ட்ரிங்... ங் ... ங்…

மொய் மொய் எனக் கூட்டம் திரைசீலையில் விழுந்த பெயர்களை கண்டுகொள்ளாமல் மந்திரித்த ஆடுகளை போலத் தங்கள் இருக்கையிலிருந்து எழுந்து நகர்ந்து கொண்டிருந்தார்கள்.

காதுகள் அடைத்தபடி, அகலவிரிந்த கண்மணியுடனும் கலைந்துக் கொண்டிருந்தது அந்த கூட்டம். அடுத்து இரவு பத்தரை மணி காட்சிக்காகக் காத்திருந்த பெருங்கூட்டம் வெளியே வருபவர்கள் கண்களில் படத்தின் தரத்தை நிர்ணயம் செய்தபடி இருந்தது.

‘டேய் அப்பறம் வேற என்ன...’  என்றான் விஜய்.

‘அப்பறம் என்ன வீட்டுக்கு தான்...’  என்று இருசக்கர வண்டிகள் டோக்கனைத் தன் சட்டைப் பையில் தேடிய படி பதில் பேசி வந்தான் கண்ணன்.

‘என்னடா கிளைமாக்ஸ்... கிளைமாக்ஸ் வேற மாதிரி வெச்சிருக்கலாம்’

எப்போதும் போல பொலம்பிக் கொண்டிருந்தான் கார்த்தி.

தியேட்டருக்கு வெளியில் மூவருக்கும் இடையில் கதை விவாதம் நடந்து கொண்டிருந்தது.

‘டேய் மணி பதினொன்னாக போகுது... இன்னைக்காவது வீட்டுக்கு நேரத்துல போவோம் ...’ என்று தன் கைக்கடிகாரம் பார்த்து எச்சரிக்கை விடுத்தான் கண்ணன்.

மூன்று வண்டிகளும் நூறடி சாலையில் ஒன்றின் பின் ஒன்றாக பயணித்தது.

சாய்பாபா காலனி நிறுத்தம் வந்ததும். ‘ சரி கார்த்தி… நானும் கண்ணணும் இப்படியே என். எஸ். ஆர் ரோட்டுல பூந்து வீட்டுக்கு போறோம் ... நீ இப்படியே நேர போய்யுறு… நாளைக்கு பாக்கலாம்’  என்று பேசிக் கொண்டே இருவரும் நகர்ந்தனர்.

கார்த்தி மேட்டுப்பாளைய சாலையில் பறந்துக் கொண்டு இருந்தான்.

யாருமற்ற சாலை நிதானத்தை யாசித்திருந்தது. காற்று இருட்டை போர்த்திக் கொண்டு நடமாடியது. .

இருவழி சாலையின் இருபுறமும் மூச்சற்று கிடந்தன கடைகள், நடுவில் மரமென நின்றுகொண்ட மின்கம்பங்கள் மஞ்சள் நிறங்களை பொழிந்துக் கொண்டிருந்தன.

படத்தில் கேட்ட இசை செவிகளில் வந்து வந்து போனது, இசைக்கேற்ப தன் உடலையும், வாகனத்தையும் இயக்கிக் கொண்டான்.

யாருமற்ற உலகில் தனிமனிதனென பயணித்தான்.

தூரத்தில் இருவர் சாலையை மெதுவாக கடப்பது போல தெரிந்தது. உற்று நோக்கியவன் கண்களில், அந்த இருவர் கைகளில் மது பாட்டில் இருந்தது தெரிந்தது. விரைந்து அவர்களை கடக்க முற்பட்டவனின் வாகனம் நிறுத்தப்பட்டது.

‘ டேய் இறங்கு டா கீழ ... நீயென்ன.. பெரிய...’  அகராதியில் எப்படி தேடினாலும் கிடைக்கப்பெறாத வார்த்தைகள் அவர்கள் வாயில் கொப்பளித்தன. இருவர் ஐவரானார்கள் .

சூழ்ந்துக் கொண்ட ஐவரின் நடுவில் வண்டியுடன் அகப்பட்டுக் கொண்ட கார்த்தி செய்வதறியாது நின்றிருந்தான். கத்துவதால் எந்த பிரயோஜனமும் இல்லையென தெரிந்து கொண்டான், வாகனத்தை மாறிமாறி உதைத்தார்கள். வாயில் இருந்த மதுவை அவன் மேல் உமிழ்ந்தார்கள். குடலைப் பிடுங்கிய நாற்றம் பயத்தில் பெரிதும் சோதிக்கவில்லை.

வலது கையை மடக்கி புறங்கையை நெஞ்சின் கூட்டை உடைத்து இடது முன்னங்கையில் குரல்வளை உடைய ஒரு குத்து விட்டு, இடது குதிங்காலை ஒரு ஆளுயுர உயர்த்திக் கடைவாயை பிளந்து விடலாம்… என்றெல்லாம் தோன்றியது .

‘அண்ணா உடுங்கண்ணா நான் வீட்டுக்கு போகணும்... வீட்டுல தேடுவாங்க. உங்களுக்கு என்ன வேணும் ...’

‘நீ பெரிய இவனா.. நடுராத்திரில தான் வண்டி ஓட்டுவையா...’

‘இல்லண்ணா படத்துக்கு போயிட்டு வரேன்...’

அவன் பேசுவது அவர்கள் செவிகளில் சேருவதற்குள், அவர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் மொழியில் தகாத வார்த்தைகள் பொருந்திய வாக்கியங்களை பிரயோகித்திருந்தனர்.

கடைசி பத்து சகவிதம் உயிர்ப்பித்திருந்த அலைபேசி பதட்டதில் நீட்டிய இவன் விரல்களில் உயிர் விட்டிருந்தது. போதையின் உச்சியில் பேய்யாட்டம் ஆடிக்கொண்டிருந்தது அந்தக் கூட்டம்.

அடுத்து என்ன நடக்கும் என தெரியாமல் சூழ்ந்திருந்தக் கூட்டத்தின் இடைவெளியில் சாலையில் வேறு ஆட்களைத் துணைக்கு தேடிக் கொண்டிருந்தான் கார்த்தி.

கொண்டையில் சிவப்பு, கருநீலம் என மாறிமாறி மினுக்கி ஊர்ந்து கொண்டு வந்த வாகனத்தைப் பார்த்தவுடன் கலைந்து கொண்டது கூட்டம்.

முடிந்துபோவதாக இருந்த அவன் வாழ்க்கை, தூரத்தில் தெரிந்த காவல் துறை வாகனத்தில் உயிர் பெற்றுக்கொண்டது. நரம்புகள் முறுக்கேறிக் கொண்டன, தசைகள் புதிதாய் முளைத்தன, கண்கள் தழலென சிவந்திருந்தது. இருந்தவர்கள் மறைந்துவிட்டார்கள் என்று தெரிந்தும் சுற்றித் தேடினான்.

சற்று சலன்பட்டிருந்த சாலை வாகனத்தின் நிறுத்தத்தில் மறுபடியும் உறங்கிப்போனது .

வாய்நிறைய வார்த்தைகளுடன் நின்றிருந்தவனிடம்

இந்த நேரத்துல இங்கென்ன வேல ...

‘ஐயா ...’ என்று எங்கிருந்து... எதிலிருந்து ஆரம்பிப்பது என்று குரல் பரபரத்துக் கொண்டிருந்த வேளையில்.

‘பக்கத்துல வா ... குடிச்சியா...’  என்று கேட்டபடி வாகனத்தில் அமர்ந்திருந்த காவலர் இறங்கிவந்தார்.

அவன் மேல் உமிழப்பட்ட மதுவாடையும், அவன் தோற்றமும் அப்படி தான் இருந்தது. கருநீல நிறத்தில் சட்டையும், சந்தன நிற கால் சட்டையும் தெருவிளக்கின் வெளிச்சத்தில் அவன் நிறத்தோடு சேர்த்து எம்பதுகளில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படத்தை நினைவு கூர்ந்தது.

பேசுவதை மறுந்துபோனவன். ‘நான் இல்ல... வர வழில... ஒரு ...’  என்று நிலையானத் தொடரை துண்டித்துக் கொண்ட வாக்கியங்கள் தொண்டையை அடைந்திருந்தது.

‘ கோபால் இந்த பையன் கிட்ட யாரு என்னனு விசாரிங்க... இல்லைனா ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போலாம்’ .

அச்சத்தின் உச்சமென செயலற்று கொண்டது உடல்.

‘எங்கிருந்துப்... பா வர... இந்த நேரத்துல இங்க என்ன பண்ணற.. அதுவும் தண்ணி அடிச்சுட்டு வண்டிவேற ஓட்டிட்டு வந்திருக்க.. வீடு எங்க...’

கூண்டிற்குள் நிறுத்தப்பட்ட கைதியென கேள்விகள் ஒன்றின் பின் ஒன்றாக அணிவகுத்தன .

‘சத்தியமா நா குடிக்கலே சார்... நான் படத்துக்கு போயிட்டு வரும்போது ... நாலஞ்சு பேரு... என்ன அடிச்சாங்க சார்... அவன்தான் குடிச்சிட்டு மூஞ்சில துப்பிட்டான் சார்... என்று சொல்ல சொல்ல அழுதுபோனான்..

‘எங்க யாரும் இல்ல... லைசென்சு இருக்கா... உண்மையச் சொன்னா எதாவது பண்ணலாம்... இல்லைனா ஐயா ஸ்டேஷனுக்கு கூட்டிட்டுப் போக சொல்றாரு... அப்பறம் விடிய விடிய ஸ்டேஷன் தான்’ .

தூரத்தில் நின்றிருந்த அதிகாரி திரும்பி ஒரு பார்வைப் பார்த்தார். அவர் கையில் வைத்திருந்த நடைபேசி கரகரத்த குரலில் விட்டு விட்டு எதையோ பேசிக்கொண்டிருந்தது.

நடுநிசி நாசியில் கருமையின் நிறம் உக்கிரம் கொண்டிருந்தது .

‘ஸ்டேஷனுக்கெல்லாம் வேண்டாம் சார்... நான் அந்த மாதிரி ஆள் இல்ல சார்’

‘கோபால்… என்ன சொல்லறாரு சாரு…’ என்று காவல் உயர் அதிகாரி அவனை நெருங்கினார்.

வெளுவெளுத்துப் போய் நின்றிருந்தான். உண்மை கூனிக் குறுகி இறுமாப்பின் தோல் வெளுத்து சாம்பலென கரைந்துப் போவதாய் உணர்ந்தான். இப்படி உதிர்ந்து போகும் உண்மைக்கு எதற்கு ஊர் பல்லக்கு சுமக்கிறது.

பொய்மையின் வீரியம் இங்கு புரையோடிக் கிடக்கிறது. நிலையாமைக்குள் நிரந்தரத்தை தேடும் உலகம் இது. வாய்ப்பிருந்தும் ‘உண்மை’ புறக்கணிப்பின் வலைக்குள் அகப்பட்டுக் கொண்டது என்றெல்லாம் பொருமித்துக் கொண்டிருந்த அவனிடம்.

‘தம்பி ஸ்டேஷனுக்கு வந்துட்டு போ…’  என்று கூறிய அதிகாரி வாகனத்தை நோக்கி நடந்தார்.

‘ சார் சத்தியமா நான் சினிமாவுக்குப் போயிட்டு தான் வந்தேன்…’  இந்த முறை குரல் சற்றுத் தடித்திருந்தது.

‘ சரி டிக்கெட் எடு…’  

‘ டிக்கட்டை தேடினான்... டிக்கட்டை தவிர மற்றதெல்லாம் அகப்பட்டது.

டிக்கெட்டை தியேட்டர் வளாகத்தில் எரிந்து விட்டது அவன் கவனத்தில் இல்லாமல் இருந்தது. மீண்டும் மீள முடியாத பாழுங்கிணற்றில் விழுந்திருப்பதாய் உணர்ந்தான்.

தலையைக் குத்தியவாறு வெறும் தரையைப் பார்த்திருந்தான் .

என்ன நினைத்தார்கள் என்று தெரியவில்லை

‘இனிமே உன்ன இங்க பார்க்கக் கூடாது… போ..’  காவலர் வண்டி கிளம்பியது.

பதிலுக்கு காத்திருந்தவனாய்... வாகனத்தை இயக்கினான்.

பனியின் கூர்மை முகத்தை தைத்தது.

சற்று முன் விளக்கை மொய்த்திருந்த ஈசல்கள்... படிமங்களாய் சாலையில் இரைந்திருந்தது.

தினசரி தாள்களை ஒன்றின் பின் ஒன்றாக முறைத்துக் கொண்டிருந்தான்.

இறுக்கம் தளர்ந்துக் கொள்ளாமல் வெறுமை முகத்தில் அப்பியிருந்தது

சட்டென்ன ஒரு பக்கத்தை மட்டும் உற்று பார்த்துக் கொண்டிருந்தான்

‘ஹவுசிங் யூனிட்டில் வெகு நாட்களாக தேடப்பட்டு வந்த திருட்டு கும்பல் ஒன்று அதிகாலை இரண்டரை மணியளவில் ரோந்து போலீசாரிடம் பிடிபட்டது’ என்று ஐவரது புகைப்படத்தோடு செய்தி போடப்பட்டிருந்தது. நேற்று கார்த்தி சந்தித்த அதே கும்பல். அந்த புகைப்படத்தில் போலீஸ் கோபால் கம்பிரமாகக் காட்சி கொடுத்திருந்தார், மனம் நிறைந்திருந்தது.

‘ என்றா கார்த்திக் நேத்து வெகுநேரமா கானோ… படம் நேத்து எப்படி இருந்துச்சு..’  

நல்ல இருந்துச்சும்மா, அதுவும் கிளைமாக்ஸ் செமையா இருந்துச்சு ...

- சன்மது

 

Pin It