"ராஜமூர்த்தி......... அட...... மூர்த்தி........நில்லுப்பா... ஊரே தேடிட்டு இருக்கு.. எங்க போய்ட்ட... " டேவிட் தாத்தாவின் மீசை........கண்கள் நடுங்க கேட்டது. ஏறி இறங்கும் குரலில் பதட்டம் நிறைந்து வழிந்தது.

"என்ன பெருசு........சாவு வந்த மாதிரி நடுங்கற" என்ற ராஜமூர்த்தி பாதி நரைத்த மீசையில்....... மீதிக்கு கடந்த வாரம் கருப்பு சாயம் பூச மறந்திருந்தான். கால்கள் கிழக்கு நோக்கி இருந்தாலும்... கழுத்து கடைப்பக்கம் திரும்பி இருந்தது.

"யாருக்கு சாவு வந்த மாதிரி.... முட்டாப்பயலே... உனக்குதான்டா சாவு வந்துருக்கு... !" கையில் இருந்த தேநீரை அவனைப் பார்த்துக் கொண்டே வேகமாய் குடித்தார்.

"என்ன பெருசு.... இன்னைக்கு மதியமே போட்டியா" என்ற ராஜமூர்த்தியின் வலது கை பெருவிரல் ஒருமுறை வாய்க்கருகே ஏறி இறங்கியது. அதே நேரம் வேகமாய் அருகே வந்த பைக் நின்றும் நிற்காமலும்....தடுமாறியது. இறங்கியும் இறங்காமலும் நண்பன் ராபின்...... " என்ன மாப்ள ஏதும் பிரச்சனையா... " என்று உடல் நடுங்க ராஜமூர்த்தியின் தோள் பிடித்து அவசரமாய் கூர்ந்து பார்த்தான்.

மதிய கதிரவன் மாற்றி யோசிக்க வழியின்றி வழக்கம் போல வெந்து கொண்டிருந்தான். சுற்றும் முற்றும் தானாக பார்க்க தோன்றியது ராஜமூர்த்திக்கு. கழுத்தில் வழிந்த வியர்வையை கர்சீப்பால் துடைத்துக் கொண்டே......."என்னாச்சு....! ஏன் நல்லாதானே இருக்கன்.... பெருசென்னமோ ஒளருது... நீயும்....."

அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே...... வேகமாய் பின்னால் தோள் தொட்டு திருப்பிய....பெண் ஒருத்தி....."டேய் தம்பி.... என்னமோ கேள்வி பட்டேன்... அதான் ஓடியாறேன்... என்னாச்சுடா.... வம்பு தும்புக்கு போகாதன்னா கேக்கறியா... "

"அட கருமங்களே..... என்ன நடக்குதுன்னு சொல்லி தொலைங்களே.... ஒன்னும் விளங்கல...... " கத்தினான்... ராஜமூர்த்தி.

எதிர்வீட்டு சுந்தரம் சார் நெற்றியில் வியர்வை சொட்ட வந்தார். காலிங் பெல்லா இல்லை அது கழன்ற பல்லா என்பது போல தடுமாற்றம் அவர் சொட்டை மண்டையில். முகத்தில் வியர்த்து ஒழுகினாலும்... தலையில் துடைத்துக் கொண்டார். கர்சீப்பை இடது கையில் வைத்துக் கொண்டு வலது கையில் வெறுமையைத் துடைத்தார்.

"மூர்த்தி.......என்னாச்சு.... என்னென்னவோ கேள்வி பட்டேன்...... யாரா இருக்கும்...... கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும்ப்பா...... " என்றார். மோர் குடுத்து சுந்தரம் சாரின் தவத்தை தனித்த ராஜமூர்த்தியின் மனைவிக்கு முகத்தில் தான் இதயமே. துடித்து தவித்து வார்தையற்று..... முனங்கினாள்.

"ஒண்ணா ரெண்டா.... போற பக்கமெல்லாம் பொல்லாப்பு தான்.... மொத மாரியே இருக்க முடியுமா.. வயது நாப்பத்தஞ்சாச்சு... மூடிட்டு வீட்ல கிடக்கனும்.... இன்னமும் பைக் ரேஸ்க்கு போறேன்னு ரவுடித்தனம் பண்ணிட்டு திரிஞ்சா.....இப்பிடித்தான். நடுரோட்ல எத்தனை ரவுடிங்க வெட்டிகிட்டு சாவறாங்க.......... வேண்டாய்யா...... குடும்பம் குட்டின்னு இருக்கு... கொஞ்சம் கவனமா இரு... " காயை நறுக்கினாளோ.....கையை நறுக்கினாளோ....தாரை தாரையாய் துக்கம் வழிந்தது... கன்னத்தில்.

அலைபேசி அழுதழுது அலுத்திருந்தது. எத்தனை அழைப்புகள். எத்தனை விசாரிப்புகள். நிஜமாகவே துக்கத்தின் வெளிப்பாடா....இல்லை ஆழ்மனதின் கொண்டாட்டமா. தூக்கம் பறிபோனது. துக்கம் குடியேறியது. யாரா இருக்கும். என்னவா இருக்கும். ஜன்னலை திறந்து ஒரு முறை வீதியை நோட்டமிட்டான். பழக்கமான பழுப்பு வீதி.....சிவப்பு சாயம் கொட்டிக் கொண்டது போல... தோன்றியது. குரல்வளையை நெறிப்பது போல கொஞ்சம்.......கழுத்தறுபட்ட ஆடு கதறுவது போல கொஞ்சம்.....என்று இப்போது வந்த அலைபேசி அழைப்பு கதறியது.

போனை எடுக்க கூட பயம்.... என்ன இது. எதுக்கு இப்படி பயப்படறேன். தன்னையே நொந்து கொண்டு போனை ஆன் பண்ணினான்.

எதிர்முனையில் மௌனம். திக்கென்றது. சரியா போச்சு. நிஜம் தான் போல. எல்லாரும் சொல்வது நிஜம் தான் போல. எதுவோ சரி இல்லை. உறுதிப்படுத்தியது.... எதிர்முனையில் பேச்சற்ற அமைதி. ஆயிரம் சொற்களை விட ஒரே ஒரு அமைதி கூர்மை. முதலில் எழும்பாத குரலில் 'ஹல்லோ... ' என்றான். பதிலுக்கு மௌனம் தான். அதுவும் பாதி வன்மம் போல.

"ஹலோ...... யார் வேணும்... ! ஹலோ...... ?" கொஞ்சம் சத்தமாகவே கத்தினான். பட்டென்று மூளைக்குள் சுண்டுவது போல அலைபேசி அணைக்கப்பட்டது. கால்களில் நடுக்கம் கூடியது. காதுகளில் அழுத்தம் கூடியது.

ரெண்டு மூணு நாளாகவே இதே பேச்சு தான்.

"நீ பாத்தியா... " பொறுமை இழந்தபோது கத்தினான் ராஜமூர்த்தி.

"ஊரே பாத்ருக்கு.....இதுல நான் வேற தனியா பாக்கணுமா" என்றான் நெருங்கிய நண்பன் ரமேசன்.

வழக்கமாக கூடும் நண்பன் ராபினின் மெக்கானிக் கடையில்... நைந்து போன சக்கரம் போல அமர்ந்திருந்தான் ராஜமூர்த்தி. மூளைக்குள் யாருமற்ற முகம் முளை விட்டுக் கொண்டேயிருந்தது.

"கொஞ்சம் மிஸ் ஆகிருந்தா... முடிஞ்சிருக்கும் போலயே... என்ன தைரியம்ப்பா இது. நம்ம ஏரியாக்குள்ள வந்து... அதும் உன்னையே ஒருத்தன்... "

"என்னைய இல்ல...... " கத்தினான் ராஜமூர்த்தி. அவன் முகத்தில் தெளிவற்ற கோபம் தவழ்ந்து கொண்டிருந்தது. நம்பிக்கையற்ற பார்வையைத் தாழ்த்தினான்.

"சரி.... கொஞ்சம் மிஸ் ஆகிடுச்சு. ராஜமூர்த்தி நீ தான. தெளிவா கேட்டருக்கான்பா... " - பதில் சொன்ன நண்பனின் குரலில் தெளிவு.

நண்பர்கள் கூட இருக்கையில்... ஒருமாதிரி தைரியமாக இருந்தாலும்... தனியாக இருக்கையில்... முதுகில் சில்லிட்டுக் கொண்டே இருந்தது.

"பேசாம போலீஸ்ல கம்பளைண்ட் குடுத்தரலாமா.....?" மாமனார் புருசோத்தமன் பிடித்துக்கொண்டிருந்த சிகரெட்டோடு புகை எழுப்பினார்.

"என்னனு குடுக்கறது... ஒரு விவரமும்.....இல்லையே...." என்றான். "சண்டை சச்சரவெல்லாம் விட்டு ரெம்ப நாளாச்சே... " முனகினான்.

ஏனோ எதுவோ விரட்டுகிறது. தெரிந்தவன்.....நண்பன்.......சொந்தன்........ ஊர்க்காரன்.....டீ கடை முழுக்க.... என்று ஆளாளுக்கு இதே பேச்சு தான்.

"என்ன முன்னாள் பயில்வான்.... உம்மையே ஒருத்தன் புரட்டி எடுத்துட்டானாமே...... !" சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டே கேட்ட நாராயணன் சாருக்கு இதில்......
சந்தோஷமா சங்கடமா தெரியவில்லை. பொதுவாகவே மனிதனுக்கு மனிதன் தாவும் செய்தியில் கண் காது மூக்கு கால்கள் என்று முளைத்துக் கொண்டே தான் இருக்கும். சிறகு முளைக்கும் போது அது ட்ரெண்டிங் ஆகி விடுகிறது. இந்த வாரம் முழுக்கவே ஊருக்குள் ட்ரெண்டிங் ராஜமூர்த்தி தாக்கப்பட்டது குறித்து தான்.

பேசுவோர் பேசி விட்டு அவரவர் வேலையை பார்க்க.... விவரம் அறியாமல் தடுமாறினான் ராஜமூர்த்தி. அவன் மூளைக்குள் கண்கள் மூடுவதே இல்லை. பழைய லிஸ்ட் எடுத்து... ஒவ்வொரு கடும் பெயராக அடித்தான். இவன் இல்லை... இவன் இல்லை.... விரோதிகளுக்கு கூட அலைபேசினான். சிலர் மறந்தே போயிருந்தார்கள்.

"நீயெல்லாம் ஒரு மனுஷன்னு உன்னைய பழி வாங்க வர்றேனா...... ! மூடிட்டு போனை வைடா....." அதற்கு மேல் இஷ்டத்துக்கு வந்து விழுந்த குறிப்பு சொற்களை.... எழுத முடியாது. மனதுக்குள் படித்துக் கொள்ளுங்கள்.

"மாமா.... கேள்விப்பட்டேன்.... எங்களை மீறி எவன் என்ன பண்ணிடுவான்னு பாக்கறேன்.... நீங்க ஒன்னும் பயந்துக்க வேண்டாம்...." ஆறுதல் சொன்னான்... அக்கா மகன்.

"அட கத்தி இல்லைப்பா... வாளாம்.... சும்மா பளபளன்னு இருந்துச்சாம்... சொருகியிருந்தா.... சும்மா சொடக்கு போடற நேரம் தான் சிவலோகம் போயிருப்பாப்ல மூர்த்தி..... அதும் வெறின்னா வெறி..... கொலை வெறியாமாப்பா......... அப்டியே மிருகம் மாதிரி இருந்தானாம்... வஞ்சம் இல்லன்னா... இப்டி எல்லாம் இவ்ளோ தைரியமா துணிஞ்சு இறங்க முடியாது... அதுவும் பட்ட பகல்ல... வீதிக்குள்ள... விரட்டி இருக்கான்னா.... பேக் ரவுண்ட் பலமான ஆளாதான இருக்கனும்... அட்டெம்ப்ட்லாம் இல்ல... முடிவு எடுத்து தான் சுத்திருக்கானுங்க... சட்டுனு வந்த வண்டில ஏறி கண்ண மூடி முழிக்கறதுக்குள்ள மறைஞ்சிருக்கான்னா... பெரிய வேலை பாத்துருக்கானுங்க மச்சி... கவனமா இரு... "

ஆளாளுக்கு பேசிய நண்பர்களின் ஒவ்வொரு சொல்லிலும் அந்த பளபள வாள் மின்னியது.

"ஐயோ..... நான்தான் எந்த வம்புக்கும் இப்ப போறதில்லையே... " யாரிடமாவது மன்னிப்பு கேட்க வேண்டும் போல இருந்த எண்ணம் தான் வேறு வகையில் வார்த்தையை கொட்டியது... ராஜமூர்த்திக்கு.

"விட்டது தொட்டதுன்னு ஏதும் தொடருதோ என்னவோ... ஆனாலும் கவனம் மச்சான்....புள்ளை வேற ப்ளஸ் டு...... கரை சேத்தனும்... " -நெற்றியில் ஆணி அடித்தது போல நண்பன் சொன்னது.

சட்டென மகளின் நினைப்பில்... மவுனம் அலைமோதியது. போன் அடித்தான்.

"என்னப்பா... " என்ற மகளிடம் எதில் இருந்து ஆரம்பிப்பது தெரியவில்லை. "டியூசன் முடிச்சு பாத்து சீக்கிரம் வீடு வந்து சேரு"ன்னு சொல்லி நெற்றி தேய்த்து யோசித்தான்.

கிட்டத்தட்ட ஊரில் பாதி பேருக்கு விஷயம் தெரிந்து விட்டது. கண்டிப்பாக மீண்டும் அவன் வருவான் என்று ராஜமூர்த்தியும் நம்பத் தொடங்கினான். அவளோ பெரிய வாள்... திரும்ப திரும்ப அவன் காதில் பளிச்சிட்டுக் கொண்டேயிருந்தது.

"யாரா இருக்கும்... என்னவா இருக்கும்..... எதுக்கு இப்டி... ?!!!"

பின் மதியம் பாதி கண்களில் விழித்தது. மெத்தை வீடுகள் எல்லாம் குறட்டைக்குள் சுருண்டு கொள்ள... ஆங்காங்கே நின்ற நடந்த அமர்ந்த வெறித்த மிக சிலர் அவரவர் போக்கில் அவரவர் சிந்தனையில். நாய்கள் சில....வெயிலில் சாய்ந்த தவமென சிவனேனு. மூச்சிரைக்க ராஜமூர்த்தி ஓடி வந்தான். கழுத்தில் இருந்து முதுகில் இருந்து தலையில் இருந்து கால்களில் இருந்தெல்லாம் மூச்சு. இன்னும் போதாத மூச்சு...... 'காப்பாத்துங்க' வார்த்தையை தொண்டைக்குள் தூண்டில் கொண்டு இழுத்தது. முகத்தில் அதிர்ச்சியும் பயமும் என திரும்ப திரும்ப கை எடுத்துக் கும்பிட்டான். கிட்டத்தட்ட சாமுராய் வாள் போல இருந்தாலும்.... அது திருப்பாச்சியில் சிறப்பாக செய்து வாக்கப்பட்ட வாள் தான் போல. ஏந்தியிருந்த கையில் ஏகத்துக்கும் வன்மம். முகத்தில் எலும்புக்கூடு துணியால் போர்த்தியிருக்க இன்னும் அச்சம் அதிகம் கூட்டிய உடல் மொழி அது.

காதில் வெட்டு.... காலில் வெட்டு... கையில் வெட்டு... என்றெல்லாம் இல்லை. இது தெளிவான முடிவு. வெட்டினால் கழுத்தில் தான். குத்தினால் நெஞ்சில் தான். கொலை ஒன்றே தீர்வு என்று தீர்மானம் விரட்டுபவன் கால்களில் பலமாய் ஊன்றியது. இன்னைக்குனு ஒரு பய வீதியில் கவனத்தோடு இல்லை... அவனவன் கதவை சாத்திக்கொண்டு பொண்டாட்டி தலையில் பேன் பார்க்கிறார்களோ என்னவோ... காற்றை துப்பிக் கொண்டே தன்னை தூக்கி ஓடுவது...... பகவானிடம் வேண்டுவது போல அத்தனை சுலபம் இல்லை. எந்த சூத்திரமும் ஒன்று சேரவில்லை. காலில் விழுந்து கெஞ்சினாலும்... கதற கதற குத்துவான் போல. முகம் தெரியாத முரட்டு கொலைகாரன்... ஆங்கில படத்தில் வரும் பிசாசைப் போலவே இருந்தான். அடித்தொண்டையில் வன்மம் கக்கும் குரலில்.. ரத்தம் ஒழுகியது. உருண்டு புரண்டு எழுந்து தத்தளித்து.... தடுமாறி...... வந்து விழுந்த இடம் டேவிட் தாத்தாவின் டீ கடை.

டீ கடையா இது... வீதியின் திருப்பத்தில்... யாருக்கு இந்த டீ கடையைத் தெரியும். காலம்போன காலத்தில் செய்வதற்கு ஒரு சிறுவேளை வேண்டுமே என்று டீ ஆத்திக் கொண்டிருக்கிறார். மற்றபடி... முன்னாள் வாத்தியாருக்கு பென்ஷன் வந்து கொண்டுதானிருக்கிறது.

கல்லாப் பெட்டியில் தலை சரிந்து குப்புற கவிழ்ந்திருந்த டேவிட் தாத்தாவுக்கு மதியம் என்பதால்அல்ல... மாற்றி யோசிக்கவும் இந்த தூக்கம் தான் மருந்து. எதுவோ சத்தம் என்று தலையை தூக்கியவருக்கு தூக்கி வாரி போட்டது.

"ஐயோ.... அயோ... ஜீசஸ்...." கத்திக் கொண்டு வேகமாய் எழ.... முட்டாய் பாட்டிலையெல்லாம் தள்ளி விட்டு.... டேபிள் முனையில் வயிறு முட்டி... தடுமாறி வெளியே போகவும்....

"ஐயோ...... நான் ராஜமூர்த்தி இல்ல... சிவராமன்... நீங்க ஆள் மாத்தி விரட்டறீங்க...... " கத்தினான்..... கையெடுத்து கும்பிட்ட சிவராமன். கீழே அவன் கிடக்கும் கோலம்.... ஐயோ அது கொலையை விடவும் பயங்கரம். வாய் பொத்தி பவ்யமாய் பொதுவாக படபடத்தபடியே பார்த்தார் டேவிட் தாத்தா. கண்களில் கலவரம். கால்களில் பெரும்பயம். தலை சுற்றியது. வார்த்தையின்றி முகம் கோணியது.

கொல்ல வந்தவன் கூர்ந்து பார்த்தான். வாளால் சிவராமனின் முகத்தை திருப்பினான். அப்படி இப்படி என்று அசைத்தான். முகமூடி வெறி கொண்டு டேவிட் தாத்தாவை பார்த்துக் கொண்டே...... வேகமாய் பின்னோக்கி நகர்ந்தான். தப்பான ஆளை விரட்டி விட்டோம் என்று தான் யோசித்திருக்க வேண்டும்.

"ராஜமூர்த்தி... ராஜமூர்த்தி.... ராஜமூர்த்தி...... !?" என்று முனங்கி யோசித்தபடியே சடுதியில் வந்த வேனில் படக்கென்று குதித்து உள்ளேறினான். வண்டி பறந்து விட.... அதே நேரம் விட்டால் போதும் என்று சிவராமன் எழுந்து எந்த திசை என்று தெரியாமல் குருட்டாம்போக்கில் தலை தெறிக்க ஓடினான்.

பெருமூச்செடுத்த டேவிட் தாத்தா... நினைவு வந்தவராய்... "டேய் டேய்... யாருடா நீ...... யாரு..... டேய் டேய்" - கத்திக் கொண்டே இரண்டு பக்கமும் திரும்பி திரும்பி பார்த்தபடியே மயங்கி சரிந்தார்.

திக்கென மூச்சடைத்து எழுந்தமர்ந்த ராஜமூர்த்திக்கு மூச்சு வாங்கியது. வியர்த்து ஒழுகிய முகத்தில் வெடவெடப்பு அடங்கவில்லை. கண்டது கனவா நினைவா என்று பிரித்துப் பார்க்க முடியவில்லை. டேவிட தாத்தா இதுவரை பத்து முறைக்கு மேல் இதே சம்பவத்தை சொல்லி விட்டார். அவரின் கண்களில் இன்னமும் அந்த கொலைகாரனின் எலும்புக்கூடு முகம் பயங்கரமாய் தெரிந்து கொண்டே இருக்கிறது.

"அந்த கொலைகாரன்.... நீன்னு நினைச்சு தான்.... அவன கொல்ல வந்தான். தெளிவா சொன்னானே.....ராஜமூர்த்தி உன்ன கொன்னா தான் எல்லாமே சரி ஆகும்னு... "

"சரி அந்த சிவராமன் என்னானான்....?"

"அவன் யாருன்னே தெரியல. விட்டா போதும்னு ஓடிட்டான்....இதுவரை அவனை நான் பார்த்ததே இல்ல. புதுசா இருந்தான்."

ராஜமூர்த்தி தேனீர் அருந்தியபடியே யோசித்தான்.

"யார் அந்த சிவராமன். என்ன மாதிரியே இருந்திருக்கான்னா... இதுல என்ன நடக்குது.... யாரோ பண்ணின தப்புக்கு என்ன தேடறாங்களா.... இல்ல என்னைத்தான் தேடி........மாறி யாரோ ஒருத்தனை வெட்ட பார்த்தாங்களா... " ராஜமூர்த்தியின் தொண்டைக்குள் மதியம் உண்ட மீன்கள் நெளிந்தன.

நெஞ்சு வலி வந்தால் கூட பரவாயில்லை போல. சூழ்ச்சி..... என்னவோ செய்தது. நம்பிக்கையற்ற தருணத்தில் கண்ணாடி கூட பயமுறுத்தும்.

பேசமா கேஸ் குடுத்தரலாமா என்று கூட தோன்றியது. அலைபேசி சத்தமில்லாமல் சிணுங்கியது. புது எண். பார்க்கையிலேயே அடி வயிற்றில் எதுவோ அசைந்தது. எழுந்து ஜன்னல் பக்கம் சென்று அலைபேசியை பார்த்துக் கொண்டே ஆன் பண்ணினான்.

அதே மௌனம். அதே நீண்ட பெருமூச்சு.

"யாருங்க நீங்க.... உங்களுக்கு என்ன.வேணும்.....நேர்ல வாங்க... பேசி தீத்துக்கலாம்...." கிட்டதட்ட கெஞ்சினான்.

மறுமனையில் அதே மௌனம்... அதே நீண்ட பெருமூச்சு.

"டேய்.... உன்ன விட தில்லாலங்கடிடா நான்... கையில சிக்குன.... அப்பறம் இருக்குடா... "

பட்டென மறுமுனை துண்டிக்கப்பட....... ஜன்னல் கம்பியில் சத்தம் இல்லாமல் கையை மடக்கி குத்தினான். வேறு என்ன செய்வதென தெரியவில்லை.

கண்கள் தானாக கலங்கின. யாரோ ஒருவன் தன்னை கொல்ல காத்திருப்பது ஊரெல்லாம் தெரிந்து விட்டது. ஆளாளுக்கு ஆறுதல் என்ற பெயரில்... அர்ச்சனை செய்கிறார்கள். பரிதாபப்படுகிறார்கள். உள்ளுக்குள் ஆனந்தப்படுகிறார்கள். கேலி செய்கிறார்கள். யார் இப்படி செய்வது....யாரை சந்தேகிப்பது... தலையை சுற்றியது. என்ன ஆனாலும் சரி... காலையில் போலீஸ் ஸ்டேஷன் சென்று விட வேண்டியது தான். கதவை யாரோ தட்ட பயந்து கொண்டே ஜன்னல் வழியே எட்டி பார்த்தான்.

கையில் வட்ட ஐஸ் பெட்டியோடு டேவிட் தாத்தா.

"பெருசுக்கு நேரம் காலமே தெரியாது. நினைச்சா குடிக்கணும்... " நொந்து கொண்டே கதவைத் திறந்தான்.

"என்ன பெருசு இந்த நேரத்துல... ?"

பக்கத்து வீட்டுக்கு வர்றதுக்கு நேரம் காலம் என்ன. பொண்டாட்டி புள்ளை ஊருக்கு போயிருக்குனு வேற சொன்னியா. நீ வேற குழப்பத்துலயே இருக்கியா... அதான்... கொஞ்சம் நேரம் பேசிட்டு போலான்னு வந்தேன்...." என்று வழக்கம் போல வார்த்தையை இழுத்து இழுத்து சேர்த்துக் கொண்டே ஹாலுக்குள் நுழைந்து அமர்ந்தார் டேவிட் தாத்தா.

"சும்மா கதை விடாத பெருசு.... குடிக்க ஏற்பாடோட வந்துட்டு.... எனக்கு ஆறுதல்.... "பேசிக்கொண்டே கதவை சாத்திக் கொண்டு திரும்ப எத்தனிக்க.....கையில் இருந்த கத்தி மாதிரி இருந்த ஒன்றை ராஜமூர்த்தியின் தொண்டைக்குழியில் கச்சிதமாக பலம் கொண்டு சொருகினார். குபுக்கென்று ரத்தம் தான் வந்ததே தவிர சத்தம் உள்ளே தான் சென்றது.

என்ன ஏதென்று புரியாமல்... தொண்டையில் ரத்தம் கொப்பளிப்பதை ஒரு கையால் தடுத்துக் கொண்டே அங்கும் இங்கும் இன்னொரு கையை எதையாவது பிடித்துக் கொள்ள துழாவினான். கண்கள் அகல விரிய... ஆயிரம் கேள்விகள் அதில்.

மீண்டும் அதே போல கத்தி மாதிரி ஒன்றை எடுத்த வேகத்தில் வயிறில் ஏற்றினார். இன்னொன்றை எடுத்து கழுத்தில் பக்கவாட்டில் சொருகினார். இன்னொன்றை எடுத்து நெஞ்சின் நடுவே ஏற்றினார். இன்னொன்றை எடுத்து அல்லையில் சொருகினார். இன்னொன்றை எடுத்து பின் கழுத்தில் சொருகினார்.

அங்கும் இங்கும் தடுமாறி குரல் கொப்பளிக்க ரத்தம் தெறிக்க ராஜமூர்த்தி எப்போது விழுந்தான் என்று தெரியவில்லை. பேச இயலாத கால்கள்... நரம்புகள் முறுக்கேறி... தரையில் பாவத்தின் சம்பளத்தை கிறுக்கின. வெறித்த கண்களில் அவன் உயிர் போவதை நிதானமான பார்த்துக் கொண்டே நின்றார் டேவிட் தாத்தா. மிக இலகுவாக ஒரு கொலை சத்தமில்லாமல் நிகழ்ந்து முடிந்தது.

அவன் உடலில் சொருகப்பட்டிருந்த கத்தி வடிவத்தில் உறைந்திருந்த ஐஸ் கட்டியின் கூர்மை கரைந்து.......கொப்பளித்து வழிந்து கொண்டிருந்த ரத்தத்தில் சேர்ந்து ஒன்றுமில்லாமல் ஆகி கொண்டிருந்தது.

பிறகு நிதானமாக அங்கிருந்து நகர்ந்து....கர்சீப் சுற்றப்பட்ட கைகள் கொண்டு திறந்த பின் கதவு வழியாக வெளியேற எத்தனிக்கையில்.....நின்று திரும்பி ஒரு முறை ஆழமாய் சுவாசித்து பார்த்தார்.

தன் 65 வயது மனைவி மாரடைப்பில் செத்து போனது இயல்பு தான். ஆனால்... அவளைக் கட்டிக் கொண்டு அழுகையில்.... இதோ இந்த ராஜமூர்த்தியின் மேல் எப்போதும் அடிக்கும் அதே சென்ட் வாசம் செத்து போன மனைவி உடல் மீதும் அடித்தது இயல்பில்லையே.

பெருமூச்சு விட்டார். கேஸை திசை திருப்புவதற்கு செய்த அலைபேசி அழைப்புகள்.... அதற்காக... மிரட்டுவதற்கு குறுக்கு வழியில் வாங்கிய புது போன்... புது நம்பர் என்று எல்லாவற்றையும் அழிக்க வேண்டும். மனம் நிறைந்து கண்கள் மூடி திறந்தார். கண்ணீரின் சூட்டில் மனைவியின் வாசம்.

நாளை ஊரே சொல்லும்... தான் கதை கட்டி விட்ட முகமூடிக்காரன் செய்தே விட்ட இந்த கொலைக்கான சாட்சிகளை.

கடந்த இரண்டு மாதங்களைப் போல இல்லாமல்...... இன்றிரவு நிம்மதியாய் தூங்குவார் டேவிட் தாத்தா. 

- கவிஜி

Pin It