அந்த சத்தம் எப்போதாவது எனக்குள் கேட்கும். அந்த சத்தம் ஆரம்பிக்கும் போதும், முடியும் போதும் கிடைக்கும் ஒரு வகை அதிர்வும் ஆத்திரமும்.. எனக்கு எப்போதும் தேவையாகவே இருப்பதாக நம்புகிறேன்.

10 வயதில் திண்ணையில் படுத்து தூங்கும் போதும்... பாட்டியின் அடிவயிற்று சூட்டையும் தாண்டி என் மூச்சுக்குள் அனல் அடிக்கும். எங்கள் வீட்டின் வாசலில் நின்று கொண்டு, "நல்ல காலம் பொறக்குது.......நல்ல கா......லம் பொறக்குது" என்று வாயிலிருந்து வரும் வார்த்தைகளின் தடிமன், தொண்டையின் அதிர்வை முந்திக் கொண்டு உடுக்கையின் வழியே இறங்கும் அந்த நொடிகளில் நான் கண்களை இறுக மூடிக் கொள்வேன். ஆனாலும் காது திறந்து வைத்திருப்பது அலாதியானது. ஆசுவாசம் நெஞ்சில் படபடக்கும் இதயத் துடிப்பைத் தாண்டி உடலில், நரம்பில் முறுக்கேற்றும் ஆங்காரத்தின் வழியாக 15 வயதில் அதே திண்ணையில் நண்பரோடு படுத்திருக்கையில் தலை தூக்கி நடுங்கி நெற்றிக்கண்ணை திறந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதும் அதே கோடங்கியின் அதே வெண்கலக் குரல் அந்த திண்ணையை அசைத்துப் பார்க்கும்.

20 வயதில் தனித்து படுத்திருக்கையில் என் அருகே வந்து நின்று, " நல்ல காலம் பொறக்குது......நல்ல காலம் பொறக்குது" என்று சொல்லும் கோடங்கியின் வாசம் என்னை கிறங்க செய்தது. ஒவ்வொரு முறையும் மெல்ல கண்களை மூடிக் கொண்டு போர்வையின் இடுக்குகளில்... நெற்றிக் கண்ணில்.. என்று அரசல் புரசலாகக் கண்ட கோடங்கியின் உருவம் 31 வயதில் என் அருகே நின்று அதே பளபளப்பான பார்வையோடு பொதுவாய் இன்னதென இல்லாத ஒரு குவிதலின் முகப்பில் தேடிக் கொண்டிருந்ததை நன்றாகவே போர்வையை விலக்கி தூங்குவது போல அசையாமல் படுத்தபடி பார்க்க முடிந்தது. தெரு விளக்கின் மஞ்சள் நிறத்தில்... ஒரு ஜுவாலையின் அதிருப்தி போன்ற தாக்கமென மீசையின் வளைவில் உள்ளொடுங்கிய காலத்தின் ஒரு முகத்தோடு கண்களின் பளிச்சிடும் இருட்டின் தகிப்போடு கோடங்கி ஒரு காலத்தின் சாட்சியாக நிற்பதை அத்தனை அருகில் காண்பது அத்தனை தீர்க்கமாகியிருந்தது. சட்டென எதுவெதுவோ நிரம்பி ததும்பும் மனநிலையை அந்தக் கோடங்கியின் அருகே நான் கண்டதை இங்கே சொல்ல உடுக்கையோடு அலையும் சொற்களை உதிர்த்து உதிர்த்து ஒரு வீட்டு வாசலில் நிறுத்துவது முடியாத காரணமாக இருந்தது.

இந்த முறை என்னை அறிந்தும் அறியாமலும் நான் கோடங்கியின் பின்னே நடக்கத் தொடங்கி இருந்தேன். கோடங்கி பற்றி செய்து கொண்டிருக்கும் ஆய்வுக்கட்டுரைக்காக கூட நான் பின் தொடர்ந்திருக்கலாம். ஆனாலும் அதெல்லாம் தாண்டி ஒரு வித வேட்கை இந்த கோடங்கிகள் மீது சிறுவயதில் இருந்தே இருக்கிறது. காரணமற்ற உடுக்கை சத்தம் இன்னமும் என்னுள் அதிர்ந்து கொண்டேயிருப்பதை நான் அவ்வப்போது காரியமற்றும் நம்புகிறேன். கோடங்கிகளிடம் ஒரு வித வசீகரம் இருப்பதாக என் ஆழ்மனம் பிம்பம் செய்கிறது.

நான் பின் தொடந்தேன்......

ஒவ்வொரு வீட்டின் முன்னும் ஒரு ராஜாவைப் போல நின்று சூனியத்தை வெறித்துப் பார்க்கும் கோடங்கிக்கு தனித்திருத்தலே பலம் போல. தவித்திருக்கும் தொண்டைக்குழிக்குள் வார்தைகள் வந்து வந்து தடுமாறிக் கொண்டிருப்பதைக் காணும் போது எப்போதும் ஒரு வித நடுக்கத்தில் தான் அவர்களின் ஒவ்வொரு இரவும் நகர்வதாக தோன்றுகிறது.

பகலில் தேநீர் கடைகளில் மக்களிடம் பேச்சுக் கொடுத்து, சிறு தெய்வ கோவில்களில் நின்று வழிபடுகையில், வரும் மக்களின் முகம் அகம் பேச்சு என உள் வாங்குதல்.....உள்பட பகலில் வந்து நோட்டம் விட்டு... வீட்டு வாசலில் காயும் துணிகளின் கணக்கு பார்த்து..... வீட்டின் அளவு பார்த்து அதன் மூலம் போடப்படும் கணக்கின் படி... வீட்டு வாசலில் கிடக்கும் செருப்புகளின் கணக்குப் படி.....இப்படி எத்தனையோ வழிகள் இருந்தாலும் எல்லாவற்றையும் தாண்டி ஒரு வித நிஜத்தை தேடி கோடங்கிகள் நடந்தபடியே இருக்கிறார்கள். அவர்கள் இங்கே எதுவோ சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் சொல்லும் குறிகளில் எத்தனை சரியாக இருக்கிறது எத்தனை பொய்யாக இருக்கிறது என்பதையெல்லாம் தாண்டி... அந்த சொற்களின் ஊடாக ஒரு வித சமன்பாடு சமன் படுத்தப் பட்டுக் கொண்டேயிருக்கிறது....என்று நம்புவதில் ஒருவகை திருப்பி கிடைக்கிறது. அதுவும் இப்படி ஒரு கோடங்கியைப் பின் தொடர்கையில் ஒருவகை தேஜஸ் எனக்குள்ளும் பற்றிக் கொண்டதை நான் முழுதாகக் கொண்டாடுகிறேன்.

கோடங்கியின் உடையில் இருக்கும் ஜரிகைத்தனம்... பளபளக்கும் காட்சி ...... ஒரு வகை தத்ரூப மிடுக்கைக் கொண்டிருப்பதாக இருக்கிறது. நாய்கள் வழக்கம் போல குரைத்தன. நானும் என் வார்த்தைகளை கண்களாலே குரூரமாக்கினேன். காணும் காட்சிகள் எல்லாம் நீண்டும் சுருங்கியும் வளர்ந்தும் தளர்ந்தும் வெளிச்சத்துக்கு தகுந்தாற் போல மாறுவதால் மனதுக்குள் ஏற்படும், உண்டாகும் கிளர்ச்சியை வார்த்தைகளில் சொல்ல இயலாது. வந்து பார்க்கும் என்னை போலவே நானொரு யாரோ என்று பிதற்றும் மனநிலை வாய்க்கப் பெற்று இந்நிமிடம் தாண்டி இந்தக் கோடங்கி எங்கிருந்து வருகிறான் என்ற கேள்வி எனக்குள் பெரும் பூதமாய் எழுந்தது.

அனிச்சையாய் நான் பின் தொடர அனிச்சையும் கோடங்கியை பின் தொடர......அந்த வீதியில் கடைசி வீட்டு முன் நின்று நின்றான். அவன் ஒரு முறை வானத்தை பார்த்துக் கொண்டான். அநேகமாக நிலவைத்தான் பார்த்தான் என்று நினைக்கிறேன்.

பட்டாம்பூச்சியின் கழுத்து அறுபட்டது போல திடீரென "இந்த வீட்டுல ஒரு கன்னி தேவதை இருக்கு... அதுக்கு மஞ்சக்கயிருக்கு நாள் வந்தாச்சு.........எழுத்துக்கள கையாள அள்ளி அள்ளி கதைகதையா கொட்ற ஒருத்தன் இந்த வீட்டுல இருந்து தெக்க இருக்கான். அவன் தான்.... இந்த கன்னி தேவதைய மஞ்சக் குதுரயில தூக்கிட்டு போக காத்திருக்கான்....எல்லாமே கூடி வந்திருக்கு..." என்றான். திரும்ப திரும்ப அதையே சொன்னான்.

எனக்குள் உடுக்கை சத்தம் சுழன்றது. கணீர் கணீரென காற்றில் கண்கள் பிடுங்கப்பட்டது போல உடுக்கை சத்தம்.

இந்த வீடு, என் என் நண்பனின் ஆள் அம்பிகை குஜலாம்பாள் வீடு. அவர்கள் காதல் கதையை எப்படியோ தெரிந்திருக்கிறான். பலே கில்லாடி கோடங்கி.

நான் அம்பிகை வாசலில் இருக்கும் கொய்யா மரத்தின் பின்னால் ஒரு ராட்சச பல்லியைப் போல ஒட்டி நின்றேன். அவன் சொன்ன வாக்கில் எல்லாவற்றையும் தாண்டிய ஒருவித நிம்மதி கிடைத்தது. கிட்டத்தட்ட ஐந்து வருட காதல் கதை அது. கோடங்கி சொன்னது போல கல்யாணத்தில் முடிந்தால் சரிதான். அவன் மஞ்சள் பைக் மஞ்சள் குதிரையானது, ராத்திரி நேர கோடங்கி டச்.

அவன் அங்கிருந்து ஓர் அரூபக் குரலோடு நகர்ந்தான். நான் ரூபத்தின் பிண்டமென தொடர்ந்தேன்.

அடுத்து கோடங்கி நின்றது அடுத்த வீதியில் ஏழாவது வீடு.

அது... அந்தக் கிழவியின் வீடாச்சே.....! அந்தக் கிழவிக்கு 118 வயதாகிறது. அந்த வீட்டில் தனியாகத்தான் இருக்கிறது. பக்கத்து வீட்டில் தான் அதன் சொந்த பந்தங்கள் இருக்கிறார்கள். ஆனால் அந்த வீட்டில் ஒரு கால பிணமென அந்தக் கிழவி மட்டும் தான் தனித்திருக்கிறது. எல்லாரையும் எதற்காகவாது காட்டிக் கொடுக்கும் கிழவி அது என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த வீடே இருட்டில் துளையிடும் ஒளியெனத்தான் இருக்கும்.

இந்தக் கிழவியின் வீட்டு வாசலில் அவன் என்ன சொல்லப் போகிறான்.. எனக்குள் வீதி விளக்கின் மஞ்சள் வெளிச்சம் பழுப்பு நிறத்தில் சொட்டியது.

கிழவி, வாசலில் தான் எப்போதும் அமர்ந்திருக்கும். அப்போதும் அமர்ந்திருந்தது. நேருக்கு நேராய் கோடங்கியும் கிழவியும் பார்த்துக் கொள்கையில் அந்த வீதி சட்டென நீள் வெளிச்சத்தின் நிழலாய் ஒரு கணம் மாறியதை மனதுக்குள் ஒரு வகை நாய் வாலாட்டி வாலாட்டி கீறியது. எனக்கு தலை சுற்றியது. தலை மேல் எதுவோ பாரம். கோடங்கி உடுக்கையை அடித்து அடித்து எதுவோ சொன்னான். எனக்கு ஒன்றுமே கேட்கவில்லை. பிறகு தான் நன்றாக கவனித்தேன். கோடங்கி வாயில் இருந்து எந்த சொற்களும் வரவில்லை. அவன் சொல்வது போல பாவனை செய்து கொண்டிருந்தான். இன்னும் கூர்ந்து கவனிக்க அவன் சொற்களற்று நின்றிருந்தான். அவன் கை தானாக உடுக்கை அடிப்பதை நிறுத்திருந்தது. அந்தக் கிழவி கோடங்கியை தன் சுருங்கிய கண்களால் கவ்வி இழுத்துக் கொண்டிருந்தது.

அந்த இடத்தில் மனிதனுக்கு ஒவ்வாத ஒரு வகை நெடி பரவுவதை உணருகையில் நான் மயங்க ஆரம்பித்திருந்தேன்.

*

"சாமக் கோடங்கி பின்னாலல்லாம் போக கூடாதுனு சொன்னா கேக்கறியா.... இப்போ பாரு.. அவுங்கெல்லாம் வேற மாதிரிப்பா... பேய் பிசாது, கூளி குறளி, குட்டி சாத்தான்னு அவுங்க உலகமே வேற..." தச்சு வேலை செய்தபடியே பாட்டி புலம்பிக் கொண்டே இருந்தது.

எனக்கு உடல் அசதியாய் இருந்தது.

"என்ன நடந்தது.... அதன் பிறகு" என்று யோசிக்க முடியவில்லை. மயக்கம் தெளிகையில் வீட்டில் இருந்தேன். எல்லாமே அமானுஷ்யமாகவே இருந்தது. என்னை யார் தூக்கிக் கொண்டு வந்தது என்று தெரியவில்லை. ஒருவேளை நானே மயக்கத்தில் இருந்ததாக நினைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டிருப்பேன் என்று கூட யோசித்தேன்.

பாட்டி இன்னும் கோடங்கியைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தது. அதை கேட்பது கூட உள்ளுக்குள் ஒரு வித அதிர்வை செய்து கொண்டிருந்தது.

"ஒரு ஊருக்கு வந்தா அந்த ஊர்ல இருக்கற செத்து போன ஆன்மாவை பிடிச்சுக்குவாங்களாம். அதுங்க மூலமாத்தான் ஒவ்வொரு வீட்டிலயும் என்ன நடந்துருக்குனு கேட்டு தெரிஞ்சுக்குவாங்களாம். அப்பறம் அதுக்கு தகுந்த மாதிரி கணக்கு போட்டு என்ன நடக்கும்ன்னு கணிச்சு சொல்வாங்களாம். ஊற விட்டு போகும் போது ஊர் கோடில இருக்கற புளிய மரத்துல அந்த ஆன்மாவை அடிச்சு வைச்சிட்டு போய்டுவாங்களாம். பெரும்பாலும் ஒரு ஊருக்கு இந்த வருஷம் வர்ற கோடங்கி தான் அடுத்த வருசமும் வருவானாம். அவனுக்கு ஒரு மாதிரி அந்த ஊர் மக்கள் செட் ஆகிடுவாங்க"ன்னு சொல்லும் போது லாஜிக் சரியாத்தான் இருக்கு என்று தோன்றியது.

எல்லாமே கட்டுக் கதை போல இருந்தாலும்.. அதில் உண்மை இல்லாமலும் இல்லை. உண்மையும் பொய்யும் கலந்த ஒரு மெல்லிய கோட்டில் தான் கோடங்கிகள் நடக்கிறார்கள்.

கையில் எப்போதும் சாட்டையோடு அலையும் ஊர் பெருசு மிலிட்டரியிடம் விசாரித்தேன்.

"பேய் பிசாது சாமி பூதம்னு அலையறவன் நிம்மதியாவே இருக்க முடியாதுடா,...? நீ வேண்டாத வேலை பண்ணிட்டு இருக்க...! உனக்கு எதுக்கு கோடங்கி பத்தி தெரியணும்...?"

எல்லா பிலாசபிகளையும் கோட்டருக்கு தாரை வார்த்து விட்டு, பிறகு கோடாங்கி பற்றி சொன்னது சொக்கி.

"கோடாங்கிகள் ஒரு குழுவாத்தான் வருவாங்க. அவுங்களுக்கு அது குலத்தொழில்ங்கிறதுனால ஒரு வருசத்துல ஒரு குறிப்பிட்ட சில மாசம் மட்டும் ஊர் ஊரா போய் குறி சொல்றது....கை ரேகை பாக்கறது......சாமக்கோடங்கியா ராத்திரியில ஊருக்குள்ள வந்து வீட்டு முன்னால நின்னு உடுக்கை அடிச்சு குறி சொல்றதுன்னு அவுங்க அதை ஒரு கடமையாத்தான் பண்ணிட்டு இருக்காங்க. அடுத்த நாள் காலையில வந்தா அவுங்க எந்த வீட்டுக்கு என்ன சொன்னாங்கன்னு அவுங்களுக்கு தெரியாதுன்னு ஒரு பேச்சு இருக்கு. அதாவது நேத்து ராத்திரி குறி சொன்னது கோடங்கியா இருந்தாலும் குறி சொல்ல வெச்சது குட்டி சாத்தான்னு சொல்வாங்க.. அதுனாலதான் காலையில கோடங்கிகாரனுக்கு நைட் என்ன சொன்னோம்னு நினைவிருக்கிறதுல்லன்னு பொதுவா ஒரு கருத்து இருக்கு. அது எந்தளவுக்கு சரின்னு தெரியல. ஆனால் கோடங்கிகள் மிக தெளிவா யோசிக்கறவங்க. கூர்மையாக கவனிக்கறவங்க. காலையில் மறுபடியும் வந்து அதே வீதிகள்ல பொத்தாம் பொதுவா பேசிட்டு பரிகாரம் அது இதுன்னு சொல்லி காசோ பொருளோ அரிசியோ வாங்கிட்டு போயிடுவாங்க. அவங்க சொல்றதுல எப்டியோ பாதி நிஜமா இருக்கும். மீதில பாதி பொய்யா இருக்கும்....மிச்சம் மீதி எதுவுமே இல்லாம இருக்கும்....."

மிலிட்டரி பேசிக் கொண்டேயிருந்தார். கோட்டர் முடிய இன்னும் நேரமிருக்க நான் இடத்தை காலி செய்திருந்தேன்.

குட்டி சாத்தான் பேசுவதெல்லாம் ஸ்ப்லிட் பெர்சனாலிட் வகையறாக்கள் என்று புரிய முடிந்தது.

*

நான் அடுத்து சென்று நின்றது 118 வயது கிழவி வீட்டில்.

கிழவி வழக்கம் போல கட்டிலில் அமர்ந்து கொண்டு தியானம் செய்வது போல பார்த்துக் கொண்டிருந்தது.

இன்னும் சாகாம இருக்கியே....இந்த வாழ்க்கை போர் அடிக்கலியா...ன்னு எத்தனையோ தடவை கேட்ருக்கேன். கண்கள் சிரிக்கும் அளவுக்குக் தான் பதில் தரும். பொக்கை வாயில் கால வாசம் வரும்.

சந்தேகத்தோடு தான் முன்னால் நின்றேன்.

"என்ன...?" என்பது போல சுருக்கங்களை விரித்து தன் முகம் காட்டியது. இடுங்கிய கண்களால் என் முகம் பார்த்தது.

"நேத்து வந்த கோடங்கியப் பார்த்து எதுக்கு அழுத... அவனும் உன்னையே பார்த்தான். அவன் எல்லா வீட்லயும் என்னென்னெமோ சொன்னான். உன்கிட்ட மட்டும் எதுமே சொல்லல. இல்ல சொல்லி எனக்கு கேக்கலயான்னு தெரியல....ஒன்னும் புரியல.... ஒரே குழப்பமா இருக்கு.... எதுவோ சரி இல்ல...ன்னு மட்டும் எனக்கு தோணிட்டே இருக்கு... சொல்லு... ஏன் அவனை பார்த்து அழுத...!"

பழுத்த தோலுக்குள் இருந்து மெல்ல எழுந்தமர்ந்த கிழவி வெற்றிடத்தின் கோட்டோவியம் போல தெரிந்தது.

நான் பேசுவதை நிறுத்தியதும் பொதுவாக வாய்க்குள் எதையோ முனங்கியது. ஒன்றும் புரியவில்லை. மீண்டும் மீண்டும் கிழவி எதையோ சொல்லிக் கொண்டே இருந்தது. ஆனால் வார்த்தைகளில் ஒரு கோர்வை இல்லாமல் ஒன்றும் விளங்க முடியாமல் இருந்தது.

"என்ன நடக்குது....! ஒன்னும் புரியல?..." திரும்ப திரும்ப கேட்டேன். திரும்ப திரும்ப எதையோ முனங்கியது.

"அய்யோ.. பாட்டி... அந்த கோடாங்கி உன்கிட்ட என்ன சொன்னான்.. நீ அதுக்கு அழுத...? அவன் உனக்கு சொந்தமா..." என்றேன்... கத்தினேன்....

அதற்கும் அதே முனகல் தான்.

செய்வதறியாது கிழவியை உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

"நீண்ட நாள் வாழ்வதும் கொடுமை தான்....." மனம் வேறு பக்கம் தாவியது. நான் அங்கிருந்து கிளம்பினேன்.

"வேறு வழியே இல்லை. கோடங்கியை பிடித்து விசாரிப்பதைத் தவிர..." மனம் கணக்கு போட்டது. நான் கோடங்கிக்கு காத்திருந்தேன்.

தானாக ஆழ் மனதில் எழும் உடுக்கை சத்தம் இப்போது நன்றாகவே காதுக்குள் கேட்டது. தானாக வாய் முனகிப் பார்த்தது.

"நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது..."

நான் கோடங்கிக்கு காத்திருந்தேன். சற்று நேரத்தில் காற்றில் வரைந்த கன்னாபின்னா கோடுகளென கோடங்கி வந்து கொண்டிருந்ததை கண்டேன்.

இன்று தான் புதிதாக ஊருக்குள் வருவது போன்ற பாவனையில், நிழலே இல்லாத மாதிரி காலையின் வெயிலை விலக்கிக் கொண்டே அவன் நடந்து சென்றான்.

அந்தரத்தில் இருந்து மீண்டெழும் பறவையின் கீச்சுக்குரலில் யாருக்கோ " நல்ல்லதே நடக்கும்..." என்றான். அவன் முகத்தில் தேஜஸ் நிரம்பி வழிந்தது.

அவன் அடுத்தடுத்து ஒவ்வொரு வீட்டுக்கு முன்னாலும் நின்று பொதுவாக எதையோ சொன்னான். நான் பக்கவாட்டில் நடப்பது போலவே பின் தொடர்ந்தேன். ஒவ்வொரு வீட்டிலும் காசு வாங்கினான். அரிசி வாங்கினான். பழைய துணிகள் வாங்கினான். பதிலுக்கு ஏதேதோ சொன்னான்.

"ராத்திரி சொன்னது அப்படியே சரி" என்ற பெண்மணிகளிடம், நம்ம கையில என்னருக்கு..... எல்லாம் அவன்....தான்..." என்று மேலே பார்த்து கையைக் காட்டினான். அவன் எல்லா வீட்டு வாசலிலும் புதிதாக நிற்பவன் போலவே நின்றான். நேற்று இரவு அவன் இதே வீதியில் வந்ததற்கான எந்த அறிகுறியும் அவன் உடல்மொழியில் இல்லை. அவன் திரும்ப திரும்ப ஒரு சில விஷயங்களையே மாற்றி மாற்றி இடத்துக்கு தகுந்தாற் போல பேசுவதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

ஒரு வழியாக அவன் தன் வேலைகளை முடித்துக் கொண்டு ஊர் தாண்டி போய் கொண்டிருந்தான். நான் மீண்டும் ஓடி சென்று எதற்கோ கட்டுப்பட்டவன் போல நின்ற இடத்திலேயே நின்றிருந்தேன். அவனிடம் பேச எனக்கு நிறைய இருந்த போதிலும் பேச்சற்று நடையற்று ஸ்தம்பித்து நின்றிருந்தேன்.

மனதால் ஓடுவதை நிறுத்தி விட்டு சட்டென திரும்பினேன். காற்றில் கரைந்து மறைந்து ஓடிக் கொண்டிருந்தான் கோடங்கி.

வெயில் அவனை விரட்டிக் கொண்டிருக்க என்னால் ஓட முடியவில்லை.

ஐயோ என்றிருந்தது. கோடங்கி சொல்வதையெல்லாம் நம்ப வேண்டியது இல்லை. ஆனால் அந்தக் கிழவி ஏன் அழுதது. தலையே வெடித்து விடும் போல இருந்தது. இயலாமையின் பொருட்டு மீண்டும் கிழவி வீட்டை நோக்கி நடந்தேன்.

காதுக்குள் எதுவோ இரைந்து கொண்டே இருந்தது. புரியாத மொழியில்... காதுக்குள் நன்றாக கேட்டது. கேட்ட அது, என் குரலில் தான் இருந்தது. எனக்கு வேகமாய் ஓட வேண்டும் போல இருந்தது. ஓடத் தொடங்கினேன்.

*
அவ்விரவில் நானே கோடங்கி என்று நம்புவது அபத்தமாக இருந்தாலும் ஆத்மார்த்தமாக இருந்தது.

நானாக அல்லது தானாக என் உடல் மொழி கோடங்கியைப் போலவே ஜரிகையோடு மாறியது. எந்த வாசலில் எந்தக் கொடியில் எடுத்தேன் என்று தெரியவில்லை. ஒரு கிளிப்பச்சை துப்பட்டா என் தலையில் சுற்றியிருந்தது. கைகளில் உடுக்கை இல்லை. ஆனாலும் கைகள் உடுக்கை உணர்ந்தது. உதட்டில் பேச்சுக்கள் இல்லை. ஆனாலும் மனதுக்குள் "நல்ல காலம் பொறக்குது......நல்ல காலம் பொறக்குது" மொழி அதிர்ந்தது. எங்கிருந்தோ வந்து அமர்ந்து கொண்ட கம்பீரத்தில் மீசையை முறுக்கிக் கொண்டேன். தாடி கூட பளபளவென மின்னியது. கண்களில் பளபளக்கும் இரவின் வெளிச்சம் பழுப்பு நிற மின் விளக்கின் ஊடாக நிரம்பியது. ராஜ நடையில் நான் தான் நானே என்ற பாவனையை ஒப்பனையின்றி அற்புதமாய் உணர்ந்தேன்.

ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒரு கடவுளைப் போல நின்றேன். ஒரு சாத்தானைப் போல பார்த்தேன். வாய் முணுமுணுக்கும் சொற்களில் என் உணர்விழந்ததை போல நம்பினேன். இந்த ஊரே என் கட்டுப்பாட்டிலிருப்பது போன்ற ஒரு சொல் என்னுள்ளே வீணை வாயை அசைத்தது. நான் அதிர அதிர நடந்தேன். எதுவோ அதிர்வதால் நடந்தேன். வீதிகளின் குறுக்கு சந்தில் அந்த கோடங்கி கண்ட அவதானிப்புகளை நானும் கண்டேன். சொல்லொணாத் துயரமும் சொல்லொணா பயமும் என்னுள் இறங்குவதை ஆசை தீர உணர முடிந்தது. என் உடல் சடுதியில் கனமானது. நான் காற்றை அசைத்து வெற்றிடம் வழித்து நடந்தேன். தானாக, அனிச்சையாக என் கால்கள் நின்ற வீட்டுத் திண்ணையில் அந்தக் கிழவி படுத்திருந்தது. மௌனமாய் கொஞ்சம் நேரம் நின்று பார்த்தேன். அந்த வீதியே என்னை நீள் குறுக்கில் பார்த்தது.

'நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது' என்று வாய் விட்டே கூறினேன். ஆனால் சத்தம் எனக்கே கேட்கவில்லை. சுற்றும் முற்றும் பார்த்து விட்டு மீண்டும் கொஞ்சம் சத்தம் அதிகமாக்கினேன். அப்பொழுதும் எனக்கு கேட்கவில்லை. இன்னும் வேகமாய் வெறி பிடித்தவன் போல கத்தினேன். அப்போதும் கேட்கவில்லை. என் உடல் நரம்புகள் எங்கோ அறுந்து விழுவதாக வந்த கற்பனையைத் துணைக்கு வைத்துக் கொண்டு ஒருமுறை உதட்டசைவில் சொல்லிப் பார்த்தேன்.

மூளைக்கு கேட்டது. செவிகளுக்கு கேட்கவில்லை.

கிழவி அசைவின்றிப் படுத்திருந்தது. முற்றத்தில் வானம் பார்க்க படுத்திருந்த நாய் தலை தூக்கி பார்த்து விட்டு, மீண்டும் தலையை திருப்பிக் கொண்டது. அதன் சிந்தனையில் நிலாவின் நகர்தல் உணர்ந்தேன்.

உடல் நடுங்கினாலும்.... உள்ளம் உருட்டி நிறுத்தி..."பாட்டி... ஹே.....ய்.... கிழவி...." உதட்டின் கீறலில் சொற்கள் அழுத்தின. ஆனாலும் கிழவி அசையாமல் படுத்திருந்தது. அந்த வீடே சூனியத்திலிருந்து விரிந்து கொண்டிருந்தது. சுற்றியும் பார்த்தேன். இரவும் நிலவும் புணர, நாய்கள் மட்டுமே சாட்சியாய் நடந்து கொண்டிருந்தன. நான் பயந்து பயந்து மெல்ல கிழவியின் அருகே சென்றேன். ஒரு பாழ் பிணத்தின் தோற்றத்தில் சதைக்கோடுகளால் குவிந்து கிடக்கும் அந்த நைந்த வாழ்வின் கட்டையை காட்சிக்கு காட்சி உற்று கண்டேன். கிழவி நெஞ்சோடு எதையோ அணைத்துப் படுத்திருந்தது. தொடலாமா வேண்டாமா என்று மெல்ல கையை தொட்டுப் பார்த்தேன். கிழவியின் உடல் சில்லிட்டிருந்தது.

உள்ளே வெடித்த பெரும்பாறையின் தகிப்பில் நான் பெருவெடிப்புக்கு முந்திய வாழ்வை கண்டது போல நடுங்கினேன். மெல்ல நெஞ்சோடு அணைத்திருக்கும் அந்த வஸ்துவை கெட்டியாய் பிடித்திருந்த கிழவியின் கையில் இருந்து பிரித்தெடுத்தேன். அதே வேகத்தில் திருப்பினேன். குண்டு பல்பின் வெளிச்சத்தில் அந்த வஸ்து ஒரு பழைய புகைப்படம் என்று தெரிந்தது.

உற்றுப் பார்த்தேன்.......!?

மணக்கோலத்தில் ஒரு பெண் இருக்கிறாள். உடன், மணக்கோலத்தில் ஒரு ஆண் நின்று கொண்டிருக்கிறான். கிட்டத்தட்ட 99 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோ என்று போட்டோவின் கீழே பதிந்திருக்கும் தேதி சொன்னது.

மீண்டும் உற்றுப் பார்த்தேன்.....!

அந்தப்பெண்.... அந்தப்பெண்..... இந்தக்கிழவி தான்... இந்தக்கிழவியே தான். புகைப்படத்தையும் கிழவியின் முகத்தையும் மாறி மாறி பார்த்தேன். ஆம்... இந்தக்கிழவி தான்...

மீண்டும் உற்றுப் பார்த்தேன்.....!??!!! 

ஐயோ.... பக்கத்தில் இருக்கும் ஆண்...அவன்.... அவன் முகம்... அவன்.... அந்த, அந்தக் கோடங்கி தான்...

தலை தெறிக்க, வீட்டுக்கு ஓடி வந்தேன். என்னால் அங்கு நிற்க முடியவில்லை. எல்லாமே ஏற்கனவே போட்ட திட்டப்படி எதுவோ நடப்பதாக தோன்றியது. ஆயிரம் கோடங்கிகள் என்னை வெறித்தனமாக துரத்தினார்கள். கண்களை இறுக மூடி படுத்தேன். கிழவியின் அழுகை என்னை அரித்தது.

நான் சந்தேகப்பட்டது சரிதான். இந்தக் கிழவியின் பையன்... இல்லை இல்லை.. பேரன்..... இல்லை இல்லை பேரனின் பையனாகத் தான் இருப்பான் அந்தக் கோடங்கி. அது தான் கிழவி எதுவோ சொல்ல வந்து வார்த்தைகளற்று அழுத்திருக்கிறது. முதல் முடிச்சு அவிழ்ந்தது போல ஒரு ஆசுவாசம் எனக்குள்.

விடியலில்.... 118 வயதுக் கிழவியின் மரணத்தை ஊரே கொண்டாடியது.

*
"திருப்பூர் புத்தக திருவிழாக்கு போயிருந்தேன்.. நீ தான் கோடங்கி பத்தி தேடிகிட்டே இருந்தியா.... அது தான் கண்ணுல பட்டுச்சு... அப்டியே அள்ளிட்டு வந்துட்டேன்" என்று காயாம்பூ 'கோடங்கி' என்ற தலைப்பிட்ட புத்தகத்தை என் கையில் வைத்தாள். கனம் தாங்காமல்... இரு நொடி கீழிறங்க பின் சுதாரித்துக் கொண்டு தாங்கிக் கொண்டேன். முன்னூறு பக்கங்களுக்கு குறையாமல் இருந்தது புத்தகம். பழுப்பு நிற இருட்டை சுமந்து கொண்டிருந்தது அட்டைப் படம். புத்தகத்தில் கால வாசனை அதன் வயதை சொல்லியது.

"இந்த புக் எப்படி இங்க வந்துச்சுன்னு தெரியலியேன்னு முனங்கிகிட்டு தான் கடைக்காரன் எனக்கு குடுத்தான்...." என்ற காயாம்பூவுக்கு இன்னமும் கண்களில் என்னவோ மின்னியது.

என் தேடல் மீது எப்போதும் பேராவல் கொண்ட ரோமாபுரிக்காரி அவள்.

ஒன்றைத் தேடி நாம் அலைகையில் அந்த ஒன்றும் நம்மைத் தேடி அலையும் என்று இப்போதும் நம்பினேன்.

வேக வேகமாய் பசித்த தெருநாயைப் போல பதறினேன். பக்கங்களை பிராண்டினேன். படபடவென அதுவாகவே இழுத்து இழுப்புக்கு சென்ற பக்கத்தில் கரிகால சோழன், தன் அரசவையில் தன் அருகே எப்போதும் வைத்திருந்த நிமித்தக்காரனைப் பற்றிய விவரணங்களை ஆசிரியர் தொகுத்திருக்கிறார். ஆசிரியர் பெயர் வாய்க்குள் நுழையாத வானக்கோட்டில் ஒரு தலைகீழ் பெயரில் கோடங்கியின் தொப்பியை அணிந்திருந்தது. பெரும் பசியின் துவக்கத்தில் இருக்கும் நிதானத்தைக் கைவிட்ட நான் படிக்கக் தொடங்கினேன். பெரும்பாலும் எல்லா அரசவையிலும் நிமித்தக்காரனை கூடவே வைத்துக் கொள்வது வழக்கம் என்பது முன்பே தெரிந்தது தான். நிமித்தக்காரன் கோடங்கி எல்லாம் ஒரே வகையாறாக்களில் தான் வருவார்கள். கணித்து சொல்வது.

கடந்த கால போர்களை கணக்கெடுத்துக் கொண்டு, அடுத்து யார் யாருடன் எப்போது எப்படி எந்த சூழ்நிலையில் போர் வரலாம் என்று கணிப்பது....எது நல்லது எந்த நேரத்தில் என்ன செய்யலாம்....ஆட்சிக்கு எப்போது பிரச்னை வரும்... எதன் மூலம் வர வாய்ப்பிருக்கிறது......அரசவையில் யார் துரோகம் செய்யக் கூடும்.... என்று மன ஓட்டத்தின் வாயிலாக, முக பாவனைகள்.....உடல் மொழிகளின் வாயிலாக... கண்களின் கூர் நோக்கின் வழியாக கவனித்தும் கணித்தும் ஒரு வகை முடிவுக்கு வரும் நிமித்தக்காரனின் சொல் பெரும்பாலும் அறிவியல் துணை கொண்டு இருப்பதால் சரியாகவே யிருக்கும். மேகத்தின் வாகு அறிந்து மழை வருவது குறித்து கூட அவனால் துல்லியத்தின் அருகே சென்று சொல்ல முடியும். இந்த வாழ்வின் கூடுகள் எல்லாமே கணக்குகளால் கட்டப்பட்டவை தான்.

நான் படித்துக் கொண்டே தொடர்ந்து நான்காவது பக்கத்தைத் திருப்ப... பெருமழை ஒன்று கோடங்கியின் தாழ் திறந்து பெய்யத் துவங்கியிருந்தது. வேண்டிய மழைதான். ஆனாலும் இப்போது வேண்டாத விருந்தாளியாக ஓடோடி விரட்ட, ஓடி சென்று வீட்டின் வராண்டாவில் நின்று, மீண்டும் அதுவாகவே திரும்பிக் கொண்ட நான்காவது பக்கத்தைத் திருப்ப, அங்கே கரிகால சோழனின் சிலையும் அதன் அருகே அவனின் நிமித்தக்காரனின் சிலையும் கருப்பு வெள்ளையில் வரையப்பட்டிருந்தது. சற்றுமுன் பெய்ய ஆரம்பித்த மழை என்னை தூக்கி வீச ஆரம்பித்தது போல இருந்த கணம் ஒன்றில் நான் உடைந்து சிதறினேன். என் காதுகளில் மழையின் இரைச்சல் ஊசிமுனை கத்தைகளால் சவ்வறுத்தது. தொண்டைப்பிடியில் எரியும் காரலின் எச்சிலை விழுங்கவோ துப்பவோ இயலாத சுழற்சியில் நான் மீண்டும் அந்த ஓவியத்தைப் பார்த்தேன்.

கண்களில் நீட்சி குளம்பிய வட்டத்தில் சொட்டும் மெய்ப்பொருள் தேடும் வனம் கொண்டிருக்கையில், மீண்டும் ஓய்ந்திடாத கண்களில் பட்ட காட்சியில் அந்த நிமித்தக்காரனின் ஓவியம் அப்படியே நேற்று கண்ட கோடங்கிக்காரனின் முகத்தை ஒத்திருந்தது.

எனது ஒரு நீண்ட தொடரின் வழியே வழியற்று நிறைந்திருப்பதை உணர்ந்தேன். எனக்குள் என்னெல்லாமோ தோன்றியது. எதுவெல்லாமோ செய்தது. என்னில் ஏதோ ஒரு தேடல் தன்னை நிறுவிக் கொள்ளத் தூண்டிக் கொண்டிருப்பதாக உணர்ந்தேன். கேள்விகளாலான அடுக்குகளில் என் உடல் சூடு பட்டு தடுமாறியது. அதே கணம் நான் தனிச்சையாக அனிச்சையாக அந்த பெரும் மழைக்குள் அந்த கோடங்கியைத் தேடி ஓடிக் கொண்டிருந்தேன்.

தேட தேட ஓட ஓட மனமெல்லாம் உடுக்கை சத்தம் மழையின் குரலில் ஸ்தம்பித்தது.

"என்ன நடக்கறது. யார் அந்த கோடங்கி......? அவன் முகம் எப்படி கரிகால சோழனின் நிமித்தக்காரனின் முகத்தோடு ஒத்துப் போகும்.. அவன் எப்படி இந்த 118 வயது கிழவிக்கு சொந்தக்காரனாக இருந்திருக்கிறான்....?"

கேள்விகளின் வழியே ஒரு வெளிச்சத்தின் தேடலை நான் உணர்ந்தேன். அவனை சுற்றி என்னவோ இருக்கிறது. அவனை சுற்றிய மர்மத்தை நான் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும் என்று என் காதுகளில் யாரோ கட்டளை இடுவதை கேட்க முடிந்தது. தெரியாமல்........கலையாமல் இன்னும் நான் இருப்பது காலப்பிழை என்றும் கேட்கிறது. அவன் ஓர் ஆதி முகத்தில், பல் நீண்டு முகம் சுருங்கி கண்கள் பிதுங்கி மூக்கு புடைத்து என் மனக்கண்ணில் என்னிடம் விளையாடுவது போல இருந்தது. உடல் கொண்ட படபடப்பில் பாறைக்குள் பூக்க என்னால் ஒரு நிமித்தக்காரனின் வேகத்தில் அவனது மழைக்குள் ஓட முடிந்தது.

மழை இன்னும் வழுக்க ஆரம்பித்த போது நான் நின்ற இடம் கோடங்கிகளின் கூடாரம்.

*
"நீங்க சொல்றது சரி தான்...."

மழைக்கு மறைத்து காலத்துக்கு தெரிய காட்டிய ஓவியத்தைக் கண்ட சில கோடங்கிகள், "இவர் எங்க கூட்டம் தான்... ஆனா எங்களோட சேர மாட்டாரு.. எப்பவும் தனியாத்தான் வருவாரு.. போவாரு....... பெரும்பாலும் முகம் குடுத்து கூட பேச மாட்டாரு. எங்கிருந்து வர்றாரு... எங்க போவாரு... எப்போ வருவாரு... எப்போ போவாரு... ஏதும் தெரியாது. ஆனா வருஷ வருஷம் வந்துருவாரு. நானே... நாலைஞ்சு தடவை பாத்துருக்கேன்.....கொஞ்சம் மறதி உள்ள ஆளு..." என்றவரைத் தாண்டி யோசித்துக் கொண்டே நிற்கையில்,... அதே பதிலை இன்னொரு வயதான கோடங்கியும் சொன்னார்.

"அட கொஞ்ச நேரத்துக்கு முன்னால தான் கிழக்கால போனாரு" என்ற கிழவியின் முகத்தில் பாசி மணிகளின் ரீங்காரம் கோடுகளாய் வரைந்து கொண்டிருந்தது.

தேட முடிவெடுத்த பின் மழையென்ன மழையில் என்ன......?

நான் கால்களில் றெக்கைப் பொருத்திக் கொண்டு மழை தாண்டி நடந்து பறந்து கொண்டிருந்தபோது வெயில் பூத்திருந்து காத்திருந்தது. வெயிலின் தூரம் பாலைவனத்தில் தான் ஆரம்பிக்கிறது. பாலைவனத்தின் வானம் என் காலடியில் மணலாய் உதிர்ந்து கொண்டிருந்தது. நிகழ்பவைகளை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. மனதுக்குள் எழும் கொப்புளங்களின் சூட்டில் என் நினைவு வெடித்தபடியே இருந்தது என் மூளையின் மடிப்பில் பூமியின் மறுபக்கத்தை வரைந்தது.

யார் இந்த கோடங்கி....? ஏன் என்னை இப்படி அலைக்கழிக்கிறான்....! அவனுக்கும் எனக்கும் ஏதோ தொடர்பிருந்தால் அதன் பொருட்டு தான் இதுவெல்லாம் நிகழ்கிறது என்றாவது நம்பலாம். கண்டிப்பாக ஓர் ஆய்வுக்கட்டுரைக்காக நான் இப்படி அலைகிறேன் என்றால் என்னாலேயே நம்ப முடியவில்லை. நம்ப முடியாத பெருந்தவங்கள் எல்லாம் இப்படித்தான் பின்தொடரும். என் உடலில் உடுக்கையின் அதிர்வு திசையற்று இயங்குகிறது. தொடுவானத்தின் கீரிச்சிடல்கள் என் செவிகளில் காலம் பூசுகிறது. ஆயிரம் வருடத்துக்கு முன் கரிகால சோழனின் அரசவையில் இருந்த நிமித்தக்காரனுக்கு இந்தக் கோடங்கியின் முகம் எப்படி.....பொருந்துகிறது....! அந்த நிமித்தக்காரனின் வம்சாவழியாக இவன் இருப்பனோ...? இந்தக்கிழவி ஏன் அப்படி அழுதாள். 118 வயது கிழவியின் திடீர் மரணத்துக்கு காலம் மட்டும் தான் காரணமா..?!

நான் நடந்து நடந்து தேடி தேடி.. அலைந்து அலைந்து குளிர் காலத்தின் நிலத்தில்... நடுங்குதலின் காரணத்தை அறியாமலே நடந்து கொண்டிருந்தேன். 

அரூபத்தின் தன்மையோடு எனக்கு முன்னால் பறந்து சென்றால் பிடிபட்டு விடும் தூரத்தில், தோளில் அதே தோல் பையுடன்..... அடர் பச்சை தலைப்பாகையில்........ஜரிகை சட்டையோடு அந்த கோடங்கியின் காட்சி என்னை மந்திரம் செய்ய மாயம் செய்து கொண்டிருந்தது. அவன் திரும்பி பார்க்கவே இல்லை. அவன் திரும்பவும் பார்த்து விட வேண்டுமென......வெறி கொண்ட கால சக்கரத்தை என் கால்கள், தானே கொண்டிருந்தன. நானும் பறவையின் வம்சத்தில் கடைசி மனிதனைப் போல தாவி தாவி அவனை பின் தொடர்ந்தேன். கணக்கின் முடிச்சுகளால் காலத்தின் அவிழ்ப்புகள் அங்கே நிறம் மாறி இடம் மாறி உருமாறி... பனிக்காலத்தில் முகப்பில் பற்கள் அடிக்க நடுங்டுவது சற்று ஆசுவாசமாக இருந்தது. தேடியது கிடைப்பது போல பனிக் காலம் போர்வை போர்த்தியது.

பனிக் காலம் இறுகி உருகி தாண்டிய போது இலையுதிர் காலத்தின் வரவேற்பில் அவன், ஒரு வீட்டு வாசலில்...... நின்று, " நல்ல காலம் பொறக்குது............நல்ல காலம் பொறக்குது.....நல்ல காலம் பொறக்குது......நல்ல காலம் பொறக்குது........" என்றான். இடையிடையே வேறு ஏதோ மொழி கலந்து வார்த்தைகள் வருவதை என்னால் துல்லியமாக கேட்க முடிந்தது.

"ஏலி…ஏலி…லாமா….சபக்தானி.......ஏலி…ஏலி…லாமா….சபக்தானி......... ஏலி…ஏலி…லாமா….சபக்தானி"

இது என்ன பாஷை.... அவன் இடையிடையே இந்த வார்த்தைகளைத்தான் விட்டு விட்டு தடுமாறி தடுமாறி வானத்தைப் பார்த்து பார்த்து தானாக சொல்லிக் கொண்டே அலைகிறான். அவன் முகத்தில் முளைத்திருந்த தாடி செம்பட்டை நிறத்தில் இலையின் காலத்தை சருகு நரம்பின் வழியே ஊர்ந்து செல்ல எதையாவது நம்பித் தொலைக்க வேண்டுமே என்று பிதற்றிய மனதில் இன்னமும் அதே ஏலி…ஏலி…லாமா….சபக்தானி....

கூகுளின் கண்களை பார்வையை பிடுங்கினேன். முதல் தேடலிலேயே முகத்தில் அறைந்தது அவ்வாக்கியம். இன்னும் கொஞ்சம் அலசி ஆராய விவிலியத்தின் பக்கம் விரிந்தது. அதன் படி அந்த வாக்கியம் ஏசு சிலுவையில் அறையப்பட்ட போது அவர் கூறிய கடைசி வார்த்தைகள். அதன் தமிழாக்கம், " பிதாவே ஏன் என்னை கை வீட்டீர்". ஏலி…ஏலி…லாமா….சபக்தானி......என்பது ஹீப்ரூ மொழியோ அல்லது அராமிக் மொழியோ... இதை எதற்கு இந்தக் கோடங்கி சொல்கிறான்....?

தலைக்குள் அந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஒளித்துக் கொண்டே இருந்தன. சத்தமிடும் காலத்தின் கதறலில் இரண்டாயிரம் வருடம் பின்னோக்கி சென்று கொண்டிருப்பது போல ஒரு மாயத்தோற்றம் என்னைத் தொடர்ந்தது. எப்போதோ படித்த அல்லது கேட்ட விவிலிய கதை ஒன்று நினைவு வந்தது. அதுவாகவே தன்னை நிறுவிக் கொள்ளும் கூற்றின் சுவருக்கு நான் ஒரு மீடியமாக இருப்பதாக நம்பினேன்.

ஏசு, கடவுளுக்காக ஊழியம் செய்ய ஆரம்பித்த ஆரம்ப காலகட்டத்தில்... இரண்டு சகோதிரிகள் தங்கள் சகோதரன் இறந்து விட்டான். அவனை உயிரோடு மீட்டுத் தாருங்கள் என்று முழு மனதோடு நம்பி நம்பி அவ்வழி வந்த ஏசுவிடம் முறையிடுவார்கள். அவரும், சரி அவன் இருக்கும் இடத்தைக் காட்டுங்கள்... என்பார். சகோதிரிகளும் காட்டுவார்கள்.

கல்லறை முன் நின்று அந்த இறந்தவனை நோக்கி அவன் பெயரை சொல்லி, 'எழுந்து வா' என்பார். சற்று நேரத்தில் நான்கு நாட்களுக்கு முன் மரித்த அவன் உயிரோடு எழுந்து வருவான். அப்படி ஒரு அதிசயம் நிகழ்ந்ததாக விவிலியம் கூறுகிறது. அவன் அதன் பின் எப்போது இறந்தான் என்று எங்குமே எந்த குறிப்பும் இல்லை. இறந்தான் என்று தான் இருக்கிறது.

"அவன் ஒரு வேளை இறக்காமல் இருந்திருந்தால்..... இறந்து மறுபடியும் உயிர் பெற்ற அவன் அதே வயதோடு நின்று விட்டிருந்தால்.... இவ் வாழ்வின் காலம் அவனை விடாது விரட்டி இருந்தால்..... வாழ்ந்து வாழ்ந்து சாவின்றி அலைந்து சலிப்புக்குள்ளாகி இடம் பெயர்ந்திருந்தால்....... தலைமுறை தலைமுறையாக இளைஞனாகவே இருப்பதில் இருக்கும் வாழ்வியல் முரண்களின் வழியாக கால் போன போக்கில் எல்லாம் அறிந்த மனதோடு எதுவும் அறியா மனதைத் தேடி நடக்க ஆரம்பித்திருந்தால்....... அதுவே ஒரு தேடலின் பொருட்டு ஒரு நிமித்தக்காரனாய்.. ஒரு கோடங்கியாய்...ஒரு யாத்திரீகனாய்..... ஒரு நாடோடியாய் அவன் மாறியிருந்தால்...."

நான் யோசித்தேன். நானாக யோசித்தேனா என்று தெரியவில்லை. யோசனை தானாகவே உரு பெற்று உருவம் பெற்று என் சிந்தையில் உலவத் தொடங்கியது.

அவன், தன் உலக சுற்றுப் பாதையில் நகர்ந்து நகர்ந்து கரிகால சோழன் அரசவையில்... நிமித்தக்காரனாய் இருந்திருப்பான். இன்னும் இன்னும் இருக்கும் வரலாற்று முக்கிய சம்பவங்களின் இடத்திலெல்லாம் ஒரு நிமித்தக்காரனாய்.. ஒரு கோடங்கியாய்...ஒரு யாத்திரீகனாய்..... ஒரு நாடோடியாய்..... ஏன் இருந்திருக்கக் கூடாது... இரண்டாயிர வருட வரலாற்றில் அவன் ஒரு நாடோடியாய்.. நிம்மதியற்ற ஒரு சதைப்பிண்டமாய்.... சாவில்லாத உப்பு சப்பில்லாத ஒரு வாழ்வின் நெடுதூர கோடுகளின் வழியே ஒரு நிலை கொள்ளாத வாழ்வின் முடிவிலியை சுமந்து கொண்டு தனையே பாரமாக்கி ஒரு யாத்திரை நிகழ்த்தி இருக்கிறான். இயேசுவால் மறுபடியும் உயிர்ப்பிக்கப்பட்ட அவன் அதன் பிறகு மரிக்காமலே போயிருந்தால்.. அவன்தான் இந்தக் கோடங்கி என்று என் மூளை கண்ணா பின்னாவென யோசித்தது. ஆனாலும் அதில் ஒரு ஜீவன் இருப்பதாய் முழுதாய் நம்பினேன். நம்பிக்கையின் வடிவத்தில் கோடங்கியே குடுகுடுப்பு சத்தமாய் இதயம் நுழைந்தது போல இருந்தது.

வரலாற்று நெடுகிலும் நடந்த முக்கியமான நிகழ்வுகளில் எல்லாம் அவன் மரணமற்ற வாழ்வு பங்கெடுத்து கொண்டே இருந்திருக்கிறது. அவன் தான் அந்தக் கிழவியின் கணவனாகவும் இருந்திருக்கிறான். சாவற்ற ஒரு வாழ்வின் கோர பிடியில் அவன் சிக்கியிருக்கிறான். அதே வயது. ஆனால் காலம் இரண்டாயிரம் ஆண்டுகள்.

நான் பட்டென்று எடுத்த முடிவோடு..... மனதை கூர்மையாக்கி.... என் உடலை நேர் நிறுத்தி....வானம் சுமக்கும் மனதின் ஓசையோடு, இறந்து நான்கு நாட்களாகி ஏசுவினால் உயிர்பெற்றவனின் பெயரால் அழைத்தேன்....

"லா........சரஸ்ஸ்ஸ்ஸ்........."

பட்டென்று திரும்பிய கோடங்கி,

"ஏசுவே.... எனக்கு மரணம் தாரும்... இந்த வாழ்வு... இரண்டாயிரம் வருடங்களாக என்னை உலகமெங்கும் அலைக்கழிக்கிறது. தயவு செய்து என்னை சாக விடும்.... வாழ்வு பெரும் சுமை... வாழ்வு பெரும் சலிப்பு....உங்களைத்தேடி தான் இந்த காலம் முழுக்க அலைகிறேன்..." என்று கை கூப்பிய இடத்தில் நான் மட்டும் தான் நின்று கொண்டிருந்தேன். நான் மட்டுமே நின்று கொண்டிருந்தேன்.

- கவிஜி

Pin It