அலறல் சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த செங்கானுக்கு சட்டென்று விழிப்பு தட்டியது. பதறி எழுந்தான். மனைவி அன்னக்கிளியும் ‘‘என்னங்க ஆச்சி புள்ளைக்கி..’’ அவளும் எழுந்தாள். முகம் தெரியாத இருட்டு. இருட்டை கால்களால் துழாவி நடந்து குழல் விளக்குப் பொத்தானைப் போடும்முன் அழுதவாறு எழுந்து நின்றள் அகிலா.

 ‘‘என்ன குட்டியம்மோ யேன் அழுற?’’ குழந்தையை அணைத்தபடி கேட்டாள் அன்னக்கிளி. குழந்தை அகிலா மிரட்சியோடு அழுதபடி ‘‘அன்னைக்கி ஒரு அண்ணம் மேல வீடு இடிஞ்சி உழுந்துல்லா அந்த புது வீடு நம்ம மேல சரிஞ்சி விழுந்தமாரி இருந்துச்சி’’ என்றாள்.

‘’பயப்படாதம்மா அகிலா. அதெல்லாம் லேசில இடிஞ்சி வுழாது. நாலு பக்கமும் இரும்புத் தூணெல்லாம் போட்டு நல்லா ஸ்டாங்காதான் கட்டியிருக்காங்க. நீயொண்ணும் நெனைக்காத.’’ குழந்தையை தூக்கித் தோளில் சாய்த்து முதுகை தடவிக் கொடுத்தான். தோளில் கிடக்கும் குழந்தையின் உடல் நடுங்குவதை உணர்ந்தான்.

‘‘அம்மாவும் நீங்களுந்தானப்பா நேத்து இந்த வீடு ரொம்ப ஒயரமா கட்டியிருக்காங்க, இடிஞ்சி வுழுந்தா நம்ம எல்லோரும் சாக வேண்டியதான்னு பேசிக்கிட்டிருந்திய.’’ தோளிலிருந்து நிமிர்ந்து சொல்லி விட்டு மீண்டும் தோளில் சாய்ந்து கொண்டாள் அகிலா.

‘‘அப்படியெல்லாம் ஒண்ணும் ஆவாதம்மா. நீ வா, அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையில படுத்துக்கா பயமே தெரியாது. அன்னா பாரு, அக்காவும் அண்ணனும் அவங்கப் பாட்டுக்கு தூங்கிக் கொண்டிருக்காங்க. நீயும் தூங்கு.’’ குழந்தை அகிலாவை இரண்டு பேருக்கும் நடுவில் படுக்க வைத்துக் கொண்டார்கள்.

விளக்கின் ஒளியும், தாய் தந்தையரின் விழி வெளிச்சமும் கூடாரமாய் அரணமைத்து அகிலாவின் பயத்தைத் துரத்தி தூங்க வைத்தன. செங்கானும் அன்னக்கிளியும் விடியும் வரை தூங்கவே இல்லை.

தம்பிசேட்டும் செங்கானும் திருநெல்வேலி காரங்கதான். ஒரே சாதிக் காரங்கதான். இரண்டு பேரும் வீடு வாங்கிய புதிதில் ஒருவருகொருவர் ஒத்தாசையாக, கொடுத்து வாங்கி இருந்தவர்கள்தான். பத்து ஆண்டுகளுக்கு முன்னால் தம்பிசேட் இதே வீட்டை இடித்துக் கட்டும்போது வந்த தகராறுதான்.

வீட்டைத் தூக்கிக் கட்டிய தம்பிசேட் இடையில் இருக்கும் ஊடு சுவரை சரியாக சிமிண்ட் சாந்து போட்டுப் பூசாததால் மழைக் காலத்தில் சுவர் நனைந்து தண்ணீர் செங்கான் வீட்டுக்குள் கசிந்து சுவரும் துணிமணிகளும் நனைந்து சேதமாயின. உயரமான ஓட்டுத் தண்ணீர் விழும் வேகத்தில் செங்கான் வீட்டுக் கதவும் நனைந்து உப்பித் திறக்க முடியாமல் சிரமம் கொடுத்தது.

நனைந்த சுவரெல்லாம் பொறுக்குப் பெயர்ந்து பார்ப்பதற்கு அலங்கோலமாக காட்சி அளித்தது. மறுபடி தண்ணீர் வழிந்து சுவர் நனையாமல் இருப்பதற்குமான மராமத்துச் செலவு செங்கான் தலையிலே விழுந்தது.

செங்கானுக்கு வருமானம் குறைவு. முறுக்கு, மிச்சர், கடலை மிட்டாய் என தின்பண்டங்களை மொத்த சரக்குக் கடைகளில் வாங்கி மிதிவண்டியில் தெருத் தெருவாக அலைந்து பெட்டிக் கடைகளுக்கு போட்டு வருவான்.

போகும்போது சரக்கை ஒவ்வொரு கடையாக கொடுத்து விட்டு, வரும்போது பணம் வசூலித்துக் கொண்டு வருவான். காலையில் குளித்து முடித்து சாப்பிட்டு போகிறவன் நண்பகல் கடந்து மூன்று நான்கு மணிக்குதான் சாப்பிட வீட்டுக்கு வருவான்.

தெருத்தெருவாய் வண்டி மிதித்து மாடாய் உழைத்துமே குடும்பத்தை சிக்கலில்லாமல் ஓட்ட முடிய வில்லை. குழந்தைகளுக்கு பள்ளிக்கூடச் செலவு, பயிற்சி வகுப்பு, மருந்து செலவு என்று மூச்சி முட்டி போகிறது. அவனுக்கும் தாழ்ந்து கிடக்கும் தன் வீட்டை தூக்கிக் கட்ட வேண்டும் என்ற பேரவா நெடு நாளாக நெஞ்சில் குஞ்சு பொரித்துக் கிடக்கிறது.

செங்கான் வருமானத்திற்கு தாராவியில் சொந்தவீடு வாங்கி விட முடியுமா என்ன? அதெல்லாம் அன்னக்கிளி அருளால்தான் நடந்தது.

அன்னக்கிளி வெறுங்கையோடு வராமல் பத்து பவுண் நகையோடு வந்ததால் அது கைகொடுத்தது. நகையோடு கொஞ்சம் கடனும் சேர்ந்து இன்று வீடாய் கைகூடி நிற்கிறது.

மறுபடியும் தம்பிசேட் வீட்டை இடித்து புதிதாகக் கட்டுவதால் நமக்கு ஏதேனும் செலவு வந்து விடுமோ என்று கவலைப்பட்டான். வீட்டை இடிக்கும்போது செங்கான் வீட்டுச் சுவர் அதிர்ந்தது. அந்த அதிர்வில் பலகையிலிருந்து ஒரிரு பொருள்கள் கீழே விழுந்தன. வீட்டுக்குள் தூசு வந்து படிந்தது. வந்த கோபம், எரிச்சல் எல்லாத்தையும் கணவனும் மனைவியும் அடக்கிக் கொண்டர்கள்.

சத்ரபதி சிவாஜி சாலில் முதல் வீடே தம்பி சேட்டோடதுதான். இரண்டு பக்கமும் கடை வைத்துக் கொள்ள ஏற்ற இடம். சத்ரபதி சிவாஜி சால், தொண்ணூறு அடிச் சாலையை ஒட்டி குடிசைப் பகுதிகளுக்கிடையே தெற்கே காமராஜர் இளநிலைக் கால்லூரியிலிருந்து வடக்கே காலக்கில்லா வரை நீண்டு போகும் பெரிய தெருவிலிருந்து பிரிந்து போகும் ஒரு குறுக்குத் தெரு.

இங்கே தெரு என்பதெல்லாம் மூணடி, நாலடி சந்தைத்தான் குறிக்கும். கழுதை தேய்ந்து கட்டெறும்பாய் போனதென்பார்களே அதுமாதிரி தெரு தேய்ந்து சந்தாய் மாறி விட்டது. புற்றிலிருந்து ஈசல்கள் போல எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் உள்ள சந்து.

ஒப்பந்தக்காரர் கயிறு கட்டி மக்கள் நடமாட்டத்தை நிறுத்தி பழைய கட்டடத்தை இடிக்காமல், மெத்தனமாய் செய்துக் கொண்டிருந்தார்கள். சுவரை இடித்து வீட்டுக்குள்ளேயே தள்ளினார்கள். சில செங்கல் துண்டுகளும் கட்டுமான காரைத் தெறிப்புகளும் தெருவில் வருவோர் போவோர்மேல் விழுந்தன.

ஆனாலும் ஒப்பந்தக்காரர் தெருவில் செல்லும் மக்களைத்தான் ‘‘பார்த்துப் போங்க... வீட்டு வேல நடக்கில்ல’’ என்கிறாரே தவிர மக்கள் பாதுகாப்புக்கான வேறு தனிக்கவனம் செலுத்த வில்லை. வேலைக்காரர்கள் இடித்துத் தள்ளியதில் சுவர் பெரிய பாளமாய் பெயர்ந்து நடந்து செல்பவர்கள் மீது விழத்தொடங்கியது.

வேலையாட்களின் எச்சரிக்கைக் குரல் கேட்டு தெருவில் நடமாடிய மக்கள் எல்லோரும் சிதறி ஓடினார்கள். ஓர் இளைஞன் மட்டும் இடிபாடுக்குள் மாட்டிக் கொண்டான். அவனின் அலறல் சத்தம் அக்கம் பக்கத்தினரை குலை நடுங்கச் செய்தது. அவனின் இரண்டு தொடைகளும் இடுப்பும் சிதைந்திருக்க வேண்டும். இடிந்து விழுந்த சுவர்ப்பாளம் அவன் மீது சிதறிக் கிடந்தது. இரத்தம் வழிந்தோடி அவன் உடலை நனைத்தது.

ஒப்பந்தக்காரரும் மற்ற வேலைக்காரர்களும் இளைஞன் மீது நொறுங்கிக் கிடந்த சுவரை அப்புறப் படுத்தி விட்டு பக்கத்துக் கடையில் கட்டியிருந்த பதாகையை அவிழ்த்து அதில் இளைஞனை தூக்கிக் கிடத்தி மருத்துவமனைக்கு கொண்டு போனார்கள். அந்த இளைஞனின் வேதனை நிறைந்த சத்தமும் அவன் துவண்டு கிடக்கும் காட்சியையும் அன்னக்கிளி தோளிலிருந்து அகிலா பார்த்துக் கொண்டு இருந்தாள்

‘‘இனிம இது போலீஸ் கேசாயிரும், வீட்டுக்காரன் உள்ளப் போக வேண்டியது தான்.’’

‘‘வீட்டுக்காரன் மட்டுமா காண்ட்ராக்டு எடுத்த கொத்தனாரும் சேந்து உள்ள போவானுவ.’’

‘‘இவனுவள உள்ளப் போட்டாத்தான்யா சரி. செரிக்கி யுள்ளிய துட்டு இருக்கிற கொழுப்புல மூணு மாடி, நாலு மாடின்னு கட்டுதானுவ. ஒரு மாடி கட்டவே சட்டப்படி அனுமதி இல்ல. இடிஞ்சி விழுந்தா எவங் குடும்பமெல்லாஞ் சாவப் போவுதோ? இவனுவள கொல கேசுல எட்டு பத்து வருசம் உள்ளப் போடணும்.’’ காலங்காலமாய் பார்த்தவர்கள் தங்கள் ஆதங்கங்களை தீர்த்துக் கொண்டார்கள்.

வீட்டுக்குள் நுழைந்ததும் ‘‘எல அன்னம் மத்தவன் வீடு இடிஞ்சி உழுந்துல்லா அதுல அடிபட்ட பையன் செத்துப் போனானாம். இனி அந்தத் தம்பிப்பய வீட்ட எடுத்துக் கட்றது சிக்கல்தான்’’ செங்கான் சொன்னான்.

‘‘யம்மாடி.. நம்ம புள்ளிய மாட்டியிருந்தா என்ன ஆயிருக்கும்? நெனச்சிப் பாக்கவே பயமா இருக்கு.’’

‘‘நம்ம புள்ளிய யேன் மாட்டப்போவுது. நம்ம அப்படி யாருக்கு அநியாயம் செஞ்சிருக்கோம்?’’ என்ற செங்கானைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள் அகிலா.

மறுநாள் போலீஸ்காரர்களும் முனிசிபல் அதிகாரிகளும் வந்து பார்த்து குடிநீர் இணைப்பைத் துண்டித்து, கதவில் நோட்டீஸ் ஒட்டி விட்டுப் போனார்கள். மின்னிணைப்புக் காரர்கள் வந்து இணைப்பைத் துண்டித்து விட்டுப் போனார்கள். இரண்டு மாத காலம் எந்த வேலையும் நடைபெறாமல் இடித்த மேனிக்கே நின்றது வீடு.

வீட்டை விட்டு வெளியே வந்த செங்கான் பார்வையில் தம்பிசேட்டும் ஒப்பந்தக்காரரும் பேசிக் கொண்டு நிற்பது தெரிந்தது.

‘‘யோவ் கொத்தனார நெறைய ஆள கொண்டாரும். ரொம்ப சீக்கிரமா வீட்டு வேலைய முடிக்கணும். எனும நமக்கு ஒரு எடஞ்சலும் வராது. களப்பலியும் கொடுத்தாச்சி, குட்டித் தேவாதைகளுக்கு வேண்டியதையும் செஞ்சாச்சி. இன்னும் ரெண்டு மாசத்துல பால் காய்க்கிற மாதிரி வீட்டு வேலையெல்லாம் முடிச்சி கையில கொடுத்திரும்.’’என்றான் செங்கான் காதுகளில் விழும்படியாக.

செங்கான் கேட்டும் கேட்காதது போல மிதிவண்டியை உருட்டிக் கொண்டு தரையைப் பார்த்தபடி வியாபாரத்திற்கு சென்றான்.

கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்த அன்னக்கிளி கலைந்து கிடந்த கூந்தலை முடிந்து கொண்டு, விலகிக் கிடக்கும் மாராப்பையும் சரி செய்தபடி கதவைத் திறந்தாள். வெளியே சின்னத் தெருவை அடைத்தபடி மூன்று பேர் நின்றுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கையில் கடப்பாரை, பெரிய அளவு சுத்தியல் இருந்தது. அனைவரும் முனிசிபல் சீருடையில் இருந்தனர்.

அவர்கள் பேசியது இவளுக்குப் புரியவில்லை. ‘மும்பைக்கு வந்து பதினைந்து வருசமாச்சி, எழவு இந்திதான் வரமாட்டேங்கிறது.’ கதவை சாத்தி தாழ்ப்பாளை போட்டுவிட்டு, ஓடிப்போய் பக்கத்து வீட்டு டெய்சியை அழைத்து வந்து விபரம் கேட்டாள்.

‘‘இந்த சாலுதான சத்ரபதி சிவாஜி சால்’’ ஒருவன் கேட்டான்.

‘‘ஆமாம்.’’ என்றாள் டெய்சி.

பக்கத்தில் நிற்கும் நான்கு மாடிக் கட்டடத்தைக் காட்டி ‘‘இது சாக்கா பிரமுக் தம்பிசேட் வீடுதானே’’ என்று மற்றொருவன் கேட்டான். அதற்கும் ‘‘ஆமாம்’’ என்றாள் டெய்சி. அவள் பதிலை காதில் வாங்காதபடி அவர்களுக்குள் மராட்டியில் பேசிக்கொண்டார்கள்.

‘‘சிக்கிவாலா அண்ணாச்சி வீட்டு தண்ணீர்த் தொட்டியிலிருந்து பூச்சியும் புழுவுமா வருகிறதென்று புகார் வந்திருக்கு. அதனால தொட்டிய பாக்கணும். இதை அன்னக்கிளியிடம் சொல்லி வீட்டுக்கதவவை திறந்து விடச் சொல்.’’ அதிகாரம் தொனிக்க ஒருவன் டெய்சியிடம் சொன்னான்

டெய்சி சொன்னதுக்கு மறுப்பாய் ‘‘இல்லியக்கா. நாங்க தெனமும் தொட்டிய கழுவிதான தண்ணீ பிடிக்கொம். சுத்தமாதான இருக்கு’ என்றாள் பதட்டம் மேலிட.

வீடு வாங்கிய உடனே நான்கு பக்கமும் இருந்த தகரத்தை எடுத்து விட்டு செங்கல் சுவரால் கட்டும்போது கட்டிய தொட்டி. வீட்டைக் கட்டித் தந்தவர் அன்னக்கிளிக்கு தூரத்து உறவு. மாமன் முறை. தொட்டியை அக்கறையோடும் கவனமுமாய் கட்டிக்கொடுத்தார். தொட்டிக்கு உள்ளேயும் வெளியேயும் சிமிண்ட் கொழுப்பைக் கொடுத்து நல்லா வழுவழுவென்று பூசி கொடுத்தார்.

இன்று வரைக்கும் பாசி படியாமல் புது தொட்டி மாதிரி கழுவி சுத்தமாக வைத்திருந்தாள். வியாபாரத்திற்கு போய்விட்டு வந்து செங்கான் குளிக்கும் போது ‘‘நல்லா குளுந்து ஐஸ் மாதிரி இருக்கு’’ என்று குவளை நிறைய தண்ணீரைக் கோரிக்கோரி ஊத்துவான். ‘‘பொங்குற பாத்திரம்போல தொட்டியையும் சுத்தமா வச்சிருக்கியே’’ என்று அன்னக்கிளியைப் பாராட்டுவான்.

அவர்கள் அதட்டி சொல்லவே கதவைத் திறந்து வழி விட்டாள். மூன்று பேரும் குனிந்து வீட்டுக்குள் நுழைந்தார்கள். ஓடுகளால் வேயப்பட்ட கூரை. அண்ணாந்து பார்த்தால் ஓடுகள் மூக்கை முட்டுவதுபோல் இருந்தன. மோட்டுப்பகுதியில் தொங்கிய மின்விசிறி சுழன்று கொண்டிருந்தது. அன்னக்கிளி விரித்துப் படுத்திருந்த பாயும் போர்வையும் சுருட்டாமல் ஓர் ஓரமாய் ஒதுக்கி வைக்கப் பட்டிருந்தது.

வந்த மூன்றுபேரும் நாலாபக்கமும் சுற்றிப் பார்த்துவிட்டு தண்ணீர் தொட்டியைப் பார்த்தார்கள். ஒருவன் டெய்சியிடம் சொல்லி அன்னக்கிளியை தொட்டி மேல் இருக்கும் பொருட்களை எடுக்கச் சொன்னான். அவள் கலக்கமுற்று ‘‘என்னக்கா இது, வேற வீடா இருக்குமோ கொஞ்சம் வெவரமா கேளுங்கக்கா.’’ என்றவளின் கண்களில் நீர்க்கோர்க்கத் தொடங்கியது. கால்கள் நிற்க பலமிழந்தன.

டெய்சி கேட்டதற்கு இந்த வீடுதான் என்று ஒரு பேப்பரை எடுத்துக் காட்டினான். தரையில் கிடக்கும் பொருட்களை அப்புறப் படுத்தச் சொன்னான். ஒருவன் தொட்டியை உடைக்க, இரண்டுபேர் புறவாசல் கதவைத் திறந்து பின்பக்கம் போய் தண்ணீர் குழாயைக் காட்டி இதுக்கு மீட்டர் எங்கே இருக்கு என்று கேட்டார்கள். அன்னக்கிளிக்கு நெஞ்சை அடைத்தது.

தண்ணீர் இணைப்பு முறைப்படியானது இல்லை. வீடு கட்டும் போது எட்டாயிரம் ரூபாய் கொடுத்து முறை கேடாக எடுத்த இணைப்பு. அரசாங்கத்தால் ஒரு வீட்டிற்கென்று குடிசை பகுதிக்கு இணைப்பு கொடுப்பதில்லை. ஆறேழு வீடுகள் சேர்ந்தால்தான் கிடைக்கும். இங்கு நிறைய வீடுகளில் பேருக்கு அரசாங்க இணைப்பை வைத்துக் கொண்டு, தங்களுக்கு மட்டுமாக கள்ளத்தனமான குழாய் இணைப்பையும் வைத்துக் கொள்வார்கள்.

செங்கானுக்கோ முறையா இணைப்பு இல்லை. இத்தனை ஆண்டுகள் தண்ணீருக்கு தொந்தரவில்லாமல் இருந்தது. இந்த இணைப்பு போனால் தண்ணீருக்கு என்ன செய்வது என நினைக்கும்போது உடம்பெல்லாம் வியர்த்தது படபடத்தது.

‘‘யக்கா அவங்களுக்கு போன் போட்டு வரச்சொல்லுதன். அதுக்குப்பெறவு எதுவும் செய்யச் சொல்லுங்கக்கா. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாவ, அதுவரைக்கும் ஒண்ணுஞ் செய்யாண்டான்னு சொல்லுங்கக்கா.’’ என்று கெஞ்சினாள். அதற்குள் தண்ணீர்க்குழாய் துண்டாகி விட்டது. செங்கான் வீட்டிலிருந்து தம்பிசேட் வீட்டையும் தெருவையும் தாண்டி பெரிய குழாயிலுள்ள இணைப்பு முதற் கொண்டு துண்டித்து விட்டார்கள்.

அன்னக்கிளி செய்வதறியாமல் செல்போனை எடுத்து செங்கானுக்குப் போன் செய்தாள். அதைப் பார்த்த ஒருவன் பட்டென்று செல்போனைப் பறித்து தரையில் வீசினான். போன் தரையில் விழவும் தண்ணீர்த்தொட்டி உடைபட்டு வீடு முழுவதும் தெப்பமானது.

மூலையில் வாங்கி வைத்திருந்த முறுக்கு, கடலை மிட்டாய், மிச்சர் பொட்டலங்களும், பாயும் போர்வையும் தலைய ணையும் பயிற்சி வகுப்பிற்குப் போயிருக்கும் குழந்தைகளின் புத்தகங்களும் தண்ணீரில் மிதந்தன.

கரண்டையளவு தண்ணீர் தேங்கிய வீட்டை விட்டு வெளியேறும்போது ஒருவன் தமிழில் சொன்னான். ‘‘கம்ப்ளைண்டா கொடுக்கிறிய கம்ப்ளைண்டு. எவன் வீடு எவ்வளவு ஒயரமா கெட்டினாலும் உங்களுக்கென்ன? கெடைக்கிற ரொட்டிய துன்னுட்டு சும்மா கெடக்க வேண்டியதான.’’ அறுத்தெடுத்த இரும்புக் குழாயை கையோடு கொண்டு போகிறவர்களைப் பார்த்துக் கொண்டே நின்றாள் அன்னக்கிளி.

- இறை.ச.இராசேந்திரன்

Pin It