பதற்றம் பதற்றம் பதற்றம். 

எப்போதும் வேகம் தான். ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் பதற்றம் தான். பஸ் வந்திருச்சு.... பஸ் வந்திருச்சு... என்று கண்கள் எப்போதும் தூரத்திலேயே தங்கி இருக்கின்றன.

அதுவும் ஒரு அம்மா... நேற்று புத்தக பையை பஸ் நடத்துனரிடம் வேக வேகமாய் தூக்கி கொடுத்து விட்டு... பிள்ளையை தன் பின்னாலயே நிற்க வைத்து டாடா காட்ட ஆரம்பித்து விட்டது. எல்லாரும் சிரித்தாலும்... எனக்கு என்னவோ போல இருந்தது. அந்த அம்மாவும் சிரித்தாலும் அதற்கும் என்னவோ போல ஆகி விட்டது. இன்னொரு முறை பிள்ளையை படி ஏற்றி விட்டு விட்டு... லன்ச் பேக்கை கையிலேயே வைத்துக் கொண்டு டாட்டா போட்டது. என்ன குழப்பமடா... இந்த அரக்க பறக்கும் வேளை.

இன்னொரு அப்பா இருக்கிறார். அவருக்கு தினமுமே சந்தேகம் தான். வழியை மறித்துக் கொண்டு ஏதாவது நடத்துனரிடம் கேட்டுக் கொண்டே இருப்பார். ஆனாலும் ஒருநாள் கூட அவர் திருப்தியுற்றதாக தெரியாது.  

இப்படி முறைத்துக் கொண்டே வருபவர்கள்... சிரித்துக் கொண்டே வருவார்கள்.... என்னைப்போல உம்மனா மூஞ்சிகள் என்று பிள்ளைகளை பள்ளிக்கு பஸ் ஏற்றி விடும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாள் தான். பள்ளி பேருந்து பெரும் சுமை. காலையும் மாலையும்... நேரத்துக்கு வந்து விடுகிறதோ இல்லையோ... நாம் நேரத்துக்கு போயாக வேண்டும். லேட் ஆகும் என நினைத்தால் சீக்கிரம் வந்து விடும். அப்படி சீக்கிரம் வந்து பிள்ளை ரோட்டில் நின்றால்... நினைத்தாலே பதறும். ஆக பதற்றம் என்பது தினம் தினம் புது புது ரூபத்தில் அது ஓர் இயல்பு.

மஞ்சள் யானை மெல்ல ஆடி அசைந்து வரும் போதே இனம் புரியாத பதற்றம் வந்து விடுகிறது. அதில் தினமும் ஓரிரு நிமிடங்கள் தாமதமாக வரும் ஆட்கள் இருக்கிறார்கள். அந்த கண நேரங்கள்.... ரயிலை தவற விடும் தோரணைக்கு ஒவ்வொரு பெற்றோர்களும் போய் விடுவது எதார்த்தமாகி விட்டது. வண்டியில் அமர்ந்தபடியே பிள்ளையை இறக்கி... பின் சுமையை தூக்கி மாட்டி... லஞ்ச் பையை இந்த கையில் கொடுத்து... இன்னொரு குட்டி பையை தோளில் தொங்க விட்டு... எல்லாமே இப்படி என்பதற்குள் நடந்து முடியும். மூச்சு முட்டும் நிமிடங்கள்.

எல்லாம் சரி...ஒவ்வொரு பிள்ளையும் ஒவ்வொரு காரணத்தை கண்களில் சுமந்திருந்தாலும்.. ஒருவன்... அந்த தனி ஒருவன் மீது தான் கொஞ்ச நாட்களாக எனக்கு பார்வை. அவன் தினமும் எந்த பதற்றத்துக்கும் ஆளாவதில்லை. தாமதமாக வரும் போது கூட... அவனுக்காக பேருந்து காத்திருக்கையில் கூட மெல்ல தான் நடந்து சென்று ஏறுவான். முதலிலேயே வந்து விட்டிருந்தாலும்... எல்லாரும் ஏறிய பின் சாவகாசமாய் கடைசியில் தான் ஏறுவான். இன்னொரு முக்கியமான விஷயம். தினமுமே அவன் பேருந்து ஏறும் முன் அவன் அப்பாவின் காதில் என்னவோ ரகசியம் சொல்கிறான். முதல் நாள் இயல்பென கடந்த போதும்... அடுத்தடுத்த நாள் ஆர்வத்தை தூண்டியது. அப்படி என்ன ரகசியம் சொல்கிறான். தினமும் சொல்கிறான். அதுவும்... கடைசி படிக்கட்டில் கால் வைப்பதற்கு முதல் நொடி திரும்பி பார்ப்பான். அவன் அப்பாவுக்கும் அது தெரியும். ம்ம் என்பது போல கழுத்தை சரித்துக் கொடுப்பார். காதில் ஓத வேண்டியதை ஓதி விட்டு ஏறி விடுவான். என்னடா இது புது வித ரகசியமாக இருக்கிறதே....என்று உற்று பார்க்க தொடங்கி விட்டேன். அப்படி என்ன தான் ரகசியமாகயிருக்கும். அதுவும் தினமும். 

வீட்டில் இருந்தாலும்... அவன் நினைப்பு தான். அது என்னவாக இருக்கும். தினமும் நான் அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறேன். மற்றவர்களை அவன் பொருட்படுத்துவது போல இல்லை. எப்போதும் கடைசியாகவே ஏறுகிறான்... இறங்குகிறான். முந்தாநாள் போல அதற்கு முந்திய நாளை போல நேற்று கூட அவன் அப்பாவின் காதில் ரகசியம் சொல்லி விட்டு ஏறியவனை டேய் நில்லுடா.. அப்படி என்ன தான்டா சொல்ற என்று கேட்கிற அளவுக்கு தோன்றி விட்டது. சே குட்டி ஜன்னல் வழியே டாடா காட்ட கவனம் சற்று அமைதி ஆனது.


வீடு வந்தும் யோசனை தீரவில்லை. அப்படி என்ன தான் சொல்லுவான். மனம் முழுக்க மர்மம் சுற்றிக் கொண்டே இருந்தது. சும்மா கிடக்கற சங்கை ஊதி கெடுத்த மாதிரி... இது தேவையா என்று கூட தோன்றியது. ஆனாலும் அந்த ரகசியத்தை அறிந்தே ஆக வேண்டும். மனதுக்குள் ஒரு இறக்கை அடித்துக் கொண்டேயிருக்கிறது.

இன்று காலை வண்டி ஏறியவன்... அதே ரகசியத்தை சொல்லி விட்டு பேருந்துக்குள் நுழைந்து விட்டான். அப்போது தான் ஒன்று கவனித்தேன். அவன் கடைசி ஜன்னலோரம் அமர்ந்தபடி மீண்டும் அவன் அப்பாவை பார்த்து அதே ரகசியத்தை வார்த்தைகள் வெளி வராமல் லிப் மூவ்மெண்ட் தருகிறான். அடிச்சதுடா லாட்டரி என்று சே வுக்கு வேகமாய் டாடா காட்டிவிட்டு கூர்ந்து கடைசி ஜன்னலில் கார்ட்டூன் போல உதடசைக்கும் அவனை கவனித்தேன்.

என்னது.. என்னது.... கண்கள் ஸ்லோ மோஷனில் பிரதி எடுத்தது. "எ......ன....க்.....கு.... ஸ்....கூ...லு...க்....கு.... போ....க....வே.... பி....டி....க்...க...ல..."

"என்னது எனக்கு ஸ்....கூலுக்....கு போக....வே பிடிக்...க...லயா...  ஓஹ்...!  இத தான் தினமும் சொல்லிட்டு போறானா..." சிமிட்டாத கண்கள் நொடிக்கும் குறைவாக எதோ உணர்ந்து திரும்பியது. என்றும் இல்லாமல் இன்று அவன் அப்பா மீதும் கவனம் குவிந்தது. கீழே நின்று அவனையே பார்த்துக் கொண்டிருந்த அவன் அப்பாவின் வாயும் சத்தமில்லாமல் ஒரு பெரிய கார்ட்டூனைப் போல அசைந்து கொண்டிருந்தது...

"இ.. ன்...னை...க்...கு... ம...ட்...டு...ம்... போ...யி...ட்...டு... வா...டா.... செ..ல்..ல..ம்..."

- கவிஜி

Pin It