ஒரு படைப்பு வாசிப்பவனின் ஆன்மாவையும் அவனுடைய நனவிலியில் இருக்கிற தொன்மங்களையும் கிளறிவிடவேண்டும். அது இன்னொரு மண்சார்ந்த படைப்பாளியை உருவாக்கவேண்டும். . . அதை கருடகம்பம் சிறப்பாக செய்கிறது.

பொதுவாக எழுத்தாளர்கள் தங்கள் நூல்களை கொடுக்கும்போது எனது பர்ஸில் பணம் இல்லையென்றால் அன்பாக மறுத்துவிடுவதுண்டு அதே போல் முகவரி சொல்லுங்கள் அனுப்புகிறேன் என்று சொல்லும்போது ‘நானே வாங்கிக்கறேன்’ என்று சொல்வதோடல்லாமல் எப்பாடுபட்டேனும் விலைகொடுத்து வாங்கிவிடுவதுண்டு. ஆனால் கருட கம்பத்தை கொடுக்கும்போது அகத்துறவு என்பதாலும் இளஞ்சேரல் எனபதாலும் மறுக்கமுடியவில்லை. கோவையில் தொடர்ந்து இயங்குகிற இலக்கியவாதி. எதைபற்றியும் கவலைப்படாமல் நீண்ட ஆண்டுகளாக இலக்கியச்சந்திப்பை பொன் இளவேனிலோடு இயக்கிவருபவர். சலியாது படைப்புலகில் இயங்கிவருபவர் இளஞ்சேரல்.

பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருவதாலும் நாவலுக்குள் போனால் பிறகு வேறுவேலைகளை அறவே செய்யமுடியாது என்ற பயமும் கருட கம்பத்தின் வாசிப்பை தள்ளிப் போகச் செய்து கொண்டிருந்தன. ஆனால் நான்கைந்துநாளாய் கிடைத்த இரவுகளை கருடகம்பத்தை சுற்றியே செலவிடவேண்டியிருந்தது இன்னும் கூட முடிக்கமுடிக்கவேண்டிய பக்கங்கங்கள் மீதி இருக்கத்தான் செய்கிறது.

ஒரு தொடர்சியில்லாத, ஆனால் தொடர்பிருக்கிற இந்த நகரின் தொன்மங்களை இணைத்து மிக மிக எளிதாக சொல்லப்படுகிற இந்த பூடகமில்லா கதைசொல்லியையும் இந்த மண்ணில் ஒரு நூற்றாண்டுக்கு முன்போ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்போ வாழ்ந்து மடிந்த இதன் கதை மாந்தர்களையும் நாம் அலட்சியமாக கடந்து போய்விடமுடியாது. . அவர்களிடமிருந்து இந்த நகரத்தின் முந்தைய வாழ்வை நாம் மீட்டெடுத்துக்கொள்ள முடியும். இங்கிருந்து ஒரு ஆய்வை தொடங்கிவிடமுடியும்

முத்தொள்ளாயிரத்திலோ, தென்னிந்திய குலங்களும் குடிகளிலுமோ தென்படுகிற சலகர்கள் என்ற இனத்தை இதில் தரிசிக்கமுடிகிறது பன்றிகளோடும் அடங்காத வெறியோடும் அலையும் இந்த சலகர்கள் என்ற இனம் தற்போது எங்கிருக்கிறது என்னவாக இருக்கிறது என்ற ஆய்வை நாம் முன்னெடுக்க முடிந்தால் அதை கோதாவரி தாண்டியும் நீட்டித்துபோகமுடியும் அதே போல் இடக்கர்கலையும் நாம் தேடியாகவேண்டும்.

சேரரது வில்கொடியை இறக்கியும் சோழர்களது புலிக்கொடியை இறக்கியும் தனதுமீன்கொடியை பறக்கவிட்ட பாண்டியனின் பக்கம் நின்ற ஆயர்களின் வாழ்க்கை, அவர்களின் ஏறு தழுவல். அவர்களின் காதலுக்கு துணைநிற்கும் கால்நடைகள், கிளர்சியூட்டும் காதல் மொழிகள், என இந்த ஆயர்களின் வருகை நிகழ்ந்தகாலங்களையும் அவர்கள் மேய்ச்சல் கால்நடைகளின் குளம்படி ஓசைகளையும் கேட்க முடியும். அவர்கள் இப்போது நிலைகொண்டிருக்கும் வேலாண்டி பாளையம், செட்டிபாளையம் இடையர்பாளையம் - ஆயர்களின் ஒரு மானுடவியல் ஆய்வை மேற்கொள்ள போதுமானவையாக இருக்கும்.

வரலாற்று காலத்துக்கும் முந்தைய காலம் தொடங்கி இன்றைய காலம் வரைக்கும் சூளூரும் அதை சுற்றியுள்ள நொய்யலும் கிராமங்களும் முக்கியத்துவம்வாய்ந்த கேந்திரங்களாக விளங்கியதை நாம் அறிந்துவைத்திருக்கலாம் ஆனால் அதன் கூட்டு வண்டிக்காரகள் கூலி நாலிக்கு வண்டியோட்டும் ஆட்டுகாரா அம்மாசிகள் பொன்னரளிப்புதர்களுக்குள் கிடக்கும் சாராய ஊறல்கள் பால்காரர்கள் மொய்க்கும் சந்தை, அதன் சிறு வியாபாரிகள் ஆகியோரின் வாழ்வை கருடகம்பத்தில் அறிந்துகொள்ளமுடியும்.
.
நடயன் சூலையில் எடுக்கும் பொம்மியக்காவும் மதுரைவீரனும் நாய்க்குட்டிகளும் பாம்புகளுமிரவின் வழியே ஊர்ந்து போன தடங்களும், எங்களூரின் சட்டிகளும் சுடுமண் பொம்மைகளும் செய்து வந்த முத்தானும் அம்மாசையும் வந்து போவதை தடுக்கமுடியவில்லை.

விடிகாலை…. பொழுதுக்கு கீச் கீச்சென்று இரவின் சிக்கலான கூந்தலுக்கு சிக்கெடுக்கரதுமாதிரி சிட்டுகளும் மைனாக்களும் உசிப்பிவிட... வடக்காலிருந்த கழுதைகள் னேங் என்று கத்ததொடங்குகிறது. காட்சிப்படுத்தலுக்குள் நாமும் ஒரு குருவியாகவோ கழுதையாகவோ மாறிவிட முடிகிறது.

'சலகர்களின் குறட்டை ஒலிக்கு நொய்யல் நடுங்கிக்கிடந்தது.’, ‘அருள் பூத்துக்குளுங்கிய நடயன் வானத்தை பொத்தான்’ போன்ற கவித்துவம் நிரம்பிய வரிகளுக்கு இடையே நிகழும் உரையாடல்கள்களில் இதுவரை கேட்டுவந்த இந்த மன்ணின் மொழியைவிடவும் கவிச்சி அடிக்கிறது.

ஒரு படைப்பு வாசிப்பவனின் ஆன்மாவையும் அவனுடைய நனவிலியில் இருக்கிற தொன்மங்களையும் கிளறிவிடவேண்டும் அது இன்னொரு மண்சார்ந்த படைப்பாளியை உருவாக்கவேண்டும். . . ஆம் நண்பர்களேஅதை கருடகம்பம் சிறப்பாக செய்கிறது

Pin It