செய்யாறு தி.தா.நாராயணன் எழுதிய ‘தோற்றப் பிழை’ சிறுகதைத் தொகுதியை முன்வைத்து...

thotra-pilai_350மனித மனங்களை மேன்மைப் படுத்தும் புத்தகங்கள் திரும்பத் திரும்ப வாசிக்கத் தூண்டு கின்றன.  தன்னைப் புடம் போட்டுக் கொள்ள அவை தூண்டிக் கொண்டேயிருக்கின்றன.  அப்படி ஒரு புத்தகம்தான் இந்தத் தோற்றப்பிழை சிறுகதைத் தொகுப்பு.

தோற்றப்பிழை - புத்தகத்தின் தலைப்புக் கதை இது.

எல்லாச் சாதிக் கட்சிகளையும் ஒழிக்கணும்யா... ஒழிக்கலாம்தான்.  ஆனால் சாதிப் பெயரில்லாமல், கட்சி வைத்து வளர்த்துக் கொண்டு, சாதியை மறை முகமாக ஆதரித்து, வளர்த்து, ஓட்டு வங்கியை நிலைக்கப் பாடுபட்டு, மக்களிடையே வேற்றுமைகளை, பகைமையை அதிகரிக்கிறார்களே...  அதை என்ன செய்வது?

ஒண்டி ஆளாய் நின்று நாலு ஏக்கர் எழுபது சென்ட் எழுதிக் கேட்க முனைந்த பொழுதில், அங்கே அவனின் தைரியமும், திமிரும் பெருமையாகப் பேசப்பட்டு, தவறு பின்னுக்குப் போய்விடுகிறது.  ஆனால் நம்ம சாதிக்காரன்டா, அதான் இத்தனை தில்லா நிக்கிறான் என்று தன்னை மறந்து அடி மனசில் ஊறிப்போய்க் கிடக்கும் சாதிப் பெருமை தளிர்விடத்தானே செய்கிறது.  ஆயினும், எவனுடைய தோற்றத்தை வைத்தும் எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது.  ஏனெனில் உள்ளே ஊடுருவி நுழைந்து பார்க்கையில்தான் தெரியும்-எல்லோர் மனதிலும் சாதி உண்டு என்கிற உண்மை.  எல்லோரிடமும் சாதி உள்ளது என்பதை வலியுறுத்தவந்த கவனமான கதை இது.  கதையாடலை இன்னும் கொஞ்சம் எதார்த்தப்படுத்தியிருந்தால், கருத்துக்காகவே கதை சொல்ல வந்த தன்மை தானாகவே மறைந்து போயிருக்கும் என்று தோன்றுகிறது.

முதல் கதை ஜாதிப் பிரச்சினை என்றால் இது மதப் பிரச்சினை.  ‘இலக்கியம் சமுதாயத்திற்காக’ என்கிற கூற்று இங்கே நிஜப்படுகிறது.  எத்தனை வீடுகளில் வறுமையினாலும், வரதட்சணைக் கொடுமையினாலும் பெண்ணைக் கட்டிக் கொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள்! காதல் திருமணங்களும், வீட்டை மீறி ஓடிப் போய்த் திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வுகளும் பெரும்பாலும் இதனால்தானே நடைபெறுகின்றன? பெற்றோர் சம்மதத்தோடும், சம்மதமின்றியும் காணத்தானே செய்கிறோம்? ஆனால் இந்தக் கதையின் சாந்தி, தாயின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு, தேவதையாய் நிற்கிறாள்.  கதை லட்சுமணக் கோடு.  சமுதாயம் கட்டிக் காக்கும் பண்பாட்டின், விழுமியங்களின் தேர்ந்த அடையாளமாய், வறுமையிற் செம்மையாய், தன் தாயின் உழைப்பின்மீது கொண்ட முழு மரியாதை நிமித்தம், தன்னை அவள் இட்ட கோட்டுக்கு உட்பட்டு நிறுத்திக் கொள்கிறாள்.  அதன் பலன்? இந்தக் கடைசிப் பத்தியைப் படியுங்கள், உங்கள் மனசு இளகி அழவில்லையானால், நீங்கள் மனிதரேயில்லை...!

“என்னடீ அதிசயம்...? காலங்கார்த்தால குளிச்சிட்ட...!

“மறந்துட்டியா? என்னை ஆசீர்வாதம் பண்ணும்மா...! இன்னிக்கு என் பிறந்தநாள்மா...!
காலில் விழுந்தவளைத் தூக்கி நிறுத்தினாள்.  கண்கள் ததும்புகின்றன.  முப்பத்திமூணு வயசு முடிஞ்சு போச்சி.  அம்மாவே எல்லாமென்று, போட்ட கோட்டைத் தாண்டமாட்டாமல், தன் உணர்வுகளைப் புதைத்து விட்டு நிற்கும் தன் குலக்கொழுந்தை தலை முதல் கால்வரை பார்க்கிறாள்.  துக்கம் அடைக்கிறது.  இளமை கலைய ஆரம்பித்துவிட்டிருந்தது.  முகத்தில் லேசாய் முற்றல் வந்து விட்டது.  காதோரங்களில் ஒன்றிரண்டு நரை முடிகள்.  ஐயோ கண்ணே...! என் செல்லமே...!! நீயாவது துணிஞ்சி அந்தப் பையனோட ஓடிப் போயிருக்கக் கூடாதா?

கதையின் உச்சம் இது.  நம்மைப் பிழிந்தெடுக்கும் இடம்.

கிருஷ்ணராஜசாகரின் வடிகாலாகத்தான் தமிழகத்திற்குக் காவிரி பயன்படுகிறது என்பதாக ஒரு கருத்து உண்டு.  இது மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் பிரச்சினை. இதுவே இரு கிராமங்களுக் குட்பட்ட பிரச்சினையாக இருந்தால்? மொத்தமுள்ள 13 ஏரிகளுக்கும் பொதுவாக மக்கள் திரண்டால்? பலகை போட்டு மடை கட்டி ஒரு ஊர்க்காரர்களே பயன்படுத்த முடியுமா? எந்த மடையைக் கட்டித் தண்ணீர் எங்களுக்கு நிரம்பியது போகத்தான் மீதி உங்களுக்கு என்றார்களோ, அதுவே வெள்ளம் வரும்போது? அப்போது மட்டும் மடையை எடுத்து விடுவது எப்படி நியாயமாகும்? வெள்ளம் வரும் போது அதன் அழிவுகளை நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்னும்போது தீர்வு வருகிறது அங்கே.  தண்ணீர் எல்லார்க்கும் பொது என்பதும், மக்களின் ஒற்றுமையும் வலியுறுத்தப்படும் கதை இது என்பதே இதன் சிறப்பு.  கதையின் தலைப்பு மடை.   அடுத்ததாய்ப் பரிணாமத்தைப் பார்ப்போம்.

மனித குலத்தின் அடுத்த பரிணாமமாகப் பிறக்கும் செயற்கைக் கருவூட்டலில் ஒரு வேற்றுக் கிரகவாசிக்குப் பிறந்த குழந்தைதான் அது.  பிறந்த வுடனேயே கூடவே மதமும் பிறந்து விடுகிறது என்பதுதான் விந்தை.  குறிப்பிட்ட மதத்தைப் பின் பற்றும்போது அதன் தொடர்ச்சியாக வெறியும், போரும் அழிவும் தவிர்க்க முடியாதவை என்பதாகச் சொல்லி முடிகிறது இக்கதை. 

சிகிச்சை என்ற தலைப்பில் ஒரு கதை.  இது அரசு மருத்துவ மனைகளின் அக்கறையற்ற கவனிப்பையும், ஏழை பாழைகளின் உயிர்த் தவிப்பையும், தனியார் மருத்துவ மனைகளின் பணம் பிடுங்கும் போக்கையும், தோலுரித்துக் காட்டுகிறது. 

நட்பு என்னும் கதையில் ராமநாதன் தொலைந்து போகிறார்.  மற்றவர்களுக்கு அப்படித்தானே...?  ஒரு மனிதன் தன்னைத்தானே தொலைத்துக் கொள்கிறான் என்றால் அதற்கு வலுவான காரணங்கள் நிறைய இருக்கவேண்டும் என்பதுதான் உண்மை.  ஆளாளுக்கு ஒன்று பேசுகிறார்கள்.  மனிதர்கள் எத்தனை மலிவானவர்கள். 

இந்த வயசுல இந்தாளுக்கு இது தேவையா? மனசு நினைத்துவிடுகிறது இப்படி... யோவ் ராம நாதா...ரெண்டு நாள் நாம சேர்ந்தாற்போல சந்திக்க லேன்னா என்னவோ மாதிரி ஆகிடுதய்யா...
கடைசிப் பெண் மாயா, கடைசியாய்ச் சொல் கிறாள்.  இந்த சம்பவத்தால் நாம ராமநாதன் சாரைப் பத்தித் தெரிஞ்சிக்கிட்டமோ இல்லியோ... நம்ம ஒவ்வொருத்தர்பற்றியும் தெளிவா வெளிப் படுத்திட்டோம்...தெரிஞ்சிக்கிட்டோம்...

இந்தக் கதை இந்தச் சமூகத்தின் இன்றைய நிகழ்வுகளின் துல்லியமான படப்பிடிப்பு, அதனூடே தான் இந்த நட்பு.

மங்கா கிழவி பற்றியும் இதில் ஒரு கதை உண்டு.  முதியோர் என்றால் இரு பாலினமும்தானே...! படுக்கையில் கிடக்கும் மங்கா கிழவிக்கு பீ, மூத்திரம் எடுத்து, எடுத்து நொந்து போன மருமகள், அவளுக்கு மூன்று எண்ணெய் கலக்கி, குளிப்பாட்டி விடுகிறாள்.  கிராமங்களில் உள்ள இந்த வழக்கங்கள் நமக்கே இதைப் படித்த பின்னால்தான் தெரிகின்றது.  இழுத்துப் பறித்து அவஸ்தையிலிருப்பவர்களுக்குச் செய்வது வழக்கந்தான் என்று பக்கத்து வீட்டுக் கண்ணம்மா பேச்சைக் கேட்டு செய்து விடுகிறாள் லட்சுமி.  ஆனால் மனது கிடந்து அடித்துக் கொள்கிறது.  தவறு செய்து விட்டோமோ என்று பழி பாவத்திற்கு அஞ்சிப் பயப்படுகிறாள்.  ஆனால் இழுபறி உயிர் நிலையில் இதைப் புரிந்துகொண்ட கிழவி “நீ செய்தது தான் சரி என்று கூறி என் குடிகாரப் பிள்ளையை வச்சி நீ என்னதான் செய்வே? ரெண்டு பெண்டு களை எப்படிக் கரையேத்துவே?” என்று பதுக்கி வைத்திருக்கும் 12 பவுன் நகையின் இருப்பிட ரகசியம் கூறி மாய்கிறாள்.  மனசு ஏற்காத, நெஞ்சை உருக்கும் கதை.

கீதாச்செடி என்ற புதுமையான பெயரோடு ஒரு அற்புதமான கதை இந்தத் தொகுதியில் உள்ளது.  மொத்தத் தொகுதியின் அத்தனை கதைகளிலும் எந்தக் கதையை மிகச் சிறந்த கதை என்று முதலிடத் திற்கு நிறுத்துவது என்கிற போட்டியில் இந்தக் கதை முந்துகிறது.  தாங்க முடியாத சோகத்தை ஏற்க மறுக்கிறது உடலும் உள்ளமும்.  பதறிப் போனது மனசு.  கதை முடிந்த பிறகும் உடல் நடுக்கம் குறைய வில்லை.  அப்படியான நேரத்தில் சுணக்கம்தானே ஏற்படும்.  அதுதான் அடுத்த கதையாக இங்கே மலர்ந் திருக்கிறது.  லஞ்சம் வாங்காமல் நேர்மையாய் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு வேலையைச் சரியாய்ச் செய்யாமல் வாங்கும் சம்பளம் கூட ஒருவகையில் லஞ்சம் தான் என்ற மனசாட்சியுள்ள கருத்தைப் பலமாக நிறுவும் உண்மையான கதை இது.  அவசியம் எல்லோரும் உணர வேண்டிய ஒன்று. 

இந்தத் தொகுதியின் ஒவ்வொரு கதையும் வெவ்வேறுவிதமான தாக்கங்களைப் படிக்கும் வாசகர்களின் மனதில் நிச்சயம் ஏற்படுத்தும்.  என்.சி.பி.எச். நிறுவனம் இத்தொகுதியை மிகச் சிறப்பான வடி வமைப்பில் வெளியிட்டிருக்கிறது.

தோற்றப்பிழை
செய்யாறு தி.நா.நாராயணன்
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்.,
அம்பத்தூர், சென்னை - 600 098
விலை : ரூ.95.00

Pin It