப்பட்ட பிற்போக்கு சக்திகள் அவர்களிடம் போய்க் கொண்டிருப்பார்கள். அதெல்லாம் வேண்டாம் என ஒதுங்கி, அதிதீவிரப் புரட்சிவாதம் பேசி, அப்போதைய கையரிப்புக்குப் பாறையில் கையை மோதிய ‘மகத்தான புரட்சி வீரர்கள்’ எல்லாம் இறுதியில் பிற்போக்கு சக்திகளுக்கே உதவியிருக்கிறார்கள். கையைச் சுட்டுக்கொண்ட பின்னர், எல்லாம் கேடுகெட்டுப் போய்க் கிடக்கிறது எனப் புலம்பி, ஏதாயினும் ஒரு ஞானமார்க்க ஒளியில் கரைந்திருக்கிறார்கள். நாம் உண்மையில் சமூக மாற்றத்தையும் சமத்துவ நெறியையும் நேசிப்போமாயின், புதிய – கலாசார இயக்கத்துக்கான வேலைத்திட்டம் ஒன்றைக் கூடிக் கலந்துரையாடி வகுத்து, அந்த வலிய ஆயுதத்துடன் மக்களிடம் செல்வோம். ஏனெனில், மக்கள் மட்டுமே வரலாற்றின் உந்து சக்தி!.

இவ்வகையில் மக்களை உணர்ந்து மக்களின் சமூகமாற்ற செயற்பாடுகளை முன்வைப்பதற்கு மதம் குறித்த தெளிவு அவசியமாகின்றது. இப்பின்னணியானது பல அதீத தீவிரமாக்ஸியர்களை (மாக்ஸிசத்தினை கற்காமல் அதன் உச்சாடனங்களை கோசங்களை மனனம் செய்து, புரட்சியின் தளத்தில் மக்களை நேசசக்திகளை நிராகரித்து, தன்னை மாத்திரம் புரட்சியாளனாகக் காட்டும் கோமாளிகள்) ஆத்திரம் கொள்ளச் செய்வதும், அவர்களின் மூக்கைச் சிணுங்க வைப்பதும் தற்செயல் நிகழ்ச்சியல்ல. பாரம்பரிய மரபுகளை எவ்வாறு பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்தில் நோக்க வேண்டும். களத்திலிருந்து நாம் கற்க வேண்டியன யாவை என்பன குறித்து லெனின் அவர்களின் பின்வரும் கூற்று முக்கியமானது.

“பாட்டாளி வர்க்க கலை பற்றிப் பேசும்போது இதை நாம் மனத்திற் கொள்ள வேண்டும். மனிதவர்க்கத்தின் வளர்ச்சி பற்றிய துல்லியமான அறிவும் அதனை மாற்றக் கூடிய ஆற்றலும் சாத்தியமானாற்தான் பாட்டாளிவர்க்க கலை படைக்க முடியும். இக்கலை வானத்திலிருந்து குதிப்பதல்ல. பாட்டாளி வர்க்க கலை நிபுணர்கள் என அழைத்துக் கொள்பவர்களின் கண்டு பிடிப்பல்ல. அப்படி சொல்வது எல்லாம் சுத்த அபத்தம். பாட்டாளிவர்க்க கலை என்பது முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அதிகாரத்துவ சமூகம் ஆகியவற்றில் சேகரிக்கப்பட்ட மனித குல அறிவின் தர்க்க ரீதியிலான வளர்ச்சியாகும்”.

ஆதிக்க சக்திகள் உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்குவதற்காக எத்தகைய வகையில் பாட்டாளி வர்க்கத்தின் கலாசார பண்பாடுகளிலிருந்து கற்கின்றதோ அவ்வாறே அந்நுகத்தடியை தூக்கியெறிவதற்காக போராடுகின்ற சக்திகளும் வரலாற்றிலிருந்து கற்க வேண்டும் என்பதை மேற்குறித்த வரிகள் எடுத்துக் காட்டுகின்றன. அதனை அவ்வாறே ஏற்றுக் கொள்ள வேண்டும் எனப் பொருள்படாது. அதனை உழைக்கும் மக்கள் நலனிலிருந்து அந்நியப் படாது, பாட்டாளிவர்க்க சிந்தனையின் நிலை நின்று நோக்க வேண்டும் என்பதை மாக்ஸியர்கள் எப்போதும் வலியுறுத்தியே வந்துள்ளனர். கவிஞரைப் பொறுத்த மட்டில் இந்துசமயத்தில் புலமைநிலை தேடலை மேற்கொண்டவராக இருக்கின்ற அதே சமயம் அத்தேடலை சமூகமாற்ற செயற்பாடுகளுக்கு ஏற்ற வகையில் உழைக்கும் மக்களின் நலன் சார்ந்த பார்வையிலிருந்து அந்நியப்படாமல் ஆக்கித் கொண்டமை ஆரோக்கியமானதாகும்.

கலையும் இலக்கியமும் மக்களுக்காக என நாம் கூறுகின்ற போது அது வெறும் கோசங்களாக, சுலோகங்களாக மட்டும் வெளிப்பட்டு நிற்பதாக அமைந்துவிடக்கூடாது. எல்லா கால இலக்கியங்களும் பிரச்சாரங்களேதான் எல்லாப் பிரச்சாரங்களும் இலக்கியமாகா என்ற சிந்தனையானது மாக்ஸ் முதல் கைலாசபதிவரை தெளிவுபடுத்தப்பட்டு வந்துள்ளது. மக்கள் இலக்கியம் எனக் கூறும் போது அது மக்கள் விரோத இலக்கியங்களிலிருந்து மாறுபட்டதாகவும் தனித்துவம் கொண்டதாயும் விளங்குகின்றது. இல்லாமல் மக்கள் இலக்கியமானது உள்ளடக்கத்தில் மட்டுமல்ல உருவத்திலும் தனித்துவம் கொண்டதாக விளங்குகின்றது.

உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற போது அதனை இரண்டு முறைகளில் வெளிப்படுத்தலாம். ஒன்று சமுதாய பிரச்சனைகளையும் முரண்பாடுகளையும் அவற்றினடியாக எழும் கருத்தோட்டங்களையும் சமூக உறவுகளின் உணர்ச்சிப் பின்புலத்திற் தருவது. மற்றது சமுதாயப் பிரச்சனைகளை நமது பண்பாடபாட்டு சூழலில் காணப்படும் குறியிடுகள், படிமங்கள், புராண இதிகாசக் கதைகள் மூலமாகத் தருவது. கவிஞரைப் பொறுத்தமட்டில் இவ்விரு முறைகளையும் துணைக்கொண்டே கவிதைகளை ஆக்கியிருக்கின்றார். தத்துவத் தெளிவும் சிருஷ்டிகரத் திறனும் ஒருங்கே வாய்க்கப் பெற்றிருப்பதே இதற்கு அடிப்படையாக அமைந்துள்ளது. ஆக கவிஞரொருவர் அழவும் முறைப்பட்டுக் கொள்ளவும் வசவுகளை அள்ளித் தெளித்து நம்பிக்கையின்மையில் தோய்ந்து சகதியில் புரளவும் அநேக சந்தர்ப்பங்கள் இருந்தும் வாழ்வை இப்படி ஆக்கபூர்வமாய் சிந்திப்பது கவிஞரொருவரின் ஆன்மபலத்தையே எமக்கு எடுத்துக் காட்டுகின்றது. இவரது கவிதைத் தொகுப்பினை வாசித்த போது கவிஞர் பப்லோ நெருடா கூறிய பின்வரும் வரிகள் எனது சிந்தனையைத் தொட்டன.

“இந்த யுகத்தின் கவிஞனின் முக்கிய பொறுப்பு மக்களுடன் இயல்பான வாழ்நிலையில் இரண்டறக் கலப்பது தான். சிலியின் சமவெளியில் மோதிச் சிதறும் அலைத்தொடர்களின் போர் முரசை நான் அடையாளம் கண்டு கொண்டேன் . மனவெளியுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் உப்பு நீரில் கரைந்து கொண்டிருக்கும் மாமலையும் சமுத்திர வாழ்க்கையின் பலவேறு விசித்திரங்களும் பறவைகள் பாதசாரிகளின் கூட்டமும்; உப்பு விசிறிகள் துகள்கள் என்னை திண்ணப்படுத்தினது.
.....................
என்னை உற்று நோக்கும் நூற்றுக்கணக்கான கண்கள் அந்தக் கண்களின் நான் அன்பின் மென்மையை உணர்கின்றேன். ஒரு வேளை எல்லாக் கவிஞர்களாலும் இதை புரிந்து கொள்வது சிரமமாக இருக்கலாம். ஆனால் இந்த அதிர்ஷ்டம் வாய்த்தவர்கள் யாரோ அவர்கள் இதை இதயத்துக்குள் வைத்து தாலாட்டவே செய்வார்கள். அவர்களுடைய ஒவ்வொரு பிரதிபலிப்பும் இதன் பிரதிபலிப்பாகவே இருக்கும்.”

வாழ்விலிருந்து அந்நியப்படாமல், தொலைதூர தீவுகளுக்குள் ஒதுக்குப்படாமல் இவர் தீட்டியிருக்கும் கவிதை வரிகள் ஈழத்து கவிதை உலகிற்குப் புது வரவாகும். எமது யாசிப்பு இவர் தொடர்ந்து இது போன்ற கவிதைகளை மேலும் கொணர வேண்டும் என்பதே.

- லெனின் மதிவானம்

Pin It