Khalid_Mizhal_450ஹமாஸ் இயக்க முன்னோடி காலித் மிஷ்அல்
ஆசிரியர்: ரியாஸ் அஹமது,
வெளியீடு: இலக்கியச்சோலை பதிப்பகம்
பக்கங்கள்: 152
விலை: 100/

ஃபலஸ்தீனில் நயவஞ்சகத்தனமாக நுழைந்து, குறிப்பிட்ட காலங்களில் பெரும்பாலான இடங்களை ஆக்கிரமித்து, 1948ல் அதற்கு இஸ்ரேல் என்று பெயர் சூட்டினர் யூதர்கள். உலக வரைபடத்தில் இஸ்ரேல் என்ற நாடு கள்ளத்தனமாக உருவெடுத்தது எனலாம். இந்த நிகழ்வு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூக‌த்தையும் அதிர்ச்சியடையச் செய்தது.

தொடர்ந்து யூதர்கள் தங்களுடைய கொடூரங்களை நிகழ்த்தி பெண்களையும், குழந்தைகளையும், முதியோர்களையும் கொன்று குவித்தனர். முழு ஃபலஸ்தீனையும் கைப்பற்றி விடுவோம் என்று சூளுரைத்தனர். யூதர்கள். ஃபலஸ்தீன மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க புறப்பட்டது தான் எழுச்சிமிகு ஹமாஸ் இயக்கம்.

யூதர்கள் ஃபலஸ்தீன மண்ணை விட்டு ஓடும் வரை, எங்களுடைய போராட்டம் தொடரும் என அறிவித்தது ஹமாஸ். முதல் இன்திஃபாழவை (மக்கள் எழுச்சி) தொடங்கியது ஹமாஸ். இந்த எழுச்சி, இஸ்ரேலிய இராணுவத்தை பின்னங்கால் பிடறியடிக்க ஓடச் செய்தது. அப்பொழுதுதான் இவர்கள் ஹமாஸைப்பற்றி புரிந்து கொண்டார்கள்.

ஹமாஸ் இருக்கும் வரை, நம்முடைய கனவு நிறைவேறாது என்பதை இஸ்ரேலியர்கள் உணர்ந்தனர். அதனால், ஹமாஸ் இயக்கத்தை அழிக்க முற்பட்டனர். இதில்தான், ஷேக் அஹ்மது யாசீன், யஹ்யா அய்யாஷ், அப்துல் அஜீஸ் அல் ரன்திஸி போன்ற ஹமாஸ் தலைவர்களை இஸ்ரேலிய உளவுத்துறையான மொஸாத் கொலை செய்தது. இவர்களின் இறப்புகள் ஃபலஸ்தீனில் எழுச்சியைத்தான் ஏற்படுத்தியதே தவிர, மக்களிடம் எந்தவித சோர்வையும் ஏற்படுத்தவில்லை.

இதில் பிரதானமானவரும், ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவருமான காலித் மிஷ்அல் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நின்று செயல்பட்டு வருகிறார். இவரைக் கொல்வதற்கு மொஸாத் செய்த முயற்சிகள் தோல்வியை தழுவின. இதைப் பற்றிய, முழுமையான தகவல்களுடனும், காலித் மிஷ்அல் ஆளுமையைப் பற்றியும் தெளிவாக எடுத்துரைக்கும் நூல்தான் “ஹமாஸ் இயக்க முன்னோடி, காலித் மிஷ்அல்” என்ற புத்தகம்.

நவீன காலனியாதிக்கத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் இஸ்லாமியவாதிகளிடமும், இஸ்ரேலியர்களின் சூழ்ச்சிகளை பொதுத் தளத்திலிருந்து தோலுரித்துக் காட்டுபவர்களிடமும் இருக்க வேண்டிய புத்தகம் தான் இது.

இதை அழகிய நடையில் எழுதியுள்ள ரியாஸ் அஹமது அவர்களுக்கும், வெளியிட்டுள்ள இலக்கியச்சோலை பதிப்பகத்துக்கும் நம்முடைய பாராட்டுக்கள். மேலும், இதுபோன்ற தற்கால நிகழ்வுகளைப் பற்றி எடுத்துரைக்கும் நூல்களை தொடர்ந்து வெளியிட வேண்டும்.

****

தமிழக முஸ்லிம்களின் அரசியல் வரலாறு
ஆசிரியர்: எஸ்.எம். ரஃபீக் அஹமது

வெளியீடு: இலக்கியச்சோலை பதிப்பகம்
பக்கங்கள்: 72
விலை: 45/

இந்தியாவில் முஸ்லிம்களின் அரசியல் வரலாறு என்பது, பெரிதாக பேசப்பட்டது கிடையாது என்பது தான் உண்மை. கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களுக்கு பின்பு முஸ்லிம்களின் அரசியல் தலைமை என்பது வெற்றிடமாகவே இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் வழிநடத்திச் செல்ல சரியான தலைமை இல்லாதது.

இது, வடமாநிலங்களில் அதிகமாகவே வெளிப்பட்டது. அதனுடைய வெளிப்பாடுதான் அங்கு நடைபெற்ற தொடர் கலவரங்கள், இனப்படுகொலைகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

தமிழகத்தைப் பொருத்தவரை அதற்கு விதிவிலக்காக, 1990களின் காலக்கட்டத்திற்குப் பிறகு இஸ்லாமிய அமைப்புகள் இருந்தாலும், அரசியல் தளத்தில் போதிய பிரதிபலிப்பை ஏற்படுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால், தற்பொழுது அதற்கான முயற்சிகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இதனுடைய வெளிப்பாடுதான் விஸ்வரூபம் படத்திற்கெதிரான போராட்டம், நபி (ஸல்) அவர்களை கொச்சைப்படுத்தி எடுத்த அமெரிக்க திரைப்படத்திற்கு எதிரான போராட்டம் ஒட்டுமொத்த இந்தியாவுமே தமிழகத்தை திரும்பிப் பார்க்கும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது.

இது, தமிழக முஸ்லிம்களின் அரசியல் எழுச்சியையும், வழிநடத்திச் செல்வதில் போதிய தலைவர்கள் உருவாகி விட்டார்கள் என்பதையும் அறிவிக்கும் விதமாகத்தான் இருந்தது.

தற்போது, அதனைப்பற்றி விளக்கும் விதமாகத்தான் வெளிவந்துள்ளது “தமிழக முஸ்லிம்களின் அரசியல் வரலாறு” என்ற புத்தகம்.

இந்தப் புத்தகத்தை, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் துணைத் தலைவரும், சிறந்த பேச்சாளருமான எஸ்.எம். ரஃபீக் அஹமது அவர்கள் எழுதியுள்ளார். இவரின் பேச்சு மக்களின் புருவங்களை உயர்த்தும் அளவுக்கு அர்த்தம் பொதிந்த பேச்சாக இருக்கும். இலக்கியச்சோலை வெளியிட்டுள்ள இந்தப் புத்தகம் எதிர்கால தமிழக அரசியலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

- நெல்லை சலீம்

Pin It