"வாழ்த்துக்கள்", "சூப்பர்", "அருமை", "உண்மை" - உமா கடந்த 6 மாதங்களாக மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வார்த்தைகள் இவைதான். இந்தியன் வங்கியில் 23 வயதில் கிளார்க் பணியில் சேர்ந்து, இடமாற்றம் வரும் என்பதால் அதிகாரியாக பதவி உயர்வே வேண்டாம் என்று எழுதி கொடுத்து விட்டு, 37 ஆண்டுகள் கிளார்க்காகவே தி.நகர் கிளையில் பணி புரிந்து, ஆறு மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்றார். ஓய்வு வாழ்க்கையைக் கழிக்க அவரது உடன்பிறப்புகள் எல்லாம் சேர்ந்து அவருக்கு ஒரு கணினியும், அதற்கான இணைய வசதியும் பரிசாகக் கொடுத்திருந்தனர். அதில் அறிமுகமானதுதான் முகநூல். ஆறு மாதங்களாக உமா முழு நேர முகநூல் வாசி.

பணிஓய்வு பெற்ற ஒரு வாரத்தில் மூன்று தம்பிகள், இரண்டு தங்கைகள், அவர்கள் மனைவி கணவன் குழந்தைகள் என குடும்பத்தோடு உமா அக்காவைப் பார்க்க வந்திருந்தனர். அமெரிக்காவில் இருக்கும் ஒரு தம்பியும் அவரது குடும்பமும், இரண்டாவது தங்கையுடைய மகனும் வர முடியவில்லை. இந்தக் குடும்பங்கள் இன்று மகிழ்வுடன் ஒரு முழுமையான வாழ்க்கை வாழ்வதற்கு உமா அக்கா முக்கிய காரணம். முக்கிய காரணமல்ல, உமா அக்கா மட்டும்தான் காரணம்.

ஏழு குழந்தைகளைப் பெற்ற அப்பா மஞ்சள் காமாலையால் காலமானார். அப்பொழுது உமா அக்காவிற்கு வயது 17. அடுத்த இரண்டு தங்கைக்கும் 16, 14 வயது. முதல் தம்பிக்கு 13 அடுத்த இரட்டை தம்பிகளுக்கு 11, கடைக்குட்டி சுப்புவிற்கு 7 வயது. அப்பாவின் சாவிற்கு அழுவதற்குக் கூட நேரமில்லாமல், வந்தவர்களை உபசரிக்கவும் தன் அப்பாவின் ஈமச் சடங்குகளுக்கான வேலை செய்யவும் தொடங்கி, உமாவிற்கு தன் குடும்பத்திற்கான உழைப்பும் தியாகமும் இன்று வரை தொடர்கிறது. பியூசி முடித்திருந்ததால், அப்பா வேலை பார்த்த மதுரா கோட்ஸ் கம்பெனியிலேயே உமாவிற்கு டைப்ரைட்டர் வேலை கிடைத்தது. 80 ரூபாய் சம்பளத்தில் 6 வருடம் குடும்பத்தை தாங்கிப் பிடித்தாள். அந்த நாட்கள் முதலே குடும்பத்தில் உமா அக்காதான் எல்லாம். எதுவாக இருந்தாலும் உமாவிடம் கேட்டுத்தான் நடந்தது. அது அதிகாரத்தினால் அல்ல. மரியாதையினால். அவளுக்கு இருந்த பொறுப்பினால். அம்மாவின் தையல், அப்பளம், வடாம் போன்றவை சின்ன சின்ன செலவிற்கு ஆனது.

பிஆர்பி பரீட்சை எழுதி இந்தியன் வங்கியில் கிளார்க் வேலையில் சேர்ந்தாள். தி.நகர் கிளையில் வேலை. 360 ரூ சம்பளம். மெட்ராசில் வீடு வாடகைக்கு எடுத்து, தம்பிகளை கல்லூரியில் சேர்த்து சுப்புவை ஒரு நல்ல பள்ளியில் சேர்த்து, அம்மாவிற்கு பணம் அனுப்பி, முதல் தங்கைக்கு கல்யாணம், தம்பிகளுக்கு மேற்படிப்பு, இரண்டாவது தங்கைக்குக் கல்யாணம். முதல் தங்கையின் தலைப் பிரசவம் , இரண்டாவது தங்கையின் தலைப் பிரசவம், இரண்டு தங்கைகளுக்கும் இன்னொரு பிரசவம் என ஓடிக் கொண்டிருந்த உமா, நின்று நிதானித்து தன்னைப் பார்த்தபோது அவளுக்கு வயது 29. வேலை கிடைத்த பெரிய தம்பிகள் சுப்புவின் படிப்பிற்கு உதவியது நடுவில் கொஞ்சம் ஆறுதல். திருமணம் வேண்டாம் என்று நினைத்திருந்த உமா, அம்மாவின் கட்டாயத்திலும் தங்கைகளின் கட்டாயத்திலும் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டாள்.

வரன் தேடும் படலம் ஆரம்பமானது முதல் ஜாதகத்தில் சிக்கல், வேலைக்குப் போகும் பெண் வேண்டாம், வயது அதிகம் என்று ஏதோதோ காரணங்களால் 35 வயது வரை திருமணம் நடக்கவில்லை. அதற்கு மேல் அதில் விருப்பமில்லாதவளாய் அப்படியே விட்டு விட்டாள். தம்பிகளுக்கு கல்யாணம் ஆனது. அம்மா காலமானார். ஆறு உடன்பிறப்புகளுக்கும் பிள்ளைகள் பிறந்தனர். முதல் தங்கையின் மகன் சுரேஷ் மட்டும் உமாவை அக்கா என்றே கூப்பிட்டு பழகி விட்டான். மற்ற பிள்ளைகளுக்கு அத்தை, பெரியம்மா. காலம் ஓடி விட்டது.

உமா அக்கா, வங்கியில் உமா மேடம். 37 வருட அனுபவத்தில் வங்கியின் உயர் அதிகாரிகள் அனைவரையும் உமாவிற்குத் தெரியும். தி.நகரில் 1970களில் ஆரம்பித்த துணிக் கடை, நகைக் கடை, பள்ளி, உணவகம் என அனைத்தின் சுவாரஸ்ய வரலாறும் உமாவிற்குத் தெரியும். வங்கியின் எல்லாத் துறை வேலைகளும் கொஞ்ச காலம் பார்த்து இருக்கிறார். சரியாக மாலை 5.15 மணிக்கு தன் இருக்கையை விட்டு கிளம்பி விடுவார். கிளை அதிகாரி எப்போதாவது சில சிக்கலான வேலையை உமாவிடம் தருவது உண்டு. அதையும் செய்து கொடுப்பார். சில வாடிக்கையாளர்களிடம் நல்ல மதிப்பும் உறவும் உண்டு.

வாரம் ஒருமுறை அனைத்து உடன்பிறப்புகளும் பேசுவார்கள். பிள்ளைகள் படிப்பு, உறவுகளின் உடல் நலம் என்று உமா அக்காவின் பேச்சில் அடக்கம். இப்போது சென்னையில் ஒரு தங்கையைத் தவிர‌ வேறு யாரும் இல்லை. அதுவும் மறைமலை நகர் பக்கத்தில். 2 தம்பிகள் கோயம்புத்தூரிலும், ஒரு தங்கை பெங்களூரிலும், ஒரு தம்பி தில்லியிலும், மற்றொரு தம்பி அமெரிக்காவிலும் இருக்கிறார்கள். ஒரு தங்கையின் கணவன் மாரடைப்பால் இறந்து பத்து வருடம் ஆனது.

முகநூலில் அறிமுகமான இந்த ஆறு மாதங்கள், உமாவிற்கு எப்படி சென்றதென்றே தெரியவில்லை. தன் பள்ளியில் உடன் பயின்ற தோழி, மாணவர்கள், பியூஸியில் படித்த சசிகலா, லலிதா, கிருஷ்ண மூர்த்தி, மதுரா கோட்ஸ் கம்பெனியில் வேலை பார்த்த பானு, தன் முன்னாள் உயரதிகாரி, தன்னுடன் இந்தியன் வங்கியில் சேர்ந்த சக ஊழியர்கள், தி.நகர் கிளை மேலாளர்கள், இந்தியன் வங்கியின் மாநில மண்டல அதிகாரிகள், தன் தம்பி குழந்தைகள், தங்கை குழந்தைகள், டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டில் படித்த ஆயிஷா பேகம், தன் எட்டாம் வகுப்பு தமிழ் ஆசிரியர், தன் தம்பியின் நண்பர்கள், தங்கைகளின் தோழிகள், வாடிக்கையாளர்கள், தன் அப்பாவின் நண்பர்கள், அவர்களுடைய பிள்ளைகள், உறவுக்காரர்கள், சினிமா பிரபலங்கள், பத்திரிகைகள் என தன் வாழ்நாள் முழுவதும் பார்த்த, பார்க்கத் தவறிய அனைவரையும் முகநூலில் சந்திக்க முடிந்தது உமாவிற்குப் பெரு மகிழ்ச்சி.

முகநூலில் ஒவ்வொருவர் பக்கமாக தினமும் பார்த்துக் கொண்டே, படித்துக் கொண்டே போனாள். தன் வயதொத்த தோழி தன்னுடைய பேத்தியுடன் எடுத்த புகைப்படம் பார்த்தாள். "வாழ்த்துக்கள்" என்று கருத்து பதிவிட்டாள். வங்கியில் பணிபுரியும் மஞ்சுளா தனது கணவருடன் 50வது திருமண நாள் கொண்டாடிய புகைப்படம் பதிவிட்டிருந்தாள். "அருமை" என்று கருத்து பதிவிட்டாள். வேறொரு வங்கியில் பணிபுரியும் தோழி தன மகன் பிரான்சில் இருப்பதால் தானும் பிரான்ஸ் நாட்டுக்குப் போவதாக நிலைத் தகவல் எழுதியிருந்தாள். "சூப்பர் " என்றாள்.

இப்படி எல்லா நிலைத் தகவல்களுக்கும் விருப்பம் தெரிவித்தாள். கருத்து பதிவிட்டாள். அப்துல் கலாம் மறைவு பற்றி, அன்று நடந்த செய்தி பற்றி, பழைய சினிமா பாடல் வரிகள், புதிதாய் வெளியான திரைப்படம் பற்றி என உமாவை முழு நேரமும் முகநூல் கட்டிப் போட்டது.

சிறிது நாட்களில் தன் வாழ்க்கையைத் தொலைத்து விட்டோமோ என்று எண்ணத் தொடங்கினாள். தான் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று யோசித்தாள். பெரிதாக காரணம் ஒன்றும் தோன்றவில்லை. 40 வயதில் தன்னுடைய தோழி மறுமணம் செய்து, இப்போது 18 வயதில் மகனோடு இருக்கும் புகைப்படம் பார்த்த பிறகு தான் ஏன் 40 வயதிலாவது திருமணம் செய்வதைப் பற்றி யோசிக்கவே இல்லை என்று தன்னை கேட்டுக் கொண்டாள். இட மாற்றலாகி டில்லியில் வேலை பார்க்கும் தன் கிளை மேலாளர், missing my family என்று பதிவிட்டிருந்தார். தனக்கான குடும்பம் ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று ஏன் தனக்குத் தோன்றவே இல்லையென்று வியந்து போனாள்.

தன்னை விட திறமை குறைந்த ஊழியர்கள் கூட உயர் பதவி பெற்று இன்று மண்டல மாநில மேலாளர்களாக உள்ளதாக எண்ணினாள். ஒரு கட்டத்தில் தான் வேலையிலாவது பதவி உயர்வு பெற்றிருக்க வேண்டும் என்று தோன்றியது. ஒவ்வொரு நாளும் இரவு தூங்கும்போதும் ஒவ்வொரு நினைவுகளில் மூழ்கிப் போயிருந்தாள். இப்பொழுதெல்லாம் தன உடன்பிறப்புகளிடமிருந்து தொலைபேசி அழைப்பும் குறைந்து விட்டது.

தன் வாழ்க்கையைத் தியாகம் செய்து ஆறு குடும்பங்களை உருவாக்கியிருக்கிறேனோ என்று எண்ணியபோதே, தன் வாழ்க்கையைத் தியாகம் செய்யாமல் தன் கடமையை செய்திருக்க முடியாதோ என்று எண்ணினாள். தான் எதை எதை எல்லாம் வாழ்க்கையில் இழந்திருக்கிறேன் என்று பட்டியல் போட்டாள். வாழ்க்கைத் துணை, துணையின் அன்பு, காமம், தாய்மை, பிள்ளையின் அன்பு என அவ்வப்போது கொஞ்சம் தோன்றும். பிறகு முகநூலைப் பார்க்கும் போதெல்லாம் கூடுதலாகத் தோன்றும். தன் தம்பி குடும்பத்துடன் மணாலிக்கு சுற்றுலா சென்ற புகைப்படம் பார்த்து தான் ஏன் எங்குமே சுற்றுலா சென்றதில்லை? என்னுடன் யார் வருவார்கள்? என்னை யார் சுற்றுலாவிற்கு அழைப்பார்கள்? என்று கேள்விகளாகத் தோன்றியது. "அருமை" என்று புன்னகைத்தாள். யாரோ ஒருவர் வாழ்க்கை பற்றி "இன்று வாழ்வதுதான் வாழ்க்கை, நாளை நமதில்லை" என்று கடற்கரையில் ஒரு பெண்ணின் புகைப்படத்தோடு பதிவிட்டிருந்தார். உமா "உண்மை" என்று ஒரு சோக முகம் ஒன்றை பதித்தாள்.

பிறகொரு நாள், டைப்ரைட்டிங் பயின்றபோது அங்கு தனக்கு முந்தைய ''பேட்ச்சில்'' பயின்ற குணசேகரன், தன்னை விரும்புவதாகச் சொன்ன அதே குணசேகரன், முகநூலில் இருப்பதைப் பார்த்தாள். ஒரு நிமிடம் ஓவென்று அழ வேண்டும் போலிருந்தது உமாவிற்கு. அப்படியே தூங்கிப் போனாள். மறுநாள் காலையில் எழவே இல்லை.

- ஞானபாரதி

Pin It