1.
சென்னைக்கு வந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த நகரம் எனக்கு ஒரு முகவரியைக் கொடுத்திருக்கலாம்; ஆனால், ஒரு சொந்த ஊரின் உணர்வை முழுமையாகக் கொடுத்ததில்லை. வாடகை வீட்டிலிருந்து வாடகை வீட்டுக்கு அலைந்து கொண்டே இருந்தேன். வாழ்க்கை முழுவதும் பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்ட பொருட்களைப் போல, நானும் என் குடும்பமும் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நகர்ந்து கொண்டே இருந்தோம்.

நாங்கள் குடிபுகுந்த பத்தாவது வீடு, அந்த நாவல் மரம் நிறைந்த தெருவில் இருந்தது. அந்தத் தெருவின் அமைப்பே ஒருவிதமான நடுத்தர வர்க்க (மிடில் கிளாஸ்) இறுக்கத்தைப் பிரதிபலித்தது. இரண்டு பக்கமும் நெருக்கமாக நின்ற வீடுகள்; ஆனால், ஒவ்வொன்றிற்கும் இடையே ஒரு கண்ணுக்குத் தெரியாத சுவர் இருந்தது.dogs 640காலை நேரங்களில் பெண்கள் வாசலில் கோலம் போடும்போது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும், அது வெறும் இயந்திரத்தனமான தலையசைப்பு மட்டுமே. மாலையில் குழந்தைகள் கிரிக்கெட் விளையாடினாலும், பெரியவர்கள் தங்கள் வீட்டு வாசலில் நின்றுகொண்டு மற்றவர்களின் நடமாட்டத்தை வேடிக்கை பார்ப்பார்களே தவிர, ஒருவரோடு ஒருவர் மனம் திறந்து உரையாடிக் கொள்ளும் சூழல் அங்கு இல்லை. எல்லோரும் தங்கள் சொந்த உலகத்திற்குள் சுருங்கிப் போய் வாழ்ந்தார்கள்.

ஒரு வீட்டில் விசேஷம் நடந்தால் கூட, பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு அது பெரிய விஷயமல்ல.

“யார் வீட்டு விஷயத்தில் யார் தலையிடுவது?”

என்ற அலட்சியமும், பாதுகாப்பான இடைவெளியும் அந்தத் தெருவின் எழுதப்படாத விதியாக இருந்தது. அப்படிப்பட்ட, ஒருவரை ஒருவர் பெரிதாகக் கவனிக்காத, ஆனால் எல்லாரும் நெருக்கமாக வாழ்ந்த அந்தத் தெருவில்தான் நாங்கள் குடியேறினோம்.

குடிபெயர்ந்த முதல் வாரம் முழுவதும் பெட்டிகளை அடுக்குவதிலும், பழைய பொருட்களைச் சீரமைப்பதிலும் கழிந்தது. ஒரு நாள் காலை முத்து கதவைத் திறந்ததும் திடுக்கிட்டுப் போனாள். வாசலின் ஓரத்தில் ஒரு கருப்பு நாய் படுத்திருந்தது. எலும்புகள் வெளியே தெரியும் அளவுக்கு மெலிந்திருந்தது. உடல் முழுக்க தூசி; கண்களில் சோர்வு. ஆனால், அந்தச் சோர்வுக்குள் கூட ஒரு விசித்திரமான அமைதி இருந்தது.

“ஏங்க... இங்க ஒரு நாய் படுத்திருக்கு...” என்று முத்து உள்ளே இருந்து கூப்பிட்டாள்.

வெளியே வந்து பார்த்தேன். நாய் தலையை மட்டும் தூக்கி எங்களைப் பார்த்தது. பிறகு மீண்டும் தலையைக் கீழே வைத்துக்கொண்டது. துரத்தினால் ஓடிவிடும் என்று நினைத்தேன்.

“போ... போ...” என்று கையை அசைத்தேன்.

அது அசையவே இல்லை. எங்களைப் பார்த்துக் கொண்டே இருந்தது. அந்தப் பார்வையில் பயம் இருந்தது; அதே நேரத்தில் எங்காவது தஞ்சம் தேடி வந்த ஒரு சோர்வும் இருந்தது.

“பாவம்...” என்று முத்து மெதுவாகச் சொன்னாள்.

நான் எதுவும் பேசவில்லை. என் வாழ்க்கையில் பல அகதிகளைப் பார்த்திருக்கிறேன். ஊரை இழந்தவர்கள், உறவுகளை இழந்தவர்கள், தங்களுக்கென்று ஓர் இடம் தேடி அலைந்தவர்கள். அந்த நாயின் கண்களில் கூட அதே சோர்வு தெரிந்தது.

அடுத்த இரண்டு நாட்கள் அது எங்கள் வீட்டின் பின்னால் இருந்த காலி இடத்தில் பதுங்கிக் கிடந்தது. பகலில் யாராவது வந்தால் ஒளிந்து கொள்ளும்; இரவில் மட்டும் வெளியே வந்து சுற்றும். தெருவில் இருந்த சிலர் அதைப் பார்த்து விரட்டினார்கள்; சிலர் கல்லை எடுத்து எறிந்தார்கள்; சிலர் திட்டினார்கள். ஆனால், அது யாரிடமும் எதிர்த்துத் குரைக்கவில்லை; அமைதியாக ஒதுங்கிச் சென்றது.

முத்து மட்டும் அதைப் பார்த்தால் ஒரு கைப்பிடிச் சோற்றை வெளியே வைத்து விடுவாள். முதலில் அது சாப்பிடவே இல்லை; அவள் உள்ளே சென்ற பிறகுதான் வந்து சாப்பிட்டுவிட்டுப் போகும். அப்படியே நாட்கள் நகர்ந்தன.

ஒருநாள் மாலை முத்து தெருவுக்குள் நடந்து சென்றாள். அவள் பின்னால் இரண்டு அடிகள் தூரத்தில் அந்த நாயும் நடந்தது. முத்து நின்றால் அது நின்றது; முத்து நடந்தால் அது நடந்தது. அதைப் பார்த்துத் தெருவில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பித்தார்கள்.

“அட... நாய் வீட்டைத் கண்டுபிடிச்சிருச்சு போல...”

“இது உங்க நாய்தானே?”

“வெளியிலிருந்து கொண்டு வந்துட்டு நாடகம் ஆடறீங்களே...”

என்று பேச ஆரம்பித்தார்கள். முத்து எவ்வளவு விளக்கம் சொன்னாலும் யாரும் நம்பவில்லை. ஆனால், அந்த நாளிலிருந்து ஒரு விஷயம் மாறிவிட்டது. நாய் இனி ஒளிந்து கொள்ளவில்லை; முத்துவின் பின்னால் தைரியமாக நடக்க ஆரம்பித்தது.

அந்த நேரத்தில் அதற்குப் பெயர்கூட இல்லை. ஆனால், சில நாட்களில் தெருவே அதை ஒரு பெயரால் அழைக்க ஆரம்பித்தது — “கறுப்பன்”.

2.

கறுப்பன் எங்கள் வீட்டைத் தேர்ந்தெடுத்த சில வாரங்களிலேயே, தெருவும் அவனை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியது. முதலில் அவனைப் பார்த்தவர்கள் முகம் சுளித்தார்கள்.

“இன்னொரு தெரு நாயா?”

“இதை யார் சோறு போடுறாங்க?”

“நாளைக்குக் குட்டி போட்டுத் தெருவையே நிரப்பப் போகுது...”

என்று குறை சொல்லியவர்கள் ஏராளம். ஆனால், கறுப்பன் யாருடைய கருத்தையும் பொருட்படுத்தவில்லை. அவன் செய்ய வேண்டிய வேலையை அமைதியாகச் செய்து கொண்டிருந்தான். காலை எழுந்ததும் தெருவின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனை வரை சுற்றிவருவான்; பிறகு எங்கள் வீட்டு வாசலருகே வந்து படுத்துக் கொள்வான். உள்ளே வர முயற்சிக்க மாட்டான். தனக்கான எல்லை எது என்று தெரிந்த மனிதனைப் போல நடந்துகொள்வான். அதுதான் என்னை ஆச்சரியப்படுத்தியது.

ஒருநாள் முத்து அவனைத் குளிக்க வைக்க முடிவு செய்தாள்.

“இப்படி அழுக்கா இருக்கக் கூடாது. கொஞ்சம் சுத்தமா இருந்தா இன்னும் அழகா இருக்கும்...” என்றாள்.

ஒரு வாளி தண்ணீரும் சோப்பும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். கறுப்பன் முதலில் சந்தோஷமாக வாலை ஆட்டிக்கொண்டே அவளருகே வந்தான். ஆனால், வாளியைப் பார்த்ததும் ஏதோ புரிந்துவிட்டது போல இரண்டு அடி பின்னால் நகர்ந்தான்.

“கறுப்பா... வா...” என்று முத்து அழைத்தாள். அவன் வரவில்லை.

“ஒன்னும் பண்ண மாட்டேன், வா...” அவன் இன்னும் இரண்டு அடி பின்னால் போனான்.

நான் உள்ளே நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். சில நிமிடங்களில் தெருவே ஒரு நாடக அரங்கமாக மாறிவிட்டது. முத்து ஒரு பக்கம், கறுப்பன் ஒரு பக்கம்; இருவரும் ஒருவரை ஒருவர் சுற்றிக்கொண்டிருந்தார்கள். இறுதியில் முத்து அவனைப் பிடித்துவிட்டாள்.

ஆனால், அடுத்த கணம் நடந்ததைப் பார்த்து நாங்கள் இருவரும் சிரித்துவிட்டோம். கறுப்பன் அவளது கால்களைக் கட்டிக்கொண்டு கீழே படுத்துவிட்டான்.

“தயவுசெய்து குளிக்க வைக்காதே...” என்று கெஞ்சுவது போல இருந்தது அந்த முகம். அந்த முகத்தைப் பார்த்ததும் முத்துவால் அதற்கு மேல் தொடர முடியவில்லை.

“சரி போ... நீ ஜெயிச்சிட்ட...” என்று சிரித்தபடி விட்டுவிட்டாள். அதன்பிறகு கறுப்பன் மீது குளியல் என்ற பேச்சே வரவில்லை.

மெல்ல மெல்ல கறுப்பனின் உடல் தேற ஆரம்பித்தது. எலும்புகள் தெரிந்த உடலில் தசைகள் உருவாகின; கழுத்து தடித்தது, மார்பு விரிந்தது. அவன் நடந்து வரும்போது ஒரு கம்பீரம் தெரிந்தது. அந்த கம்பீரம்தான் தெருவில் புதியவர்களுக்குப் பயத்தை உண்டாக்கியது.

பல நாய்கள் சத்தமாகக் குரைத்துப் பயமுறுத்தும்; கறுப்பன் அப்படியில்லை. அவன் குரைக்கவே வேண்டியதில்லை, அமைதியாக நின்று பார்த்தாலே போதும். அந்தப் பார்வையில் ஓர் எச்சரிக்கை இருக்கும். “இது என் தெரு” என்று சொல்லும் உரிமை இருக்கும்.

ஒருநாள் இரவு மூன்று தெரு நாய்கள் எங்கள் தெருவுக்குள் வந்தன. உணவுக்காக வந்திருக்கலாம் அல்லது புதிய இடத்தை ஆக்கிரமிக்க வந்திருக்கலாம். அவை வந்த சில நிமிடங்களில் கறுப்பன் எழுந்தான். முதலில் குரைக்கவில்லை; அமைதியாக அவற்றை நோக்கி நடந்தான். பிறகு திடீரென்று ஒரு உறுமல்! அந்தச் சத்தம் தெருவையே அமைதியாக்கிவிட்டது.

மூன்று நாய்களும் உடனே பின்னால் நகர்ந்தன. ஆனால், கறுப்பன் நிற்கவில்லை; தெருவின் எல்லை வரை துரத்திச் சென்றான். அவை கண்காணாத தூரம் ஓடிய பிறகுதான் திரும்பி வந்தான்.

அடுத்த நாள் முதல் தெருவில் இருந்தவர்கள் அவனை வேறு கண்களால் பார்க்க ஆரம்பித்தார்கள்.

“இரவு திருடர்கள் வந்தா முதல்ல இதுதான் கத்தும்.”

“இருக்கட்டும்... நல்ல நாய்தான்.”

“தெருவுக்குக் காவலா இருக்குது.”

என்று பேச ஆரம்பித்தார்கள். முன்பு விரட்டியவர்கள் கூட இப்போது உணவு வைக்க ஆரம்பித்தார்கள். கறுப்பன் மட்டும் மாறவில்லை; எப்போதும் போல அமைதியாகவே இருந்தான்.

அந்த நாட்களில் நான் அவனை அடிக்கடி கவனிப்பேன். சில நேரங்களில் அவன் தெருவை நோக்கிப் படுத்திருப்பான்; சில நேரங்களில் வானத்தைப் பார்த்துக்கொண்டிருப்பான்; சில நேரங்களில் வெறுமனே கண்களை மூடிக்கிடப்பான். அவன் என்ன நினைக்கிறான் என்று எனக்குத் தெரியாது.

ஆனால், சில உயிர்களைப் பார்த்தால் மட்டும் ஓர் உணர்வு வரும் — அவை ஏதோ ஒரு கதையைச் சுமந்து கொண்டிருக்கின்றன என்று. கறுப்பனைப் பார்த்தாலும் எனக்கு அப்படித்தான் தோன்றும். எங்கிருந்தோ வந்து சேர்ந்தவன், எதையோ இழந்தவன், யாரையோ தேடி அலைந்தவன், இறுதியில் எங்கள் வாசலில் வந்து நின்றவன்.

அந்த நேரத்தில் எங்களுக்குத் தெரியவில்லை, கறுப்பனின் வாழ்க்கையில் இன்னொரு உயிர் நுழையப் போகிறது என்று. அவள் வந்த பிறகுதான் தெருவும் மாறப் போகிறது, கறுப்பனும் மாறப் போகிறான்!

3.

எங்கள் வீட்டின் பக்கத்தில் ஒரு பாதியில் நிறுத்தப்பட்ட கட்டிடம் இருந்தது. அந்தக் கட்டிடத்தைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஒரு முடிக்கப்படாத வாழ்க்கை நினைவுக்கு வரும். அண்ணன்-தம்பி சொத்துத் தகராறில் சிக்கிய கட்டிடம் அது. தூண்கள் எழுந்திருந்தன; சுவர்கள் பாதியில் நின்றிருந்தன. கதவுகளும் இல்லை, ஜன்னல்களும் இல்லை. மழை பெய்தால் மழை உள்ளே விழும், வெயில் அடித்தால் வெயில் உள்ளே புகும். பல ஆண்டுகளாக யாரும் உள்ளே சென்று வாழாத அந்த இடம், தெருப் பூனைகள் மற்றும் எலிகளின் உலகமாக மாறியிருந்தது.

கறுப்பன் அங்கே அடிக்கடி சென்று வருவதை நான் கவனித்திருந்தேன். முதலில் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பகலில் ஒரு முறை, மாலையில் ஒரு முறை, சில நேரங்களில் இரவு நேரத்திலும் அவன் உள்ளே போவான்; சிறிது நேரம் கழித்து வெளியே வருவான். என்ன வேலை என்று யாருக்கும் தெரியாது.

ஒருநாள் முத்து சிரித்துக்கொண்டே சொன்னாள்: “கறுப்பனுக்கு ஏதோ ரகசியம் இருக்கு.”

“என்ன ரகசியம்?”

“யாரையோ பார்க்கப் போறான் போல.”

நான் சிரித்துவிட்டேன். ஆனால், சில நாட்களில் அவள் சொன்னது உண்மை என்று தெரியவந்தது.

ஒரு மாலை நேரம், கறுப்பன் வழக்கம்போலக் கட்டிடத்திற்குள் சென்றான். சிறிது நேரத்தில் வெளியே வந்தான்; ஆனால், இந்த முறை தனியாக இல்லை. அவனுக்குப் பின்னால் ஒரு சிறிய வெள்ளை நாய் வந்துகொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் நாங்கள் இருவரும் ஆச்சரியப்பட்டோம்.

கறுப்பன் ஆறடி உயரம் கொண்ட கட்டுமஸ்தான மனிதனைப் போல இருந்தால், இந்த வெள்ளை நாய் முழங்கால் உயரமுள்ள ஒரு பெண்ணைப் போல இருந்தது. உடல் முழுவதும் அழுக்கு, கண்கள் சிறியதாக, முகம் சற்று 'சைனீஸ்' முக அமைப்புப் போல இருந்தது. கறுப்பனின் கம்பீரத்திற்கு நேர்மாறான தோற்றம்; ஆனால், இருவரும் அருகருகே நின்றபோது ஏதோ ஒரு பொருத்தம் இருந்தது. அந்தப் பொருத்தத்தை வார்த்தைகளால் விளக்க முடியாது.

மறுநாளே தெருவில் பேச்சு ஆரம்பித்துவிட்டது.

“இதுதான் அவன் போய்ப் பார்த்துக்கிட்டு இருந்ததா?”

“காதலி கிடைச்சுட்டாளே!”

“இனி தெருவுக்குச் சங்கடம்தான்...”

என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்து சொன்னார்கள். முத்து மட்டும் இருவரையும் பார்த்துச் சிரித்தாள். “பாரு... எவ்வளவு சந்தோஷமா இருக்கான்” என்றாள்.

உண்மையில் கறுப்பன் மாறியிருந்தான். முன்பைவிட அதிகமாக வாலை ஆட்ட ஆரம்பித்தான்; அடிக்கடி கட்டிடத்தை நோக்கி ஓடுவான். சில நேரங்களில் வெள்ளையுடன் சேர்ந்து தெருவில் சுற்றுவான். இருவரும் சேர்ந்து நடந்தால் கறுப்பனின் முகத்தில் ஒரு பெருமை தெரியும் — தன் உலகத்திற்கே அவளை அறிமுகப்படுத்துவது போல!

அந்த நாட்களில் எங்கள் கட்டிடத்தைச் சுத்தம் செய்ய வரும் ஓர் அம்மா இருந்தார். அவருக்கு நாய்கள் மீது அளவில்லாத பாசம். வேலைக்குச் செல்லும் இடங்களில் கிடைக்கும் உணவுகளைச் சேமித்து வைத்து, கறுப்பனுக்கும் வெள்ளைக்கும் கொண்டு வந்து கொடுப்பார். உணவு கொடுப்பது மட்டுமல்ல, அருகில் உட்கார்ந்து பேசுவார்; நேரம் செலவிடுவார். அவரது பேச்சைக் கேட்டால், நாய்களுடன் அல்ல, பழைய நண்பர்களுடன் பேசுவது போல இருக்கும்.

“சாப்பிட்டியா?”

“எங்கே போயிருந்தே?”

“இன்று ஏன் அமைதியா இருக்கே?”

என்று கேள்வி கேட்பார். பலமுறை அந்த அம்மா “கறுப்பா...” என்று கூப்பிடும்போது, முத்து தன்னை அழைக்கிறாரோ என்று நினைத்து வெளியே ஓடி வந்திருக்கிறாள். அவ்வளவு நெருக்கமாகப் பேசுவார்.

ஒருநாள் அந்த அம்மா ஒரு தகவலைச் சொன்னார்: “இந்த கறுப்பன் இங்க பிறந்த நாய் மாதிரி தெரியல.”

“ஏன்?”

“நாய் பிடிக்கிறவங்க குடும்பக் கட்டுப்பாடு பண்ணப் பிடிச்சப்போ தப்பிச்சு வந்திருக்கலாம்.”

நான் சிரித்தேன். “அப்படியா?”

“எனக்கு அப்படித்தான் தோணுது.”

அவர் சொன்னதை முத்து நம்பினாள்; ஆனால் நான் நம்பவில்லை. ஏனோ தெரியவில்லை, எனக்குக் கறுப்பனைப் பார்க்கும்போதெல்லாம் வேறோர் உணர்வு வந்தது — என்னைத் தேடித்தான் வந்திருக்கிறான் என்று. எங்கோ தொலைவில் இருந்து, ஏதோ ஒரு காரணத்திற்காக.

அன்று இரவு கறுப்பன் எங்கள் வாசலில் படுத்திருந்தான்; வெள்ளை அவன் அருகில் சுருண்டுகிடந்தது. நான் அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். திடீரென்று பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.

வேலணை... வைரவர் கோவில்... சிதறிக்கிடந்த சில்லறைகள்... என்னுடன் சென்ற நண்பர்கள்... வானத்தில் இருந்து விழுந்த குண்டுகள்... ஒரே கணத்தில் முடிந்துபோன மூன்று உயிர்கள்... நான் மட்டும் உயிரோடு மீண்ட நாள்.

அந்த நினைவு எப்போதும் என்னை விட்டுப் போகாது. சில நேரங்களில் உயிர் தப்பியவன் என்ற குற்ற உணர்வாக வந்து நின்றுவிடும். அன்று இரவு கறுப்பனைப் பார்த்தபோது ஏனோ அந்த நினைவு மீண்டும் வந்தது.

சில உயிர்கள் நம் வாழ்க்கைக்குள் சாதாரணமாக வருவதில்லை. அவை ஒரு நினைவையும், ஒரு செய்தியையும், ஓர் ஆறுதலையும் கொண்டு வருகின்றன. கறுப்பன் அப்படிப்பட்ட உயிராக இருக்கலாம் என்று நான் நினைத்தேன்.

காலம் மெதுவாக நகர்ந்தது. ஒருநாள் காலை வெள்ளையைப் பார்த்த முத்து திடீரென்று சொன்னாள்: “ஏங்க... இதைப் பாருங்க.”

“என்ன?”

“இது குட்டி போடப் போகுது போல இருக்கே...”

நான் வெள்ளையைப் பார்த்தேன். அவள் மெதுவாக நடந்தாள்; வயிறு சற்று பெருத்திருந்தது. கறுப்பன் அவளை விட்டு ஒரு நிமிடம் கூட பிரியாமல் சுற்றிக்கொண்டிருந்தான். அவன் முகத்தில் ஒரு பதற்றமும், ஒரு மகிழ்ச்சியும் கலந்திருந்தது. அந்த நாளிலிருந்து அவன் காவல்காரன் மட்டுமல்ல, ஒரு குடும்பத் தலைவனாகவும் மாற ஆரம்பித்தான்.

ஆனால், அந்த மாற்றம் எங்கள் தெருவையே தலைகீழாக மாற்றப்போகிறது என்பதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை...

4.

வெள்ளை கர்ப்பமாக இருப்பது தெரிந்த நாளிலிருந்து கறுப்பன் மாறிவிட்டான். முன்பு தெருவின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனை வரை சுற்றி வருவான்; புதிய நாய் ஏதாவது தெருவுக்குள் நுழைந்தால் விரட்டிவிடுவான்; இரவு நேரங்களில் காவல்காரனைப் போல விழித்திருப்பான். இப்போது அவன் கவனம் முழுவதும் வெள்ளையின் மீதே இருந்தது.

வெள்ளை எங்கு சென்றாலும் பின்னால் செல்வான்; அவள் சாப்பிடும் வரை அருகில் நின்று பார்த்துக்கொண்டிருப்பான். சில நேரங்களில் முத்து சோறு வைக்கிறாள் என்றால், தன்னுடைய பங்கையே சாப்பிடாமல் வெள்ளைக்காக விட்டுவிடுவான்.

“பாருங்க... அப்பாவாகப் போறவன் இப்பவே பொறுப்பாகிட்டான்...” என்று முத்து சிரிப்பாள்.

நானும் சிரிப்பேன். ஆனால், கறுப்பனின் முகத்தில் சிரிப்பு இல்லை; அவன் உண்மையாகவே ஒரு பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்தான்.

மழைக்காலம் ஆரம்பித்திருந்தது. ஒரு இரவு முழுக்க மழை பெய்தது. காலை எழுந்தபோது வெள்ளையைக் காணவில்லை; கறுப்பனையும் காணவில்லை. முத்து பதற்றமாகிவிட்டாள்.

“எங்கே போயிருக்கும்?”

“அந்த கட்டிடத்தில்தான் இருக்கும்” என்று நான் சொன்னேன்.

மதியம் வரை இருவரும் வெளியில் வரவில்லை. மாலை நேரத்தில் கறுப்பன் மட்டும் வெளியே வந்தான். அவன் நேராக எங்கள் வீட்டின் வாசலுக்கு வந்தான். முத்து வைத்திருந்த சோற்றை வாயில் கவ்விக்கொண்டு மீண்டும் அந்தப் பாதி கட்டிடத்திற்குள் ஓடிவிட்டான். சில நிமிடங்கள் கழித்து மீண்டும் வந்தான்; மீண்டும் உணவை எடுத்துச் சென்றான்.

அப்போதுதான் முத்து மெதுவாகச் சொன்னாள்: “குட்டி போட்டிருக்கு.”

அடுத்த சில நாட்கள் வெள்ளை வெளியே வரவே இல்லை. அந்தப் பாதி கட்டிடமே அவளுடைய உலகமாக மாறிவிட்டது. கறுப்பன் மட்டும் தினமும் உணவு எடுத்துச் சென்று வந்தான். தெருவில் இருப்பவர்கள் யாரும் உள்ளே சென்று பார்க்கவில்லை; ஆனால், அந்த கட்டிடத்தைக் கடந்து செல்லும்போது ஒரு சின்ன சத்தம் கேட்கும் — “கீச்... கீச்...” புதிய உயிர்களின் சத்தம்.

அந்தச் சத்தம் கேட்டாலே கறுப்பன் விழிப்பாகிவிடுவான். யாராவது அருகில் சென்றால் கண்களைத் திறந்து கவனிப்பான்; எச்சரிக்கை பார்வை. ஆனால் கோபம் இல்லை, பயம் இல்லை; ஒரு தந்தையின் கவலை மட்டும்.

நான்கு நாட்கள் கழித்து முதன்முறையாக ஒரு குட்டி வெளியில் வந்தது. சின்ன கருப்பு உருண்டை; நடக்கவே தெரியாமல் தள்ளாடிக்கொண்டு வந்தது. அதன் பின்னால் இன்னொன்று, பிறகு இன்னொன்று; மொத்தம் ஐந்து குட்டிகள்! ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறத்தில், ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணத்தில்.

ஒரு குட்டி எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும்; ஒரு குட்டி எப்போதும் தூங்கிக்கொண்டே இருக்கும். ஒரு குட்டி எதைப் பார்த்தாலும் பயந்து அம்மாவைத் தேடி ஓடும்; மற்றொன்று கறுப்பனைப் போலக் கம்பீரமாக நடக்க முயலும்.

முத்துவுக்கு அவற்றைப் பார்த்ததும் பாசம் வந்துவிட்டது. “எவ்வளவு அழகா இருக்குங்க...” என்று தினமும் ரசித்துக்கொண்டிருப்பாள்.

ஆனால், தெருவில் இருப்பவர்களுக்கு அந்த மகிழ்ச்சி இல்லை. முதலில் சிரித்துக்கொண்டே பார்த்தார்கள்; பிறகு முகம் சுளிக்க ஆரம்பித்தார்கள். ஏனென்றால் குட்டிகள் வளர வளர பிரச்சினைகளும் வளர ஆரம்பித்தன. காலடியில் சுற்றுவது, வண்டி எடுக்கும்போது குறுக்கே வருவது, சாலையின் நடுவில் படுத்துக்கொள்வது, குழந்தைகள் விளையாடும் இடத்துக்குள் ஓடிவருவது எனத் தொந்தரவுகள் நீடித்தன.

தெருவில் இருப்பவர்கள் குறை சொல்ல ஆரம்பித்தார்கள்.

“இப்படி இருந்தா முடியாது.”

“இன்னும் வளர்ந்தா என்ன ஆகும்?”

“யாராவது ஏதாவது செய்யணும்.”

ஒவ்வொரு நாளும் ஒருவராவது வந்து பேசுவார்கள். அவர்களுக்கு ஒரு பதில், எனக்கு ஒரு கோபம், முத்துவுக்கு ஒரு வருத்தம்.

ஒருநாள் எதிர் வீட்டுக்காரர் நேராக என்னிடம் வந்து சொன்னார்: “அண்ணே... இந்த நாய்கள் எல்லாம் உங்களால்தான் வந்திருக்கு.”

அன்று எனக்கு ஏற்கனவே வேலைச்சுமை அதிகமாக இருந்தது. அதற்கு மேலாகப் பல நாட்களாகக் கேட்டுக்கொண்டிருந்த குறைகள் என் பொறுமையை உடைத்துவிட்டன.

“இந்த நாய்க்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என்று குரல் உயர்த்தினேன்.

அவர் ஏதோ சொல்ல முயன்றார். நான் தொடர்ந்தேன்: “என்னால பிடிச்சுக்கிட்டு போக முடியாது. உங்களுக்கு இவ்வளவு பிரச்சினையா இருந்தா நீங்களே பிடிச்சுக்கிட்டு போங்க. இனிமேல் நாய் விஷயமா என்னிடம் பேச வேண்டாம்” என்று சொல்லிவிட்டு உள்ளே வந்துவிட்டேன்.

வெளியில் இருந்தவர் அமைதியாகப் போய்விட்டார். ஆனால், என் கோபம் உள்ளே வந்த பிறகும் குறையவில்லை.

அன்று இரவு என்னால் தூங்க முடியவில்லை. வெளியில் குட்டிகள் விளையாடும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. முத்துவும் அமைதியாக இருந்தாள். சிறிது நேரம் கழித்து அவள் கேட்டாள்: “இப்ப என்ன பண்ணப் போறோம்?”

நான் பதில் சொல்லவில்லை. ஏனென்றால் எனக்கும் தெரியவில்லை. ஒருபுறம் கறுப்பன், மற்றொரு புறம் தெருவில் இருப்பவர்கள்; இரண்டுக்கும் நடுவில் நாங்கள்.

அன்று இரவு முதல்முறையாக ஒரு முடிவு எடுக்க வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருப்பதை நான் உணர்ந்தேன். அந்த முடிவு கறுப்பனின் வாழ்க்கையையும், வெள்ளையின் வாழ்க்கையையும், எங்கள் வாழ்க்கையையும் மாற்றப்போகிறது என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை...

5.

குட்டிகள் பிறந்தது முதல் ஒரு மாதம் வரை தெருவில் இருந்தவர்களின் பொறுமையும், எங்களின் அமைதியும் ஒன்றாகச் சோதிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. முதலில் எல்லோருக்கும் குட்டிகள் பிடித்திருந்தன. வேலைக்குப் போகும் முன் நின்று பார்த்துச் செல்வார்கள்; குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்ததும் அவற்றுடன் விளையாடுவார்கள். “எவ்வளவு அழகா இருக்கு...” என்று ரசித்தவர்களே, சில வாரங்களுக்குப் பிறகு முகத்தைச் சுளிக்க ஆரம்பித்தார்கள். அதற்குக் காரணமும் இருந்தது.

குட்டிகள் இப்போது கட்டிடத்தின் உள்ளே மட்டும் இல்லை; முழுத் தெருவும் அவற்றின் விளையாட்டு மைதானமாக மாறிவிட்டது. காலை வீட்டின் கதவைத் திறந்தால் வாசலில் இரண்டு குட்டிகள்; மதியம் வண்டி எடுக்கப் போனால் சக்கரத்தடியில் ஒன்று; மாலை நேரத்தில் தெருவின் நடுவே ஓட்டப்பந்தயம். யாரும் வேண்டுமென்று தொந்தரவு செய்யவில்லை, ஆனால் அவற்றின் இருப்பே தொந்தரவாக மாறிவிட்டது.

ஒவ்வொரு நாளும் யாராவது ஒருவர் வந்து பேசுவார்கள்.

“இப்படி எத்தனை நாள்?”

“நாளைக்கு இன்னும் குட்டி போட்டா?”

“இதுக்கு ஒரு முடிவு கட்டணும்.”

முதலில் நான் அமைதியாக இருந்தேன்; பிறகு எரிச்சலடைந்தேன்; இறுதியில் பேசுவதையே தவிர்க்க ஆரம்பித்தேன்.

ஆனால், முத்துவால் அப்படி இருக்க முடியவில்லை. அவள் தினமும் குட்டிகளைப் பார்த்துப் பழகியிருந்தாள். ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாகப் பெயர் வைக்காத குறைதான். அவை சாப்பிடுகிறதா? தண்ணீர் குடிக்கிறதா? எங்கே தூங்குகின்றன? என்று கவனித்துக்கொண்டே இருப்பாள்.

ஒரு இரவு சாப்பிட்டு முடித்தபிறகு நாங்கள் இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தோம். வெளியில் கறுப்பன் படுத்திருந்தான்; அவனது அருகில் வெள்ளை; அவர்களைச் சுற்றி ஐந்து குட்டிகள். ஒரு முழுமையான குடும்பம் போல. அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டே நான் சொன்னேன்:

“இப்படி நீடிக்காது.”

முத்து எதுவும் பேசவில்லை.

“தெருவில இருக்குறவங்க நாளுக்கு நாள் கோபப்படுறாங்க.”

அவள் இன்னும் அமைதியாக இருந்தாள்.

“ஒரு வழிதான் இருக்கு.”

அப்போதுதான் அவள் என்னைப் பார்த்தாள். “என்ன வழி?”

“கிண்டியில இருக்குற காப்பகத்தில குட்டிகளை விட்டுடலாம்.”

அந்த வார்த்தைகள் வெளியே வந்ததும் அவளது முகம் மாறியது — நான் எதிர்பார்த்தது போலவே.

“அப்படியா?” என்று மட்டும் கேட்டாள். அவளது குரலில் கோபம் இல்லை; ஆனால் வருத்தம் இருந்தது.

அன்று இரவு நீண்ட நேரம் பேசினோம். இறுதியில் முத்து ஒரு நிபந்தனையுடன் சம்மதித்தாள்.

“இப்ப இல்ல.”

“ஏன்?”

“இன்னும் பால் குடிக்குது.” சில நொடிகள் அமைதியாக இருந்தாள். பிறகு மெதுவாகச் சொன்னாள்: “தாய்ப்பாலை விட்டுட்டுத் தானா சாப்பிட ஆரம்பிச்ச பிறகு கூட்டிட்டுப் போங்க.”

நான் தலையசைத்தேன். அதுதான் நியாயம்; வேறு வழியும் இல்லை.

அடுத்த ஒரு மாதம் எனக்கு மிகவும் சிரமமான காலமாக இருந்தது. காலை வெளியே போகும்போது யாரையாவது சந்தித்தால் சங்கடம்; மாலை வீட்டுக்குத் திரும்பும்போது யாராவது குறை சொல்வார்கள் என்ற பயம். சில நேரங்களில் தெருவில் நடக்கும்போது கூட தலையைக் குனிந்தபடியே நடப்பேன். ஒரு தெரு நாயின் குடும்பம் இவ்வளவு பிரச்சினை தரும் என்று நினைத்ததே இல்லை.

ஆனால், கறுப்பனுக்கும் வெள்ளைக்கும் அந்த உலக நடைமுறைகள் தெரியாது; அவர்கள் சந்தோஷமாகவே இருந்தார்கள். குட்டிகளும் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டிருந்தன.

ஒருநாள் காலை முத்து சொன்னாள்: “இப்ப சாப்பிட ஆரம்பிச்சுடுச்சு.”

அவள் சொல்லியதும் என் மனம் கனத்தது. இந்த நாள் வரும் என்று தெரியும்; ஆனால் இவ்வளவு சீக்கிரம் வந்துவிடும் என்று நினைக்கவில்லை. மதியம் ஒரு பெரிய அட்டைப்பெட்டி வாங்கி வந்தேன். முத்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள்; எதுவும் பேசவில்லை. நானும் பேசவில்லை.

ஒன்றன்பின் ஒன்றாகக் குட்டிகளைப் பிடிக்க ஆரம்பித்தேன். முதல் குட்டி விளையாட்டாக நினைத்து ஓடி வந்தது; இரண்டாவது என்ன நடக்கிறது என்று புரியாமல் வாலை ஆட்டியது; மூன்றாவது என் கையை நக்கியது; நான்காவது பெட்டிக்குள் சென்ற பிறகும் வெளியே வர முயன்றது; ஐந்தாவது மட்டும் கத்திக்கொண்டே இருந்தது. அவற்றைப்பிடித்துக் கொண்டிருந்த ஒவ்வொரு நிமிடமும் என் மனம் கனத்துக்கொண்டே போனது.

வெள்ளை தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்தது, அவள் கண்களில் குழப்பம். கறுப்பன் மட்டும் எங்களை விட்டுப் பார்வையை அகற்றவில்லை. அவன் குரைக்கவில்லை, எதிர்க்கவில்லை, தாக்கவுமில்லை; அமைதியாக நின்று பார்த்துக்கொண்டிருந்தான். அந்த அமைதிதான் என்னை அதிகம் வேதனைப்படுத்தியது. “நீங்க என்ன பண்ணுறீங்க என்று எனக்குத் தெரியும்...” என்று அவன் புரிந்துகொண்டது போல இருந்தது.

பெட்டியை மூடியபோது முத்து உள்ளே சென்றுவிட்டாள்; அவளால் பார்க்க முடியவில்லை. நானும் அதிக நேரம் அங்கே நிற்கவில்லை. பெட்டியை எடுத்துக்கொண்டு வண்டியில் வைத்தேன். குட்டிகள் உள்ளே சத்தம் போட்டுக்கொண்டிருந்தன.

வண்டியை இயக்கியபோது கண்ணாடியில் பார்த்தேன். கறுப்பன் தெருவின் நடுவில் நின்றிருந்தான்; அவன் அருகில் வெள்ளை. இருவரும் வண்டி போகும் திசையையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்தப் பார்வை என் மனதில் இன்றும் அழியவில்லை.

காப்பகத்தில் குட்டிகளை ஒப்படைத்துவிட்டுத் திரும்பி வந்தபோது தெரு வழக்கம்போலவே இருந்தது. ஆனால், ஏதோ ஒன்று குறைந்துவிட்டது போல் தோன்றியது. வீட்டுக்கு வந்ததும் முத்து கேட்டாள்:

“விட்டுட்டு வந்தீங்களா?”

“ஆமாம்.”

அவள் தலையசைத்தாள். அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

அன்று இரவு கறுப்பன் வழக்கம்போல வாசலில் படுத்திருந்தான்; வெள்ளை அவன் அருகில் இருந்தது. ஆனால், இருவரும் நீண்ட நேரம் அந்தப் பாதி கட்டிடத்தை நோக்கிப் பார்த்துக்கொண்டே இருந்தார்கள். அங்கே இப்போது அமைதி மட்டுமே இருந்தது. குட்டிகளின் சத்தம் இல்லை, ஓட்டம் இல்லை, விளையாட்டு இல்லை; வெறும் வெறுமை மட்டுமே எஞ்சியிருந்தது.

அந்த வெறுமை அங்கேயே முடிந்துவிடவில்லை. இன்னும் ஒரு பெரிய பிரிவு காத்திருக்கிறது என்பதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை...

6.

குட்டிகளைக் காப்பகத்தில் ஒப்படைத்த பிறகு சில நாட்கள் தெரு அமைதியாக இருந்தது. குறைகள் குறைந்தன; முறையீடுகள் நின்றன. எதிர் வீட்டுக்காரர் கூட சிரித்த முகத்துடன் பேச ஆரம்பித்தார். அவர்களுடைய பார்வையில் பிரச்சினை முடிந்துவிட்டது.

ஆனால், கறுப்பனுக்கும் வெள்ளைக்கும் அந்தக் கதை அங்கே முடிந்துவிடவில்லை. அவர்கள் மீண்டும் பழைய வாழ்க்கைக்குத் திரும்ப முயன்றார்கள். காலை தெருவில் சுற்றுவது, மாலை வாசலில் படுத்துக்கிடப்பது, இரவு இருவரும் சேர்ந்து அமைதியாக இருப்பது என எல்லாமே வழக்கம்போல நடந்தது.

ஆனால், மனிதர்களின் மனம் அங்கேயே நின்றுவிடவில்லை.

“ஒருவாட்டி குட்டி போட்டாச்சு.”

“இன்னும் இருவரும் சேர்ந்தே இருக்காங்க.”

“மீண்டும் இதே கதை ஆரம்பிச்சா?”

“கறுப்பன் இருக்கட்டும், அந்த வெள்ளையை விரட்டிடணும்.”

என்று புதிய பேச்சுகள் தொடங்கின. நான் கேட்காதது போல நடந்துகொண்டேன்; முத்து கோபப்பட்டாள். ஆனால், யாருடனும் சண்டை போடவில்லை. ஏனென்றால் என்ன செய்தாலும், கறுப்பனையும் வெள்ளையையும் பிரிக்க முடியாது என்பது அவளுக்குத் தெரியும். அவர்களுக்குள் இருந்த பந்தம் அதைவிட வலிமையானது.

ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாள்... எல்லாமே வழக்கம்போல நடந்துகொண்டிருந்தது. பிறகு ஒருநாள் காலை திடீரென்று ஏதோ மாறிவிட்டது. வாசலில் கறுப்பன் இல்லை, வெள்ளையும் இல்லை. முதலில் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை; சுற்றிப் பார்க்கப் போயிருப்பார்கள் என்று நினைத்தோம். மதியம் ஆனது, மாலை ஆனது, இரவு ஆனது; இருவரும் வரவில்லை.

முத்துவின் முகத்தில் கவலை தெரிந்தது. “ஏங்க... எங்க போயிருக்கும்?”

“வரும்” என்று நான் சொன்னேன்; ஆனால், என் குரலிலேயே நம்பிக்கை இல்லை.

மறுநாளும் வரவில்லை; மூன்றாம் நாளும் இல்லை. அப்போது தெருவில் கிசுகிசுக்கள் ஆரம்பித்தன.

“யாரோ நாய் பிடிக்கிறவங்களிடம் சொல்லியிருக்காங்க.”

“பிடிச்சுக்கிட்டு போயிருப்பாங்க.”

“இனி திரும்ப வராது.”

அந்த வார்த்தைகள் முத்துவின் காதில் விழுந்தபோது அவள் கோபமாகச் சொன்னாள்: “அப்படி பண்ணியவங்க நல்லா இருக்க மாட்டாங்க.” அவளது கண்களில் கண்ணீர் இருந்தது. அன்று முழுவதும் அவள் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

நான்காவது நாள் மதியம் இரண்டு மணியளவில் வெளியில் ஏதோ சத்தம் கேட்டது. கதவைத் திறந்து பார்த்த முத்து திடீரென்று உறைந்து நின்றாள்.

“ஏங்க...!” அவளது குரல் நடுங்கியது.

நான் ஓடிப்போய்ப் பார்த்தேன். வாசலின் ஓரத்தில் கறுப்பன் படுத்திருந்தான். ஆனால், அது நாங்கள் அறிந்த கறுப்பன் இல்லை. தெருவை ஆட்சி செய்த கம்பீரமான உடல் காணாமல் போயிருந்தது. உடல் முழுவதும் சோர்வு, கண்களில் பயம், கால்கள் நடுங்கின; முழு உடலும் நடுங்கிக்கொண்டிருந்தது. எழுந்து நிற்கவே முடியாமல் மூச்சுவிட்டுக் கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்த அந்த நொடியிலேயே ஏதோ மோசமான ஒன்று நடந்திருக்கிறது என்று புரிந்தது. என்ன நடந்தது? எங்கே இருந்தான்? யார் பிடித்தார்கள்? எப்படி தப்பி வந்தான்? எதற்கும் பதில் இல்லை. ஆனால், அவனது உடலே அந்தக் கதையைச் சொல்லிக்கொண்டிருந்தது.

முத்து உடனே உள்ளே ஓடினாள்; பானையில் இருந்த சோற்றை எடுத்து வந்தாள், குழம்பை ஊற்றினாள். கையால் பிசைந்து அவன் முன் வைத்தாள்.

“சாப்பிடு கறுப்பா...” என்று குழந்தையிடம் பேசுவது போலப் பேசினாள்.

கறுப்பன் மெதுவாகத் தலையை உயர்த்தினான்; அவளைப் பார்த்தான், பிறகு சாப்பிட ஆரம்பித்தான். அந்த நேரத்தில் முத்துவின் கண்களில் நீர் வழிந்தது. அவள் அதை மறைக்க முயன்றாலும் முடியாமல் போயிற்று.

அடுத்த இரண்டு நாட்கள் அவள் அவனை விட்டு நகரவே இல்லை. காலை, மதியம், மாலை என எப்போதும் அவன் அருகிலேயே இருப்பாள்; தண்ணீர் வைப்பாள், சோறு வைப்பாள், தலையைத் தடவுவாள். கறுப்பன் அமைதியாக அவளைப் பார்த்துக்கொண்டிருப்பான். அவன் கண்களில் ஒரு நன்றி இருந்தது — ஓர் உயிர் இன்னொரு உயிரை நம்பும் அந்தப் பார்வை அது.

மெல்ல மெல்ல அவன் உடல் தேற ஆரம்பித்தது. நடுங்கல் குறைந்தது, நடக்க ஆரம்பித்தான், சாப்பிட ஆரம்பித்தான். ஒரு வாரம் கழித்து பழைய கறுப்பனைப் போலத் தெருவில் சுற்ற ஆரம்பித்தான். ஆனால், அவனிடம் ஏதோ ஒன்று மாறியிருந்தது; அதுவும் மிகவும் மாறியிருந்தது.

முன்பு புதியவர்களைப் பார்த்தால் எச்சரிக்கையாக இருப்பான், இப்போது வாலை ஆட்டினான். முன்பு தெருவுக்குள் வரும் நாய்களை விரட்டுவான், இப்போது அவற்றைப் பார்த்து அமைதியாக நின்றான். முன்பு காவல்காரனாக இருந்தவன், இப்போது சாமியாராக மாறியிருந்தான். அப்படி ஒரு மாற்றம்!

தெருவில் இருந்தவர்கள் கூட கவனித்தார்கள்: “கறுப்பன் ரொம்ப அமைதி ஆகிட்டானே...” என்று.

எனக்கு மட்டும் அந்த அமைதியின் காரணம் புரிந்தது. சில அனுபவங்கள் உயிர்களை மாற்றிவிடும்; மனிதர்களை மட்டுமல்ல, விலங்குகளையும். கறுப்பன் அப்படியொரு அனுபவத்தைக் கடந்து வந்திருந்தான்.

ஆனால், ஒரு கேள்வி மட்டும் பதிலில்லாமல் இருந்தது — வெள்ளை எங்கே?

கறுப்பன் திரும்பி வந்துவிட்டான்; வெள்ளை மட்டும் வரவில்லை. ஒரு நாள், இரண்டு நாள், ஒரு வாரம், இரண்டு வாரம் என நாட்கள் கடந்தன; அவள் வரவில்லை. கறுப்பன் மட்டும் ஒவ்வொரு மாலையும் தெருவின் முனையை நோக்கிப் பார்த்துக்கொண்டிருப்பான் — யாரையோ எதிர்பார்ப்பது போல, யாரோ திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையுடன். அந்தக் காத்திருப்பு எவ்வளவு நாள் நீடிக்கும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால், விதி இன்னும் ஓர் ஆச்சரியத்தை மறைத்து வைத்திருந்தது...

7.

கறுப்பன் திரும்பி வந்த பிறகு வாழ்க்கை மீண்டும் மெதுவாகத் தனது பாதைக்குத் திரும்பியது. ஆனால், அது பழைய வாழ்க்கை இல்லை. அதே தெரு, அதே வீடுகள், அதே மனிதர்கள், அதே வாசல்; ஆனால், கறுப்பன் மட்டும் மாறியிருந்தான்.

ஒருகாலத்தில் தெருவின் காவல்காரனாக இருந்தவன், இப்போது தெருவின் துறவியைப் போல வாழ ஆரம்பித்திருந்தான். அவன் யாரிடமும் கோபப்படவில்லை; யாரையும் விரட்டவில்லை. புதிய மனிதர்களைப் பார்த்தால் வாலை ஆட்டினான்; குழந்தைகள் வந்து தொட்டால் அமைதியாக இருந்தான். அவன் கண்களில் முன்பு இருந்த விழிப்புணர்வு இன்னும் இருந்தது, ஆனால் அதனுடன் சேர்ந்து ஒரு சோர்வும் குடியேறியிருந்தது.

சில நேரங்களில் அவன் தெருவின் நுனியைப் பார்த்துக்கொண்டு நீண்ட நேரம் படுத்திருப்பான். அவன் யாருக்காகக் காத்திருக்கிறான் என்பது எங்களுக்குத் தெரியும் — வெள்ளையை.

நாட்கள் நகர்ந்தன. ஒரு வாரம், இரண்டு வாரம், மூன்று வாரம்... வெள்ளை திரும்பி வரவில்லை. முத்து அடிக்கடி கேட்பாள்: “அவளும் வந்திருப்பாளா?”

நான் பதில் சொல்ல மாட்டேன். ஏனென்றால் எனக்குத் தெரியாது. சில கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் இருப்பதே நல்லது.

ஒரு மாதம் கடந்திருந்தது. அன்று இரவு வழக்கம்போலச் சாப்பிட்டுவிட்டு உள்ளே அமர்ந்திருந்தோம். வெளியில் மழை வரப்போகும் காற்று வீசியது; தெரு அமைதியாக இருந்தது.

திடீரென்று... டக்... டக்... டக்... என்று கதவைத் தட்டுவது போல ஒரு சத்தம் கேட்டது. முத்து என்னைப் பார்த்தாள்.

“யாரு இந்த நேரத்துல?” என்று கேட்டபடி எழுந்தாள். நானும் பின்னால் சென்றேன். கதவைத் திறந்தோம்.

வாசலில் நின்ற காட்சியைப் பார்த்ததும் முத்து வாயைப் பொத்திக்கொண்டாள். எனக்கே ஒரு கணம் நம்ப முடியவில்லை.

அங்கே நின்றிருந்தது வெள்ளை! அவள் அருகில் கறுப்பன். இருவரும் வாலை ஆட்டிக் கொண்டிருந்தார்கள். பல மாதங்கள் கழித்துச் சந்தித்த காதலர்களைப் போல, பல வருடங்கள் பிரிந்த உறவினர்களைப் போல! அந்தச் சந்தோஷத்தை வார்த்தைகளில் சொல்ல முடியாது.

வெள்ளை எங்களைப் பார்த்துக் குதித்தாள்; மீண்டும் கறுப்பனைப் பார்த்தாள்; மீண்டும் வாலை ஆட்டினாள். அவளது கண்களில் ஒரு வெற்றி தெரிந்தது. “நான் திரும்பி வந்துட்டேன்...” என்று சொல்லும் பெருமை அது.

முத்து உடனே சோறு எடுத்து வந்தாள். “அடடா... எங்கடா போயிருந்தே?” என்று பேசிக்கொண்டே உணவு வைத்தாள்.

வெள்ளை சாப்பிடத் தொடங்கியது; கறுப்பன் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான்.

More articles by கமலக்கண்ணன் முத்து

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.