வெவ்வேறு துறை சார்ந்த நாவல்கள் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கும் காலம் இது. பொறியியல் பேராசிரியர் ஒருவர் பொறியியல் துறை சார்ந்த கல்வி அனுபவங்களையும், கல்விப் படிப்பிற்குப் பின்னால் பல மாணவர்களின் வாழ்க்கையின் தடம் புரள்வதையும், புதிய திசைகளை நோக்கிச் செல்வதையும் இந்நாவல் எடுத்துரைக்கிறது எனலாம்.

t j prabhuஆசிரியர் பாடத்திட்டம் சார்ந்த பல நூல்களை வெளியிட்டிருப்பவர். அதனால் மாணவர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர். மாணவர்களின் உலகத்தையும் துல்லியமாகத் தெரிந்திருப்பவர், மாணவர்களின் கல்லூரி வாழ்க்கை, விடுதி வாழ்க்கையை விரிவாகச் சொல்கிறார். அக்காலத்தில் அவர்களின் அரசியல் அக்கறையையும், அரசியல் விவாதங்களையும் இந்நாவல் விரிவாகச் சொல்லியிருக்கிறது என்ற காரணத்தால் இது ஒரு அரசியல் நாவல் என்ற பரிமாணத்தை ஆரம்ப அத்தியாயங்கள் தந்து விடுகின்றன. பின்னர் அந்த மாணவர்களின் தனிமனித வாழக்கை பற்றிய பல்வேறு போக்குகளை மீதி அத்தியாயங்களில் சொல்கிறார். ஆறு பாகங்கள் கொண்டது இந்நாவல்.

கல்லூரி வாழ்க்கையில் அரசியல் விவாதங்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன. சோவியத் ரஷ்யா, சீனாவை முன்வைத்த தத்துவார்த்த விவாதங்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன. பொதுவுடமை இயக்கம் சார்ந்த எழுச்சிகளும் வரலாறுகளும் மோதல்களும் விரிவாகவே சொல்லப்பட்டிருகின்றன. இதில் தீவிரவாதப் போக்கு எண்ணங்களும் உண்டு. இந்திய பொதுவுடமைக் கட்சிகளின் வரலாறு பற்றிய பல பதிவுகளையும் அக்கட்சிகளின் போக்குகளையும் நடுநிலையோடு சொல்லியிருக்கிறார். இன்னொரு புறம் வழக்கமான மதம், ஆன்மீகம் சார்ந்த கட்சியினரின் வாதம், பிரதி வாதம் என்ற போக்கும் உள்ளது. ஏறத்தாழ 50 ஆண்டுகளை உள்ளடக்கியதாக இந்நாவல் அமைந்துள்ளது.

கல்லூரி வாழ்க்கை முடிந்து மாணவர்கள் லவுகீக வாழ்க்கைக்குள் புகுகிற போது இருக்கும் சிக்கல்கள், காதல் திருமணம் பிள்ளை குட்டி பெற்றுக் கொள்வது என்பதெல்லாம் சகஜமாகிவிடுகிறது. தன்நலம் சுயநலம் என்றப் போக்குகளில் மனிதர்களின் வாழ்க்கை ஓடுவதைக் காட்டுகிறார். இதில் பொதுவுடமை சார்ந்து கல்லூரியில் இயங்கியவர்கள் சாதாரண மனிதர்களாகிப்போவதும் நடக்கிறது. சொத்து சேர்க்கிறார்கள். வெளிநாடு போகிறார்கள். சவுகரியமாக இருக்கிறார்கள். இது அந்த இயக்கங்களைச் சார்ந்தவர்களை சங்கடத்துக்குள்ளாக்கும் போக்கிலும் சொல்லப்பட்டிருக்கிறது. மறுபுறமான ஆன்மீக எண்ணங்களைக் கொண்டவர்கள் வாழ்க்கையிலும் நிறைய தடுமாற்றங்கள், சங்கடங்கள். சிலர் மனநிலை மாறி பைத்தியத்திற்கு உள்ளாகிப்போவதும் நடக்கிறது.

இவற்றை விவரிக்கும் முறையில் எளிமையும் அனுபவ விஸ்தரிப்பும் பிரபு அவர்களின் தனித் தன்மையுடன் எவ்வித பாதிப்பும் இல்லாமல் சொல்லப்பட்டிருப்பதே அவரின் தனித் தன்மை எனலாம். அனுபவ விவரிப்பு சார்ந்த எழுத்து முறை. எனவே செயற்கைத்தனம் என்ற பேச்சிற்கே இடமில்லை. நதி நீரின் இயக்கம் போல் செல்கிறது. பல துறைகளில் இந்தியா வல்லரசு ஆக வேண்டும் என்று கனவு காண்கிறவர்கள் இதில் வருகிறார்கள். கம்யூனிசமும் ஆன்மிகமும் இணைந்து இந்திய ஆன்மீகம் பிரவகிக்க வேண்டும் என்று கனவு காண்கிறவர்களும் இருக்கிறார்கள். இவர்களின் கனவுகளின் போக்கையும் சிதைவையும் சொல்கிறதில் பிரபு தேர்ச்சியுடன் செயல்பட்டிருக்கிறார். கல்வித்துறை சார்ந்த பாடநூல்களாகட்டும், கல்வித்துறை சார்ந்த அனுபவங்களை படைப்பாக்கும் முயற்சிகளாகட்டும் நேர்மையும் இயல்பும் கலந்த முன்னுதாரணமாக பிரபு தொடர்ந்து இயங்கி வருகிறார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

விடியலை நோக்கி முடிவற்ற பயணம்: த.ஜெ.பிரபு நாவல்
500 பக்க நாவல் : ரூ 250 : வெளியிடு அவரே. (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It