வசந்த் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் "கேள்விக்களம்' நிகழ்ச்சியில் அரசியல், சமூகம் சார்ந்த பிரச்சினைகளை நேர் எதிர் கருத்துக்களைக் கொண்ட இரு சாராரை அழைத்து நேரடி கருத்து விவாதம் நடத்தப் பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 16-04-2011 அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.எம். பாக்கரும், தேசிய லீக் தலைவர் பஷீர் அஹ்மதும் கலந்து கொண்டு "முஸ்லிம்களின் ஆதரவு திமுக வுக்கா? அதிமுகவுக்கா?' என்ற தலைப்பில் விவாதித்தனர்.

நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் இருவரிடமும் கேள்விகளைக் கேட்க... அனல் பறந்த விவாதம் நடைபெற்றது.

கார்த்திக் : தமிழக சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இன்னும் 22 நாட்களுக்குப் பின் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்று தெரிந்து விடும் என்பது ஒருபுறம் இருந்தாலும், சிறுபான் மையினரின் வாக்கு யாருக்கு என்ற விஷயத்தில் எதிர்பார்ப்பு உள்ளது. பொதுவாக திமுகவுக்குத்தான் சிறுபான்மையினர் வாக்குகள் என்று பேசப்படுவதை ஒப்புக் கொள்கிறீர்களா?

எஸ்.எம். பாக்கர்: ஒரு காலத்தில் வேண்டுமானால் அப்படி ஏற் றுக் கொண்டிருக்கலாம். ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை. தொடர்ந்து ஒன்றை கலைஞர் சொல்லி வருகிறார். இந்த (முஸ்லிம்) சமுதாயத்தை உங்களிடம் ஒப்படைக்கிறேன் என்று காயிதே மில்லத் கலைஞரிடம் சொன்னாராம். இதை வைத்து முஸ்லிம்கள் திமுகவுக்கு ஆதரவாளர்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார் கலைஞர்.

காயிதே மில்லத் உயிரோடு மீண்டும் வர மாட்டார் என்கிற எண்ணத்தில்தான் இவர் இப்படி கூறுகிறார். அதேபோல நபிகள் நாயகத்தின் பிறந்த நாளுக்கு விடுமுறை அறிவித்தேன்; காயிதே மில்லத்துக்கு மணிமண்டபம் கட்டினேன்; பாலத்துக்கு பெயர் வைத்தேன் என்றெல்லாம் சொல்வார். இவையெல்லாம் எதற்கு? ஆடு, மாடுகள் ஒதுங்குவதற்குத்தான்.

3.5 சதவீத இடஒதுக்கீட்டை திமுகதான் வழங்கியது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் இந்த இட ஒதுக்கீட்டிற்கு முதல்முறையாக 2006ல் ஆணையம் அமைத்தது ஜெயல லிதாதான். நானும், எனக்கு முன்னால் அமர்ந்திருக்கும் பஷீர் அவர்களும் ஜெயலலிதாவை தலைமையகத்தில் சந்தித்த குழு வில் பங்கு பெற்றவர்கள் ஒரு ஆண்டு காலத்திற்கான ஆணை யத்தை ஜெயலலிதா அமைத்தார். 3 நீதிபதிகளைக் கொண்ட ஆணையம் அது. அதில் ஒருவர் முஸ்லிம் நீதிபதி. ஆக, இட ஒதுக்கீட்டிற்கு வழி வகுத்தது ஜெயலலி தாதான்.

பஷீர் அஹ்மது: வழிவகுத்தது வேறு! தருவது என்பது யதார்த்தம். ஜெயலலிதா ஆண்ட 10 ஆண் டுகளில் சிறுபான்மை மக்கள் இடஒதுக்கீட்டைப் பற்றி சிந்திக்கவும் முடியவில்லை. 2007 செப்டம் பர் மாதம் 11ம் தேதி 3.5 சதவீத இடஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு வழங்கியது திமுக அரசு. இது மக்களை சென்றடைந்தது.

எஸ்.எம். பாக்கர்: இதில் நான் மாறுபடுகிறேன். 3.5 சதவீத இடஒதுக்கீடு ஒட்டு மொத்த முஸ் லிம்களுக்கும் சென்றடைய வில்லை. ரோஸ்டர் முறை என்ற குளறுபடிகள் இடஒதுக்கீட்டில் நிலவுகிறது. இதனை மாற்ற வேண்டும் என்று எல்லா முஸ்லிம் அமைப்புகளும் குரல் தொடுத் தன. நாங்கள் 2007லிருந்து போராடினோம். வெள்ளை அறிக்கை வெளியிடக் கூறி வலியுறுத்தினோம். ஆக, கண் டிப்பாக இடஒதுக்கீட்டின் பலன் மக்களைச் சென்றடை யவில்லை.

கார்த்திக் : அதிமுக எந்த வகையான வாக்குறு தியளித்தது?

எஸ்.எம்.பாக்கர் : இவர் (கலை ஞர்) தருவேன் என்பார். ஆனால் தர மாட் டார். ஜெயலலிதா தர மாட்டேன் என்பார் ஆனால் தருவார். ஒரு சின்ன உதாரணம். ஆணையம் அமைப்ப தற்கு கூட முடியாது என்றார் கலைஞர். பஷீருக்கு ஞாபகப்படுத்துகிறேன். லத்தீப் சாஹிப் சட்ட சபையிலே கலைஞரைப் பார்த்து, இட ஒதுக்கீட்டை நீங்கள் தரவில்லை என்றால் யாரும் தர மாட்டார்கள் என்றபோது, “லத்தீப் பாய் என்ன! சமுதாயத்தில் குழப்பம் செய்கிறீர்களா?'' என்று கேட்டவர்தான் கலைஞர்.

பஷீர் : இப்போது இருக்கும் முதலமைச்சர் கோரிக்கைகளை மையமாக வைத்து அதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துவார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீட்டை உயர்த்தி தருவோம் என தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறார். தேர்தல் அறிக்கைகளில் சொன்னவற்றை திமுக ஏற்கெனவே நிறைவேற்றி யிருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலின் போது மைய அரசும், திமுக அரசும் காமன் மினிமம் புரோக்கிராமில் சொன்னபடி நீதிபதி மிஸ்ரா கமிஷன், நீதிபதி சச்சார் கமிட்டி ஆகியவற்றை அமைத்தது. ஆய்வு அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதை நடைமுறைப்படுத்த வலியுறுத்துவோம் என தேர்தல் அறிக்கையில் இப்போது திமுக சொல்லியிருக்கிறது.

எஸ்.எம். பாக்கர் : 2004 தேர்தல் அறிக்கையில் திமுக சொன்னது என்னவானது? 2004லிருந்து 2009வரை 5 ஆண்டுகள் ஆட்சி நடத்தினார்களே அப்போது ஏன் நடைமுறைப்படுத்தவில்லை? மத்திய அரசை ஏன் வலியுறுத்தவில்லை.

எதற்கெல்லாமோ டெல்லி பயணம்! மத்திய அமைச்சர் பதவியைப் பெற டெல்லி பயணம் என்று மேற்கொண்ட கலைஞர், இடஒதுக்கீட்டிற்காக ஒருமுறையாவது டெல்லி சென்றாரா? மிஸ்ரா கமிஷனை அமல்படுத்தவில்லை என்பதற்காக மைய அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்ள முன் வந்தாரா? தேர்தல் அறிக்கை என்பது ஹம்பக்.

பஷீர் : ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என்றால் அதற்கு கால அவகாசம் தேவை. இந்திய அளவில் ஆய்வு செய்து, கணக்கெ டுப்பு நடத்தி, அது இப்பொழுதுதான் முடிவடைந்திருக்கிறது. இனிமேல்தானே தர முடியும்!

நான் சோனியாவை டெல்லியில் சந்தித்து இடஒதுக்கீடு கோரிக்கையை முன் வைத்தபோது கூட, இந்தியா முழுவதற்குமான ரிப்போர்ட் வந்திருக்கிறது. நிலைமைகளை சீராக்கி தருவோம் என்று சொன்னார். கலைஞரும் செய்வோம் என்று சொல்லியிருக்கிறார்.

எஸ்.எம். பாக்கர் : சச்சார் கமிட்டி அறிக்கையில், நீதிபதி சச்சார் - தான் ஆய்வை மேற் கொள்ளும்வரை தலித் மக்கள்தான் சமூகத்தின் கீழ்நிலையில் இருப்பதாக எண்ணியிருந்தேன். ஆனால் தலித்களைவிட முஸ்லிம்கள் மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பது அதிர்ச்சியைத் தந்தது என்றார்.

அதேபோல நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா, “10 சதவீத இடஒதுக்கீட்டை கண்டிப்பாக தர வேண்டும். இதற்கு கணக்கெடுப்பு தேவையில்லை'' என்றார். ஆனால் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரமோ, இந்த கமிட்டி அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக அல்ல. மாறாக நாங்கள் தெரிந்து கொள்வதற்காகத்தான் என்று கூறுகிறார். இவர்கள் எப்படி இடஒதுக்கீட்டைத் தருவார்கள்?

கார்த்திக் : பாஜகவுடன் சேர்ந்து கொண்டு கரசேவையை ஆதரித்த அதிமுக எப்படி முஸ்லிம்களுக்கு நன்மை செய்யும்?

எஸ்.எம். பாக்கர் : கரசேவையை ஆதரித்த ஜெயலலிதா பகிரங்கமாகவே மறுத்தும் இருக்கிறார் என்பதையும் கவனிக்க வேண்டும். ஆனால் கோத்ரா சம்பவம் நடந்தபோது "ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு' என்று கூறி 3 ஆயிரம் முஸ்லிம்களைக் கொன்று குவித்த மோடியின் ஆட்சியை கலைக்க வேண்டும் என்கிற தீர்மானம் வந்தபோது அதற்கு எதிராக வாக்களித்து மோடி அரசை காப்பாற்றும் வேலையை திமுக செய்யவில்லையா?

கார்த்திக் : அதே மோடி சென்னைக்கு வரும்போது ஜெயலலிதா வரவேற்றாரே அது சரியா?

எஸ்.எம். பாக்கர் : அதை சரி என்று சொல்லவில்லை; எதிர்த்தோம்! அதே சமயம், அதே மோடியை டெல்லியில் நடந்த முதல்வர்கள் மாநாட்டின்போது கருணாநிதியே அழைத்துப் பேசினாரே! ஆக, யாராக இருந்தாலும் இன்றைக்கும் நாங்கள் எதிர்ப்போம். எங்கள் போர்க்குணத்தை மாற்றிக் கொள்ள மாட்டோம்.

கார்த்திக் : சிறுபான்மையினரின் ஓட்டு திமுகவுக்கு போய் சேர்ந்திருக்கிறதா?

பஷீர் : 60 ஆண்டு காலத்தில் இட ஒதுக்கீடு குறித்த விழிப்புணர்வை முஸ்லிம் மக்களுக்கு ஏற்படுத்தியவர்களே பீ.ஜே., பாக்கர் மற்றும் சில சகோதரர்கள்தான். (இடைமறிக்கும் பாக்கர், “ஹைதர்அலி, ஜவாஹிருல்லாஹ்... ம்... இன்னும் சொல்லுங்க...'' என்று கூறுகிறார்) ஆனால் 2004 நாடாளுமன்றத் தேர்தலின் போது தேர்தல் அறிக்கையில் சொல்லியபடி சச்சார் கமிட்டி, சிறுபான்மை ஆணையம் அமைத்தது. அப்துல் கலாம் ஆஸத் ஃபவுண்டேஷனை நிறுவி முஸ்லிம்களுக்கு சலுகை வழங்கியது. மக்கள் தொகை கணக்கெடுப் பையும் எடுத்திருக்கிறது மைய அரசு.

மைய அரசிடம் இடஒதுக்கீட்டிற்காக திமுக வலியுறுத்தும் என்று சொல்லியிருக்கி றது. இதற்கு முஸ்லிம் மக்கள் 90 சதவீதம் வாக்களித்திருக்கிறார்கள். கருத்து கணிப்பு, கருத்து திணிப்புகளையெல்லாம் மாற்றிய மைத்து முஸ்லிம்கள் மௌனப் புரட்சியை இந்தத் தேர்தலில் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

கார்த்திக் : திமுகவிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

பஷீர் : கல்வி, வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட் டில் தந்துள்ள இடஒதுக்கீட்டை உயர்த்தித் தர வேண்டும். கலைஞர் சொன்னதை செய் வார்.

கார்த்திக் : அதிமுகவிடத்தில் நீங்கள் எதை எதிர்பார்க் கிறீர்கள்?

எஸ்.எம். பாக்கர் : இட ஒதுக்கீட்டின் அளவை உயர்த்தித் தர வேண்டும். இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு சென்றடையவில்லை. அதிலுள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும். இதை ஜெயலலிதாவும் ஏற்றுக் கொண்டு, “இட ஒதுக்கீடு சரியாக வழங்கப் படவில்லை; அதை சரி செய்வேன்'' என்று பல்வேறு கூட்டங்களில் வாக்குறுதியளித்திருக்கிறார்.

அதேபோல, கட்டாய திருமணப் பதிவுச் சட்டத்தில் திருத்தங்களை செய்து தருவதாக ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். வக்ஃபுக்குச் சொந்தமான 1 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான இடங்கள் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கின்றன. இதை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் ஜெயலலிதா கூறியிருக்கி றார்.

கட்டாயத் திருமணப் பதிவுச் சட்டத்தை கலைஞர் அரசு கொண்டு வந்தபோது இது நடைமுறைச் சாத்தியமில்லை என்று நாங்கள் போராடினோம். அப்போது பஷீர் திமுகவுக்கு காவடி தூக்கினார். மனித நேய மக்கள் கட்சிக்கு 3 இடங்களைத் தந்த ஜெயலலிதா எவ்வித மறுப்புமின்றி தனிச் சின்னத் தில் போட்டியிடவும் அனுமதித்தார். நண்பர் பஷீருக்கு கூட கடந்த முறை ஜெயலலிதா தான் 2 சீட் கொடுத்தார். இந்தத் தேர்தலில் திருமாவளவன் 10 சீட் பெற்றார். ராமதாஸ் 30 சீட் பெற்றார். அந்த வகையில் பஷீருக்கு இந்த முறை 3 சீட்டுகளை திமுக கொடுத்தி ருக்க வேண்டும். அல்லது 2 சீட் தந்திருக்க வேண்டும். ஆனால் 1 சீட் கூட தரவில்லை. இதுவே திமுகவின் மிகப் பெரிய துரோகத்திற்குச் சான்று!

இதெல்லாம் முஸ்லிம் மக்களுக்குத் தெரியும். இதனால் அதிகமான முஸ்லிம்கள் அதிமுகவிற்குத்தான் வாக்களித்திருக்கிறார்கள்.

பஷீர் : அதிமுக எனக்கு 2 சீட் கொடுத்திருந்தது. அந்தச் சூழ்நிலையில் நான் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டேன். இப்போது நான் சுணங்கி விட்டேன். அவர்கள் அழைத்த நேரத்தில் நான் செல்லவில்லை (!) தளபதியும் முன்பே அழைத்தார் (கார்த்திக் இடைமறிக்கிறார்)

கார்த்திக் : மதமாற்ற தடைச் சட்டத்தை அதிமுகதானே கொண்டு வந்தது?

எஸ்.எம். பாக்கர் : அதே சமயம் ஜெயலலிதாவே அந்தச் சட்டத்தை வாபஸ் வாங்கிக் கொண்டார். ஜெயலலிதாவைப் பொறுத்தவரை எதையும் அவர் நேரடியாகவே செய்வார். கருணாநிதியைப்போல் நம்பவைத்து முதுகில் குத்த மாட்டார். மத மாற்றத் தடைச் சட்டம் கூட அறிவித்து விட்டே கொண்டு வந்தார். நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் அது தவறென்று புரிந்து மாற்றிக் கொண்டார்.

மீண்டும் இந்த சட்டத்தை யார் கொண்டு வந்தாலும் எதிர்ப்போம். போர்க்குணம் கொண்டவர்கள் நாங்கள். லீக்குகளைப்போல் அரசியல் கட்சிகளுக்கு அடிமைச் சாசனம் எழுதித் தர மாட்டோம். கொள்கைகளையும் மாற்றிக் கொள்ள மாட்டோம்.

- தொகுப்பு : ஃபைஸ்

Pin It