தேவராஜன் வள வளவென்று பேசிக்கொண்டேயிருந்தார். எப்படி அவரிடமிருந்து கழன்று கொள்ளலாம் என்று யோசித்தபடி உட்கார்ந்திருந்தேன்.

நான் அவர் வீட்டில் வந்து உட்கார்ந்து அரைமணி நேரமாகியும் இன்னும் எனக்கு குடிக்க ஒரு தம்ளர் தண்ணீர் கூட தரவில்லை அந்த மனுஷர். அப்படிப்பட்ட மகா கஞ்சன் அவர்.

அப்போது உள்ளே வந்து நுழைந்தார் பக்கத்து வீட்டு ஆசாமி.

'என்ன நடராஜன், இந்த நேரத்துல வீட்டுல இருக்கீங்க? ஆபீசுக்கு மட்டமா?’ என்று தேவராஜன் அவரைப் பார்த்து நக்கலாகக் கேட்க, பாவம் அவர், முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு சொன்னார்.

'ஒய்ஃபுக்கு உடம்பு சுகமில்லேங்க.. அதான் லீவு போட்டேன்.’

பாவம், அவருடைய முகத்தைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. மனைவியின் உடம்புக்கு என்ன என்றுகூட விசாரிக்கவில்லை தேவராஜன். மனுஷர் பேச்சிலும் கூட சிக்கனம்.

எனக்கு மனசு கேட்கவில்லை. விசாரித்தேன்.

‘மூணு மாசமா வயித்துல அல்ஸருங்க. இங்கிலீஷ் வைத்தியமெல்லாம் பார்த்து குணமாகலே. சித்த வைத்தியர்க்கிட்ட காட்டிக்கிட்டுருக்கேன். மருந்து சாப்பிட ஒரு இளநி வேணும். அதான் சார்க்கிட்ட கேட்டு வாங்கிக்கிட்டு போகலாம்ணு வந்தேன்.’ என்றார் அவர்.

தேவராஜன் குறுக்கிட்டார். ' இளநியா? இப்ப ஏதுங்க மரத்துல காய்ப்பு? ஊர்ல தண்ணியே வரண்டு போச்சுன்னு அவனவன் அல்லாடறான்.. மரம் எப்படிங்க காய்க்கும்?’

'அவசரம் சார். சாயங்காலம் மருந்து குடுக்க ஒரே ஒரு இளநி வேணும். இதுக்காக நான் பஸ் புடிச்சி டவுனுக்கு போயாகணுமேன்னு பார்க்கறேன்..’ என்று கெஞ்சும் குரலில் கேட்டார் அவர்.

'அதுக்கு என்னை என்ன பண்ணச் சொல்லுறீங்க?’ தேவராஜனின் குரலில் சூடு தெரிந்தது.

'அந்த மரத்துல காய் இருக்கறதைப் பார்த்துட்டுத்தான் கேக்க வந்தேன் சார்.’ என்று அவர் சொல்ல, தேவராஜனுக்கு ஆத்திரம்.

'இல்லேன்னு சொல்றேன்ல.. வச்சுக்கிட்டு வஞ்சனையா பண்ணுறேன்?’

நாங்கள் உட்கார்ந்திருந்த வராந்தாவிலிருந்து பார்த்தபோது மாடியின் கைப்பிடிச் சுவர் பக்கத்தில் சாய்ந்து நின்ற தென்னைமரம் தெரிந்தது. தேவராஜனுக்குத் தெரியாமல் நான் நைஸாக மரத்தைப் பார்த்தேன். குலை குலையாகக் காய்கள்!

'சொன்னாக் கேக்கமாட்டீங்களே..இப்பத்தான் ஏதோ கொஞ்சம் குரும்பை வச்சிருக்கு. அது உங்க கண்ணை உறுத்துது போலருக்கு!’ என்று தேவராஜன் சொன்னதும் வந்தவருக்கு முகம் என்னவோ போல் ஆகிவிட்டது.

ஒன்றுமே பேசாமல் வாய்க்குள் முணுமுணுத்தபடியே போய்விட்டார் அவர்.

தேவராஜனுடைய கஞ்சத்தனத்தை நினைத்தபோது எனக்கு எரிச்சலாக இருந்தது. அவரிடம் கேட்டேன்.

'மருந்துக்குன்னு தானே கேட்டாரு.. ஒண்ணே ஒண்ணு பறிச்சி கொடுத்திருக்கலாமே தேவராஜன்?’

'நீங்க சும்மா இருங்க சார்.. போனாப் போவுதுன்னு இப்ப ஒண்ணு குடுத்தா ஒவ்வொரு தடவையும் ஓசி கேட்டு வந்து நிப்பாரு!’

'உங்க வீட்டுல எத்தனை தென்னை மரம் இருக்குங்க?’ - விடாப்பிடியாக நான் கேட்டேன்.

'என் வீட்டுல ஏதுங்க தென்னை மரம்?........ அவர் வீட்டு மரம் தான் காம்பவுண்ட் சுவத்துப் பக்கமா வளைஞ்சு வந்து எங்க வீட்டு மாடிப்பக்கம் காய்க்குது!’

அடப்பாவி மனுஷா!

- கிரிஜா மணாளன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It