படுத்த படுக்கையாய் கிடந்த மகளின் தலைமாட்டில் அமர்ந்திருந்த மயிலாத்தா கிழவி. நரை கூடிய தலைமயிரையும், சுருங்கிய கன்னத்தையும் இடக்கையினால் தாங்கியிருந்தாள். அவள் தனது எழுபத்திரெண்டு வயது அனுபவத்தையும், கவலையையும் சேர்த்தே தாங்கியிருந்தாள். அழுதழுது கருத்திருந்த கண்ணிமையின் ஓரம், நீர்த்துளி திரண்டிருந்தது. வெகுநேரமாக அப்படியே இருந்த கிழவி, எப்போது கண் அயர்ந்தாள் எனத் தெரியவில்லை. சட்டென கன்னத்தைத் தாங்கிருந்த கை இடறியதில் தூக்கம் கலைந்த கிழவி, அரைத் தூக்கத்தோடு கண்களை கைகளில் கசக்கியபடி “லட்சுமி, லட்சுமி…" என உளறினாள். எந்த பதிலும் இல்லை. கண்ணைத் திறந்து லட்சுமியைத் தட்டி எழுப்ப முயன்றாள். போர்வைக்குள் மெலிந்த உடல் அசைவற்றுக் கிடப்பதைக் கண்டதும், கிழவிக்கு மெல்ல பயமேறியது. நடுங்கிய கைகளில் லட்சுமியின் கையைத் தூக்கி நாடியை சோதித்தாள். கிழவியின் சுருங்கிய கன்னங்களில் ஈரம் படர்ந்தது.

"அய்யோ… என்ன பெத்த மவராசி…" என கிழவி கதறி அழ, மயிலாத்தா கிழவியின் மகன்கள் மணி, ராசு, அவர்களின் மனைவிகள், குழந்தைகள் என மொத்த குடும்பமும் கூடிவிட்டது.

"இனி காப்பத்தா முடியாது, வூட்டுக்கு கொண்டு போங்கனு" பெரிய ஆஸ்பத்திரியில் டாக்டர் சொன்னபோது தான், லட்சுமிக்கு கேன்சர் இருப்பது தெரிந்தது. அப்போதிருந்தே இதை எதிர்பார்த்தாலும் எல்லோருக்கும் வருத்தமும், கண்ணீரும் கூடியிருந்தது.

தென்னை மட்டையால் வேயப்பட்ட பந்தலோடு இருந்த ஓட்டு வீட்டின் முன்பு, அசைவற்று வேப்ப மரம் நின்றிருந்தது. அதில் கொத்து, கொத்தாய் பச்சை இலைகள் தொங்கிக் கொண்டிருந்தன. வீட்டின் முன்பாக சாமியானா விரித்து சேர் போடப்பட்டது. இழவு வீட்டிற்கு வரும் ஆண்கள் வேப்ப மரத்தின் நிழலில் நின்றிருந்த ஆண்களைப் பார்த்து வணங்க, பதிலுக்கு வணங்கி கையை நேராக மேல் நோக்கி விரித்தபடி நீட்டினர். வந்தவர்கள் அக்கையின் மேல் கை வைத்து விட்டு மெளனமாய் விலகி நின்றார்கள். இதேபோல் பெண்கள் கை நீட்ட புதிதாக வரும் பெண்களும் செய்தனர். நடுவீட்டில் வைக்கப்பட்ட லட்சுமியின் உடலைச் சுற்றி அமர்ந்திருந்த பெண்கள் தலையிலும், மார்பிலும் அடித்தபடி கதறி அழுது தீர்த்தனர். ஆங்காங்கே பெண்கள் வட்டமாய் நின்று, இருபுறம் நின்றிருந்தவர்களின் இடுப்புச் சேலையைப் பற்றி ஒப்பாரி வைத்தார்கள். அதில் ஒருத்தி வழிந்த மூக்கு சளியினை சேலையினால் துடைத்தபடி உரத்த குரலில் பாட, மற்றவர்கள் கோரஸாகப் பின் தொடர்ந்தார்கள்.

"காடு வளம் நாடும் உண்டு
உங்களுக்கு காஞ்சீபுரம் பட்டு உண்டு
சீரும், சிறப்பும் உண்டு
சீர்வரிசை தானும் உண்டு
சீரும், சிறப்பும் கொண்டு
எங்க சீமைக்கு நீங்க வந்தா
சீருக்கும் மதிப்பும் உண்டு
உங்க சீர்வரிசைக்கும் பெருமையுண்டு
காஞ்சீபுரம் பட்டு இப்போ
கலர் மங்கிப் போயிறிச்சே?
சீரும், சிறப்பும் இழந்து
நாங்க மவுசு இழந்து நிக்கிறோமே
சிவலோகம் போவதற்கு உங்களுக்கு
சீட்டு இப்போ வந்திடுச்சோ?
வைகுண்டம் போவதற்கு
உங்களுக்கு வயசாகிப் போயிடுச்சோ?"

ஒப்பாரி ரொம்ப நேரம் பிடித்து மெதுவாய் மெல்ல மெல்ல ஓய்ந்தது. புதிதாய் வீட்டிற்குள் நுழைந்த ஒருத்தி அழுதபடி ஒடி வந்து கூட்டத்தில் சேர்ந்து மீண்டும் ஒப்பாரியைத் துவக்கி வைத்தாள். அழுகை வராத சிலருக்கும், ஒப்பாரியின் துன்ப குரலும், மற்றவர்கள் அழுகையும் தொற்றி கண்ணீர் வடிய வைத்தது. இடையிடையே கோர்வையற்று அவளைப் பற்றி வாயில் வந்ததையும் பாடினர். இறுதிவரை கூட்டத்தோடு ஒட்டாத சிவப்பு சேலைக்காரியின் குரல் தனித்துக் கேட்டது.

லட்சுமியின் உடலருகே அழுதபடி அமர்ந்திருந்த கிழவி, வீட்டின் முன்பிருந்த வேப்ப மரத்தையே பார்த்தபடி இருந்தாள். காற்றில் மெல்ல அசைந்த இலைகளோடு, கிழவின் மனதில் நினைவுகள் அலையடித்தன.
இலையுதிர் கால இலையாட்டம் கண்ணீர் உதிர்ந்தது. மவள நினைச்சு அழாத நாளில்ல. அவ அப்பங்காரன் மாரியப்பன் நெஞ்சு வலியில செத்த நாளுல இருந்து, இன்னிக்கு வரைக்கும் அந்த அழுகை நிக்கல. சொந்த பந்தம்னு ஆயிரம் பேரு இருந்தாலும், ஆத்திர அவசரத்துக்கு உதவ ஒரு நாதியும் இல்ல. வூட்டுல இருந்த மாட்டுல பால கறந்து வீடு, வீடாக ஊற்றி மூணு பேரையும் ஆளாக்க படாத பாடுபட்டாள். ஆனாலும் சொந்தத்துல நல்லது, கெட்டதுனா கடன் வாங்கியாவது மொத ஆளா சீரும், முறையும் செய்வாள். சீரும், மொறயும் செய்யுறதுல இவள அடிச்சுக்க ஆளில்லனு சாதி, ஜனம் மெச்சுறத கேட்குறத கெளரவமா நினைச்சா. அதுக்காகவே சாதியின் பேரால் காலங்காலமாக இருந்து வரும் பழக்கங்களைத் தொட்டு தொடர்வதை வழக்கமாக வைத்திருந்தாள்.

வீட்டு கஷ்டத்தப் புரிஞ்சு பசங்க ரெண்டு பேரும் படிப்ப பாதியில நிப்பாட்டிட்டு மில்லுக்குப் போனாங்க. படிப்புல பெருசா ஆர்வம் இல்லாம இருந்த லட்சுமி ஒன்பதாம் வகுப்பு படிக்கிறப்போ, வயித்து வலினு வூட்டுக்கு வந்தவள் திரும்ப பள்ளிகூடத்துக்குப் போகல. நாளு ஒட ஒட கஷ்டம் தீர்ந்து, நல்ல நிலமை வந்திருந்தது. பொட்ட புள்ளையா ஏன் வூட்டுல வைச்சிருக்கீங்க? காலகாலத்துல நம்ம சாதில ஒரு நல்ல பையனா பாத்து கட்டி வைக்கலாமில்லனு சொந்தக்காரங்க பேச ஆரம்பிச்சாங்க. பெருசா எந்த ஆசையும் இல்லாத மயிலாத்தாவுக்கு, புள்ள கண்ணாலத்த ஊர் மெச்ச பண்ணனும்னு ஆசை வந்தது. அப்போ பொண்ணு கேட்டு வந்த சுப்பிரமணியோட ஜாதகப் பொருத்தம் அம்சமா இருக்குனு ஜோசியக்காரனும் சொன்னானு சொல்லி, லட்சுமிக்கு கட்டாயப்படுத்தி தடாபுடலாக கண்ணாலம் பண்ணி வைச்சாள்.
சுப்பிரமணிக்கு வாக்கப்பட்டு போன லட்சுமி, பெருசா எந்த சுகத்தையும் கண்டிடல. ஆரம்பத்துல இருந்தே சுப்பிரமணிக்கு அவ மேல வெறுப்பும் இல்ல, விருப்பும் இல்ல. மாடாய் உழச்சு கொட்டுனாலும், புகுந்த வூட்டுக்காராங்க எதோவொரு கொற சொல்லிட்டே இருந்தாங்க. அதுக்கு லட்சுமிக்கு ஆறேழு வருசமாகியும் குழந்தை பொறக்காததும் ஒரு காரணம். எல்லாத்தையும் பொறுத்துகிட்ட லட்சுமிக்கு மலடினு காது படவே பேசுறத தான் தாங்கிக்க முடியல. அதுலயும் சுப்பிரமணியோட அண்ணன்காரன் மீசைக்கார தர்மராசு ஒயாம குத்தி காட்டிட்டே இருந்தான். போகாத கோயிலில்ல, வேண்டாத தெய்வமில்ல. பண்ணாத பரிகாரம் இல்ல; காசு கரியானது தான் மிச்சம். வெறுப்புல நாளாக நாளாக புருசன்காரன் தொனமும் குடிச்சிட்டு வந்து அடிச்சான். சொந்த, பந்த குத்திக் காட்டலும் அதிகமாச்சு. இரவும், பகலும் கண்ணீரில் கரைந்தது.

இந்த மலடிய கட்டிட்டு அழுவாதடா, பேரு சொல்ல ஒரு புள்ள வேணுமென ரெண்டாம் கண்ணாலம் பண்ணிக்கானு சுப்பிரமணியிடம் தர்மராஜ் சொன்னான். லட்சுமியின் கெஞ்சலையும், கதறலையும் பொறுப்படுத்தல. நியாயம் கேட்டுப் போயும் பிரஜோனம் இல்லை. சுப்பிரமணிக்கு வேறொருத்தியை ரெண்டாம் தாரமாக தர்மராஜ் கல்யாணம் செய்து வைத்தான். கட்டிட்டுப் போனவன கட்டையில போகனு மண்ண அள்ளித் தூத்திட்டு, பொறந்த வீட்டிற்கு லட்சுமி வந்து விட்டாள்.

வாழ வேண்டிய வயசுல வாழா வெட்டியா மவ வந்து நின்னதுல கிழவிக்கு ரொம்ப வருத்தம். வூட்டுக்கு வந்ததில் இருந்து லட்சுமி ஒருநாளும் அழுததில்ல. ஆனா தினந்தினம் மவள நினைச்சு கிழவி கண்ணீர் சிந்தினாள். ரெண்டாவது கண்ணாலம் பண்ணி வைக்கலாம்னு கிழவி சொன்னதை, சாதி வழக்கத்த மீற முடியாதுனு மகன்கள் மறுத்துவிட்டனர். என்ன தான் அவள் இந்த வீட்டின் செல்லப் பெண்ணாக இருந்தாலும், வாழ வெட்டியா வைச்சு கொஞ்ச முடியுமா? சோறு போடுவதற்கும், தங்குவதற்கும் காசு கேட்க மாட்டாங்கா தான். வருசத்துக்கு ஒருக்கா எடுத்து கொடுக்குறா ஒரு சேலை துணிக்கும், தினம் போடும் மூணு வேல சோத்துக்கும் இவ மாதிரி வேலைக்காரி கிடைப்பாளா என கிழவியின் மருமகள்கள் நினைத்தனர்.

வேலையொழிந்து ஒய்ந்திருக்கும் வேளைனா அது தூங்குறப்போ தான். அந்தளவு வேலை… வேலை… எல்லோருக்கும் முன்பாகவே எழுந்து விடும் லட்சுமி, பின்னிரவில் தான் தூங்கப் போவாள். வீட்ட கூட்டிப் பெருக்கி சுத்தப்படுத்துறது, பாத்திரங்கள கழுவி வைக்கிறது, துணி துவைக்கிறது, தம்பிங்க குழந்தைகளைப் பாத்துக்கிறது என நாள் முழுக்க ஏதொவொரு வேலை இருந்தது. வேலை இல்லானாலும் வெட்டிய சோறு திங்குறா என பேசுவாங்களோனு, எதோ ஒரு வேலையை இழுத்துப் போட்டு செய்தாள். அவளுக்கு புள்ளையா?, குட்டியா?. இல்லனா சொத்தப் பிரிச்சு கொடுக்க வேண்டியிருக்கும். இவ காலத்துக்கு அப்புறம் சொத்து, பத்து பிரியாம நமக்கே வந்திடும்கிற மகிழ்ச்சியை தம்பிங்க ஒருபோதும் வெளிக்காட்டியதேயில்லை.

லட்சுமிக்கு ஒரே ஆறுதல் கிழவி மட்டுமே. அவளுக்குப் பேச்சு தொணையாகவும், வேலையில தன்னாலான ஒத்தாசையும் கிழவி செய்தாள். ஒவ்வொரு நாள் ராத்திரியிலும் தூரத்தி விட்டவன் ஞாவகம் ஒண்ணொண்ணா வரும். “பாவி அவனுக்கு என்னா கொறை வச்சேன்? வெடுக்குனு எதாச்சும் பேசியிருப்பேனா?, அது வேணும் இதுவேணும்னு எதனாச்சும் கேட்டிருப்பேனா? மலடினு சொந்தபந்தம் பேசுனா இவனுக்கு எங்க போச்சு புத்தி? என்னப் பத்தி எதாச்சும் நெனச்சுப் பாத்தனா பாவி? வாரிசு வேணும், மயிரு வேணும்னு போனவன் பத்து புள்ளையா பெத்துட்டான்?” என விசும்பியபடி திட்டித் தீர்ப்பாள். லட்சுமியின் புலம்பலில் கிழவியின் குறட்டை சத்தம் அடங்கிப் போகும். தூக்கம் கலைந்து நெனவு வரும் போது, வழியும் கண்ணீரைத் துடைத்தபடி இப்பவாது பொலம்பட்டும் என விட்டு விடுவாள்.

காலம் ஒடிப்போச்சு… மூடி கொட்டி, உடம்பு இளைச்சு படுத்த படுக்கையாகுற வரைக்கும் லட்சுமி தனக்கிருந்த நோவப் பத்தி யாருகிட்டயும் வாய் தொறக்கல. தன்னால செலவு வைக்க கூடாதுனு அவ சொல்லலனு எல்லாரும் நினைச்சாங்க. ஆனா உசுரோட இருக்கறதுக்கு யாருக்கும் தொந்தரவு இல்லாம செத்துட்டா நிம்மதிம்மா.. அதான் சொல்லலனு கிழவி கேட்டப்போ லட்சுமி சொன்னாள். கண்ணீர் சிந்துவதைத் தவிர கிழவியால் எதுவும் செய்ய முடியவில்லை.

"சீக்கிரம் காரியத்த முடிங்க" என மணி கத்தியதில், கிழவி நினைவுகளில் இருந்து மீண்டாள். கூடியிருந்த காற்றின் வேகத்திற்கு ஏற்ப இலைகள் ஆடியது.

"சீரு, சடங்கு பண்ணோம்னு அவனுங்க வந்து நிப்பாங்களே? என்ன பண்றது?" என ராசு மணியிடம் கேட்டான்.

"வரட்டும், பாத்துக்கலாம். அவங்கள சடங்கு பண்ண விடக்கூடாது. நம்ம சைடு சடங்க மட்டும் பண்ணிட்டு, மின்மயானத்துக்கு கொண்டு போயிடலாம்" என்றான் மணி.

நான்கு புறமும் சூழ்ந்த பெண்கள் துணியால் மறைத்து நின்றபடி, உடலின் சேலைத்தூணியை மாற்றினார்கள். நெற்றியில் திருநீறுபூசி, நாணயம் வைக்கப்பட்டது. மறைத்து நின்றவர்கள் விலகி நின்று, "வந்து ஒரே ஒரு கும்பிடு போட்டுப் போங்க" எனச் சொன்னார்கள். அவளின் முகத்தைப் பார்த்து வணங்கி காலுக்கு முன் வைக்கப்பட்டிருந்த கற்பூரத்தைத் தொட்டு வணங்கி, அருகில் இருந்த திருநீறை எடுத்து பூசியவாறு ஒவ்வொருவராக சென்றார்கள். லட்சுமியின் உடலைத் தூக்கி ஸ்டெச்சரில் வைத்து, ஏற்கனவே வரச்சொல்லியிருந்த அமரர் ஊர்தியில் ஏற்ற தூக்கிச் சென்றார்கள். வேப்ப மரத்தின் அடியில் லட்சுமியின் உடல் கொண்டு வந்த போது, பத்து, பதினைந்து பேர் வந்து தடுத்து நிறுத்தினர்.

"லட்சுமி உடலக் கொடுங்க, எங்க சீரு, சடங்க முடிச்சு காரியம் பண்ணிக்கிறோம்" என்றான் அக்கூட்டத்தில் இருந்த தர்மராஜ். வழுக்கைத் தலை, தொப்பை தள்ளிய வயிறு, வெள்ளை வேஷ்டி சட்டை என இருந்த தர்மராஜ், அடிக்கடி நரைத்த மீசையை முறுக்கியபடி பேசினான். ஊருல ஒரு நல்லது, கெட்டதுனா போயி நம்ம சாதி வழக்கப்படி இப்படி பண்ணனும், அப்படி பண்ணனும்னு சொல்லுறவன், தன் தம்பி மனைவியான லட்சுமிக்கு சடங்கு செய்யாமல் விட்டு விடுவானா? போதாக்குறைக்கு சாதி சங்கப் பொறுப்புல வேற இருந்தான். உடல் வேப்ப மரத்தின் அடியில் கிடத்தப்பட்ட நிலையில், மணியும், ராசுவும் உடலை தர மறுக்க வாக்குவாதம் உண்டானது.

"சாவு வூட்டுல எதுகுய்யா சச்சரவு?, யாரோ ஒருத்தர் விட்டுக் கொடுத்துப் போலமில்ல" என வழிந்த கண்ணீரை சேலை தூணியால் துடைத்தபடி கிழவி கேட்டாள்.

"உசுரோட இருந்தப்போ ஒரு நாயி சீண்டல. செத்த பொறவு வந்திட்டானுங்க சீரு, சடங்குனு" என மணி கேட்டான்.

"நாங்க சடங்கு செய்யுறது தானே முற" என தர்மராஜ் நிதனமாக சொன்னான்.

"செத்தது எங்க பொண்ணு, என்ன பண்ணனும்னு எங்களுக்குத் தெரியும், உங்க சடங்கு வெங்காயத்தா எல்லா தூக்கிட்டுப் போங்க" என கைகளை நீட்டியபடி மணி சொன்னான்.

"அவ உங்க பொண்ணுனாலும், வாக்கப்பட்டது எங்க கூட்டத்துக்காரனுக்கு, எங்க கூட்டத்துக்காரிக்கு நாங்க செய்யுறது தானே முறை?" தர்மராஜின் அருகில் நின்றிருந்தவன் கேட்டான்.

"கட்டிட்டுப் போனவனே, பாதியில கழட்டி விட்டுட்டான், இப்ப எதுக்கு இங்க வந்து கத்திட்டு கிடக்குறீங்க?" என்றான் ராசு.

மரத்தின் கீழ் கிடத்தப்பட்டிருந்த உடலின் மீது வெயில் ஏறிக்கொண்டிருந்தது. காற்றின் வேகத்திற்கு ஏற்ப மரக்கிளைகள் பலமாய் ஆடியது.

"என் பொண்ணு வாழுற காலத்துல தான் நிம்மதியா வாழல, காரியத்த ஆவது நிம்மதியா பண்ண விடுங்கய்யா" என கிழவி இரு தரப்பினரிடமும் அழுதபடி கெஞ்சினாள். கிழவியின் குரல் யார் காதிலும் விழுந்ததாய் தெரியவில்லை.

"சாதி ஒன்னுனாலும், கூட்டத்துல நாங்க ஒசந்தவங்க, எங்க கூட்டத்துக்குனு ஒரு சம்பரதாயம், கெளரவம் இருக்கில்ல?" என தர்மராஜ் நரை மீசையினை முறுக்கியபடி சொன்னான்.

"ஆமா…உங்க கூட்டத்துக்காரங்க யோக்கித தெரியாதா?" என்ற மணியின் கன்னத்தில் சட்டென தர்மராஜ் கோபத்தோடு 'பளார்' என அறைந்தான். பதிலுக்கு ராசு தர்மராஜ் முகத்தில் அடித்ததில், அவன் கீழே விழுந்தான். தர்மராஜ் உடனிருந்தவர்கள் மணியையும், ராசுவையும் அடிக்க முயல, இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். இதை எதிர்பாராத பெண்கள் கூட்டம் செய்வதறியாது நின்றது.

"ஹே, போலீஸ்க்கு போன் பண்ணுடா, நாமளா, அவங்களானு பாத்திடலாம். ரெண்டுல ஒன்னு தெரியாம சவத்த எடுத்திடக் கூடாது" என ராசு கத்தினான்.

"பொணம் புழு புடிச்சு அழுகுனாலும் பரவால, இங்கிருந்து எப்படி எடுக்கறாங்கனு பாத்திடலாம், நம்ம ஆளுக எல்லாம் வந்து உட்காருங்கடா" என்றான், தர்மராஜ்.

சுழன்று அடிக்கும் காற்றில் பலமாக ஆடிக் கொண்டிருந்த மரத்தடியில் லட்சுமியின் உடல் கேட்பாரற்று கிடந்தது. பெத்த மகள் அனாதைப் பொணம் போல கிடப்பதை கிழவியின் மனதை உலுக்கியது. மீண்டும் கிழவி இரு தரப்பினரிடமும் மன்றாடிப் பார்த்தாள். யாரும் கேட்கத் தயாராய் இல்லை. ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன கிழவி ஒரு முடிவோடு, “போங்கடா…. நீங்களும் உங்க சடங்கும், மசுரு கெளரவமும். எந்த மசுரானும் எதுவும் புடுங்க வேணாம். நா பெத்த புள்ளைய நானே புதைச்சுக்குறேன், எவனாச்சு தடுத்திங்கான அவ்வளவு தான்” என கோபத்தோடு கத்தினாள். மரத்தடியில் கிடந்த மகளின் உடலைத் தூக்கிச் செல்ல அடி வைத்தாள். இப்போது மற்றவர்கள் யார் குரலும் இவளுக்கு கேட்கவில்லை. கிழவியின் கண்ணில் கண்ணீரும் இருக்கவில்லை.

- பிரசாந்த்.வே

Pin It