வீராச்சாமியை இப்பொழுதெல்லாம் யாரும் கூட்டத்திற்கு அழைப்பதில்லை. இன்றும் அவன் கட்சியின் தலைமைப் பேச்சாளர் வரிசையில்தான் இருக்கிறான். ஆந்த அந்தஸ்து ஒன்றும் குறையவில்லைதான். ஆனாலும் எவரும் அவனைப்பேசக் கூப்பிடுவதில்லை. படிப்படியாக அழைப்பு வருவது அதுவாகவே நின்று போனது. ஆதற்கான காரணம் அவனுக்குத் தெரியவில்லை. மாநிலம் முழுவதும் அவன் பேச்சு பிரபலம். தொலைபேசி மூலம் தேதி கேட்டு உறுதி செய்து கொள்வார்கள். அழைப்புக்கள் தொந்தரவுகளாக இருந்த காலம் அது. எல்லாம் மாறிப் போயிற்று இப்போது.

அவனாகப் போய்க் கேட்பதோ அல்லது கடிதம் போட்டு வேண்டிக் கொள்வதோ கௌரவமான விஷயமல்ல. அழையா விருந்தாளியாய் வலியப்போக அவன் விரும்பவில்லை. அது நாகரீகமாகாது என்பது அவனுக்குத் தெரியும். தலைமைக்குக் கடிதம் எழுதி அந்த உரிமையை நிலை நாட்டி, தன் ஸ்தானத்தை தக்க வைத்துக்கொள்ள அவனால் முடியும் தான் ஆனால் செய்ய விருப்பமில்லை.

மக்கள் விரும்பி, விரும்பிக் கேட்டுத்தான் பிரபலமடைந்தான். அழைத்துக் கொண்டு வந்து பேச வைத்தால் தங்களுக்குப் பெருமை என்றுதானே செயல்பட்டார்கள்? அதே அழைப்பு தானாக வரவேண்டும். நானென்ன கேட்டுப் பெறுவது? என்னைப்பற்றி நானே ஞாபகப்படுத்துவதா? என் இருப்பை நானே உணர்த்துவதா? அப்படியா,அதற்குள்ளேயுமா தாழ்ந்து போய் விட்டேன்? கௌரவத்தை விட்டுக் கொடுப்பதாக இல்லை வீராச்சாமி.

வீராச்சாமியின் பேச்சு ஒன்றும் சாதாரணப்பட்டதல்ல. அவனை மாதிரித் தைரியமாகப் பேச ஆள் கிடையாது. கட்சியில் அதனால்தான் அவனுக்குத் தனிப்பெருமை. எதிர்க்கட்சியின் வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்றி, கந்தல் கந்தலாக ஆக்கி விடுவான். அந்த விறுவிறுப்புக்கு மவுசு குறைந்துவிட்டதாக அவன் நினைக்கவில்லை. இதனால் எத்தனையோ அடிதடியிலிருந்தும் தப்பியிருக்கிறான் அவன்.

கூட்டம் முடித்து இருப்பிடம் போகும் வழியில் ஊர் திரும்பும்பொழுது என்று அவன் சந்தித்த பேராபத்துக்கள் மிக அதிகம். “கெட்ட வார்த்தையெல்லாம் பேசப்படாது. அரசியல் மட்டும் பேசு...யாரையும் பர்சனலாத் திடடிப் பேசாதே.” எத்தனையோ முறை எச்சரித்திருக்கிறார் தலைவர். கேட்டால்தானே? “அவன் பாயும் புலிப்பா” தலைவர் வாயிலான இந்த உசுப்பல்தான் அவனை ஏற்றிவிட்டது.

கூட்டம் விழுந்து விழுந்து சிரிக்கும் அவன் பேச்சில். கேலியும், கிண்டலும், நையாண்டியும் தாங்க மாட்டாமல் ஒரு கூட்டத்தில் தலைவரே இவன் சட்டையைப் பிடித்து இழுத்து அமர்த்திவிட்டார். அடங்காப்பிடாரன் அவன். அவர் பரமசாது. அப்படித்தான் சொன்னார்கள் எல்லோரும். படு நல்லவர் என்றார்கள். இவர் எப்படி அரசியலுக்கு வந்தார், தலைவரானார் என்று எதிர்த்தரப்பினர் மூக்கின்மேல் விரலை வைத்தார்கள். இதற்கெல்லாம் பதிலடி கொடுப்பவன்தான் வீராச்சாமி.

“கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை” என்பான். யாரைக் குறிப்பிட்டுச் சொல்கிறான் என்று யாருக்கும் தெரியாது. வாயைப் பொத்திக்கொண்டு சிரிப்பார்கள் எல்லோரும். எல்லோருக்கும் பொருந்துவதுபோல் பேசுவான். அரசியல் வெடிகளைச் சரம்சரமாய் அவிழ்த்து விடுவான். எதிர்பாரா உண்மைகள் பல வெளிவரும் அதில். இவனுக்கு எப்படி இதெல்லாம் தெரிந்தது என்று ஆடிப்போவார்கள் எல்லோரும்.

பதினாலு வயசில் அந்தக் கட்சிக்கு வந்துவிட்டவன் வீராச்சாமி. ஏழு வரைக்குமான பள்ளிப் படிப்பே பெரிய காரியம். அதற்கு மேல் தம்பிடித்து மேலெழும்ப முடியவில்லை. ஊர்விட்டு ஊர், மாநிலம் விட்டு மாநிலம் என்று லாரி ஓட்டிக் கொண்டிருந்தார் அவன் அப்பா. எங்கேயிருக்கிறார் எப்பொழுது வருவார், போவார் என்பதே தெரியாது. பள்ளிக்குச் செல்லாமல் ஊர் சுற்றுவது, காசுக்கு குண்டு விளையாடுவது, மூணுசீட்டு, டப்பா குலுக்கல் என்று அலைவது இவன் வேலையாகிவிட்டது. தறுதலையாகிப் போனான். ஏழாங்கிளாசிலேயெ மூணுவருஷம்.

அதற்கு மேல் படிக்க வைத்தால் பள்ளிக்குக் கேடு என்று அனுப்பி விட்டார்கள். அவனுக்கே அந்தத் தேக்கம் எரிச்சலைத்தான் தந்தது. அவிழ்த்து விட்டது தத்தாரியாய்த் திரிவதற்கு ஏதுவாகிவிட்டது. அங்கங்கே சித்தாள் வேலை, நாத்து நடவு, அறுவடை என்று கூலி வேலைக்குப் போன தாயார், நைந்து போய் ஒரு நாள் மண்டையைப் போட தனியாளானான் வீராச்சாமி. பிறகுதான் அரசியல் களம்.மனசுக்கு ஆதர்சமான கட்சி மாநாட்டுக்கு என்று இரவு பகல் பாராமல் விழித்திருந்து வேலை செய்ததில் எல்லா வேலைகளையும் தானே இழுத்துப் போட்டுக் கொண்டு என்னை மிஞ்சி எவனுமில்லை என்கிற தியாக உணர்வில், sநுழைவாயில் கொடி கட்டும் போது கை தவறிப் பிடித்த எலெக்ட்ரிக் வொயர் ஆளைத் தூக்கி வீசி ஒரு மாதம் படுக்கiயில் போட்டுவிட்டது அவனை! ஆனால் அந்த நிகழ்வுதான் உயிருக்குயிரான தலைவரை sஅவனருகே கொண்டுவந்து நிறுத்தியது. யாருக்குக் கிடைக்கும் இந்த பாக்கியம்? ஜீவனற்றுக் கிடந்த அவன் கைகளைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு ‘எல்லாம் சரியாப் போயிடும்....மனசு விட்ரக் கூடாது...அம்புட்டுச் செலவும் கட்சி பார்த்துக்கிடும்...சரியாப்பா..?’ - என்று ஆருயிர்த் தலைவர் தோளில் தட்டியபோது, அந்த ஸ்நேக பாஷையில் தன்னை இழந்து போனான் வீராச்சாமி. புத்துயிர் பெற்றான். புது ஜீவனாய் உருவெடுத்தான்.

தங்க ப்ரேம் மூக்குக் கண்ணாடி பளபளக்க வாயில் ஹால்ஸ் மிட்டாய் உருள பிரஸ்லெட் கையில் தவழ, தலையைத் தடவிக்கொடுத்து ஆறுதல் சொன்ன அந்த நேரச் சிலிர்ப்பு ஆயுளுக்கும் மறக்காது வீராச்சாமிக்கு. “இந்தப் பன்னிப் பயலுக்காகக் கண் கலங்கி நின்னாரே...அத மறந்தன்னா நா மனுஷனே இல்ல...” மேடைக்கு மேடை சொல்லாமல் விடமாட்டான் இதை. அன்றிலிருந்து இன்றுவரை தலைவர்தான் உயிர்மூச்சு.

சுவாசிப்பதே அவருக்காகத்தான். மற்றவர் எல்லாம் ஒரு படி கீழ்தான். கட்சி அவனைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டது. கூத்தாடியது. தலைவர் கண்ணசைவில் அவனுக்குக் கூட்டங்கள் பெருகின. இரவு, பகல் பாராமல் கூட்டங்கள் இருந்துகொண்டே இருந்தன. காலைத் தினசரிகள் பகல் கூட்டத்திற்கும், மாலைத் தினசரிகள் இரவுக் கூட்டத்திற்கும் பெருவாரியாகக் கை கொடுத்தன.

கூர்மையான பேச்சு அவன் பேச்சு. இப்படிக் குத்தி அப்படி வாங்குவான். இவனுக்கு மட்டும் எங்கேயிருந்து கிடைக்கிறது இந்த நாறப்பய வார்த்தையெல்லாம்? என்று சங்கடப்பட்டவர்கள் அநேகம். குண்டு வெடித்தாற்போல் வீசுவான் வார்த்தைகளை. “தலைவரைச் சீண்டாதே...என்னை வேணா பேசிக்கோ...ஆறுதல் பட்டுக்கோ...என் உயிரப் பேசினே, பதிலுக்கு இப்படித்தான் வாங்குவே..நான் மூச்சு விடுறதே அவுருக்காகத் தாண்டா கேனப் பயலே...!” என்றுவிட்டு ஒரு நிமிடம் கூட்டத்தைப் பார்ப்பான். சிரிப்பதா, வேண்டாமா என்று அதிர்ந்து நிற்கும் ஜனம்.

உள்ளுர் கூட்டத்துக்கே தேதி கொடுக்க முடியாமல் திண்டாடியிருக்கிறான் வீராச்சாமி. படு பிஸியான காலம் அது.

“நம்மூர்ல விலை போகாதாண்ணே உங்க பேச்சு? இப்டி ஒதுங்குறீங்க?” என்பார்கள் லோக்கல் ஆட்கள். “மன்னிச்சிக்க ராசா,...உனக்கில்லாததா?” என்று சொல்லிச் சமாளிப்பான் வீராச்சாமி.
ஒரு ஊரில் கூட்டம் முடியும் முன்பே மறுகூட்டத்திற்கான ஆட்கள் முன் வரிசையில் வந்து அமர்ந்து அப்படியே கொத்திக்கொண்டு போய் விடுவார்கள். மறுநாள் கூட்டத்திற்கு இன்றே தூக்கல்தான். சாப்பாடு, தங்கல், குடி என்று ஒரே தடபுடல்தான்.

எத்தனையோ முறை தலைவரே திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியும் மறுத்தவனாயிற்றே? “மன்னிச்சிடுங்க தலைவா! கட்சியில் கவனம் போயிடும் பெறவு...இந்த மனசு முழுக்க உங்களுக்குத்தான்...ஒரு பொம்பளைகிட்ட அத அடகு வைக்க ஏலாது..” என்றான். தமிழ்நாடு முழுக்க சுற்றிச்சுற்றிப் பழகியவனாயிற்றே? எல்லா மாவட்டப் பேச்சு வழக்கும் அவனிடம் புகுந்து புறப்பட்டு வரும். கட்சிக்காக வாழ்வையே அர்ப்பணித்தவன் வீராச்சாமி. எண்ணிலடங்கா கூட்டங்களில் காலில் சக்கரம் கட்டிக்கொண்டவன் போல், ஓடி ஓடிப் பேசித் தீர்த்தவனுக்கு இன்று கூட்டங்களே இல்லை.

அவனைப்போல் பலருக்கும் இல்லை என்றாலும், தனக்கில்லை என்பதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. எனக்கா இந்த கதி? என்று பிரமித்தான். நானா இப்படி? என்று தனிமையில் அழ ஆரம்பித்தான். கவனிப்பாரற்ற தனிமை அவனை வாட்டியது. மேடைக் கூட்டங்கள் மைதானக் கூட்டங்கள் சுருங்கிவிட்டன. எல்லாமும் வெறும் தெரு முனைக் கூட்டங்கள் ஆகிப் போயின.

அதுவும் காலையில் மக்கள் அவர்கள் வேலை நிமித்தம் பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கும்போது கத்துவதுபோல வீதி முக்கு, சந்து என்று போகிற போக்கில் நின்று பேச வேண்டிய கட்டாயம்.

ஜனங்களுக்கு வேலை பெருகி விட்டது. வாழ்வாதாரத்திற்கு ஓட வேண்டியிருக்கிறது. பரபரத்துத் திரிகிறார்கள். நின்று கேட்க எவருக்கும் நேரமில்லை. காலம் தலைகீழாய் மாறிப் போய் விட்டது.

போதாக் குறைக்கு ஊடகங்கள் வேறு வீட்டுக்குள்ளேயே வந்து செய்திகளைத் தந்துவிடுகின்றன. நிதர்சனங்கள் முன்னே வெட்டிப் பேச்சி வெண்ணை தடவிக் கொடுத்தாலும் எடுபடமாட்டேன் என்கிறது. எல்லாருக்கும் எல்லா நடப்பும் புரிந்துதான் இருக்கிறது. எதையோ எதிர்பார்த்துக் கொண்டிருப்பது போல் இருக்கிறார்கள் ஜனங்கள். அவ்வளவு விரக்தி தொனிக்கிறது.

தலைவரே அமிழ்ந்து போய்த்தானே கிடக்கிறார்.? பழைய வீச்சும் பேச்சும் போன இடம் எங்கே? ஒரு சாதாரண அடி மட்டத் தொண்டன் என்றும் பார்க்காமல் அன்று நேரில் வந்து ஆறுதல் கூறிய பெருந்தகை அவர். காலம் இன்று தன்னை அவரிடமிருந்து ஒதுக்கியிருந்தாலும், பிரித்தாலும், இன்றும் தன்னை நேரில் கண்டாரென்றால் நிச்சயம் வாரியணைத்துக் கொள்வார். கண் கலங்கி நிற்பார். அதில் சந்தேகமேயில்லை. நினைக்கும்போதே கண்கள் கலங்கிப் போயின வீராச்சாமிக்கு.

ஒரு முடிவுக்கு வந்தான். இப்படியே விட்டால், நான் இருக்கேனா, செத்தேனா என்பது கூட எவருக்கும் தெரியாமல் போகும். இது சரியில்லை. உறுதி செய்து கொண்டான். யாருக்கும் தெரியாமல், எவனுக்கும் சொல்லாமல் (எவனுக்குச் சொல்லணும்? நன்றி கெட்ட பசங்க...என் பின்னாடியே ஓடி வந்திட்டிருந்த நாயுங்க...!) ஒரு நாள் வண்டியேறினான். உடம்பும், மனசும் தளர்ந்த முதல் தனி பயணம் அது!

தலைவரிடம் விபரங்களைத் தனியே எடுத்துச் சொல்லி, ஒரு சிறு தொகையையாவது தனக்காகப் பெற்று சேமிப்பில் வைத்து அப்படியே ஒதுங்கிக்கொண்டு விட வேண்டும். இனி இந்த மனசும் ஒடம்பும் தாங்காது. முடிவு செய்து கொண்டான். தான் தன் வாழ்நாளில் கட்சிக்கு உண்மையாகத் தான் உழைத்திருக்கிறோம். எந்தப் பதவி சுகமும் கண்டதில்லை. காசும் சம்பாதித்ததில்லை. வந்த காசையும் தலைவருக்காக, கட்சி நிதி, அது, இது என்று கணக்குப் பார்க்காமல் கொடுத்தாயிற்று. இது தலைவருக்கு நன்றாய்த் தெரியும். நிச்சயம் தன்னைக் கைவிட மாட்டார். இந்த நம்பிக்கையோடு நிம்மதியாகப் பயணித்து மறுநாள் காலை பட்டணத்தில் காலடி வைத்தான் வீராச்சாமி.

எதிர்முனைப் பெட்டிக்கடை வாசலில், வால்போஸ்டரில் அந்தச் செய்தி!!. அதைப் பார்த்ததும் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனான் வீராச்சாமி. “அடடா...!” அவன் வாய் அவனையறியாமல் விரக்தியாய் மேலும் முனகியது. “போச்சு...!!!”


- உஷாதீபன்(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It