"எதை நெனைச்சி அப்பப்ப சிரிச்சுக்கிட்டே இருக்குற"?
"ஒண்ணுமில்ல."
"சரி, டீ வாங்கிட்டு வரட்டா?"
"பாதி டீ போதும்"
எழுந்து சென்றான் பாலாஜி. இவன் என்ன லூசா.. இவனுக்கு என்ன ஆச்சு... நாலு நாளா கம்பெனிக்கு வரல... இப்பெல்லாம் ஏர்ன் லீவு போடணும்னா அதிகாரிக்கு முன்னாடியே சொல்லணுமாம்.. நெலமை சரி இல்லை. நிர்வாகம் வி.ஆர்.எஸ் போடப்போவதாக கீழ்மட்டஅதிகாரிகள் மூலமாக டிபார்ட்மென்ட்களில் தொழிலாளர்களிடம் பீலர் விட்டுப் பார்க்க ஆரம்பித்துவிட்டது.
சின்ன சின்ன பிரச்சனைகளில் கூட அறுந்து போன பல்லிவால் போல இவன் நிர்வாகத்தை எதிர்த்துக் கேள்வி கேட்பதால் அதிகாரிகளுக்கு இவன் மேல் எப்போதும் ஒரு கண் இருந்து கொண்டே இருக்கும். யோசித்தவனாக கேன்டீனில் டீ தரும் பையனிடம் போய் நின்றான். "அண்ணே, கூப்பன் கொடுங்க" என்று பையன் கேட்க, நினைவு வந்தவனாய் கூப்பன் கொடுத்து டீ வாங்கிக்கொண்டு அதை இரண்டு டம்ளர்களில் ஊற்றி அவனுக்கு ஒன்றை வைத்துவிட்டு மற்றொன்றை மெல்ல உறிஞ்சிக்கொண்டே
"சுரேஷூ லீவு லெட்டர் கூடகுடுக்காம மாமியார் ஊட்டுக்குப் போயிட்டியே... மேனேஜ்மென்ட் வார்னிங் நோட்டீஸ் அனுப்புனா என்னடா பண்ணுவ... சங்கத்துக்கிட்ட போயி நிப்பியா?"
"நான் ஏன் போகணும். அதான் நீ இருக்கியே. சம்பள ரசீதுல கூட என் கையெழுத்த நீ தானடா போடற. லீவு லெட்டர எம் பேர்ல குடுக்காமயா இருப்பே. அந்த நம்பிக்கைதான்" என்று சொல்லியபடி கேன்டீனில் இருந்து எழுந்து கை அலம்பிக்கொண்டு இருவரும் டிபார்ட்மென்டை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். அப்போதும் சுரேஷ் தன்னை அறியாமல் சிரித்ததைக் கவனித்த பாலாஜி, "சுரேஷ், மாமியார் வூட்டுக்கு போயிட்டு வந்ததுல இருந்து ஒரே கும்மாளமா இருக்கே. மூத்த மாமியார் வயசுக்கு வந்துட்டாங்களா? இல்ல, மச்சினச்சிக்கு மேரேஜ் பிக்ஸாயிடுச்சா? இன்னா தாண்டா ஆச்சி? சொல்லேண்டா" சிரிப்பதை நிறுத்திய சுரேஷ், பாலாஜியை பொய் முகத்தோடு முறைத்துப்பார்த்தான். பிறகு மௌனமாகத் திரும்பி, டிபார்ட்மென்ட்டுல உள்ள நோட்டீஸ் போர்டு பக்கம் சென்றவன். கம்பெனியின் சர்க்குலர் ஏதாவது புதிதாக ஒட்டப்பட்டிருக்கிறதா என்று நோட்டம்விட்டான்.
இரண்டு நாட்களுக்கு முன்பு சர்வீசில் இறந்து போன இளவயது தொழிலாளியின் போட்டோ ஒன்றுடன் இரங்கல் தெரிவித்து நிர்வாகம் ஒரு நோட்டீஸ் ஒட்டி இருந்தது. பாலாஜியைத் திரும்பிப்பார்த்தான். அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட பாலாஜி, "மச்சி தெரியுதா யாருன்னு, தண்ணி வண்டிடா, எப்ப பார்த்தாலும் டாஸ்மாக்குல இருப்பான்ல அவன்தான். காலைல பல்ல விளக்குவானோ இன்னமோ கடைக்கு வந்துட்டு தான்வேலைக்கே வருவான். இவன் சரக்குப் சாப்பிடப்போயி, சரக்கு இவன சாப்டிடுச்சு... அவன் பொண்டாட்டி நேத்து மூணு வயசுப்பையனோட கம்பெனி கேட்டுல வந்து நின்னுச்சு பாவம்..."
எதுவும் பேசாத சுரேஷ் தனது டிபார்ட்மென்டை அடைந்து பீரோவைத் திறந்து, வேறு துணிகளை எடுத்து அணிந்து கொண்டு டூல்ஸ் பாக்சை கையில் எடுத்தபடி மிஷினை நோக்கி நடந்தவன், திரும்பி பாலாஜியைப் பார்த்துச் சிரித்தான்.
பாலாஜிக்கு ஒரே குழப்பம். “சுரேஷூக்கு என்ன நடந்திருக்கும். கட்டுப்படுத்த முடியாத சிரிப்புக்கு என்ன காரணம். எதுவாக இருந்தாலும், நம்மிடம் மறைக்க மாட்டானே" என்று யோசித்தபடி, அருகில் இருக்கும் தனது கட்டிங் மிஷினிடம் சென்றான். அங்கேயே இருக்கும் அலமாரியைத் திறந்து துணி மாற்றிக்கொண்டு வேலையில் இறங்கினான்.
ஐம்பதாண்டு காலமாகச் செயல்பட்டு வரும் பெரிய தொழிற்சாலை அது. உலகில் முன்னணி கனரக வாகனங்கள் செய்யும் ஆலையாதலால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அதில் பணிபுரிந்து வருகின்றனர். 1999ல் பணியில் சேர்ந்தவர்களாக இருந்தனர் சுரேசும், பாலாஜியும், இரண்டாண்டுகள் கேசுவலாக இருந்து, பின்பு 6 மாதம் புரபோஷனலாக மாறி பெர்மனன்ட் ஆன பின்பு ஓராண்டு இடைவெளிகளில் மணம் புரிந்து கொண்டவர்கள்.
பேச்சிலராக இருக்கும் போதே ஏற்பட்ட நட்பு இன்றுவரை தொடர்கிறது. சங்கத்தின் நடவடிக்கைகளில் இருவருக்கும் ஆர்வமிருந்தாலும் சுரேஷ் கொஞ்சம் கூடுதலான ஈடுபாடு உடையவன். அவனின் மூத்த அண்ணன் தஞ்சாவூரில் பலரால் நன்கறியப்பட்ட ஒரு பகுத்தறிவாளர். இவனுக்கும் அந்தக் கொள்கையில் ஈர்ப்பு அதிகம்.
பின்னாட்களில் சங்கச் செயல்பாடுகள் அவனை வீணான சடங்குகளிலிருந்தும், மூட மதத் தப்பபிப்ராயங்களில் இருந்தும் விடுவித்திருந்தது. இருந்தாலும் மத நம்பிக்கையாளர்களைப்புண்படுத்திப் பேசும் வழக்கம் அற்றவன். நல்லவன் என்று பொதுவாக நன்கறியப்பட்டவன் ஆகையால் அவனுக்கே தனது தங்கையைக் கொடுத்தால் என்ன என்று நினைத்திருந்த சங்க செயற்குழு உறுப்பினர் ராமசுப்பிரமணியம், ஒருநாள் பாலாஜியிடம் வந்து விஷயத்தைச் சொல்ல, அந்தப் பெண்ணே சுரேஷின் இந்நாளைய துணைவியானாள். இல்லறம் நல்லறமாகவே நடந்துவருகிறது.
கல்யாணம் ஆகி ஒரு வருடம் ஆனதால் மனைவியின் வற்புறுத்தலைத் தவிர்க்க இயலாமல் மாமியார் வீட்டுக்குப்போனவன், இன்றுதான் கம்பெனிக்கு வந்திருக்கிறான். விசில் சத்தம் பலமாகக் கேட்க, டீயும் பிஸ்கட்டும் கேன்டீனில் இருந்து டிபார்ட்மென்ட்டுக்கு வந்துவிட்டதை உணர்ந்த பாலாஜி, மிஷினை நிறுத்திவிட்டு ஸ்டூலில் வந்து அமர்ந்தான். சுரேஷ் பிஸ்கெட்டையும் டீயையும் எடுத்துக்கொண்டு இவனிடம் வந்து சேர்ந்தான்.
"எந்த கம்பெனியில இருந்து கட்டிங் டூலை வாங்குறானுங்களோ தெரியல, எல்லாம் மொக்கையா இருக்குது மாமு. ஒரு லைனு வுட்டவுடனே பட்டுனு தெறிக்குது” என்று சொன்ன பாலாஜியிடம், ரிடையர் ஆகிய அதிகாரிங்க எல்லாம் கம்பெனிக்கு மெட்டீரியல் சப்ளையர் ஆயிடறானுங்க. பின்ன எப்படி இருக்கும்? என்று கூறிய சுரேஷிடம், பாலாஜி அடக்க முடியாத ஆவலோடு மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான். "என்னடா.. ஆச்சு உனக்கு, ஊருக்குப்போயிட்டு வந்ததுல இருந்து ரொம்ப சந்தோஷமா இருக்கற!"
"அட நீ ஒண்ணு சும்மா இருப்பா, என்னத்த சொல்றது அந்த கண்றாவியை" என்றவன் ஏதோ நினைவுக்கு வந்தவனாய்ச் சிரிக்க ஆரம்பித்தான்.
பொறுமையை இழந்த பாலாஜி, "சரி கிளம்பு, காத்து வரட்டும், சொல்றான்னா ரொம்பத்தான் பிகு பண்றே!" என்று கோபித்ததைப் பார்த்த சுரேஷ், "இரு மச்சி, வேலையை முடிச்சிட்டு வந்துடறேன். உங்கிட்ட சொல்லாம வேறு யார் கிட்ட சொல்லப்போறேன்" என்று சொல்லியபடி மிஷினை ஓட்டுவதற்காக ஸ்விட்சைப் போட்டான்.
மணமான கடந்த ஆண்டில் இருந்து பலமுறை நல்லதுக்கும், கெட்டதுக்கும் மாறி மாறி ஐந்தாறு முறை மாமனார் வீட்டுக்குப் போனவன் தான் சுரேஷ். கல்யாணச் சடங்குகள் எதையும் விடாமல் பெண் வீட்டார் செய்தது இவனுக்குள் ஒரு சலனத்தை ஏற்படுத்தவே செய்தது.
பெண் வீட்டில் இதுவரை அவன் பார்க்காத ஒரு அறையை, இவன் மாமியார் இவனை அழைத்து வந்து திறந்து காட்டினார். அந்த அறை பூஜை அறையாம். தான் மட்டுமே தன் குல வழக்கப்படி இந்த அறையில் பூஜை செய்வதாகவும், தனக்கு அருள் வந்து குறி சொல்லவும் இந்த அறையை பயன்படுத்துவதாகவும் சொன்னது இவனுக்குள் பெரிய வியப்பை ஏற்படுத்தியது.
"மாப்பிள்ளே! இதுவரைக்கும் நீங்க எப்படி எல்லாமோ இருந்திருக்கீங்க, அதப்பத்தி நாங்க கவலைப்படலே. இனிமே நீங்க அப்படி இருக்கிறது நம்ம குடும்பத்துக்கு ஒத்து வராது. சனிக்கிழமை கூட கவுச்சி செய்ய சொல்றீங்கன்னு விமலா எங்கிட்ட சொல்லி ரொம்ப வருத்தப்பட்டா. அமாவாசை, பவுர்ணமி, கிருத்திகை தினம்னா விசேஷ பூஜை செய்ற குடும்பம் எங்க குடும்பம். எங்களோட நீங்களும் இனிமேல் அனுசரிச்சுப்போகணும். நாளைக்குக் காலைல நம்ம சொந்தக்காரங்க எல்லோரும் வீட்டுக்கு வரப்போறாங்க. வரலட்சுமி விரதம் இருக்கப்போறேன். நீங்களும் பூஜையில் கலந்துக்கணும். மறுப்பு சொல்லக்கூடாது" என்று ஒரு சிறப்பு சொற்பொழிவையே நடத்திவிட்டார் சுரேஷின் மாமியார் கனகலட்சுமி அம்மாள்.
மறுக்க இயலாதவனாக மறுநாள் காலையிலேயே குளித்து முடித்து மனைவியின் பாசத்தை பற்று அறுக்க விரும்பாத சுரேஷ் பூஜை அறையில் போய் உட்கார்ந்துவிட்டான்.
சொந்த பந்தங்கள் எல்லாம் கூடி, பக்திப் பரவசத்தோடு பூஜை ஆரம்பிக்கவும், மாமியார் கனகலட்சுமி அம்மாளுக்கு அருள் வரவும் பெரும் சத்தத்தோடு குலவையிட்டவள், "தாயே, இந்த வீட்டுக்கு ஆகாத குணத்தோட ஒருத்தன் வந்து சேர்ந்துட்டாம்பா, தப்பு தண்டா ஏதும் இருந்தா இத்தோட விட்டுடு. உம் பாதத்தைப் பணிஞ்சு சேவிச்சுக்கிறேன் தாயே"ன்னு கேட்டு,
“எவன் நெட்டுக்கா விழுந்து எழறானோ அவன என் குலத்தோட ஒண்ணா இப்பவே சேர்த்தேன்"னு பெரும் குரலெடுத்து சொல்லி முடிக்கும் முன்பாக, இவனின் மாமனார் "விமலா, மஞ்சத்தண்ணிய சீக்கிரம் கொண்டாம்மா" ன்னு சத்தம்போட, இவன் மனைவி உள்ளே ஓடி ஒரு சொம்பில் மஞ்சள் தண்ணியைக் கொண்டு வந்து கொடுக்க, அதை வாங்கி மடமடவென குடித்த கனகலெட்சுமி அம்மாள் கொஞ்சநேரத்தில் ஆ... ஓ...வென அலறி, காறித்துப்பியபடி வெளியே வாசலுக்கு ஓடினாள்.
அங்கிருந்தபடியே விமலா என்று ஓங்கிக் குரல்கொடுக்க, அவசர அவசரமாக விமலா வெளியே போனாள், சிறிது நேரம் எந்தச் சத்தமும் கேட்கவில்லை. பூசை அறையில் இருந்த எங்கள் எல்லோருக்கும் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. சிறிது நேர மௌனத்திற்குப்பிறகு கனகலட்சுமி அம்மாளிடம் இருந்து ஒற்றை வார்த்தை மட்டும் விகாரமாக வந்து விழுந்தது: "அடிப்பாவி மகளே! இப்படியா செய்வே...
அந்த கணமே வீடு மயான அமைதியில் போய் விழுந்துவிட்டது. மாமியார் கனகலட்சுமி அம்மாள், அடி வயிற்றைப் பிடித்தபடி அவளின் அறையில் உள்ள மெத்தையில் வந்து விழுந்தாள்.
பூசைக்கு வந்திருந்த சகலைகள் தத்தம் மனைவிமார் பிள்ளைக் குட்டிகளோடு நைவேத்திய பிரசாதங்களைக் கூட எடுத்துக் கொள்ளாமல், ஊர் போய்ச்சேரும் அவசரத்தில் ஒவ்வொருவராக வீட்டைக் காலி செய்தனர்.
மாலை 6 மணிக்கு பஸ்சுக்கு ரிசர்வேசன் செய்திருந்ததால், பொறுமையாகப் புறப்பட்டு சென்னைக்குப்போகும் பஸ்ஸில் அமர்ந்தனர் சுரேஷும் விமலாவும். யாரும் எதுவும் பேசவில்லை. திருச்சி மலைக்கோட்டை கண் பார்வையில் இருந்து மறைந்து, காவேரி பாலத்துக்கு எதிர் திசையில் பஸ் வேகமாகச் சென்று கொண்டிருந்தது.
இரண்டொரு முறை விமலாவைத் திரும்பிப் பார்த்த சுரேஷுக்கு பிறந்த வீட்டுக்குப் போகிறோம் என்ற உணர்வு எவ்வளவு சந்தோஷமாக இருந்ததோ, அது அத்தனையும் மங்கி மறைந்து தொங்கிப்போன முகத்தோடு சென்னை திரும்பும் அவளின் நிலை, மனதைநெருட, மௌனத்தைக் கலைத்து அவனே கேட்டான்; "விமலா என்ன நடந்தது?"
இம்முறை கணவனின் முகத்தை ஊடுருவி ஆழமாகப் பார்த்த விமலா, எதுவும் பேசாமல் ஜன்னல் ஓரம் பார்வையைத் திருப்பிக்கொண்டாள்.
சே... இவர் எவ்வளவு நல்லவர்... எப்பவாவது என்னோட சொந்த நம்பிக்கையை மறுத்திருக்கிறாரா? நான் இவரை என்னோட வழிக்கு கொண்டுவர அம்மாவை ஒரு கருவியாகப் பயன்படுத்தியது சரிதானா? ஆத்தாளின் அருள்வாக்கு என்று அம்மா வாயிலாகச் சொல்லி அத்தானை கரெக்ட் பண்ணப்போய் அம்மாவின் வாயாலேயே ‘அடிப்பாவி’ என்ற அவப்பெயரோடு ஊர்திரும்புகிற நிலைமை ஆயிடுச்சே..." என்று விமலா விசனப்பட்டாள்.
அப்பாவிப் பூனை முகமாகத் தெரிந்தது விமலாவின் முகம்.
"சொல்லு, விமலா என்ன நடந்தது?" மீண்டும்கேட்டான் சுரேஷ். தூக்கக் கனவில் திடீரென விழித்துக்கொள்ளும் இரண்டு வயது குழந்தையைப் போல் பேசினாள் விமலா:
"அம்மாவின் அருள் வாக்கு முடிஞ்ச உடனே மஞ்சத் தண்ணிய குடிக்கும் வழக்கம் இருக்குது. நான் அவசரத்துல சமையல் அறையில் இருந்த மஞ்சத் தூளுக்குப் பதிலா மிளகாய்த் தூளை கரைச்சு அம்மாவுக்குக் குடுத்திட்டேன். நாம ஒண்ணு நினைக்க கடவுள் ஒண்ணு நினைச்சுட்டாம் போல" என்றவளிடம், “பாவம்... இனிமே கனகலட்சுமி அம்மாவுக்கு அருள்வாக்கு வர்றது கஷ்டம்தான்" என்று இவன் சொல்ல, பஸ்ஸில் சக பயணிகளோடு பயணிக்கிறோம் என்பதையும் மறந்து இருவரும் வாய்விட்டு சிரித்தனர்.
இதைக்கேள்விப்பட்ட பாலாஜியும் தான்...
- ஜே.ஜேசுதாஸ்