ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றியவர் நகுலன் [ இயற்பெயர் : துரைசாமி ] ; தமிழ் இலக்கியமும் பயின்றவர். 2006 நவம்பரில் ஆர்.ஆர். சீனிவாசன் நகுலனைப் பார்க்கப்போய் இருக்கிறார். அப்போது நகுலனுக்கு 85 வயது. கடுமையான மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் அவர். அறிமுகப்படுத்திக்கொண்ட பின்னரும் எதிரில் இருப்பவரை யாரென்று இனங்காண கஷ்டப்பட்டிருக்கிறார் நகுலன்.

     " நகுலன் கவிதைகளை எதிர் - கவிதை [ Anti - poetry ] என்று வகைப்படுத்தலாம். " என்றார் என் ஆங்கிலப் பேராசிரிய நண்பர் ஒருவர். எதிர் கவிதை என்றாலே கவிதைக்கான எவ்வித அலங்காரமும் இல்லாமல் உரைநடை போலத்தான் இருக்கும் ! நகுலனின் கவிதைகள் எளியவை. ஆனாலும் சற்றே தத்துவப் பாங்குடன் கவிதையின் இறுதியில் ஒரு சிறப்பு அழுத்தம் கொண்டு அமைந்திருக்கும்.

    " நகுலன் எழுதியிருக்கிறார் என்பதற்காக  அவர் எழுதியதையெல்லாம் கவிதை என்று ஏற்றுக்கொள்ள முடியாது . " என்றார் என் எழுத்தாள நண்பர் ஒருவர். நகுலனின் கவிதையை ஏற்றுக்கொள்வதும் அல்லது   அல்லது நிராகரிப்பதும் வாசகனின் சுதந்திரம் என்றே நான் நம்புகிறேன்.

 ' கண்ணாடியாகும் கண்கள் ' என்ற புத்தகத்தின் தலைப்பே அழகாக இருக்கிறது. நகுலனின் கவிதைகளைப் புரிந்துகொள்ள  அவர் வாழ்க்கையைப் பற்றிச் சில தகவல்களைத் தெரிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும். நகுலன் திருமணம் செய்துகொள்ளாதவர். அதனால் பல மனித உறவுகளை இழந்தவர். அவரை யாரோ ஏமாற்றிவிட்டதால் சில இழப்புகளச் சந்தித்தவர். முதுமையின் இறுக்கமும் சேர்ந்து கொண்டதால் பிறர் அவரைச் சந்தித்து உரையாடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

ராமச்சந்திரன்

ராமச்சந்திரனா

என்று கேட்டேன்

ராமச்சந்திரன்

என்றார்

எந்த ராமச்சந்திரன்

என்று நான் கேட்கவில்லை

அவர் சொல்லவும் இல்லை

    நகுலன் எழுத்தில் ஈர்க்கப்பட்டுப் பலர் அவரைச் சந்திப்பது வழக்கம். இக்கவிதையில் புலப்படும் செய்தி : ஒரு முதியவரை நாம் பார்க்கச் சென்றால் அவரிடம் விபரமா நம்மைப் பற்றிச் சில தகவல்களைச் சொல்ல வேண்டும் என்பதுதான்.

   ' ஸ்டேஷன் ' என்றொரு கவிதை .

ரயிலை விட்டிறங்கியதும்

ஸ்டேஷனில் யாருமில்லை

அப்பொழுதுதான்

அவன் கவனித்தான்

ரயிலிலும் யாருமில்லை

என்பதை;

" அது ஸ்டேஷன் இல்லை "

என்று நம்புவதிலிருந்து

அவனால் அவனை

விடுவித்துக் கொள்ள

முடியவில்லை

ஏனென்றால்

ஸ்டேஷன் இருந்தது.

   --- சில நேரங்களில் ஸ்டேஷன் இல்லாத இடத்தில் ரயில் நிற்பதுண்டு. அப்படியொரு இடத்தில் ஒருவர் இறங்கியிருக்கலாம். கவிதைகான புரிதல் குழப்பமாகத்தான் இருக்கிறது.  ஆனாலும் ஸ்டேஷனில் இறங்கியவர் நகுலனாக இருக்கக்கூடும்.

     ' நான் ' என்ற கவிதை.

எனக்கு

யாருமில்லை

நான்

கூட

   --- வாழ்க்கையில் தனிமை ஒரு மனிதரை முக்காலும் விழுங்கிய நிலை இக்கவிதையில் பேசப்படுகிறது. எந்த உறவும் இல்லை. ' நான் கூட ' என்பதில் இளமையில் இருந்த உடல்நலம் , தெம்பு , மன உற்சாகம் எனப்பலவும்  தொலைந்துபோன நிலை உணர்த்தப்படுகிறது. உறவுகள் அற்ற முதுமையில் வெறுமைதான் நான் நானாக இல்லை என்ற தகவலை நமக்குச் சொல்கிறது. நகுலனின் காலம் எப்படித்தான் கழிந்தது ?

கீழ்க்காணும் கவிதை பதிலாக அமைந்துள்ளது.

ஒரு கட்டு வெற்றிலை

பாக்கு சுண்ணாம்பு புகையிலை

வாய் கழுவ நீர்

ஃப்ளாக்ஸ் நிறைய ஐஸ்

ஒரு புட்டி பிராந்தி

வத்திப்பெட்டி சிகரெட்

பேசுவதற்கு நீ

நண்பா

இந்தச் சாவிலும்

ஒரு சுகம் உண்டு

   --- நகுலன் எப்படிப்பட்டவர் என்பதை சுய விமர்சனமாகப் பேசுகிறது ஒரு கவிதை .

நான் ஒரு

உடும்பு

ஒரு

கொக்கு

ஒரு

ஒன்றுமே இல்லை

   --- நகுலனின் காலம் கை நழுவிப்போன கதையைத்தான் சொல்கின்றன மேற்கண்ட வரிகள் ! இளம் வயதில் கொள்கைப் பிடிப்புடன் இருக்க முடிந்தது. நடுத்தர வயதில் மனம் தளர , உடல் தளர வெற்றிக்காகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ' கொக்கு ' என்ற குறியீடு இதைத்தான் சொல்கிறது. மறதி நோய் தாக்கிய முதுமையில் , விரக்தியில் ' ஒன்றுமே இல்லை ' என்றே நினைக்கத் தோன்றுகிறது.

  மற்றொரு கவிதையில் ...

திரும்பிப் பார்க்கையில்

காலம் ஓர் இடமாகக் காட்சி அளிக்கிறது

   --- கடைசி வரியில் வித்தியாசமான படிமம் அமைந்துள்ளது. குழந்தைப் பருவத்திலிருந்து நாம் கடந்து வந்த பாதையை ஓர் இடமாகப் பார்ப்பது புதிய சிந்தனை. இப்பார்வையின் பரப்பில்  நாம் மறந்தவை நீங்கலாக , நினைவில் உள்ளவை வாழ்க்கையின் அர்த்தத்தை நமக்குச் சொல்கிறது.

   கடலை நாம் பார்த்திருக்கிறோம். அலைகளின் விடாமுயற்சி ஓய்வதில்லை. அலைகள் கரையேறிச் சென்று ஒரு நாளும் ஊர் பார்க்க முடியாது [ கொந்தளிக்கும் நேரம் தவிர ] . கடலை உற்றுப் பார்க்கும் போது நம் மனத்தில் தோன்றும் எண்ணங்கள் பலப்பல . கடல் பற்றி நகுலன் சொல்வதென்ன?

கடல்

------

அலைகளைச் சொல்லிப்

பிரயோஜனமில்லை;

கடல் இருக்கும்வரை

   --- பிரச்சனைகள் என்பதன் குறியீடாக அலைகளைச் சொன்னால் வாழ்க்கை கடலாக மாறிவிடும். வாழ்க்கையில் பிரச்சனைகள் ஓய்வதில்லை. இந்த ஓயாநிலை வாழ்க்கையை நகர்த்திச் செல்கிறது.

' இல்லாமல் இருப்பது ' என்ற கவிதை.

இருப்பதெற் கென்றுதான்

வருகிறோம்

இல்லாமல் போகிறோம்

   --- எது நிரந்தரம் ? எல்லாமே நிரந்தரம் என்றால் வாழ்க்கை ருசிக்குமா? நாம் இல்லமல் போனாலும் எச்சங்கள் இருக்கலாம். பூடகத்தன்மையும் தத்துவப் பார்வையும் இந்த சாதாரண வரிகளைக் கவிதையாக்கி இருக்கின்றன.

   நகுலன் எழுதிய கடைசிக் கவிதை...

யாருமில்லாத பிரதேசத்தில்

என்ன நடந்தது கொண்டிருக்கிறது ?

எல்லாம்

   --- ' யாருமில்லாத பிரதேசம் ' என்பது குறியீடாக இருக்கலாம். அவரது வாழ்க்கை சுட்டப்படுகிறது என்பது என் யூகம். நகுலன் கவிதைகளுக்கும் வாசகனுக்கும் உள்ள இடைவெளி குறையக் குறைய நாம் அவரது கவிதைகளை ரசிக்க முடியும் என்பது என் நம்பிக்கை. இவர் கவிதைகளில் காணப்படும் மௌனம் இடைவெளி , வாசகனே இட்டு நிரப்பிக்கொள்ள வேண்டிய வெற்றிடங்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.

தமிழ்க் கவிதை வரலாற்றில் இக்கவிதைகள் எதிர் அழகியல் நோக்கில் மிகவும் வித்தியாசப்படுகின்றன.